பசிஃபிக் கடலோர கேனன் பீச் நகரத்தை நாங்களும் பார்த்தோம்.பேரன் சிக்கிவிடக்கூடாது என்ற பயம் எனக்கு ஏற்பட்டது நீலச்சதுப்பு ஏரியில். ஒத்த உணர்வை உணர்ந்தேன். கடல் உணவோடு திரும்பியதில் மகிழ்ச்சி. - கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ
கவிதச்சாயலுடன் கூடிய உங்கள் கருத்து சிறப்பு, மிக்க நன்றி. - பூமி ஞானசூரியன்
**********************************************************************************
14.08.2024
கடித எண்:
33
WITHOUT LABOR NOTHING PROSPERS -
SOPHOCLES
உலகின் ஆபத்தான எரிமலை
மவுண்ட் ரெய்னியர்
THE MOST DANGEROUS VOLCANO
MOUNT RAINIER
அன்பின் இனிய நண்பர்களே
இன்றைய கடிதத்தில் வாஷிங்டன் மாநிலத்தில் இருக்கும் மவுண்ட் ரெய்னியர் போய் வந்த அனுபவத்தை சொல்லப் போகிறேன்.வாங்க ரெய்னியர் மலை சிகரம் பார்க்கப் போகலாம்.
மவுண்ட் ரெய்னியரைப் பார்க்க, ஒரு சுற்றுலாவினை எற்பாடு செய்து, அதுபற்றிய அடிப்படையான
செய்திகளைத் தெரிந்துகொண்டு, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, பலவித நடைமுறைச்
சிரமங்களைக் கடந்து, அவை தொடர்பான செய்திகளைச்
சேகரித்து ,அவற்றை ஒரு கடிதமாக வடிவமைத்து, உங்களிடம் சேர்க்க முற்படும்போது WITHOUT
LABOR NOTHING PROSPERS கிரேக்க அறிஞர் சோஃபோகிளிஸ் சொன்னது நினைவுக்கு வருகிறது.(
நன்றி சுப்பிரமணிய பாலா)
|
MOUNT RAINIER VOLCANO PANORAMIC VIEW |
எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதற தயாராக இருக்கும் ஒரு மவுண்ட் ரெய்னியர்
எரிமலை (MOUNT RAINIER)பகுதியைப் பார்க்க போகிறோம் என்பது முதலில் படபடப்பாக இருந்தது.
அதுவும், நான் என் மனைவி எனது மகன் எனது மருமகள் எனது பேரன்கள் இருவர், என்று அனைவரும் போகப் போகிறோம் என்று திட்டமிடும்போது எனக்கு கொஞ்சம் கலவரமாகவும் இருந்தது.
எல்லோரும் சுற்றுலா பயணம் போய்வரும் இடமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இது தேவையா என்று சில நண்பர்கள் என்னை எச்சரிக்கவும் செய்தார்கள். “வயதான காலத்தில் இந்த குசும்பு எல்லாம் தேவையா” என்றும் கேட்டார்கள்.
ஆனால் மவுண்ட் ரெய்னியர் செல்லலாம் என்று முடிவு செய்தது என் மகனும் மருமகளும் தான். அது எனக்கு பிடிக்கும் என்று தான் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். அதனை வேண்டாம் என்று எனக்கு மறுக்க விருப்பமில்லை. |
MY SON & DAUGHTER IN LAW |
என் மனைவியும் நடக்க சிரமப்படுவாள். அதிக தூரம் நடக்க முடியாது ரொம்பவும் நடந்தால் முட்டி வலி வந்துவிடும். பாதத்தில் வீக்கம் வரும். அவளும் எனக்காக சரி என்றாள்.
டெக்ஸாஸ் மாநிலத்தின் போர்ட்வொர்த் விமான நிலையத்திலிருந்து ஓரிகான் மாநிலத்தில் போர்ட்லேண்ட் வரை விமான மூலம் நாங்கள் வந்து சேர்ந்தோம்.
பிறகு அங்கிருந்து ஒரு வாடகைக் கார் எடுத்துக்கொண்டோம் எல்லா இடங்களுக்கும் காரை ஓட்டப்போவது என் மகன் தான். கார் ஓட்டுவது அவனுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. அதுவும் கொண்டை ஊசி விளைவுகளை உடைய பகுதியில் ஓட்டுவது என்றால் அவனுக்கு அல்வா
சாப்பிடுவது மாதிரி. |
MY FAMILY IN MOUNT RAINIER NATIONAL PARK |
|
A GLAZIER |
ஒரு காலத்தில் இளைஞர்கள் குதிரை ஓட்டுவதை சிறந்த திறமையாக வீரமிக்க செயலாக கருதினார்கள். ஆனால் இன்று உள்ள இளைஞர்கள் கார் ஓட்டுவதை அதற்கு சமமாக நினைக்கிறார்கள்.
அடங்காத குதிரைகள் மாதிரியே அடங்காத கார்களும் உண்டு என்று சொல்லுகிறார்கள். அது பற்றிய அறிவு எனக்கு அவ்வளவாக கிடையாது.
இன்று நாங்கள் மவுண்ட் ரெய்னியர்
எரிமலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம்.
கேஸ்கட் மலைத்தொடரில் மிக உயரமான எரிமலை என்பது மவுண்ட் ரெய்னியர்
(MOUNT RAINIER) தான் இதன் உயரம் 14,411 அடி.
கேஸ் கட் மலைத்தொடர்(CASCADE
MOUNTAINS) கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் (BRITISH COLUMBIA)தொடங்கி வாஷிங்டன் ஓரிகான் மற்றும் கலிபோர்னியா வரை நீண்டு செல்லுகிறது.
குறிப்பாக வாஷிங்டன் மாநிலத்தின் உள்ள
கேஸ்கேட் மலைத்தொடரில் மிகவும் முக்கியமானது மவுண்ட் ரெய்னியர். இது காஸ்கேட் மலைத்தொடரில் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
நாங்கள் இந்த மலைப்பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டக்கோமா என்ற நகரில் தங்கி இருந்தோம். டக்கோமாவில் இருந்து அடுத்த நாள் காலை புறப்பட்டுச்
சென்றோம்.
மவுண்ட் ரேனியர் மலையை எரிமலை சிகரம் என்று வர்ணிக்கிறார்கள் உலகில் இருக்கும் மிகவும் ஆபத்தான எரிமலைகளில் மவுண்ட் ரெய்னியர் சிகரமும் ஒன்று.
இது ஆபத்தானது என்று ஏன் சொல்லுகிறார்கள் என்றால் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்க தயாராக இருக்கும் எரிமலை.
தேசிய பூங்கா ஒன்றினை இங்கு அமைந்துள்ளார்கள். இதன் பெயர் மவுன்ட்
ரெய்னியர் தேசியப்பூங்கா(MOUNT RAINIER NATIONAL PARK). எரிமலை மலை முகட்டினை பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் இந்த தேசிய பூங்கா அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் அதற்கான நுழைவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.
நாங்கள் இரவு தங்கி இருந்த, டொகோமா
நகரிலிருந்து இருந்து மவுண்ட் ரேய்னியர் செல்ல நான்கு வழிகள் உண்டு. அவற்றுள் நாங்கள் நிஷ்குவாலி நுழைவு வாயில் ((NISHQUALLY ENTRANCE)வழியாக செல்வதாக முடிவு செய்து அதற்கான அனுமதியும் பெற்றிருந்தோம்.
வடமேற்கு திசையில் இருக்கும் நுழைவு வாயிலின் பெயர் கார்பன் ரிவர் என்ட்ரன்ஸ்(CARBON
RIVER ENTRANCE). வடகிழக்கு திசையில் இருக்கும் நுழைவு வாயில் ஒயிட் ரிவர் என்ட்ரன்ஸ்(WHITE RIVER ENTRANCE). மூன்றாவது நுழைவாயில் ஸ்டீவன்ஸ் கேனியன்(STEVAN’S
CANYON) என்பது. தென்கிழக்கு பகுதியில் இருப்பது. தென்மேற்கு நுழைவாயில் நிஷ்குவாலி(NISHQUALLY ENTRANCE).
இப்போது எங்கள் கார் நிஷ்குவாலி(NISHQUALLY) நுழைவாயில் நோக்கி போய்க்கொண்டிருந்தது.
|
NISHQUALLY RIVER |
நிஷ்குவாலியிலிருந்து எங்கு சென்றோம்
? எப்படி சென்றோம் ? என்ன பார்த்தோம் ? மவுண்ட் ரெய்னியர் ஏரிமலையைச் சுற்றி இருக்கும்
மரங்கள், ஓடும் கிளேசியர்கள், ஆறுகள், ஆல்பைன் ஏரிகள், மவுண்ட் ரெய்னியர் வெடித்தால்
எந்த இடங்கள் பாதிக்கப்படும் ? அடுத்து வரும் கடிதங்களில் பார்க்கலாம்.
இந்த
கடிதத்தில் சொல்லப்பட்ட. அறிமுகச் செய்திகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று
நினைக்கிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் அது பற்றி கமெண்ட் பகுதியில் உங்கள்
கருத்துக்களை பதிவு செய்யுங்கள். மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம். நன்றி
வணக்கம்.
பூமி ஞானசூரியன்
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment