Friday, January 31, 2025

HOW TO USE ARTIFICIAL INTELLIGENCE ? - செயற்கை நுண்ணறிவை எப்படி பயன்படுத்தலாம் ?

 

கடிதம் 5

செயற்கை நுண்ணறிவை

எப்படி பயன்படுத்தலாம் ?


HOW TO USE ARTIFICIAL INTELLIGENCE ?


அன்பின் இனிய  நண்பர்களுக்கு வணக்கம் !

தற்போது உலகளாவிய முறையில் பேசும் பொருளாக இருப்பது செயற்கை நுண்ணறிவு, ஆங்கிலத்தில் இதனை ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லுகிறார்கள்.

இப்போது கூட நுண்ணறிவு செயலி சேட்ஜீபீடியா டீப் சீக்கா என்று உலகம் முழுவதும் பட்டிமன்றம் நடக்கிறது. நுண்ணறிவுக்கு பிதாமகன் அமெரிக்காவா ? சீனாவா ?  பலத்த விவாதம் உலக அளவில் நடக்கிறது ? அப்படி என்றால் இந்தியாவின் இடம் எது ? எனக்கு கவலையாக இருக்கிறது.

Deep Seek released on April 2023

எது எப்படியோ ! இது செயற்கை நுண்ணறிவு யுகம். உலகின் அனைத்து துறைகளையும் இது தலைக்குப்புற மாற்றி போடப் போகிறது என்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு சொல்லும் செய்திகளை பற்றி யோசிக்கும் போது அது ஒரு தனியான உலகத்தை தீர்மானிக்கும், அல்லது நிர்மாணிக்கும் என்று தோன்றுகிறது. செவ்வாய்க் கிரகத்திற்குப் போக நாம் எலான் மஸ்க்கின் ராக்கெட்டைத் தேட வேண்டாம், செயற்கை நுண்ணறிவு செவ்வாய் கிரகத்தை இந்த பூமிக்கே கொண்டுவந்துவிடும் என்கிறார்கள்.

ChatGPT released on 30thNov2022

ஆரம்ப காலகட்டத்தில் இது பற்றி பேசும்போது இது மனிதர்களுக்கு போட்டியாக வந்துவிடும், இது மனிதர்களின் வேலை வாய்ப்புகளை பிடுங்கிக்கொள்ளும் என்று சொன்னார்கள். இன்னும் கூட சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

“போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்” நான் என் கைவரிசை காட்டாமல் விடமாட்டேன் என்று பிள்ளையார் சுழி போட ஆரம்பித்துவிட்டது சேட் ஜீபி டியும் டீப் சீக் செயற்கை நுண்ணறிவு செயலிகளும்.

எனது பேரக் குழந்தைகள் ஐந்தாவது ஆறாவது என்று படிக்கிறார்கள். அவர்களுக்கு இது பற்றி நான் தகவல்தான் சொன்னேன் இன்று ஒரு தகவல் பாணியில்.

ஆச்சரியமாக இருக்கிறது அவர்களுக்கு வீட்டு பாடங்களை படிக்க தெரியாத ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்துகொள்ள, மொழிபெயர்க்க என்று பல வகைகளில் அதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

பள்ளிக்கூட குழந்தைகளுக்கு ஆசிரியராக அது பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டது, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அது பயன்படுத்தும் முறை பாலபருவத்தில் விளையாடும் கோலி குண்டாகிவிட்டது.

ஜான் மெக்கார்த்தி அடிப்படையில் ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானி. இந்த அறிவியல் வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு என்று பெயர் சூட்டியவர்  இவர்தான். செயற்கை நுண்ணறிவிற்கு பிள்ளையார் சுழி போட்டவர் இவர்தான்.

John McCarthy (1927 -2011)

நீங்கள் என்னை போன்ற வயது முதிர்ந்த வாலிபனாக இருக்கலாம், வயது முதிராத வாளிப்பான  இளைஞராக இருக்கலாம், படிக்கும் பருவ மாணவராக இருக்கலாம், எல்லா வயதினருக்கும் எல்லா தளத்தில் பணி செய்பவர்களுக்கும், பணி தேடும் பருவத்தினருக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு உபயோகமாக இருக்கும் என்றால் உறுதியாக சொல்ல முடியும், தொடர்ந்து படியுங்கள்.

இந்தத் நுண்ணறிவுத் தொடரை அடுத்த தலைமுறைக்காக எழுதுகிறேன் படிப்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நான் தெரிந்து கொண்டது இதுதான். செயற்கை நுண்ணறிவு என்பது அண்மைக்கால கண்டுபிடிப்பு. அண்மைக்கால அறிவியல் செய்தி. என்றாலும் இது எல்லா வயதினருக்கும் பயன் தரக்கூடிய ஒன்று. அதனால் எல்லோரும் இதைப் பற்றி தெரிந்து கொள்வதில் எவ்விதமான தவறும் இல்லை என்பது என்னுடைய அபிப்பிராயம்.

இந்த செயற்கை நுண்ணறிவு பற்றி நாம் தெரிந்து கொள்ளவில்லை என்றால் நம்மை செயற்கை நுண்ணறிவு கைநாட்டு என்று கூட சொல்லுவார்கள்.எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

செயற்கை நுண்ணறிவு என்னும் இந்த புதிய பிரதேசத்தில் நீங்கள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றால் முதலில் கம்ப்யூட்டரை படித்துக் கொள்ளவேண்டும்.

கணினியை படித்தல் என்றால் முக்கியமாக நீங்கள் புரோகிராமின் லாங்குவேஜ் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக பைத்தன் (PYTHON)என்பதை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் அதற்கு மலைப்பாம்பு (பைத்தன்)என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

பைத்தன் என்பதைத் தொடர்ந்து அடுத்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அடிப்படையான அல்கோரியம்ஸ் என்பது அதற்கு மேல் மிஷின் லேர்னிங் அதற்கு அடுத்து டேட்டா சயின்ஸ்.

முதலில் கணினியுடன் கைகுலுக்க வேண்டும். அதன் பின்னர் ப்ரோக்ராம் லாங்குவேஜ், பின்னர் பைத்தன், பின்னர் அல்கோரிம்ஸ், பின்னர் மெஷின் லேர்னிங், பின்னர் டேட்டா சயின்ஸ், அவ்வளவுதான். இப்போது நீங்கள் ஏறவேண்டியவை ஆறு படிக்கட்டுகள் தான். இந்தப் பெயர்களை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள், போதும்.

அதன் பின்னர் செயற்கை நுண்ணறிவு தொடர்பான திட்டங்கள் என்னென்ன ? அதன் பின்னர் இது பற்றிய கூடுதலான தகவல் பெற, கூடுதலாக இதுபற்றி  தெரிந்து கொள்ள வேண்டும்.

இது பற்றிய கூடுதலான தகவல்களை பெற, கூடுதலான அறிவு பெற,இரண்டு வலைத்தளங்களை சொல்லுகிறேன். கொஞ்சம் கவனியுங்கள், ஒன்று கேகிள் (Kaggle) என்பது, கூகிள் அல்ல,  மற்றொன்று கீத் ஹப்(Git Hub) என்பது.

கேகிள் மற்றும் கீத்ஹப்  ஆகிய இரண்டு பெயர்களை மறந்து விடாதீர்கள். இதில் புதிதாக செயற்கை நுண்ணறிவு பற்றி "ஆனா ஆவன்னா" என்று படிக்க இங்கு ஏகப்பட்ட சமாச்சாரங்கள் கிடைக்கும் என்கிறார்கள். போய் பாருங்கள், பார்த்துவிட்டு எனக்கும் சொல்லுங்கள், என்ன கிடைத்தது என்று, காரணம் நானும் இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு கஷ்டமா என்றால் இல்லை என்று தான் நான் சொல்லுவேன். ஆர்வம் இருந்தால் ஆழ் கடலும் அல்வா தான், தூக்கி சாப்பிட்டு விடலாம்.

செயற்கை நுண்ணறிவு என்னும் கோபுரத்தில் நீங்கள் ஏறுவதற்கு இரண்டே இரண்டு படிக்கட்டுகள் தான், அவற்றில் ஒன்று கணக்கு, இன்னொன்று ஸ்டாடிஸ்டிக்ஸ், இவை இரண்டும் தான் அடிப்படை.

கணக்குப் பாடம் மற்றும் புள்ளிவிவரப் பாடம் இந்த இரண்டு பாடங்களின் கருணை இருந்தால் இந்த செயற்கை நுண்ணறிவின் மூக்கனாங்கயிற்றை நீங்கள் கையில் பிடிக்கலாம்.

புள்ளி விவரங்களை ஆய்வு செய்யும் அற்புதமான திறன் உங்களுக்கு கை வரப்பெறும் அப்புறம் நீங்கள் சவாரி செய்து மேய்ந்து விடலாம் அடுத்து நீங்கள் அல்கோரிதம் என்பதை வளர்த்து எடுக்க அதனை மேம்படுத்த முடியும்.

ஆனால் நுண்ணறிவின் பயனைப் பெற பெரிய அறிவு வேண்டும் என்பது அவசியம் இல்லை, வாட்ஸப் மாதிரி பயன்படுத்தலாம் என்கிறார்கள். இந்தத் தொடரில் யார் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் ?

முக்கியமாக  மாணவர்கள், கல்விவியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தொழில்முனைவோர், தொழலதிபர்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் மென்பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், விளம்பரத்துறையினர், வழக்கறிஞர்கள், சட்டத்துறை வல்லுநர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள், ஆகியோர் எப்படி பயன்படுத்தலாம் என்று தொடர்ந்து பார்க்கலாம்.

இன்று இத்துடன் போதும் என்று நினைக்கிறேன் மீண்டும் அடுத்த கடிதத்தில் தொடரலாம்.

செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின்  வேலையைப் பறித்துவிடும் என்று பயப்பட வேண்டாம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது எல்லாம் இப்படிபட்ட வதந்திகள் பரவுவது வழக்கம்தான். இயந்திரங்கள் புதிதாக வந்தபோதும் இப்படிபட்ட பலர் பேசத்தான் செய்தார்கள். இதனை நம்பி நாம் தேங்கிவிட வேண்டாம் என்பது எனது கருத்து.

செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கடிதங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்யுங்கள்.

வேறு தலைப்புகளில் நான் எழுத வேண்டும்  என்று நினைத்தால் எனக்கு சொல்லுங்கள். 

இயற்கை வளங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற காரியங்களைச் செய்யுங்கள். 

எதுவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள், உங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவியாக இருங்கள். 

உங்கள் பெற்றோர்களை உங்களோடு உங்கள் இல்லத்தில் வைத்துப் பராமரியுங்கள். 

 பூமி ஞானசூரியன்


2 comments:

Anonymous said...

Super

Yasmine begam thooyavan said...

Good information. நல்ல நல்ல தகவல்கள் சுவாரசியத்தோடு பதிவிட்ட தங்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய தாவல்கள் எதிர்பார்க்கிறேன். நன்றி. யாஸ்மின்.

LEARN TO BUILD A ROBOT - ரோபோக்களை நாமே தயார் செய்யலாம்

கடிதம் 7 ரோபோக்களை நாமே தயார் செய்யலாம் LEARN TO BUILD A ROBOT ரோபோக்கள் உருவாக்கும் தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ள நிறைய புத்தகங்கள் வந்துள்...