Wednesday, April 16, 2025

ஓரு ஆறு இரு சாது ஒரு மாது TWO MONKS AND A WOMEN

 

ஓரு ஆறு

இரு சாது

ஒரு மாது



 

ஒரு ஊர்ல ஒரு ஜென் குருசாமியார் இருந்தார். அவர் பெயர் ஈசான். அவர் ஒரு தண்ணி தொட்டியில ஒரு நாள் உட்கார்ந்து குளிக்க ஆரம்பிச்சார். தொட்டியில இருந்த தண்ணீர் சுடுதண்ணி. அதனால உடனே அவரு தன்னுடைய மாணவனை கூப்பிட்டார்.

“தம்பி இந்த தண்ணி கொதிக்குது  கொஞ்சம் பச்சை தண்ணியை கொண்டு வா. இல்லன்னா நான் வெந்துடுவேன்அப்படின்னார்.

அந்த மாணவன் பச்ச தண்ணியை கொண்டு வந்தான்.அந்த தண்ணியை என்ற தொட்டியில ஊத்துன்னாரு. அவன் அந்த தண்ணிய ஊத்தனான். முக்காவாசி தண்ணிய அவன் ஊத்தி இருப்பான். உடனே “ போதும்  நிறுத்து” அப்படின்னாரு. அவர் சொன்ன உடனே அந்த மாணவன் தண்ணி ஊத்துறத நிறுத்திட்டான்.

இப்ப அந்த வாளியில் கொஞ்சம் தண்ணி மீதியா இருந்தது . அதை என்ன செய்யறதுன்னு பார்த்தான். உடனே பக்கத்துல தரையில அந்த தண்ணிய ஊத்திட்டான். அதை பாத்துட்டு இருந்தார் குருசாமி.

“முட்டாளே எதுக்கு அந்த தண்ணிய அங்க  ஊத்துன ? அப்படின்னு கோவமா கேட்டாரு அந்த குரு.

அதுக்கு அந்த மாணவன்தேவை இல்லாத தண்ணியை எங்க ஊத்தினா என்ன ?”ன்னான்

“இங்க செடி கொடி. மரம் மட்டை எதுவும் இல்லையா? “

“அதெல்லாம் அங்கங்க இருக்கு குருவே..”

“அதை வேர்ல ஊத்தலாம்ல ?”

“அதை நீங்க மொதல்லியே சொல்லலியே குருவே..”

“நான் சொன்னாதான் செய்வியா ?”

“ஆமாம் குருவே நான் சொல்லாம  நீ ஏன் செஞ்சன்னு கேப்பிங்க அதான் குருவே”

“அப்பிடி பாத்தாகூட மீதி தண்ணியை தரையில ஊத்துன்னு சொன்னனா ?”

“ஆனா நீங்கதானே சொல்வீங்க “கட்டிக் குடுத்த சோறும் சொல்லிக் குடுத்த புத்தியும் கடைசி வரை வராதுன்னு நீங்கதானே சொல்லுவீங்க..சுயமா செய்யின்னு சொல்லுவீங்கல்ல அதான்”

“பரவால்ல அதை ஞாபகத்துல வச்சிருக்கெ..இன்னொரு பழமொழி சொல்றேன் அதையும் ஞாபகத்துல வச்சிக்கெ…நீரைச் சிந்தினியோ சீரைச்சிந்தினியோ.. “ தண்ணியை செலவு செய்யறது காசுபணத்தை, தங்கம் வெள்ளியை, நிலம் நீச்சை, பாத்திரம் பண்டத்தை செலவு செய்யறதுன்னு அர்த்தம்..சீர் அப்படின்னா செல்வம்.

“சரிங்க குருவே, இனிமே ஒரு சொட்டு தண்ணியக் கூட ஒரு மரத்தோட வேருலதான் ஊத்துவேன், சுடுதண்ணி ஆறிபோறதுக்கு முன்னாடி குளிங்க .. “ (உட்டா பேசிகிட்டே இருப்பாரு)இதை மட்டும் மெல்ல அவருக்கு கேட்காத மாதிரி சொல்லிவிட்டு நடந்தான் அந்த மாணவன்.

அதன் பிறகுதான் அவர் குளிக்கறது ஞாபகத்துக்கு வந்தது. ஈசான் குரு மறுபடியும் குளிக்க ஆரம்பிச்சார்.

தண்ணியை மட்டும் இல்லைங்க அது எந்த பொருளா இருந்தாலும் அதிகமா இருக்குன்னா, அதை விரயமாக்கக் கூடாது. அதை எப்படிப் பயன்படுத்தலாம் அப்படின்னு சொல்லிட்டு யோசனை பண்ணனும்.

தண்ணியில்லாமல்,  ஏற்படக்கூடிய பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகுது தவிர குறையவே இல்லை அதுக்கு என்ன காரணம்?

இதப் பத்தி நம்ம யோசிக்கிறதே கிடையாது ? அதுக்கு காரணம்,  நமக்கு அது பற்றிய செய்திகள்  நமக்குத் தெரியாது. அதப் பத்தி கொஞ்சம் பார்க்கலாமா?

4000 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் இந்தியாவுல நமக்கு மழை மூலமாக கிடைக்குதுன்னு கணக்குபண்ணி இருக்காங்க.

அதுல நாம விவசாயத்துக்காக, வீட்டு உபயோகத்துக்காக,  அப்புறம் தொழிற்சாலைகளுக்காக ஒரு வருஷத்துல  பயன்படுத்தக் கூடிய தண்ணீர் இது எல்லாமே வெறும் 7.5 சதவீதம் தான்.

இதுல நிலத்துக்கு அடியில நிலத்தடி நீரா சேகரம் ஆகக் கூடிய தண்ணீர் ஒரு வருஷத்துல 10.75% தான்.

ஆவியா போகக்கூடிய தண்ணீர் 17.5 சதவிகிதம். ஓடு நீராக ஓடி சேதமாகற தண்ணீர் 17.5 சதவிகிதம். நம்ம கையில கிடைக்காம கடல்லபோயி கலக்கக்கூடிய தண்ணீர் சுமார் 46 சதவிதம். இந்தக் கணக்கை நாம் மறக்காம இருந்தாத்தான் அதை மடக்கிப் பிடிக்க என்ன செய்யலாமுன்னு திட்டமிட முடியும்.

“எனக்கு ரொம்ப நாளா மனசுக்குள்ள ஒரு சந்தேகம் அதை கேட்கணும் கேட்கணும்னு தோணுது” அப்படின்னு ஒரு சின்ன மீன் பெரிய மீன் கிட்ட கேட்டது. என்ன உனக்கு என்ன சந்தேகம் கேள் ?

ஜனங்க எல்லாம் கடல் கடல் அப்படின்னு சொல்றாங்க. கடலுன்னா  என்ன அது” எங்க இருக்கு?  அது எப்படி இருக்கும் ? அதை நாம பார்க்க முடியுமா ? அப்படின்னு கேட்டது அந்த சின்ன மீன்.

உடனே அந்த பெரிய மீன் சத்தமா சிரிச்சது.

உன்ன சுத்தி என்ன இருக்குன்னு தெரியுதா? நம்ம எங்க வாழறோம் வசிக்கிறோம்னு உனக்கு தெரியுதா ?அதுவும் கடல்ல தான்அப்படி விளக்கமா சொன்னது அந்த பெரிய மீன்.

ஆனா என்னால அத பாக்க முடியலையே” அப்படின்னு இந்த சின்ன மீன்.

நீயும் அதுல தானே இருக்க. அதனாலதான் அது உனக்கு பெருசா தெரியல. ஏன்னா அது நம்மோடயே  இருக்கு. நம்மோட எப்பவும் இருந்தா  அது பெருசா தெரியாது என்றது அந்த பெரிய மீன்.

அப்படின்னா கடல் பெருசா ?

“அதைத்தான் சொல்றேன் நீ பிறந்தது கடல்தான். நீ வளர்ந்தது கடல் தான். உன்னை சுத்தி இப்ப இருக்கிறதும் கடல்தான். நாளைக்கு நாம சாகப்போறதும் இந்த கடல்லதான் நம்ம் உலகமே இந்த கடல்தான்” அப்படின்னு விளக்கமா சொன்னது அந்த பெரிய மீன்

ஜென் தத்துவம் அப்படின்னா என்ன அப்படின்னு அதுக்கு ஜென் சாது சொன்ன மீன்கதை இதுதான்.

ஜென் அப்படின்னா இயல்பான இயற்கை அப்படின்னு அர்த்தம்.   நம்மை நாமே புரிந்து கொள்வதுதான் ஜென். இதுதான் ஜென் தத்துவத்துல மூழ்குனவங்க சொல்லக்கூடிய கருத்து.

இப்பல்லாம் இந்த ஜென் கதைகள் ரொம்ப பிரபலமா இருக்கு.

மகாயானம் அப்படிங்கற ஒரு புத்த மதப் பிரிவோட தொடர்புடையதுதான் இந்த ஜென். மனித வாழ்க்கையோட இயல்பான உண்மைகளை  சொல்லித்தரும் கருவிகள் தான் இந்த ஜென் கதைகள், அப்படின்னு சொல்றாங்க

இரண்டு சாதுக்கள் ஒரு ஆற்ற தாண்டிப் போகணும் ஆற்றங்கரையில் ஒரு பெண் ஆத்துல அதிக தண்ணி போறதுனால அதை கடக்க முடியாம இருந்தா ள். அந்த சாதுக்களில் பெரியசாது அந்த பெண்ணை தனது தோளில் சுமந்து கொண்டுபோய்  ஆற்றின் மறுகறையில் இறக்கி விடுகிறார். கொஞ்ச நேரம் கழிச்சு, "நீங்க ஒரு பெண்ணை தோளில் தூக்கிக் கொண்டு வரலாமா?"  என்று சின்ன சாது அவரிடம் கேட்டார்.

“நான் அந்தப் பெண்மணியை அப்பவே ஆற்றங்கரையிலேயே இறக்கி விட்டுட்டேன் ஆனா நீ இன்னும் மனசுல அவளை சுமந்துட்டு வர்றியாஅப்படின்னு அவர் கேட்டார். சின்ன சாது ஒண்ணும் பேசல. அப்புறம் ரெண்டு பேரும்  மௌனமாகிட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சி சொன்னார் பெரிய சாது, "தோளில் சுமந்தா உடனே இறக்கி விட்டுடலாம், மனசுல சுமந்தா சுலபமா இறக்கிவிட முடியாது"

ஜென் கதைகள்ல அதனுடைய பொருள் ஆழமா புதைந்திருக்கும் அதனை மேலோட்டமா பார்த்தால் ஒன்றும் புரியாது.

 அது இந்த சின்ன மீன் கேட்டது மாதிரி தான் அப்படின்னு சொல்றாங்க.

ஜென் புரிஞ்சுதுங்களா புரிஞ்சா சந்தோசம் புரியலன்னா அப்பவும் சந்தோஷம் அதுதான் ஜென்.

பூமி ஞானசூரியன்


No comments:

அந்தமான் தீவுகளில் ஆஃப்ரிக்க பழங்குடிகள் எப்படி ? - HOW AFRICAN ROOTS REACHED THE ANDAMANS ?

  அந்தமான் தீவுகளில் ஆஃப்ரிக்க பழங்குடிகள் எப்படி ? அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்ள,   " ஓங்கி ஐலேண்ட்"(ONGI ISLAND)    அப்பட...