Wednesday, January 8, 2025

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

 

ஜெய் ஜவான் 

ஜெய் கிசான் !


இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு, அது போதுமானதாக இல்லை, நாம் விவசாயிகளின் மீது காட்டும் அக்கறை மிகவும் குறைவு என்கிறது சி டி என்ற அமைப்பின் ஆய்வு ஒன்று. 2018 - 20ஆம் ஆண்டுகளில் இந்தியாவின்  ஜி டி பி பிரகாரம் விவசாய உதவி என்பது ஒரு சதவீதம் கூட இல்லை. விவசாயத்திற்காக தனது ஜிடிபி பிரகாரம் செய்த உதவி என்பது ஒரு சதவீதம் இல்லை, அரை சதவீதம் கூட இல்லை, அது 0.3  % என்கிறது இந்த சி டி யின் புள்ளி விவரம்.

இந்த ஓ இ சி டி யின் புள்ளி விவரத்தை ஒரு பக்கம் தள்ளிவிட்டு, இப்போது நாம் இந்திய அரசின் புள்ளிவிவரப்படி இந்திய விவசாயிகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று பார்க்கலாம். 2021 - 22 ஆம் ஆண்டின் ஆய்வுப்படி இந்திய விவசாயிகளின் சராசரி மாத வருமானம் ரூபாய் 10218. இந்த வருமானம் 2019 ஆம் ஆண்டில் 6426 ரூபாயாக இருந்தது.

விலைவாசி என்பது விஷம்போல ஏறிக்கொண்டிருக்கும் இந்த சூழலில் இந்தியாவிலுள்ள ஒரு விவசாயி பத்தாயிரம் ரூபாயில் தனது குடும்பத்தை நடத்த வேண்டும்.

இந்த பத்தாயிரம் ரூபாய்க்குள் அவன் தனது குடும்பத்தோடு மனைவி மக்களோடு 30 நாட்களுக்கு பட்டினி இல்லாமல் சாப்பிட வேண்டும், தனது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும், பள்ளிக்கூடத்தில் படிக்க ஆண்டுக்கு இவ்வளவு ரூபாய் என்று கட்ட வேண்டும், அதற்கு வேண்டிய நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுக்க வேண்டும், அதனை பள்ளிக்கூடமே கொடுத்துவிடும் ஆனால் அதற்கான பணத்தைக் கட்ட வேண்டும், அந்த குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் அதற்கு டியூஷன் வைக்க வேண்டும், அதற்கு டியூஷன் பீஸ் கட்ட வேண்டும், பள்ளிக்கூடம் பக்கத்திலிருந்தால்  நடந்து சென்று வருவார்கள், இப்போது பள்ளிக்கூடமே பஸ் விடுகிறது, அப்படி பஸ்ஸில் பள்ளிக்கூடம் போக அதற்குப் பணம் கட்ட வேண்டும்,  அந்த காலத்தில் கிழிந்த சட்டை போட்டுக் கொண்டு கூட பள்ளிக்கூடம் போவது உண்டு. நாங்கள் அப்படியெல்லம் போயிருக்கிறோம். ஆனால் இன்று அப்படி இல்லை, அந்த குழந்தைகளுக்கு பள்ளிக்கூடமே  சீருடை தருகிறது, ஆனால் அந்த விவசாயி அதற்கு பணம் கட்ட வேண்டும், காலில் அணிய அதுவே காலணி தருகிறது, அதற்கும் அந்த விவசாயி பணம் கட்ட  வேண்டும், பாடப் புத்தகங்களை நோட்டுப்புத்தகங்களைக்கூட  பள்ளிக்கூடமே தருகிறது, ஆனால் அதற்கான பணத்தையும்  கட்ட வேண்டும். இப்படி தன் குழந்தைகளின் கல்வி செலவு என்று எடுத்துக் கொண்டாலே ஒரு விவசாயி இத்தனை கஷ்ட்ட நஷ்ட்டங்களைத் தாங்கி இந்த 10000 ரூபாயில் செய்து முடிக்க வேண்டும்.

அப்புறம் அந்த குடும்ப உறுப்பினர்களின் மருத்துவச் செலவு, பொங்கல் தீபாவளி கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகள் கொண்டாட வேண்டும் அது இல்லாமல் மாரியம்மன் திருவிழா, மசான வீரன் திருவிழா, மதுரை வீரன் திருவிழா, இதற்கெல்லம்  கூழ் ஊற்ற வேண்டும், பொங்கல் வைக்க வேண்டும், கரகம் எடுக்க வேண்டும், காவடி எடுக்க வேண்டும், இவை எல்லாவற்றையும் அந்த பத்தாயிரத்திற்குள் செய்ய வேண்டும்.

இந்திய விவசாயிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு மாத வருமானமாக சம்பாதிக்கிறார்கள் வருமானம் எடுக்கிறார்கள் என்று பார்க்கலாம். இந்திய அரசு இதனை ஆய்வு செய்து எடுத்து, 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினாறாம் தேதி 6,28 மணிக்கு பிரஸ் இன்பர்மேஷன் பீரோவினால் வெளியிடப்பட்ட   புள்ளி விவரம் இது.

தமிழ்நாட்டில் ஒரு விவசாய குடும்பத்தின் மாதாந்திர வருமானம் 11 ஆயிரத்து 924 ரூபாய். ஆந்திர விவசாயி பெறும் வருமானம் 10,480 ரூபாய் கர்நாடக விவசாய பெறும் வருமானம் 13,441 ரூபாய் கேரளா விவசாயி பெறும் வருமானம் 17 ஆயிரத்து தொள்ளாயிரத்தி பதினைந்து ரூபாய். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிக வருமானம் பெறுவது மேகாலயா விவசாயி தான். அங்குள்ள விவசாயிகள் பெரும் மாத வருமானம் 29348  ரூபாய். இந்தியாவிலேயே மிகவும் குறைவான வருமானம் எடுப்பது ஜார்கண்ட் விவசாயிகள் தான் ஜார்கண்ட் விவசாயி பெரும் மாத வருமானம் 4795 மட்டும்தான். தமிழ்நாட்டை விட கிட்டத்தட்ட ஏறத்தாழ 14 மாநிலங்களில் அதிக மாத வருமானம் எடுப்பவர்களாக இருக்கிறார்கள்.

கூலி மூலம் கிடைக்கும் வருமானம், நிலங்கள் குத்தகை மூலம் கிடைக்கும் வருமானம், பயிர் மகசூல் வருமானம், கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் வருமானம், ஆகியவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்து 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் புள்ளி விவரங்கள் இவை. எல்லாமே அரசாங்கத்தின் புள்ளி விவரங்கள் அதுமட்டுமல்ல அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய அரசின் புள்ளிவிவரத்துறை விளம்பர துறை என்று சொல்லப்படும் பப்ளிக் இன்ஃபர்மேஷன் பீரோ என்னும் அதிகாரப்பூர்வமான அறிக்கையில் இருந்து இவை திரட்டப்பட்டவை.

இதில் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்திய அரசின் வேளாண்மை துறை மற்றும் விவசாயிகளின் நல்வாழ்வுத் துறையின் மத்திய அமைச்சர் திருமிகு நரேந்திரசிங் தோமர் அவர்கள் ராஜசபாவில் எழுதி அறிவிக்கப்பட்டவை என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.ஏதோ பூமிஞானசூரியன் கற்பனையாக தயாரித்த புள்ளி விவரங்கள் என்று நினைக்க வேண்டாம்.

இங்கு இன்னொரு தகவலையும் இங்கு குறிப்பிட வேண்டும், மானிய விலையில் விதை தருவது, உரம் தருவது, பூச்சி மருந்து தருவது , புசண மருந்து தருவது, விவசாயக் கருவிகள் இவையெல்லாம் வாங்குவதற்கு மானியம் தருவது. சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம். அமைப்பதற்கு மானியம் தருவது. டிராக்டர்கள் மற்றும் சிறு எந்திரங்கள் வாங்க அரசு மானியம் அளிப்பது இவற்றையெல்லாம். விவசாயிகளின் நல திட்டங்கள். என்று சொல்ல கூடாது. இவற்றையெல்லாம். தேசிய அளவில் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான. உதவிகள் அல்லது முயற்சிகள் என்று சொல்லலாம். பசுமை புரட்சிக்காக. செய்த. அத்தனை உதவிகளும் அந்தக் கணக்கில்தான் வரும்.  

அப்படியென்றால் விவசாயிகளுக்கு செய்யும் நலத்திட்ட உதவிகள் என்றால் விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய பயிர்களுக்கு தரப்படும் பயிர் இழப்பீட்டுத்தொகை, விவசாயிகளின் குழந்தைகளுக்கு உயர் கல்வி உதவி, விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவி வழங்குதல், விவசாய குடும்ப முதியோருக்கு ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவற்றைத்தான் சொல்ல முடியும்.

விவசாயிகள் ராணுவ வீரர்களுக்கு சமமாக “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்று சொன்னார் பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள். 1965 ம் ஆண்டு  இந்தியா பாக்கிஸ்தான் போர் சமயம் இந்தியாவின் உழவர் பெருமக்களையும் ராணுவ வீரர்களையும் உற்சாகப்படுத்தினார். இந்தியாவுக்கு முக்கியமானது ஒன்று அதன் பாதுகாப்பு இரண்டாவது  உணவுக்கான உத்தரவாதம் என்று  சொன்னார்.

சொல்லப்போனால் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்றார் வள்ளுவப் பெருந்தகை, விவசாயிகளை முன்னால் நிறுத்தி மற்ற எல்லோரையும்  அவர்களுக்கு பின்னால் நிறுத்தினார்.

இவற்றை எல்லாம் சிந்தித்து அரசு விவசாயிகளின்  நல்வாழ்விற்கு உதவும் திட்டங்களை செயலாக்கம் செய்ய வேண்டும். விவசாயிகளின் நல் வாழ்விற்காக செயல்படும் சங்கங்கள் இதற்கான கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளுகிறேன்.

நண்பர்களே இதுபற்றி உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

பூமி ஞானசூரியன்




No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...