Friday, January 31, 2025

HOW TO USE ARTIFICIAL INTELLIGENCE ? - செயற்கை நுண்ணறிவை எப்படி பயன்படுத்தலாம் ?

 

கடிதம் 5

செயற்கை நுண்ணறிவை

எப்படி பயன்படுத்தலாம் ?


HOW TO USE ARTIFICIAL INTELLIGENCE ?


அன்பின் இனிய  நண்பர்களுக்கு வணக்கம் !

தற்போது உலகளாவிய முறையில் பேசும் பொருளாக இருப்பது செயற்கை நுண்ணறிவு, ஆங்கிலத்தில் இதனை ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லுகிறார்கள்.

இப்போது கூட நுண்ணறிவு செயலி சேட்ஜீபீடியா டீப் சீக்கா என்று உலகம் முழுவதும் பட்டிமன்றம் நடக்கிறது. நுண்ணறிவுக்கு பிதாமகன் அமெரிக்காவா ? சீனாவா ?  பலத்த விவாதம் உலக அளவில் நடக்கிறது ? அப்படி என்றால் இந்தியாவின் இடம் எது ? எனக்கு கவலையாக இருக்கிறது.

Deep Seek released on April 2023

எது எப்படியோ ! இது செயற்கை நுண்ணறிவு யுகம். உலகின் அனைத்து துறைகளையும் இது தலைக்குப்புற மாற்றி போடப் போகிறது என்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு சொல்லும் செய்திகளை பற்றி யோசிக்கும் போது அது ஒரு தனியான உலகத்தை தீர்மானிக்கும், அல்லது நிர்மாணிக்கும் என்று தோன்றுகிறது. செவ்வாய்க் கிரகத்திற்குப் போக நாம் எலான் மஸ்க்கின் ராக்கெட்டைத் தேட வேண்டாம், செயற்கை நுண்ணறிவு செவ்வாய் கிரகத்தை இந்த பூமிக்கே கொண்டுவந்துவிடும் என்கிறார்கள்.

ChatGPT released on 30thNov2022

ஆரம்ப காலகட்டத்தில் இது பற்றி பேசும்போது இது மனிதர்களுக்கு போட்டியாக வந்துவிடும், இது மனிதர்களின் வேலை வாய்ப்புகளை பிடுங்கிக்கொள்ளும் என்று சொன்னார்கள். இன்னும் கூட சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

“போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்” நான் என் கைவரிசை காட்டாமல் விடமாட்டேன் என்று பிள்ளையார் சுழி போட ஆரம்பித்துவிட்டது சேட் ஜீபி டியும் டீப் சீக் செயற்கை நுண்ணறிவு செயலிகளும்.

எனது பேரக் குழந்தைகள் ஐந்தாவது ஆறாவது என்று படிக்கிறார்கள். அவர்களுக்கு இது பற்றி நான் தகவல்தான் சொன்னேன் இன்று ஒரு தகவல் பாணியில்.

ஆச்சரியமாக இருக்கிறது அவர்களுக்கு வீட்டு பாடங்களை படிக்க தெரியாத ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்துகொள்ள, மொழிபெயர்க்க என்று பல வகைகளில் அதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

பள்ளிக்கூட குழந்தைகளுக்கு ஆசிரியராக அது பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விட்டது, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அது பயன்படுத்தும் முறை பாலபருவத்தில் விளையாடும் கோலி குண்டாகிவிட்டது.

ஜான் மெக்கார்த்தி அடிப்படையில் ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானி. இந்த அறிவியல் வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு என்று பெயர் சூட்டியவர்  இவர்தான். செயற்கை நுண்ணறிவிற்கு பிள்ளையார் சுழி போட்டவர் இவர்தான்.

John McCarthy (1927 -2011)

நீங்கள் என்னை போன்ற வயது முதிர்ந்த வாலிபனாக இருக்கலாம், வயது முதிராத வாளிப்பான  இளைஞராக இருக்கலாம், படிக்கும் பருவ மாணவராக இருக்கலாம், எல்லா வயதினருக்கும் எல்லா தளத்தில் பணி செய்பவர்களுக்கும், பணி தேடும் பருவத்தினருக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு உபயோகமாக இருக்கும் என்றால் உறுதியாக சொல்ல முடியும், தொடர்ந்து படியுங்கள்.

இந்தத் நுண்ணறிவுத் தொடரை அடுத்த தலைமுறைக்காக எழுதுகிறேன் படிப்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நான் தெரிந்து கொண்டது இதுதான். செயற்கை நுண்ணறிவு என்பது அண்மைக்கால கண்டுபிடிப்பு. அண்மைக்கால அறிவியல் செய்தி. என்றாலும் இது எல்லா வயதினருக்கும் பயன் தரக்கூடிய ஒன்று. அதனால் எல்லோரும் இதைப் பற்றி தெரிந்து கொள்வதில் எவ்விதமான தவறும் இல்லை என்பது என்னுடைய அபிப்பிராயம்.

இந்த செயற்கை நுண்ணறிவு பற்றி நாம் தெரிந்து கொள்ளவில்லை என்றால் நம்மை செயற்கை நுண்ணறிவு கைநாட்டு என்று கூட சொல்லுவார்கள்.எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

செயற்கை நுண்ணறிவு என்னும் இந்த புதிய பிரதேசத்தில் நீங்கள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றால் முதலில் கம்ப்யூட்டரை படித்துக் கொள்ளவேண்டும்.

கணினியை படித்தல் என்றால் முக்கியமாக நீங்கள் புரோகிராமின் லாங்குவேஜ் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக பைத்தன் (PYTHON)என்பதை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் அதற்கு மலைப்பாம்பு (பைத்தன்)என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

பைத்தன் என்பதைத் தொடர்ந்து அடுத்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அடிப்படையான அல்கோரியம்ஸ் என்பது அதற்கு மேல் மிஷின் லேர்னிங் அதற்கு அடுத்து டேட்டா சயின்ஸ்.

முதலில் கணினியுடன் கைகுலுக்க வேண்டும். அதன் பின்னர் ப்ரோக்ராம் லாங்குவேஜ், பின்னர் பைத்தன், பின்னர் அல்கோரிம்ஸ், பின்னர் மெஷின் லேர்னிங், பின்னர் டேட்டா சயின்ஸ், அவ்வளவுதான். இப்போது நீங்கள் ஏறவேண்டியவை ஆறு படிக்கட்டுகள் தான். இந்தப் பெயர்களை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள், போதும்.

அதன் பின்னர் செயற்கை நுண்ணறிவு தொடர்பான திட்டங்கள் என்னென்ன ? அதன் பின்னர் இது பற்றிய கூடுதலான தகவல் பெற, கூடுதலாக இதுபற்றி  தெரிந்து கொள்ள வேண்டும்.

இது பற்றிய கூடுதலான தகவல்களை பெற, கூடுதலான அறிவு பெற,இரண்டு வலைத்தளங்களை சொல்லுகிறேன். கொஞ்சம் கவனியுங்கள், ஒன்று கேகிள் (Kaggle) என்பது, கூகிள் அல்ல,  மற்றொன்று கீத் ஹப்(Git Hub) என்பது.

கேகிள் மற்றும் கீத்ஹப்  ஆகிய இரண்டு பெயர்களை மறந்து விடாதீர்கள். இதில் புதிதாக செயற்கை நுண்ணறிவு பற்றி "ஆனா ஆவன்னா" என்று படிக்க இங்கு ஏகப்பட்ட சமாச்சாரங்கள் கிடைக்கும் என்கிறார்கள். போய் பாருங்கள், பார்த்துவிட்டு எனக்கும் சொல்லுங்கள், என்ன கிடைத்தது என்று, காரணம் நானும் இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு கஷ்டமா என்றால் இல்லை என்று தான் நான் சொல்லுவேன். ஆர்வம் இருந்தால் ஆழ் கடலும் அல்வா தான், தூக்கி சாப்பிட்டு விடலாம்.

செயற்கை நுண்ணறிவு என்னும் கோபுரத்தில் நீங்கள் ஏறுவதற்கு இரண்டே இரண்டு படிக்கட்டுகள் தான், அவற்றில் ஒன்று கணக்கு, இன்னொன்று ஸ்டாடிஸ்டிக்ஸ், இவை இரண்டும் தான் அடிப்படை.

கணக்குப் பாடம் மற்றும் புள்ளிவிவரப் பாடம் இந்த இரண்டு பாடங்களின் கருணை இருந்தால் இந்த செயற்கை நுண்ணறிவின் மூக்கனாங்கயிற்றை நீங்கள் கையில் பிடிக்கலாம்.

புள்ளி விவரங்களை ஆய்வு செய்யும் அற்புதமான திறன் உங்களுக்கு கை வரப்பெறும் அப்புறம் நீங்கள் சவாரி செய்து மேய்ந்து விடலாம் அடுத்து நீங்கள் அல்கோரிதம் என்பதை வளர்த்து எடுக்க அதனை மேம்படுத்த முடியும்.

ஆனால் நுண்ணறிவின் பயனைப் பெற பெரிய அறிவு வேண்டும் என்பது அவசியம் இல்லை, வாட்ஸப் மாதிரி பயன்படுத்தலாம் என்கிறார்கள். இந்தத் தொடரில் யார் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் ?

முக்கியமாக  மாணவர்கள், கல்விவியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தொழில்முனைவோர், தொழலதிபர்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் மென்பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், விளம்பரத்துறையினர், வழக்கறிஞர்கள், சட்டத்துறை வல்லுநர்கள், ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள், ஆகியோர் எப்படி பயன்படுத்தலாம் என்று தொடர்ந்து பார்க்கலாம்.

இன்று இத்துடன் போதும் என்று நினைக்கிறேன் மீண்டும் அடுத்த கடிதத்தில் தொடரலாம்.

செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின்  வேலையைப் பறித்துவிடும் என்று பயப்பட வேண்டாம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வரும்போது எல்லாம் இப்படிபட்ட வதந்திகள் பரவுவது வழக்கம்தான். இயந்திரங்கள் புதிதாக வந்தபோதும் இப்படிபட்ட பலர் பேசத்தான் செய்தார்கள். இதனை நம்பி நாம் தேங்கிவிட வேண்டாம் என்பது எனது கருத்து.

செயற்கை நுண்ணறிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கடிதங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்யுங்கள்.

வேறு தலைப்புகளில் நான் எழுத வேண்டும்  என்று நினைத்தால் எனக்கு சொல்லுங்கள். 

இயற்கை வளங்களை பாதுகாக்க உங்களால் இயன்ற காரியங்களைச் செய்யுங்கள். 

எதுவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள், உங்களால் இயன்ற அளவு பிறருக்கு உதவியாக இருங்கள். 

உங்கள் பெற்றோர்களை உங்களோடு உங்கள் இல்லத்தில் வைத்துப் பராமரியுங்கள். 

 பூமி ஞானசூரியன்

Thursday, January 30, 2025

WHICH BOOKS MADE ALEXANDER A WARRIER ? - என்னபுத்தகங்களைப் படித்து மாவீரன் ஆனார் அலெக்ஸாண்டர் ?

 

கடிதம் 5

30.01.25

 

புத்தகங்களை படியுங்கள்

என்ன புத்தகங்களை 

படித்து

மாவீரன்ஆனார் 

அலெக்ஸாண்டர் ?


WHICH BOOKS MADE ALEXANDER  A WARRIER ?

மாவீரன் அலெக்சாண்டர் உலகில் யாராலும் வெல்ல முடியாத மாவீரன் ஆனது புத்தகங்கள் படித்ததனால் என்பது நமக்கு தெரியாது, ஆனால் அதுதான் உண்மை.

அலெக்சாண்டர் தூங்கும்போது கூட தலையணைக்கு அடியில் ஹோமரின் போர்க் காவியநூல்இலியட்” இல்லை என்றால் அவனுக்கு தூக்கம் பிடிக்காது. நமக்கெல்லாம் தூக்கம் வந்தால் புத்தகம் பிடிக்காது. இன்னும் சிலர் தலையணைக்குப் பதிலாக புத்தகத்தைப் பயன்படுத்துவார்கள்.

 அலெக்ஸாண்டர் போருக்கு செல்லும்போது தன்னோடு வைத்திருக்க விரும்பியவை மூன்று, அவற்றில் ஒன்று, அவன் உயிராக போற்றி பாதுகாத்து வந்த "இலியட்", இரண்டாவது ஒரு சிறு குத்து வாள் பாதுகாப்புக்கு, மூன்றாவது அவனுடைய குதிரை, பூசி பாலஸ், அது குதிரை மட்டுமல்ல அவன் நண்பன்.

அலெக்சாண்டர்  விரும்பிப் படித்தவை தத்துவ புத்தகங்கள், இரண்டாவதாக சரித்திர புத்தகங்கள், அவை மட்டுமல்ல, இலக்கிய புத்தகங்களும் கூட.

மாவீரன் அலெக்சாண்டருக்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவனுடைய ஆசிரியர், குருநாதர், அரிஸ்டாட்டில், அவர் பிளாட்டோவின் மாணவர், பிளாட்டோ சாக்ரடீசின் மாணவர்.

ARISTOTLE THE TEACHER OF ALEXANDER

மேற்கத்திய நாட்டு தத்துவங்களின் தந்தை என்று கருதப்பட்டவர்களில் ஒருவர் அலெக்சாண்டரின் வாத்தியார் அரிஸ்டாட்டில். உலகத்திலேயே முதன் முலாக  ஆசிரியர் என்று அழைக்கப்பட்டவரும் அரிஸ்டாட்டில்தான்.

அலெக்சாண்டருக்கு தன் வாழ் நாள் முழுக்க திரும்பத்திரும்ப படித்த ஒரே நூல் ஹோமர் எழுதியஇலியட்” என்ற போர்க்காவியம்தான். அது ஒரு கவிதைக் களஞ்சியம், ஆக அலக்சாண்டர் ஒரு கவிதைக் காதலனும் கூட.

HOMER AUTHOR OF ILLIAD GREAT EPIC

அந்தஇலியட்” என்பது டிராய் மற்றும் கிரேக்கர்களுக்கிடையே நடந்த  ஒரு போரை வர்ணிக்கும் போர்ப்பரணி, அந்த நூலில் வரும் காவிய நாயகன்  அக்கிலஸ் என்பவன். கலிங்கத்துப்பரணி மாதிரி இது கிரேக்கப்பரணி.

 அலெக்சாண்டரைக் கவர்ந்த மாவீரன் தான் அக்கிலஸ்.

அலெக்சாண்டர் ஹோமரின் இலியட் நூலை திரும்பத் திரும்ப படித்ததனால்,இலியட் நூலின் நாயகன் மாவீரன்  அக்கிலசாகவே தன்னை மாற்றிக் கொண்டான்.

அலெக்சாண்டருக்கு "இலியட்" நூலை அறிமுகம் செய்த நாளிலிருந்து அலெக்சாண்டர் ஒருநாளும் அந்த நூலை விட்டு பிரியவில்லை. சிலர் எப்போதும் ஒரு பெரிய புத்தகத்தை வருஷக்கணக்கில் கையில் வைத்துக்கொண்டே அலைந்து கொண்டிருப்பார்கள். அலெக்சாண்டர் அப்படியில்லை.

ஒரு மாபெரும் தலைவனாக உருவாவது எப்படி என்பதை அந்த நூல் அவனுக்கு சொல்லித் தந்தது, மலைபோன்ற ஆபத்து வரினும் அதனை மதிநுட்பத்தால்  பனிபோல எதிர்கொள்வது எப்படி என்னும் சுலபமான சூத்திரத்தைச் சொல்லித் தந்தது. பிறர் மனதைப் புரிந்து கொண்டு அவர்கள்  மனங்கோணாமல் பழகும் தன்மையை அது சொல்லித்தந்தது.

அலெக்சாண்டர் தன்னை அக்கிலேஷ் என்ற மாவீரனின் மறு வடிவமாக தன்னை செதுக்கிக் கொண்டான். போர்க்களத்தில் எதிரிகளை சிதறி ஓடச்செய்யும்  சூட்சுமம்மிக்க போர்க்கலையை அக்கிலசிடம் சுவீகரித்துக் கொண்டான்.

தனது மாபெரும் சாம்ராஜ்ய கனவை நனவாக்க அலெக்ஸாண்டருக்கு உதவியாக இருந்தது இலியட் என்னும் அந்த காவிய நூல்.

இலியட் நூலை அலெக்ஸாண்டர் படித்த போது, இதர நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டியது. அதனால் அவன் சரித்திரம் தத்துவம் மற்றும் இலக்கியம் குறித்த நூல்களையும் தேடித்தேடி படித்தான்.

XENOPHON AUTHOR OF ANABASIS

கிரேக்கர்கள் மற்றும் பெர்சியன் போர்கள், பெரும் யுத்தங்கள்,  குறித்த புத்தகங்கள், மகோன்னதமான  மனிதர்களின் மனநலன்கள் மற்றும் குணநலன்கள்  குறித்த புத்தகங்கள், பெர்சிய அரசின் அரசாட்சி முறைகள், ராணுவ தலைமை மற்றும் பாரசீகப் போர்குறித்து சீனோபோன் எழுதிய அன்பேசிஸ் ஆகிய புத்தகங்களை எல்லாம் அலெக்ஸாண்டர் படித்து தன்னை வளர்த்துக் கொண்டான். போர் என்ற பெயரில் எந்தப் புத்தகம் கிடைத்தாலும் அதனை கரைத்துக் குடித்தான்.

கிரேக்க சரித்திரத்தின் காவிய வீரர்கள் ஹிராகிள்ஸ் மற்றும் பெர்சியஸ் ஆகியோரின் சரித்திர நூல்களை திரும்பத் திரும்பப் படிப்பதில் ஆர்வம் காட்டினான் அலெக்சாண்டர்.

அலெக்சாண்டர் பொழுதுபோக்கிற்காக புத்தகங்களை வாசிக்கவில்லை சுய முன்னேற்றத்திற்காக புத்தகங்களை வாசித்தார். அதற்கான தத்துவார்த்த பலம் வேண்டும் என கருதி அதற்காக படித்தார்.அதற்கான சரித்திரபூர்வமான விழிப்புணர்வு வேண்டி புத்தகங்களை படித்தார். உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை எப்படி உருவாக்குவது என்பதை தெரிந்து கொள்ளவும் அலெக்சாண்டர் புத்தகங்களை படித்தார். புத்தகங்கள் அலெக்சாண்டருக்கு தோல்விகளை தோற்கடிக்கும் வழிகளை சொல்லித்தந்தது.

கிரேக்க கவிஞர் ஹோமர் இலியட் மற்றும் ஒடிசி ஆகிய இரண்டு காவிய நூல்களையும் எழுதினார்.இவர் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அவரைப் பற்றி ஒரு ஆச்சரியமான செய்தியைச் சொல்கிறேன் அடிப்படையில் ஹோமர் ஒரு கண் தெரியாதவர். அவர் ஒரு பாடகன் மற்றும் நடிகர்.அது மட்டுமல்ல கிரேக்க ரோமானிய இலக்கிய உலகின் பிதாமகர் அவர், இடியட் காவியத்திற்காக ஹோமர் எழுதியவை 15,693 வரிகள்,ஒடிசி காவிய நூலுக்காக அவர் எழுதியவை. 12,110 வரிகள்.

கண்தெரியாத, கண்பார்வை இல்லாத கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய இலியட் என்னும் நூல்தான் அலெக்சாண்டரின் வெற்றிக்கண்களை திறந்து வைத்தது.

இந்த கடிதம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் சாம்ராஜ்ய கனவுகளை நனவாக்க புத்தகங்களை படியுங்கள்.

பூமி ஞானசூரியன்


THE PRICE OF HUMAN HEAD - A TRUE STORY - மனிதத் தலையின் மதிப்பு - ஒரு உண்மைக்கதை


                மனிதத் தலையின் மதிப்பு

கடிதம்: 4

 அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !


குடியரசு தினத்தன்று நான் கதிரி மங்கலம் கிராமத்தில் ஓசை தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த குடியரசு தினவிழாவில் கலந்துகொண்டு, கொடியேற்றி பேசச்  சொன்னார்கள். வழக்கமாக நான் மரங்கள் பற்றி, அல்லது நீர் மேலாண்மை பற்றி, காலநிலை மாற்றம் பற்றி, மற்றும் சுற்றுச்சூழல் பற்றிப் பேசுவேன்.

இந்த முறை இந்த மாதிரி பொதுமக்களிடையே பேசும்போது கதைகள் சொன்னால் என்ன என்று தோன்றியது. அதனால் அங்கு  ஒரு கதையுடன் பேசத் தொடங்கினேன்.  அன்று சொன்ன கதையுடன் நான்  இன்றைய கடிதத்தை தொடங்குகிறேன்.

உங்கள் எல்லோருக்கும் மகதப் பேரரசன் அசோகரை தெரியும்,மௌரிய பேரரசின் மூன்றாவது மன்னர், அவர் தான் பிந்துசாரரின் மகன், அவர் தான் சந்திரகுப்தரின் பேரர்.

ஒரு நாள் அசோகர் தனது மந்திரி மற்றும் கொஞ்சம் வீரர்களுடன் குதிரையில் போய்க் கொண்டிருந்தார், எதிரில் ஒரு பத்து பதினைந்து சாமியார்கள் ஒரு குழுவாக காலணிகூட இல்லாமல் கால்நடையாக  வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் அசோக மகாராஜா தனது குதிரையிலிருந்து இறங்கி அந்த தலைமைச் சாமியாரின்  பாதங்களில் விழுந்து வணங்கினார், சாமியார் அவரை  அதிர்ச்சியுடன் ஆசீர்வதித்தார். காரணம் அவருடய குழு சாமியார்கள் கூட அவர் காலில் விழமாட்டார்கள்.

பஞ்சைப் பராறி போல இருந்த அந்த சாமியாரின் காலில் பாராளும் மன்னன் விழுந்து வணங்கியது, அசோகரின் மந்திரிக்கு பிடிக்கவில்லை, ஆனாலும் அவர் அமைதியான எரிச்சலுடன் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் அசோகர் தனது அரண்மனைக்கு திரும்பியதும், இதுவரை தன் மனதில் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை அடக்கமாக அந்த மந்திரி அசோகருக்கு தெரிவித்தார். இல்லையென்றால் அவருக்கு மண்டை வெடித்துவிடும்.

அரசே மன்னிக்க வேண்டும், நீங்கள் அந்த சாமியாரின் காலில் விழுந்து வணங்கினீர்கள், உங்கள் கிரீடம் அந்த சாமியாரின் காலில் பட்டது, அது கூட எனக்கு பெரிதாக தோன்றவில்லை, ஆனால் உங்கள் சிரம் அதாவது உங்கள் தலையும் அந்த சாமியாரின் காலில் பட்டது, அது எனக்கு அவமானமாக இருந்தது, தாங்கள் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தி ?" என்று சொல்லிவிட்டு அமைதி ஆனார் அமைச்சர்.

அசோகர் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் சில நாட்கள் சென்றன. ஒரு நாள் மந்திரியை வரச் சொன்னார். மந்திரியார் அசோகரிடம் வந்து "கட்டளை இடுங்கள் மகாராஜா" என்றார். "எனக்கு உடனடியாக ஒரு ஆட்டுத்தலை, ஒரு புலியின் தலை, ஒரு மனிதனின் தலை, மூன்றும் வேண்டும். உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு வேகமாக அரசர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

மந்திரிக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. அரசர் கட்டளை இட்டு விட்டார் என்ன செய்வது ? யோசித்தபடி, கசாப்பு கடைக்கு போனார். எவ்விதமான பிரச்சனை இல்லாமல் ஆட்டுத்தலை கிடைத்தது. ஒரு பெரிய வேட்டைக்காரன் இருந்தான், அவனிடம் போய் கேட்க அவன் புலித்தலையை ஏற்பாடு செய்து கொடுத்து விட்டான். ஆனால் மனிதத் தலை கிடைப்பது மகா சிரமமாக இருந்தது.

ஒரு வழியாக ஒரு சுடுகாட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு வெட்டியான் வீட்டுக்குப் போனார். இரண்டு நாளுக்கு முன்னால் புதிதாக புதைத்த ஒரு பிணத்தின் தலையை வெட்டி மந்திரியிடம் கொடுத்தான். ஏன் அவனை வெட்டியான் என்று சொல்லுகிறார்கள் என்பது புரிந்தது மந்திரிக்கு.

மூன்று தலைகளையும் எடுத்துக்கொண்டு போய் மந்திரி அரசரிடம் கொடுத்தார். இந்த மூன்று தலைகளையும் வைத்துக் கொண்டு இவர் என்ன செய்யப் போகிறார் என்று யோசித்தபடி மௌனமாக இருந்தார்.

அப்போது அசோகர் சொன்னார், "மந்திரியாரே உங்கள் வேலையை பாதியைத்தான் செய்திருக்கிறீர்கள். இன்னும் பாதிவேலை மீதியாக இருக்கிறது" என்றார்" 

"என்ன செய்ய வேண்டும் அரசே ? உத்தரவிடுங்கள் செய்து முடிக்கிறேன்என்றார். “வேறு ஏதாச்சும் தலை வேண்டுமானாலும் சொல்லுங்கள்” என்று சொல்லவில்லை, மனதில் தோன்றியது.

அப்போது அசோகர் "இந்த மூன்று தலைகளையும் கொண்டு சென்று நல்ல விலைக்கு விற்பனை செய்து விட்டு வாருங்கள்" என்று சொன்னதும், அமைச்சர் ஆடிப் போனார்.

அந்த ஆட்டுத்தலை புலித்தலை மற்றும் மனித தலை மூன்றும் அடங்கிய அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு, அசோகரிடம் விடைபெற்றுக் கொண்டு தன்   விதியை நொந்தபடி நடந்தார் அமைச்சர்.

அமைச்சருக்கு பழக்கமான கசாப்பு கடைக்குப் போனார், கடைக்காரர் எதுவும் சொல்லாமல் ஆட்டு தலையை வாங்கிக் கொண்டார். அந்தத் தலையை வாங்கவில்லை என்றால் தன் தலை போய்விடும் என்று தெரியும்.

அமைச்சருக்கு மிகவும் தெரிந்த ஒரு பணக்காரரிடம், பாடம் செய்து வீட்டில் மாட்டி வைப்பதற்கு, அந்த புலித்தலையை ஒரு நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

அந்த மனிதத் தலையை எங்கு விற்பனை செய்வது எப்படி செய்வது என்று புரியாமல், அமைச்சர் குழம்பிப் போனார். கடைசியாக மன்னரிடம் போய் தன்னால் மனிதத்தலையை மட்டும் விற்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு தன்னுடைய தலையை தொங்க போட்டுக் கொண்டார்.

அப்போது அசோக மன்னர் சிரித்துக் கொண்டே சொன்னார், “என்னுடைய தலை அந்த சாமியாரின் பாதங்களில் பட்டது என்று என்ன கேட்டீர்கள் ஞாபகம் இருக்கிறதா? “ என்றார் மன்னார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அமைச்சர்.

அதன் பிறகு அமைச்சர்மனிதத் தலைக்கு என்ன மரியாதை என்று இப்போது எனக்குப் புரிகிறது” என்றார்.

ஆக உலகத்தில் மனித தலையின் மதிப்பு எவ்வளவு என்று கண்டுபிடித்த அசோக சக்கரவர்த்தி, போரில் தான் கொன்றுகுவித்த ஒரு லட்சம் மனித உயிர்களுக்கு, பரிகாரம் செய்வதற்காகத்தான், ஊர் முழுக்க குளம் குட்டைகளை வெட்டினார், சாலை நெடுக மரங்களை நட்டார். “  என்று நான் அந்தக் கதையை சொல்லி முடித்தேன்.

 அதன் பிறகு உண்மையாக நாம் இறந்து போன பின்னால் மனித உடலின் மதிப்பு பற்றி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது, மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு மரங்கள் நட எத்தனை மரங்கள் நட வேண்டும் என்ற கணக்கையும் சொன்னேன். அது பற்றிய தகவல்களை இன்னொரு கடிதத்தில் சொல்லுகிறேன்,

நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

--------------------------------------------------------------------------------------------------------

LEARN TO BUILD A ROBOT - ரோபோக்களை நாமே தயார் செய்யலாம்

கடிதம் 7 ரோபோக்களை நாமே தயார் செய்யலாம் LEARN TO BUILD A ROBOT ரோபோக்கள் உருவாக்கும் தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ள நிறைய புத்தகங்கள் வந்துள்...