Thursday, August 29, 2024

TALE OF TWO OCEANS இரண்டு கடல்களின் கதை

அமெரிக்கா ஊருக்கு போய்ட்டுவரமுடியவில்லைஎன்றாலும் நீங்கள் தரும் வெளிநாட்டு விளக்கம் சூப்பர் சார் ! மழை இத்தனை அளவு இருக்கும்போது அங்கு வெள்ளம் வருமா ? - ஞானவேல், ஆல் இந்தியா ரேடியோ, மதுரை.

அன்பு ஞானவேல், மழை அதிகம் இருந்தால் அமெரிக்கவாக இருந்தாலும் வெள்ளம் வரத்தான் செய்யும். அது வராமல் இருக்க, அவற்றை சேமிக்க, நிறைய ஏரிகள், குளங்கள் வேண்டும். இருக்கும் குளங்களில் ஏரிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது - பூமி ஞானசூரியன்.

TO LEARN TO READ IS LIGHT A FIRE:EVERY SYLLABLE THAT IS SPELLED OUT IS A SPARK - Victor Hugo


POWELL'S CITY OF BOOKS
இரண்டு கடல்களின் கதை

TALE OF TWO OCEANS

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தினர் அனைவரும். எப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு எனது விசாரிப்புகள்.

நான் எனது அமெரிக்க பயணத்தில். வாஷிங்டன் மாநிலத்தில் தான் அதிகமான நாட்கள் பயணம் செய்து. அதிகமான இடங்களையும். பார்த்தேன்.

டல்லாஸ்’ல் இருந்து விமானம் மூலமாக ஓரிகன் மாநிலத்தின். போர்ட்லாண்டில் தான் போய் இறங்கினோம்.

போர்ட்லேண்ட் ஓரிகன் மாநிலத்தின் கடல் வாசனை வீசும் பசிபிக் கடலோர. துறைமுகப்பட்டினம்.

நகரத்தின் வெளியே பசிபிக் கடல்.

நகரத்தின் உள்ளே பாவெல் கடல்.

அந்த அழகான போர்ட்லேண்ட் நகரில் இருக்கும் பாவெல் புத்தக கடைக்குப் போன  எனது அனுபவம்தான் இந்த கடிதம்.

முதல்கட்ட எனது பயண திட்டத்தில் பாவல் புத்தக கடை இல்லை. காரணம் அப்படி ஒன்று அங்கு இருப்பது எனக்குத் தெரியாது.

உலகின் பெரிய கடை என்பது தெரியாது.

ஒரு மில்லியன் புத்தகங்கள் கொண்ட பெருங்கடை என்பது தெரியாது.

THANKS TO MY SON

அதனால் கடைசி நேரத்தில் எப்படியாவது அங்கு சென்று ஆக வேண்டும் என்ற எனது வேண்டுகோளுக்கு என் மகன் செவி சாய்த்தான்.

அதன் பயனாக உலகிலேயே தனியாரால் நடத்தப்படும் மிகப்பெரிய புதிய மற்றும் பழைய புத்தக கடைக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

புதிய புத்தகங்களும் அங்கு வாங்கலாம்.

ONE MILLION BOOKS

பழைய புத்தகங்களும் வாங்கலாம்.

பள்ளிக்கூட பையனாக கண்டரக்கோட்டை கிராமத்து டீக்கடையில், அங்கு மரப்பெஞ்சில் சிந்திய தேனீரில்  நனைந்து கிடக்கும் தினத்தந்தி யில். தேடிப்பிடித்து சிந்துபாத் சித்திரக்கதையை அன்று படிக்கப் பிடித்தது.

பள்ளிக்கூட கோடை விடுமுறையில், ராம்பாக்கம் டீச்சர் அக்கா வீட்டில் குமுதம் ஆனந்தவிகடன் கல்கண்டை புரட்டி பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு பழைய புத்தகங்களை விற்க மாட்டார்கள், சேமித்து வைத்திருப்பார்கள்.

பள்ளிக்கூட புத்தகங்களை கடையில் போட்டு பக்கோடா வாங்கிய காலம் அது.

அதன் பிறகு எங்கள் சொந்த ஊர் நெல்லிக்குப்பத்தில் விடுமுறை நாட்களில் நூலகம் போய், கல்கண்டில் “தமிழ்வாணன் கேள்வி பதில்” விருப்பமாகப் படிப்பேன்.

அதன் பின்னர் நூலகத்தில் நெடுநேரம் உட்கார்ந்து சங்கர்லால். துப்பறியும் கதை படிப்பேன்.

தொப்பியும் கண்ணாடியும் போட்ட தமிழ்வாணன் படத்தை நான் மிகவும் ரசிப்பேன் இப்போதும்.

கல்லூரி மாணவனாக  வேளாண்மை கல்லூரி நூலகத்தில் கலைக்கதிர் படிப்பேன்.

எங்கள் கல்லூரி ஆசிரியர் அருணா ராஜகோபால் எழுதிய கட்டுரைகள் கலைக்கதிர்,ல் அப்போது வரும்.

அவையெல்லாம் அறிவியல் கட்டுரைகள். விவசாயம் சம்பந்தமான கட்டுரைகள்.

எனக்கு அருணா ராஜகோபால் தொடர்பு கிடைத்தது. நிறைய புத்தகம் படிக்க ஆரம்பித்தேன்.

விடுமுறை நாட்களில் அவர் வீட்டுக்கு போவேன்.

என் கையெழுத்து அழகாய் இருக்கும். அருணா ராஜகோபாலன் எழுதும் கட்டுரைகளை  அவருக்கு விருப்பமுடன் படி எடுத்துக் கொடுப்பேன்.

நூலகத்தில் வாசிப்பு என்பது எனக்கு பழக்கமாகி வந்தது. கல்லூரி நூலகத்தில் நிறைய நேரத்தை செலவு செய்தேன். தமிழ் பிடித்தது.

கோயம்புத்தூர் விவசாய கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்தபோது நானும் ஒரு அறிவியல் கட்டுரை எழுதினேன்.

பேராசிரியர் அருணாராஜகோபாலன் பாதிப்பு.

“கனிப்பொன்னா” என்ற தலைப்பில் மாணவனாக இருந்து 1971ல் நான் எழுதிய அறிவியல் கட்டுரை அது.  1972 ஆண்டு நான் விவசாய அதிகாரியாக பணியாற்றிய சமயம் அது பிரசுரமானது.

கலைக்கதிர் பத்திரிகையில்தான் எனது முதல் எழுத்து பிரசுரமானது.

சிதம்பரம் நகரில் ஒரு நூலகத்தில் நான் உறுப்பினர்.

அங்கு ஒரு நாள் படிக்கப்போன போது அங்கு இருந்த கலைக்கதிர் புத்தகத்தில் நான் எழுதிய கட்டுரை பிரசுரமாகி இருந்தது.

அயிரைமீன் பிடிக்கப்போன எனக்கு ஆளுயர சுறாமீன் சிக்கியது போல இருந்தது.

அருணா ராஜகோபாலன் அவ்ர்களுக்கு நன்றி சொன்னேன்.

எனது நண்பர் கரூர் கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி சொன்னேன்.

புத்தக வாசிப்பிற்கு வழித்துணையாக இருந்து / இருப்பவர் எனது நண்பர் கிருஷ்ணன் அவர்கள்.

அவர் கல்லூரியில் என்னோடு உடன் படித்தவர்.

நூலகங்களில் அடுக்கி இருக்கும் புத்தகங்களை தூரத்தில் பார்த்தே அதன் சரித்திரம், பூகோளம் எல்லாம் சொல்லுவார்.

நான் பார்த்து பிரமித்த புத்தகப் படிப்பாளி அவர். ஆச்சரியமான மனிதர்.

கல்லூரியில் ஓர் ஆண்டு. எனக்கு பின்சால் ஓட்டினாலும், புத்தக வாசிப்பில். எனக்கு முன்சால் ஓட்டியவர் அவர்.

இப்படித்தான் எனக்கு படிப்பகங்களும், புத்தகங்களும் அறிமுகம் ஆயின.

இதற்கு எனக்கு ஆசான்களாக இருந்தவைகளை நினைத்துப் பார்க்கிறேன்.

தினத்தந்தி.

குமுதம்

ஆனந்த விகடன்

கல்கண்டு

கலைக்கதிர்

இப்போதும் நான் உங்களை பாவல் புத்தக கடைக்கு அழைத்து செல்லுகிறேன்.

POWELL'S BOOKS OF OLD & NEW

ஓரிகன் மாநிலத்தில் போர்ட்லேண்ட் நகரில் மிகவும் நெருக்கமான பகுதியில் ஒரு பெரிய கட்டிடத்தில் இயங்குகிறது இந்த புத்தக கடை.

தனியார் ஒருவரால் நடத்தப்படும் புத்தகக் கடை இது.

இங்கு இருக்கும் மொத்த புத்தகங்கள் 10 லட்சத்திற்கும் அதிகம்.

ஒரு கட்டிடத்தின் பல தளங்களில் அமைந்திருக்கிறது இந்தப் புத்தக கடை.

இந்த பாவெல் புத்தகக் கடையில் பெரிய பெரிய அறைகள். ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு நிறத்தில்.

ஒவ்வொரு  நிறமுடைய அறையிலும் ஒவ்வொரு விதமான நூல்கள்.

ஒரு அறையில் புத்தம் புதிய புத்தகங்கள்.

ஒரு அறையில் பழைய புத்தகங்கள்.

ஒரு அறையில் அச்சில் இல்லாத புத்தகங்கள்.

ஒவ்வொன்றுக்கும் நியாயமான ஒரு விலை.

அரியவகைப் புத்தகங்கள்.

WORLD'S LARGEST 
BOOK STORES

வெளியில் எங்கும் கிடைக்க வாய்ப்பில்லாத புத்தகங்கள்.

எல்லாம் பிரத்தியேகமான ஒரு அறையில் அடக்கம்.

மதிப்பு மிக்க புத்தகங்கள் எல்லாம் இன்னொரு அறையில் அடக்கம்.

பழமையான புத்தகங்கள் எல்லாம் வேறொரு அறையில் அடக்கம்.

முதல் பதிப்பு நூல்கள் எல்லாம் மற்றுமொரு அறையில் அடக்கம்.

பிரபலங்கள் கையொப்பமிட்டு சேகரிக்கப்பட்ட நூல்கள் எல்லாம் தனியொரு அறையில் அடக்கம்.

இந்த புத்தகக் கடையில் மதிப்புமிக்க அரிய வகை நூல்கள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள்.

POWELL'S BOOKS, 1005 W BURNSIDE ST.
PORTLAND, OR 97209, USA.

எல்லாம் பாவெல் புத்தகக் கடையில் அவ்வப்போது நடைபெறும்.

போர்ட்லேண்ட் ஒரு துறைமுக நகரம். இந்த துறைமுக நகரத்தை இரண்டு கடல்கள் முத்தமிடுகின்றன.

ஒன்று, பசிபிக் கடல்.

இன்னொன்று பாவெல் புத்தக கடல்.

 

பாவெல் புத்தகக் கடையின் முகவரி:

POWELL CITY OF BOOKS

1005 W BURNSIDE STREET, PORTLAND, OR 97209, USA

www.powells.com

 

 

 

 

 

 

 

 

 

1 comment:

சுப்ரமணிய பாலா said...

என்ன புத்தகம் வாங்கினிங்க? சங்கர்லால் என்று தமிழ்வாணன் வாசகர் ஓருவர் தன் மகனுக்கு பெயர் கூட வைச்சிருக்கார்...அவர் இப்ப சென்னையில் ஓரு பள்ளிக்கூடம் நடத்தறார்...கிரைம் கதைகள் நம்மை சுறுசுறுப்பாக்கும்...நீங்க கிரைம் கதை எழுதி உள்ளிங்களா ? நன்றிங்க ...

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...