Monday, December 30, 2024

SANDALWOOD TREE THEME PARK - சந்தனமர கருத்துப் பூங்கா

 

கடிதம் 1

சந்தனமர

கருத்துப்

பூங்கா

SANDALWOOD TREE

THEME PARK

உங்கள் அனைவருக்கும். பூமி நிறுவனத்தின் சார்பில், 2025 ம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு உங்களுக்கு, சிறப்பான ஆண்டாக அமையும், சீரான ஆண்டாக அமையும். எல்லா வளங்களையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாரி வழங்குகின்ற  வளம் நிறைந்த ஆண்டாக. அமையும் என்பதை உங்களுக்கு நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களோடு, தொடர்புகொள்ள, உரிமையோடு பேச, நான் செய்யும் பணிகள் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள, அது பற்றிய கருத்துக்களை கேட்க, அதனை ஓரளவுக்கு நிறைவு செய்யும் வகையில் நான் எனது பணிகளை சீரமைக்க, என பல்வேறு வகையில், உதவியாக இருக்கும், இருந்த  சமூக ஊடகங்களுக்கும், மக்கள் தொலைக்காட்சிக்கும்,  சமீப காலமாக ஆய்வுப்பணிகளுக்கு பேருதவியாக, பெருந்துணையாக இருக்கும் சேட் ஜிபிடி’ போன்ற செயற்கை அறிவு செயலிகளுக்கும்,  நான் மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

வர இருக்கும். அல்லது வந்து கொண்டிருக்கும் 2025ம் ஆண்டில், நாம் என்ன செய்யப்போகிறோம். என்பதை நீங்கள் திட்டமிட்டு விட்டீர்களா? என்று உங்களிடம் கேட்கலாம் என நான் நினைக்கிறேன்.

ஆனால் இந்த ஆண்டு, செய்வதென தேர்வு செய்துள்ள முக்கியமான இரண்டு பணிகள் பற்றி உங்களிடம் சொல்லி உங்களுடைய கருத்துகளையும் கேட்கலாம் என்று எண்ணித்தான் இதனை நான் இங்கு எழுதுகிறேன்.

முதல் பணி

உங்களுக்குத் தெரியுமா ? திருப்பத்தூர் என்பது சந்தன நகரமாக இருந்தது, தமிழ்நாட்டின் ஒரே சந்தன எண்ணை பிழிகின்ற ஆலை தெக்குப்பட்டு என்னும் கிராமத்தில்தான்  இருந்தது, அந்தப் பழய ஆலையின் பக்கத்தில்தான் கடந்த 23 ஆண்டுகளாக நான் வசித்து வருகிறேன், சந்தன எண்ணை பிழியும் ஆலையை இழுத்து மூடி ஏகப்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்டன. சந்தன மரங்கள் காணாமல் போய் மாமாங்கம் ஆகப் போகிறது என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.

ஆதலால் இந்த மாவட்டத்தின், மண்ணின் மைந்தர்கள், மீண்டும் சந்தன மரக்காடுகள்  இங்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். தெக்குப்பட்டு சந்தன ஆலை மீண்டும் இங்கு எண்ணை பிழிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். சென்னையிலிருந்து பெங்களுருக்கு ரயிலில் செல்லும்பொது, வாணியம்பாடியைத் தாண்டினாலே சந்தன எண்ணையின் வாசம் சகட்டுமேனிக்கு வீசவேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த ஆலை இந்தப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும், இங்கிருந்து  இந்த  சந்தன எண்ணை ஏற்றுமதி ஆக வேண்டும், அது இந்த அன்னியச்செலாவணியை ஈட்ட வேண்டும்,  தமிழ் நாட்டிற்கு தனிப்பட்ட பெருமையை அது ஈட்டித்தர வேண்டும்  என்றெல்லாம் விரும்புகிறார்கள்.

இதையெல்லாம் செய்யலாம் என்றுதான் சொல்ல முடியும்,  இவையெல்லாம் செய்யமுடிந்த வேலைதான் என்றுதான் சொல்ல முடியும். இன்னொன்றையும் என்னால் சொல்ல முடியும். அடுத்த  ஆண்டு சட்டமன்ற தேர்தல்  வருகிறது. தேர்தலின்போது எல்லா கட்சிகளும் உங்களிடம் வரும், வரும்போது அவர்களிடம் உங்கள் கோரிக்கைகளைக் கொடுக்கலாம் நினைவில் கொள்ளுங்கள்.

அரசியல் நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவர்களால்தான் காரியம் நடக்க வேண்டும், நமது கோரிக்கைகளை பார்க்கும் போதெல்லாம் நமது கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும். சமீபத்தில் என்னைத்தேடி தலைவர் ஒருவர் வந்தார், அப்போது கூட  விவசாயிகளை எதிர் நோக்கி இருக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்க்க உதவுமாறு நான் ஒரு கோரிக்கை மனுவை அவரிடம் கொடுத்தேன்.

இந்த மாவட்டத்தின் அடையாளம் சந்தன மரக்காட்டினை 1000 ஏக்கரில் அமைத்துக் கொடுங்கள் என்று கேட்கலாம், ஆயிரம் ஏக்கர் எங்கே இருக்கிறது என்பார்கள் ? அவர்களுக்கு கிழக்கு தொடர்ச்சி மலையைக் காட்டுங்கள். தெக்குபட்டு சந்தன ஆலையை மீண்டும் இயங்க செய்ய உதவுங்கள் என்று கேட்கலாம். இது ஒன்றும் இமயமலையை புரட்டுகின்ற காரியம் இல்லை. இது அவர்கள் பால பருவத்திலே கோலி விளையாடியதைப் போலத்தான். இது ஒன்றும் அவ்வளவு பெரிய வேலை இல்லை.



சந்தன மர சாகுபடியை பரவலாக்க முடியுமா ? அதன் மூலம் பெரும்பொருள் ஈட்ட முடியுமா ? சராசரியான நமது கல்லாங்கரட்டு  நிலங்களில் சாகுபடி செய்ய முடியுமா ? அதனை இங்கு  அறிவியல் ரீதியாக வளர்க்க முடியுமா ? திருப்பத்தூர் மாவட்டத்தில் மீண்டும் சந்தன எண்ணையின் வாசம் வீசுமா என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த எங்கள் பூமி நிறுவனம் 2025 ம் ஆண்டினை இலக்கு ஆண்டாக நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

அதற்கு அடிப்படையாக, சந்தனமர கருத்துப் பூங்கா ஒன்றினை, 10 ஏக்கர் பரப்பளவில், நிறுவி அதனைக் களமாகக் கொண்டு, விவசாயிகளுக்கு பயிற்சிகளைத் தர உள்ளோம்.

அந்தப் பயிற்சியில்,சந்தன மர சாகுபடிக்கு,  நிலங்களை எப்படித் தேர்வு செய்யலாம் ? கன்றுகளை எப்படி நடவேண்டும் ? எவ்வளவு இடைவேளி வேண்டும் ? மரத்திற்கு மரம் எவ்வளவு இடைவெளி ? வரிசைக்கு வரிசை எவ்வளவு இடைவெளி ? அதற்கு உரம் போட வேண்டுமா ?  அந்த உரம் ரசாயன உரமா? இயற்கை உரமா ? அதனை அடிஉரமாக இட வேண்டும் ? மேலுரமாக இட வேண்டுமா ? அதனை என்னென்ன பூச்சிகள் தாக்கும் ? என்னென்ன  நோய்கள் தாக்கும் ? அவற்றை எப்படி கட்டுப்படுத்தலாம் ? அதற்கு பாசனம் தர வேண்டுமா ? தரவேண்டும் என்றால் அது சொட்டு நீர்ப் பாசனமா ? தெளிப்புநீர்ப் பாசனமா ? அல்லது பாசனமே தேவை இல்லையா ?  பெறுகின்ற மழை மட்டுமே போதுமா ? வளர்ந்த மரங்களை 15 முதல் 20 ஆண்டுகளில் வெட்டலாம் என்கிறார்கள் ? அப்படி வெட்டும்போது வனத்துறைக்கு சொல்ல வேண்டும் என்கிறார்கள், வனத்துறைதான் வெட்டுமா ? வனத்துறைக்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டுமா ? ஆகிய விவரங்களை எல்லாம் விவசாயிகளுக்கு பயிற்சியாக நமது சந்தன மரக் கருத்துப் பூங்காவில் வழங்க இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

அதற்கென, எங்கள் தோட்டத்தில், சந்தன மரக் கன்றுகள் உற்பத்தி நாற்றங்கால் ஒன்றினை. இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே நாங்கள் செய்துவருகிறோம்.

இரண்டாவது பணி, எனது எழுதும் பணியில். இந்த ஆண்டில்,  சில சமயங்களில் தினசரி என்னால் எழுத முடியாமல் போனது. அப்படி இல்லாமல் இந்த ஆண்டு 365 நாளும் தொடர்ச்சியாக உங்களுக்கு கடிதங்கள் எழுத வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். கீழ்க்கண்டவற்றை இந்த ஆண்டில் நாம் எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இரண்டாவது பணியாக, குறைந்தபட்ச ஆதாரவிலை தென் மானில விவசாயிகளுக்கு தேவையா ? எந்தெந்த விவசாய விளைபொருட்களுக்கு மாவட்ட அளவிலான தொழிற்சாலைகள் தேவை ? தமிழ்நாட்டில் தொடர்கதையாக இருக்கும் வெள்ளத்தை தடுக்க என்ன செய்யலாம் ? எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நீர் ஆதாரங்களை பரமரிக்கலாம் ? தமிழ் பேசும் ஆறுகளை ராஜஸ்தானி ஆறுகளைப் போல வறண்ட ஆறுகளை ஆண்டுமுழுவதும் ஓடும் ஆறுகளாக மாற்ற முடியுமா ? உண்மையாகவே சொட்டு நீர்ப்பாசனம் நமது பாசன நீர்ப்பிரச்சினையைத் தீர்க்குமா ? கூரை நீர் அறுவடை நமது குடி நீர்ப்பிரச்சினையைத் தீர்க்குமா ? நமது சிறு குறு விவசாயிகள் நிலத்தில் வேலை செய்ய மகாத்மாகாந்தி ஊரக வெலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் உறுதி அளிக்குமா ? விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்குமா ? விவசாயிகளின் குழந்தைகளுக்கு இலவச கல்வி கிடைக்குமா ? கிராமங்களில் விவசாய குடும்ப முதியவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா ?

இவை எல்லாம் எனது கட்டுரைகளின் கருப்பொருளாக அமையும் என்பதை நான் உங்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

அதுமட்டுமல்ல, 2022ம் ஆண்டிலிருந்து. தொடர்ச்சியாக நான் எழுதிய. கட்டுரைகளை. தொகுத்து,  நான்கு புத்தகங்களாக வெளியிட்டுள்ளேன். தற்போது நடக்கின்ற புத்தக கண்காட்சியில் கீழ்கண்ட புத்தகங்கள்  கீழ்கண்ட பதிப்பகங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ளுவதோடு அதனை வாங்கி படித்து நம்மைப்போல வளர்ச்சித் திட்டங்களில் ஆர்வமுள்ள, நம்பிக்கையுள்ள, நண்பர்களுக்கு எனது நூலை பரிந்துரை செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்ளுகிறேன்.

1.     ஆறும் ஊரும் (தமிழகத்தின் 104 ஆறுகள் பற்றிய தகவல் சொல்லும் நூல்)

2.     தண்ணீர் தண்ணீர் (பாசன நீர் பிரச்சனை மற்றும். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகள் சொல்லும் நூல்)

3.     மலைப்பாம்பும் மான்குட்டியும்(சிறுவர் நீதிக்கதைகள்)

4.     பூமியை யோசி மரங்களை நேசி (இந்திய மற்றும் சில மேற்கத்திய. நாடுகளின். நாடுகளைச் சேர்ந்த 108 மரங்களை அறிமுகம் செய்யும் நூல்.)

5.     தினம் தினம் வனம் செய்வோம் (இந்திய மற்றும் சில மேற்கத்திய. நாடுகளைச் சேர்ந்த 108 மரங்களை அறிமுகம் செய்யும் நூல்)

எனது நூல்களை விற்பனைக்கு வைத்திருக்கும் பதிப்பகங்கள்.

1.     நூல்குடி பதிப்பகம், புத்தகக்கடை எண்:273 & 274

2.     உயிர் பதிப்பகம், புத்தகக்கடை எண்: 468

3.     நிதர்சனம் பதிப்பகம்

மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம். நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்


No comments:

செயற்கை நுண்ணறிவு பிதாமகன் கதை - THE FATHER OF ARTIFICIAL INTELLIGENCE

  கடிதம் 5 செயற்கை நுண்ணறிவு பிதாமகன் கதை THE FATHER OF ARTIFICIAL INTELLIGENCE CAN ROBOTS PERFORM TASKS LIKE HUMANS ? செயற்கை நுண்ணற...