Sunday, April 20, 2025

உண்மையா இப்படியெல்லாம் நடக்குமா ? UNBELEIVABLE , BUT ITS ALL TRUE


உண்மையா 

இப்படியெல்லாம் 

நடக்குமா ?

எவ்வளவு மோசமான பாவங்களைச் செய்தாலும் எவ்வளவு குரூரமான குற்றங்களைச் செய்தாலும்   அவுங்க திருந்த வாய்ப்பு உண்டு. அதைதான் மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். கொலை களவு காமம் இப்படி எல்லா மோசமான குற்றங்களையும் செய்த ஒருத்தரைபற்றிய கதைதான் இது. எனக்கு ரொம்பவும் பிடிச்சமான கதை.

ஒரு ஊர்ல ஒரு அரசாங்க அதிகாரி இருந்தார் அவர் பெயர் வென்காய், அவர்தான் இந்த கதையின் கதாநாயகன்.

அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்மணியோட தகாத உறவு இருந்தது.

ஆனாலும் வென்காய் அடிப்படையில ஒரு நல்ல மணிதர் அப்படித்தான் எல்லாரும் சொல்லுவாங்க.

ஓரு நாள் அவரோட கெட்டகாலம், அந்த பெண்மணியோட கணவருக்கு இந்த தகாத உறவு தெரிஞ்சிடுத்து.

அதனால ஒருத்தர ஒருத்தர் அடிச்சிகிட்டாங்க அப்போ வென்காய் அடிச்ச அடியில் அந்த பெண்னோட கணவர் இறந்து போயிட்டார்.

அதுக்குப் பிறகு வென்காய்க்கு வேலை போயிடும்னு தெரியும். அவரை கைது பண்ணிடுவாங்க. ஜெயில்ல போட்டுவாங்க.

அது இல்லாம அவமானம். அதனால  வென்காயும் அந்த பெண்மனியும் சேர்ந்து தொலை தூரத்துல இருந்த ஒரு ஊருக்கு ஓடிப் போனாங்க.

கையில் இருந்த காசெல்லாம் செலவாயிடுத்து. அந்தப் பெண்மணி பொருப்பில்லாம நிறைய ஆடம்பரமா செலவு செய்யறவளா இருந்தா.

அதனால வேற வழி இல்லை. வென்காய் அந்தப் பெண்மணியை திருப்திப்படுத்த திருட ஆரம்பிச்சார்.

ஆனா அவருக்கு அதைத் தொடர்ச்சியா செய்ய விருப்பம் இல்லை. ஆனால் என்ன செய்யறதுன்னு யோசிச்சார். அந்தப் பெண்மணியோட ஒத்துப் போக முடியல.

ஒருநாள் ராத்திரியோட ராத்திரியா மறுபடியும் ஒரு மலைக்கிராமத்துக்கு அந்தம்மாகிட்டருந்து தப்பிச்சு ஓடிப் போனார்.

அந்த ஊர்ல ஒரு மருத்துவர்கிட்ட வேலை பார்த்தார். அந்த மருத்துவத்தை முழுசா கத்துகிட்டார் வென்காய். கொஞ்சம் நாள் அந்த மருத்துவர் இறந்து போனார்.

இப்போ அந்த ஊருக்கு இவர் மருத்துவரா ஆகிட்டார். இது வரைக்கும் தான் செய்த கெட்ட காரியங்களுக்கு பிராயசித்தம் செய்யனும்னு நினைச்சார்.

தன்னோட மருத்துத் தொழில் மூலமா எல்லாருக்கும் உதவி செஞ்சார். அந்த ஜனங்க மத்தியில் நல்ல பெயர் எடுத்தார்.

அந்த கிராமத்தை சுத்தி மலைகள் சூழ்ந்து இருந்தது. அவுங்க எங்க போகணும்னாலும் ரொம்ப கஷ்டப்பட்டு அந்த மலையை ஏறித்தான் போகணும்.

எத்தனையோ முறை அரசாங்கத்தில் முறையிட்டும் எதுவும் நடக்கல

இப்போ அந்த மலையில் ஒரு  சுரங்கப்பாதை அமைச்சா ஜனங்க பிரச்சனை இல்லாம இருப்பாங்க.

விவசாயிகளுக்கு, வியாபாரிகளுக்கு, பள்ளிக்கூட குழந்தைகளுக்கு எல்லாருக்கும் இது ரொம்ப உதவியா இருக்கும்னு நினைச்சார் வென்காய்.

வென்காய் தனி ஆளாய் அந்த சுரங்கப் பாதையை வெட்ட ஆரம்பிச்சார். அவ்வளவு சீக்கிரம் முடியல. பல வருடங்கள் ஆச்சி. இப்பொ அந்த சுரங்கபாதை முடியும் தருவாயில் இருந்தது.

இத்தனை வருசம் அந்த மலையில் சுரங்கப்பாதை வெட்டினதுக்கு அரசாங்கமும் உதவல. அடுத்தவங்க யாரும் உதவி செய்யல.

அந்த சமயம் ஒரு இளைஞர் வென்காய் அவர்களைத் தேடிட்டு வந்தார்.

“வணக்கம் சார்.. நான் உங்களைப் பாக்கத்தான் வந்திருக்கேன். இத்தனை வருசமா உங்களத்தான் தேடிட்டு இருக்கேன். இப்பொதான் கண்டுபிடிச்சேன்” என்றான் அந்த இளைஞன்.

“நான் ஏதாச்சும் உங்களுக்கு உதவி செய்யணுமா சொல்லுங்க, என்னால் முடிஞ்ச உதவியா இருந்தா கண்டிப்பாய் செய்யறேன்” அப்படின்னார் வென்காய்.

“கண்டிப்பாக உங்களால் முடியும். அந்த உதவி என்னான்னு சொல்லறதுக்கு முன்னாடி நான் யாருன்னு சொல்லணும். சரியா 20 வருசத்துக்கு முன்னாடி நீங்க ஒருத்தரை கொலை பண்ணிட்டு ஒடி வந்துட்டிங்க. உங்களால கொலை செய்யப்பட்டவரோட மகன்தான் நான். அந்த கணக்கு தீக்கறதுக்காத்தான் வந்திருக்கேன்”

“கடைசி காலத்துல மனநிலை பாதிக்கப்பட்டு எங்க அம்மாவும் இறந்து போனாங்க. அவங்களோட ஈமக்கிரியை முடிச்சிட்டுத்தான் நான் வர்றேன். உங்களைக் கொன்று பழிதீர்க்கறதுக்காகத்தான் இங்க வந்திருக்கேன்”ஏன்று தீர்மானமாகச் சொன்னான் அந்த இளைஞன்.

“நான் செய்தது மிகப் பெரிய பாவம். அந்தப் பாவத்தைக் கழுவத்தான் நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். உன் விருப்பம் எதுவோ செய்ய எனக்கு முழு சம்மதம். ஆனா இப்போ  மலைகளுக்கு நடுவால சாலை அமைக்கும் வேலையை  நான் செஞ்சிட்டு இருக்கேன்"

“இந்த சுரங்கப்பாதை அமைச்சா பள்ளிக் குழந்தைகள் நிறைய படிப்பாங்க விவசாயிகள் உணவு தானியங்களை விற்பனை செய்ய உதவியா இருக்கும்”

“உடல் நலம் குண்றியவர்கள் மருத்துவ மனைகளுக்குப் போக உதவியா இருக்கும்”

“பிரசவ காலத்தில் பெண்கள் அதிகம் கஷ்டப்படமாட்டாங்க”.

“மழைக்காலத்துல ஏற்படக்கூடிய நிலச்சரிவுல வருசாவருசம் ஓருத்தர் ரெண்டுபேருன்னு சாகறதை தடுக்க முடியும்.”

“வெளியூர் பயணம் போறவங்க உயரமான மலைகளின் மீது ஏறவேண்டாம், இறங்க வேண்டாம்.”

“நீ என்ன சொன்னலும் நான் அதுக்கு ஒத்துக்கிறேன். அந்த தண்டனைக்கு நான் தயார். ஆனா நான் முக்கியமான பொதுக்காரியத்த செஞ்சிட்டு இருக்கேன். அது எனக்காக இல்ல ஒட்டு மொத்தமா இங்க வசிக்கிற ஜனங்க எல்லாத்துக்கும். அந்த வேலையை செய்து முடிக்க என்ன அனுமதிக்கனும். இன்னும் கொஞ்ச வேலைதான் இருக்கு. அது முடிஞ்ச அடுத்த நொடியே என்னை  நான் உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். உங்க விருப்பத்தை நீங்க நிறைவேற்றலாம்” அப்படின்னு அந்த இளைஞன் கிட்ட அவகாசம் கேட்டு  வென்காய் கெஞ்சினார்.

அவர் கேட்டுக்கொண்டது நியாயமாகப் பட்டது அவனுக்கு. அவர் கேட்டுக்கொண்டதற்கு அந்த இளைஞன் “சரி” என்றான்.

ஆதன் பிறகு பல மாதங்கள் போனது. தினம் தினம் அவர் செய்யும் வேலைகளை போய்ப் பார்ப்பான்.

எத்தனை நாளைக்குதான் அந்த இளைஞன் வெறுமனே ஒரு பார்வையாளனாக வந்து பொவான். வென்காய் ஒரு தனி மனிதனாக செய்யும் சேவை. அவனுக்கு பிரமிப்பாக இருந்தது. அதனால் அவனும் அதற்கு உதவி செய்யலாமா என்று யோசித்தான்

அப்படியே, அந்த இளைஞனும் வென்காயோடு சேர்ந்து வேலை செய்யத் தொடங்கினான்.

ஒரு ஆண்டு முடிஞ்சது, அந்த இளைஞன் வென்காயைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டான்

“இப்போ சுரங்கப்பாதை வேலை முடிஞ்சது. இப்போ நீங்க கேட்ட மாதிரி என்னை பழிவாங்கலாம். நான் என்னைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்றார் வென்காய்

"என்னுடைய ஆசானை எப்படி என்னால் கொல்ல முடியும் ? எனது வாழ்க்கையின் வழிகாட்டியை எப்படி தான் கொல்ல முடியும் ?"

இதைக்கேட்டதும் வெங்காய் மிரண்டு போனார், “நீ என்ன சொன்னாய்”  என்று ஆச்சரியமாகக் கேட்டார் வென்காய்

"இப்போது நான் உங்கள் மாணவன். இன்று நீங்கள் எனது குரு. எனது ஆசான். என் ஆசானை எப்படி என்னால் கொல்ல முடியும் ?"  என்று சொன்னான் அந்த இளைஞன். அதைக் கேட்ட ஷென்காயின் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது. அப்போது இளைஞன் வென்காயின் கைகளை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு அவரை இறுகத் தழுவினான்.

அந்த அழுத்ததில் அவன் அன்பின் ஆழம் புரிந்தது வென்காய் தேம்பித்தேம்பி அழுதார்.

அந்த இளைஞன் அவர் கண்களை ஆதுரமாகத் துடைத்து விட்டான்.

எவ்வளவு கொடூரமான மனிதனும் மனம் மாறினா திருந்தி வாழ முடியும் அதுக்கு ஷென்காய் ஒரு நல்ல உதாரணம். ஆனா ஷென்காய் மாதிரி தலைகீழா மாற முடியுமா ? நீங்க என்ன நினைக்கிறிங்க ?

அந்த இளைஞனா நீங்க இருந்தா என்ன பண்ணி இருப்பிங்க ?  மன்னிப்பிங்களா ? மாட்டிங்களா ? கமெண்ட் பகுதியில் ஒரு வரி எழுதுங்கள்.

பூமி ஞானசூரியன்


No comments:

தசரத் மஞ்சி ஃபல்குனிதேவி - CELEBRATED BIHAR LOVERS THASARATH MANJI AND FALCUNI DEVI

  தசரத் மஞ்சி ஃபல்குனிதேவி தொடர்ந்து ஒரு காரியத்தில் கவனம் செலுத்தினால் எவ்வளவு பெரிய சாதனையும் செய்து முடிக்கலாம் இதுக்கு அடையாளமான பெயர்...