Monday, August 12, 2024

SLEEPING VOLCANO MOUNT HOOD - தூங்கும் எரிமலையை எழுப்பலாம் வாங்க

MOUNT HOOD VOLCANO

I HAVE SEEN SO MANY ERUPTIONS INTHE LAST 20 YEARS THAT I DON'T CARE

IF I DIE TOMMORROW - MAURICE KRAFT (Volcanologist - on the day before he was killed on Unzen Volcano, Japan 1991)

நல்லப்பதிவுங்க வெந்நீர் ஊற்று இங்கும் இமயமலைப்பகுதியில் பார்த்து உள்ளோம். இந்த ஊற்று நீர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாங்க ? இதில் மினரல்ஸ் உள்ளனவா இவை போலவே நாம் உருவாக்கலாமே? அறிவானவங்க நமக்கு முன்னமே இதை செய்திருப்பாங்களே ...நீர் ஆச்சர்யமான ஓன்று. நன்றிங்க – சுப்பிரமணிய பாலா, கோயம்புத்தூர்

(அந்தத் தண்ணீரில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற மினரல்ஸ் எனும் தாது உப்புக்கள் இருப்பதைக் கண்டு பிடித்துள்ளர்கள். இந்தியாவிலும் இமாச்சலப்பிரதேசம், சிக்கீம், லடாக், பீஹார் ஆகிய இடங்களில் இதுபோன்ற வெந்நீர் ஊற்றுக்கள் இருக்கின்றன. இந்த ஊற்றுக்களின் நீரும் மருத்துவப் பயன் மிக்கவைதான் – பூமி ஞான சூரியன்)


கடிதம்:31

தூங்கும் எரிமலை 

எழுப்பலாம் வாங்க !

SLEEPING VOLCANO 

MOUNTHOOD 

ICE CAPPED FIRE MOUNT
VOLCANO PEEPS THROUGH TREES

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம். இன்றைய கடிதத்தில் அமெரிக்காவின் ஒரிகான் மாநிலத்தில் (OREGON STATE)தூங்கும் எரிமலையான மவுண்ட் ஹூட் போய் வந்த அனுபவத்தை சொல்லப் போகிறேன். வாங்க மவுண்ட்ஹூட்  மலைச்சிகரம் பார்க்க போகலாம்.

மவுண்ட் ஹூட் என்பது இன்னும் உயிருடன் இருக்கும் எரிமலை(STRATO  VOLCANO). இது கேஸ்கேட்ஸ்  என்னும் மலைத்தொடரின் (CASCADE MOUNTAINS)உயரமான மலை உச்சி. இதன் உயரம் 11,240 அடி.

ஓரிகன் மாநிலத்தின் (OREGON STATE)மிக உயரமான மலை உச்சி. எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் இந்த எரிமலையை பார்க்க நாங்கள் ஓரிகன் மாநிலத்தின் போர்ட்லேண்ட் நகரத்தில் இருந்து காலை சுமார் 11 மணியளவில் புறப்பட்டோம்.

வாஷிங்டன் மற்றும் ஓரிகன் மாநிலத்தில் சுற்றி பார்ப்பதற்காக வாடகைக்கு எடுத்த கிரைஸ்லர்’ன் பசிஃபிக்கா (CHRYSLER PACIFICA) கார் கைவசம் இருந்தது. எப்படிப்பட்ட மலைப்பகுதியாக இருந்தாலும் அனாயசமாக ஓட்ட என் மகன் கூடவே  இருந்தான். அப்புறம் என்ன மவுண்ட்ஹுட் எரிமலையை எட்டிப்பார்க்கக் கிளம்பிவிட்டோம்.

TREES TALLER THAN VOLCANO


வேறு என்ன வேண்டும் ? எங்கள் கார் மவுண்ட்ஹூட் நோக்கி பறந்தது. வானத்தில் இருக்கும் மேகங்களைத் துடைக்க முயற்சிப்பது போன்று நிற்கும் சாலையோர பைன் மரங்கள். ஆங்காங்கே பச்சைநிற கோன் ஐஸ்கிறிம்’ ஐ நினைவுபடுத்தும் கிறிஸ்மஸ் மரங்கள் வரிசையாக சாலையின் இரண்டு பக்கத்திலும் நின்றுகொண்டிருந்தன.

நான் என் மனைவி, என் மருமகள், என் பேரக் குழந்தைகள் ஐவரும் என்னோடு இருந்தார்கள். நாங்கள் ஆறு பேர் பயணம் செய்ய வசதியான கார்தான் அது.  முன்னால் இரண்டு இருக்கை, நடுவில் இரண்டு, பின்னால் இரண்டு, என  மொத்தம் ஆறு பேர் தாராளமாக பயணம் செய்யலாம். வாழ்க கிறைஸ்லர் கம்பெனியின் பசிஃபிக்கா கார்.

RAJASOORIAN, MOUSUMI & PACIFICA

தாராள வசதியே, உன் பெயர்தான் பசிஃபிகாவா ? என்று சொல்லத் தோன்றுகிறது. சும்மா சொல்லவில்லை. நீண்டத் தொலைவுகள், போர்ட்லேண்ட், சியாட்டல், டொகோமா, போர்ட் ஏஞ்சலஸ், ஃபுளாரென்ஸ்,  என்று ஆயிரக்கணக்கான மைல் பயணம் செய்த பிறகுதான் நான் இதைச் சொல்கிறேன்.

போர்ட்லாண்ட் நகரத்திலிருந்து மவுண்ட் ஹூட் 124 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அதன் மலை உச்சிக்கு மிக அருகாமையில் போய்விட்டோம். மலைக்கு மேல் செல்லும் மலைப்பாதையில் போய்க்கொண்டிருந்தோம். கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் இல்லை. ஆனாலும், அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத வகையில் அடிக்கடி வளைந்து நெளியும் ஆபத்தான பாதைகள், ஆனால் அழகான பாதைகள். எங்களுக்கு பயம் தெரியாத மாதிரி ராஜ் கார் ஓட்டினான்.

மவுண்ட் ஹூட் மலையின் உயரம் 11,249 அடி என்பது ஞாபகத்தில் வந்தது. ஓரிகன் மாநிலத்தில் மிக உயரமான மலைப் பகுதி. மவுண்ட் மலையை தூங்கும் எரிமலை என்று சொல்லுகிறார்கள்.

அது தூங்கும் வரைதான் நாம் நிம்மதியாய் தூங்கமுடியும் என்று நினைத்தேன்.

காரில் செல்லும்போதே தூரத்தில் தெரிந்தது மவுண்ட் ஹூட் மலை. இந்த மலையின் உச்சிப்பகுதி இவற்றை தொப்பி போட்ட மாதிரி பனிக்கட்டிகளால் போர்த்தியதுபோல் இருக்கிறது.

போர்ட்லேண்ட் நகரிலிருந்து செல்லும் சாலை நெடுக ஏராளமான மரங்கள்.

PINES ON THE WAY TO VOLCANO 

இந்த மலையின் மேற்குத் திசையில் அதிகமாக இருக்கும் மரங்கள். டவுக்ளஸ் ஃபிர்(DOUGLAS FIR). கிழக்குப்பகுதியில் பாண்டாரோஸா பைன் (PONDEROSA PINE).வடக்கு சரிவுகளில் மலைஹேம்லக் (MOUNTAIN HAMLOCK), சில்வர்ஃபிர் (SILVER FIR), நோபல்ஃபிர்(NOBLE FIR),  லார்ச்(LARCH). வெஸ்டர்ன் ரெட் செடார் (WESTERN RED CEDAR) மற்றும் வெஸ்டெர்ன் ஹேம்லக்(WESTERN HAMLOCK).

இதுமட்டுமில்லாமல், பிக் லீஃப் மேப்பிள்(BIG LEAF MAPLE), வைன்மேப்பிள்(WINE MAPLE), ஆகிய மரங்களும் உள்ளன.

ஆனால் ஓரிகன் மாநிலத்தில் அதிகமாக இருக்கும் மரம் டவுக்ளஸ்ஃபிர்  மரம்தான். அமெரிக்காவில் மின்சார கம்பங்களாகப் பயன்படுத்தும் மரங்களில் இதுவும் ஒன்று.  இத்துடன் ஸ்டர்ன் எல்லோ பைன், ஜேக் பைன், லாட்ஜ்போல் பைன், வெஸ்ட்டர்ன் ரெட் செடார், பசிஃபிக் சில்வர் ஃபிர் மரங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

மரங்களை பற்றி சொல்லும்போது, இவற்றின் உயரம் மற்றும் வயது பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். எனக்கு அதனை தெரிந்து கொள்ள ஆசையாக இருந்தது. இந்த மரங்களின் வயது 450 - 500 ஆண்டுகள் என்று சொல்லுகிறார்கள். இவற்றின் அதிகப்பட்சமான உயரம் 300 - 350 அடி.

இப்போது எங்களால் காரில் செல்லும்போது மவுண்ட் ஹூட் டின் தனியாக தொப்பி போட்ட மலையைப் பார்க்க முடிந்தது. ஒரு குறிப்பிட்ட இடம் வரைதான் காரில் போகலாம். அதன் பிறகு எவ்வளவு தூரம்  நடந்துதான் போகவேண்டும். எப்போது வேண்டுமானாலும் வெடிக்க தயாராக இருக்கும் எரிமலை என்கிறார்கள்.

அதிகபட்சமாக கடைசியாக போய் சேருமிடத்தை அடைந்தவுடன், என் மனைவி கேட்டாள்” இப்போது எரிமலை வெடித்தால்  நீங்கள் என்ன செய்வீர்கள் ? “

 “எரிமலைக்குழம்பு ஓடிவந்து என்னை மூழ்கடிக்கும் வரை  நான் ஓட மாட்டேன்…..”என்றேன் நான்.

“உங்களுக்கு  ஒருகால் உடைந்து நெட்டுபோல்ட்டு போட்டு முடுக்கி வைத்திருப்பது ஊருக்கே  தெரியுமே.. “ என்றாள் என் மனைவி.

“ஆனால் இந்த விஷயம் எரிமலைக் குழம்புக்கு தெரியாதே “ என்றேன்.

“அந்த ரகசியத்தை நாங்க சொல்லிட்றோம்”.. என்று என் மகன் சொல்ல நாங்கள் எல்லோரும் கலகலப்பானோம்.

MOUNT HOOD HILL BOTTOM

இப்போது நாங்கள் காரிலிருந்து இறங்கினோம். அங்கு கார் நிறத்ததில் ஏகப்பட்ட கார்கள். அங்கு இருக்கும் கார்களை மட்டும் பார்த்தாலே போதும். அமெரிக்காவில் எத்தனை பிராண்ட் கார்கள் ஓடுகின்றன என்று தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ள முடியும் என்று தோன்றியது.

மவுண்ட் ஹூட் மலை அடிவாரத்தில் இருந்து இன்னும் ஒரு 1000 அடி உயரத்திற்கு. சேர் கார் மூலமாக சென்று பார்க்க முடியும். அந்த வசதி இருந்தது.

“சேர்காரில் போவதாக இருந்தால்  நான் வரவில்லை” என்றாள் என் மனைவி. “அப்படியென்றால்  நானும் வரவில்லை” என்று நான் சொன்னேன்.

CHAIRCAR ROPES ON THE SKY

ஆனால் என் மகன் வற்புருத்த என் மனைவி சரி என்றாள். ஏற்கனவே இப்படி இரண்டு இடங்களில் சேர் காரில் பயணம் செய்த அனுபவம் எங்களுக்கு இருந்தது.

மெல்ல நகர்ந்து போய்க்கொண்டே இருக்கும் சேர் காரில் ஏறுவதும், இறங்குவதும் கொஞ்சம் கஷ்டமான காரியம். நகர்ந்து கொண்டே இருக்கும் சேரில் ஏறி உட்கார வேண்டும். அதேபோல் நகர்ந்து கொண்டே இருக்கும். சேரில் இருந்து கீழே இறங்கவும் வேண்டும்.  

80 ஐத் தாண்டிய வெள்ளைக்கார் ஜோடி

என் மனைவி நான் இருவருமே எழுபதைத் தாண்டியவர்கள். நாங்கள் பாதுகாப்பாக இருப்பதுதான் நல்லது என்று மனதுக்குள் நினைக்கும்போதே எண்பதைத் தாண்டிய வெள்ளைகார ஜோடி ஒன்று, எங்கள் கண் எதிரிலேயெ சேர்காரில் ஏரி போய்க்கொண்டிருந்தார்கள்.

இப்போது போவது என்று முடிவு செய்துவிட்டோம். நாங்கள் மொத்தம் ஆறு பேர். இங்கு சேர்கார் என்பது ஒரு பெஞ்ச் போல இருந்தது. இதில்  நான்கைந்து பேர் கூட  உட்கார முடியும்.

3 GENERATION PHOTO

ஆனால் நாங்கள் ஆறு பேரும் 2 பெஞ்சுகளில் உட்காந்து கொண்டோம்.

எங்கள் சேர்கார் மேலே போக ஆரம்பித்தது. எங்களுக்கு இடதுகை வாட்டத்தில் இருந்தது  மவுண்ட்ஹூட்,  பனி மூடிய எரிமலை மலைப்பகுதி. வெண்மையாக, சாதுவாகத் தெரிந்தது,  இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுமாதிரி  இருந்தது. பனி இல்லாத பாறைப்பகுதி, பக்கவாட்டில் எரிமலைக்கு ஏருக்கு மாறாக  செடார். பைன் மற்றும் முகம் தெரியாத, மரங்கள், இன்று இல்லை என்றாலும் என்றைக்காவது இந்த பனிமலை எரிமலையாக வெடித்து சிதறும் போது முதலில் எரிந்து போவது நாம்தான் என்று தெரிந்திருந்தாலும் பயமில்லாமல். மெல்லியதாக வீசிய காற்றில் ஆட்டம் போட்டபடி இருந்த மழை காட்டு மரங்கள், மரங்கள் இல்லாத இடங்களை சும்மா விடக்கூடாது என்று இயற்கையே ஏற்பாடு செய்து மஞ்சள், சிவப்பு, ஊதா என பல வண்ணங்களில், நவீன ஓவியம்போல  திட்டு திட்டாக கீழே பூத்துக் கிடக்கும் காட்டு பூக்கள், நாங்கள் சேர்காரில்,  நான் முடிந்தவரை என்னது செல்போனில் மலை உச்சி பனிமலை. பைன் மரங்கள், காட்டுப்பூக்கள் எல்லாவற்றையும் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும்  சிறைப்பிடித்தேன்.

செல்போன் வாழ்க இந்த நூற்றாண்டின் ஜீபூம்பா ! என்ன கேட்டாலும் தரும்.

பல  நேரங்களில் இந்த செல்ஃபோன் கையை விட்டு நழுவி கீழே விழுந்தால் என்ன செய்வது பயமாக இருந்தது. இந்த போனை நான் கீழே தவறுதலாக போட்டு விட்டால், என்னாகும் ? கீழே குனிந்துப் பார்த்தேன். அயிரம் அடிக்கு அங்குலமும் குறையாது.  

அப்போது என் மகன் சொன்னான் “ஜிஎஸ்பி” இந்த போனை கீழே போட்டால் 500 டாலரை கீழ போகிறீர்கள் என்று அர்த்தம் என்றான்”

என் மகன் “ஜிஎஸ்பி” என்றால் நான், 500 டாலர் என்பது அந்த போனின் விலை. அது அவனுக்கு தான் தெரியும் காரணம் இரண்டு நாளுக்கு முன்னால் அவன் தான் அந்த போனை வாங்கி எனக்கு கொடுத்தான்.

நான் அந்த 500 டாலரை அழுத்தி பாதுகாப்பாய்ப் பிடித்தேன். கொஞ்ச நேரம் படம் வீடியோ எதுவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன்.

அதற்குள் சேர்கார் கீழே வந்தது. எங்களுக்கு முன்னால் சென்ற சேர்காரிலிருந்து என் மனைவி, என் மருமகள், என் பேரன் மூவரும் இறங்கினார்கள்.

என் மனைவி மட்டும் இறங்கும் போது கொஞ்சம் தடுமாறிவிட்டாள். பின்னால் வந்த சேர்காரில்  வந்த நானும் என் மகனும் பதறி விட்டோம். நல்ல வேளையாக இறங்க தடுமாறும் போது அந்த சேர்கார் இயக்கத்தை நிறுத்திவிட்டார்கள். எவ்வித பிரச்சனையும் இல்லாமல் போனது.

எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நாங்கள் எங்கள் சேர்கார் இயங்கும் இடத்தில் இருந்து எங்கள் பசிஃபிக்கா கார் நிற்கும் இடத்திற்கு விரைந்தோம்.

INFORMATION CENTRE MOUNT HOOD

இன்னொரு முக்கியமான ரகசியம் சொல்லுகிறேன் கேளுங்கள், இன்னும் 80 ஆண்டுகளில் இந்த மவுண்ட்ஹூட் மறுபடியும் வெடிக்கும். அது இந்தக் கணத்தில் கூட நடக்கலாம். இதைச் சொல்வது யூ எஸ் ஜியாலஜிகல் சர்வே (U S GEOLOGICAL SURVEY).

இவற்றையெல்லாம் அமைதியாக பார்த்தபடி, எப்போது வெடிக்கலாம் என்று. நல்ல நேரம் பார்த்து கொண்டிருந்தது, மவுண்ட் ஹூட் எரிமலை. நாங்கள் அங்கிருந்து திரும்பினோம்.

மவுண்ட்ஹூட் எரிமலைச் செய்திகள், புதிய செய்திகளாக உங்களுக்கு இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திக்கலாம். நன்றி வணக்கம். இந்த கடிதம் பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமண்ட் பகுதியில் குறிப்பிடுங்கள். எழுதுங்கள்.

பூமி ஞானசூரியன்.

gsbahavan@gmail.com

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...