Wednesday, August 7, 2024

LAKE GREESON OF ARKANSAS FOR FLOOD CONTROL - வெள்ளம் தடுக்க வெட்டிய ஏரி லேக் கிரீசன்


முழுமையாய் படித்தேன்..ரசித்தேன்..தப்பித்து வந்தமைக்கு மகிழ்ச்சி..பழங்குடியினர் பெயரை பெட்ரோல்லுக்கு வைத்திருப்பதை அறிந்தேன்..வெந்நீர் ஊற்று  ..உப்பு ஆறு...எல்லாம் புதிய செய்திகள்...அன்புடன் பிச்சினிக்காடு

(காடுகளை நான் படிக்கிறேன். என்னை காடுகள் படிக்க ஆரம்பித்திருக்கின்றன. பிச்சினிக்காடு ஒரு கவிதைக்காடு, எனது இளம்கோ கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவிற்கு நன்றி - பூமி ஞானசூரியன்)

THOUSANDS HAVE LIVED WITHOUT LOVE, NOT ONE WITHOUT WATER - W H AUDEN




வெள்ளம் தடுக்க வெட்டிய ஏரி 

லேக் கிரீசன்

LAKE GREESON OF ARKANSAS 

FOR FLOOD CONTROL

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !

எப்படி இருக்கிங்க ? உங்கள் வீட்டில்  எல்லோரும் சௌக்கியமா ?

இன்றைய கடிதத்தில் புதியதாக மூன்று செய்திகளை உங்களுக்கு சொல்லப்போகிறேன். ஒன்று லேக் கிரீசன் ஏரி (LAKE GREESON), இரண்டாவது லிட்டில் மிசிசிப்பி ஆறு(LITTLE MISSISIPPI RIVER), மூன்றாவது அவ்ஷிதா மலைத்தொடர்(OUACHITA HILL RANGE).

அமெரிக்காவில் அர்க்கன்சாஸ் மாநிலத்தில் இருக்கும் லேக்கிரீசன் ஒரு செயற்கை ஏரி(MAN MADE LAKE), அதற்கு தண்ணீர் தருவது லிட்டில் மிசிசிப்பி ஆறு.அந்த ஆறு பிறக்கும் இடம் அவ்ஷிதா மலைத்தொடர். ஞாபகம் இருக்கிறதா ? அவ்ஷிதா மலைத்தொடரின் அடியில்தான் இருக்கிறது ஹாட்ஸ்பிரிங்க்ஸ்(HOT SPRINGS).

அர்க்கன்சாஸ் ஹாட்ஸ்பிரிங்க்ஸ் போய்க்கொண்டிருந்தோம். சாலை ஓரத்தில் ஒரு பெயர்ப் பலகை. “லேக் கிரீசன்” என்று போட்டிருந்தது. சொல்லாமல் கொள்ளமல் எங்கள் ‘சீயன்னா கார்’ அந்தப் பக்கம் திரும்பியது.

ஆங்கே போனால் சுற்றிலும் பைன்மரக்காடுகள், நடுவில் பளிங்கு மாதிரி தண்ணீருடன் பரந்து விரிந்து கிடக்கிறது இந்த லேக்கிரீன் ஏரி. அயிரைமீன் பிடிக்கப் போய் ஆராமீன் பிடிச்ச மாதிரி ஆச்சு, எங்களுக்கு.

இந்த ஏரி அமெரிக்காவில் ஆர்க்கன்சாஸ்  மாநிலத்தில், மர்ஃபி போரோ (MURFREBORO)என்ற இடத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் மர்பிபோரோ ஹாட்ஸ்பிரிங்ஸ்’லிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

லேக்கிரீஸன் ஏரி லிட்டில் மிஸிசிப்பி ஆற்றின் (LITTLE MISSISIPPI RIVER)மீது அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த பரப்பு 34.5 சதுர கிலோமீட்டர்.

இந்த ஏரி அர்க்கன்சாஸ்’சிலிருந்து  ஹாட் ஸ்பிரிங்ஸ் செல்லும் வழியில் அமைந்துள்ளது. சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளது. அதனால்தான் சட்டென்று  சென்று அதனைப் பார்க்க முடிந்தது.

சுற்றுலா பயணிகளுக்கென்றே பிறந்தது போன்ற ஏரி. இது ஒரு செயற்கை ஏரி என்றால் ஆச்சரியமாக இருக்கும். இந்த ஏரியின் கரை நெடுகிலும் 15 பொழுதுபோக்குப் பூங்காக்கள் (ENTERTAINMENT PARKS). நாங்கள் ஒன்றைத்தான் பார்த்தோம்.

இந்த ஏரிக்கு சுற்றுலா போகலாம், போனால் அங்கு படகு சவாரி போகலாம், மீன் பிடிக்கலாம் பைக் ஓட்டலாம், நீச்சலடிக்கலாம், எல்லாம் தண்ணீரில்தான். எல்லாவற்றிற்கும் டாலர்தான்(AMERICAN DOLLAR).

ஏரிகளும் இவர்களுக்கு பணம் காய்க்கும் மரம்தான்.

இந்த ஏரியா அருகில் ‘டெய்ஸி ஸ்டேட் பார்க்’ (DAISY STATE PARK)என்னும் மாநிலப் பூங்கா ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள்.

லேக் கிரிசன் ஏரியில் இருக்கும் மீன்கள் ஸ்டிரிப்டுபாஸ், லார்ஜ்மவுத், ஸ்பாட்டட் ஒயிட்பாஸ்,  ஃபிளாட்ஹெட், மற்றும்  சேனல்கேட்ஃபிஷ், மற்றும் ரெயின்போடிரவுட்(STRIPED BASS, LARGE MOUTH, SPOTTED WHITE BASS, FLAT HEAD, CHANNEL CAT FISH, RAINBOW TROUT).

லேக்கிரீசன்  ஏரியை சுற்றியுள்ள மரங்கள் அடர்ந்த மலைப்பகுதியில் பல வகையான உயிரினங்களும் உள்ளன. அவை முயல்கள், அணில்கள், பாபொயிட் குவயில், மற்றும் வெள்ளைவால் மான் (RABBITS, SQUIRRELS, BOB WHITE QUAIL, WHITE TAIL DEER).

அதுமட்டுமல்ல ஏரிக்கு அருகில்  35000 ஏக்கர் வேட்டைப்பகுதி (HUNTING AREA)உள்ளது. அந்தப் பகுதியில்  வேட்டையாடவும்  இங்கிருந்து போகலாம்.

மார்டின் ஒயிட் கிரீசன் (MARTIN WHITE GREESON)என்பவரின் பெரும் முயற்சியால் தான் இந்த ஏரி உருவானது. அதனால் தான் அதற்கு கிரீசன் என்ற அவர் பெயரை வைத்துள்ளார்கள்.

முக்கியமாக இங்கு ஓடும் லிட்டில் மிஸிசிப்பி ஆற்றினால் அடிக்கடி இப்பகுதியில் வெள்ளம் ஏற்படும். முக்கியமாக அதனை தடுக்கத்தான் 1947 ம் ஆண்டு இந்த ஏரியை அல்லது நீர் தேக்கத்தை (RESERVOIR)கட்ட தொடங்கி 1950 ம் ஆண்டு கட்டி முடித்தார்கள்.

இப்போது மிஸிசிப்பி ஆற்றில் மிகுதியான தண்ணீர் வந்தால் கூட வெள்ளம் அடக்க ஒடுக்கமா ஓடுகிறது. ஊருக்குள் நுழைவதில்லை.

திரும்பி பார்க்கும் இடங்களிலெல்லாம் ஏரியை வெட்டுகிறார்கள். ஏரிக வெட்டுவதற்கு அவர்கள்  முக்கிய காரணங்களைச் சொல்லுகிறார்கள்.

ஒன்று வெள்ளத்தை தடுப்பது(FLOOD CONTROL), இரண்டு வேளாண்மைக்கு பாசனம் தருவது(IRRIGATION WATER), மூன்றாவது குடிநீர் தருவது, (DRINKING WATER)நான்காவதாக பொழுதுபோக்குத் தலங்களை (ENTERTAINMENT PARKS)உருவாக்குவது.

அதிகப்படியான மழை பெய்யும் போது அது வெள்ளமாக மாறாமல் இருக்க வேண்டும். நிலங்களில் அது நிலச்சரிவை, மண் அரிப்பை ஏற்படுத்த கூடாது. வீடு வாசல்களை இதர உடமைகளை அது அள்ளிச் செல்லக் கூடாது, அடித்துச் செல்லவும் கூடாது. அறுவடைக்கு காத்திருக்கும் பயிர்களை மூழ்கடிக்க கூடாது. மனித உயிர்களை முழுமையாக எடுக்கக் கூடாது.

மானாவாரி நிலங்களை இறவை நிலங்களாக மாற்ற வேண்டும். விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு வரக்கூடாது. இறவைப் பயிர்கள் சாகுபடி அதிகம் வரவேண்டும். விவசாயம் அதிக   வருமானம் தந்து விவசாயிகளின் வருமானத்தையும், தன்மானத்தையும் பாதுகாக்க வேண்டும். மீன்பிடி தொழிலுக்கு உதவ வேண்டும். அது பயித்தொழிலுக்குப் பக்கத் தொழிலாக (SUBSIDIARY PROFESSION)மாற வேண்டும்.

ஏரிகளைச் சுற்றிலும் முடிந்த இடங்களிலெல்லாம் பூங்காக்களை அமைத்து, அவற்றை சுற்றுலா தலமாக மாற்றி(TOURIST CENTRES), நீர்வள ஆதாரங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை (WATER LITERACY)மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

வேளாண்மைக்கு பாசன வசதியளிப்பதில் அமெரிக்காவில் இருக்கும் மாநிலங்களில் இரண்டாவது நிலையில் உள்ளது அர்கான்சஸ் மாநிலம். இறவை பாசனப் பரப்பு உடைய மாநிலங்களில் அமெரிக்காவிலேயே மூன்றாவது நிலையில் உள்ளது இதுதான்.

80 சதவீத பாசனத் தேவையை பூர்த்தி செய்வது இங்கு நிலத்தடி நீர் தான். இதற்கு காரணமாக இருப்பது நீர் ஆதாரங்கள்தான். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிகள் அனைத்திற்கும் நீர்வளம் தான் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுகிறார்கள்.

லேக் கிரிசன் ஏரிக்கு தண்ணீர் விநியோகம் செய்வது லிட்டில் மிஸிசிப்பி ஆறு. இந்த ஆறு அவ்ஷிதா மலையில் பிறக்கிறது.

 நேரோஸ் டேம்  (NARROWS DAM)என்ற அணைக்கட்டினை 1941 ஆம் ஆண்டு இந்த ஆற்றின் மீது கட்டினார்கள். இதனை கிரீசன் ஏரியில்தான் அமைத்துள்ளார்கள் இதில் நீர் மின்சாரமும் (HYDRO POWER)தயாரிக்கிறார்கள்.

இந்த ஏரியைச் சுற்றிலும் 15 பூங்காக்களை அமைத்து உள்ளார்கள் இந்த பூங்காக்கள் சுற்றுலா தலமாக அமைந்துள்ளன. இதில் ஒரு பூங்காவைத்தான் நாங்கள் பார்த்தோம்.

ஏரியின் அந்தப்புரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பைன் மரக் காடுகள் தான். லாப்பொலிபைன், ஷார்ட் லீஃப்பைன், ஸ்வீட்கம், வாட்டர்ஓக், மற்றும் ஈஸ்டர்ன் ரெட்செடார்(LOBOLLY PINE, SHORT LEAF PINE, SWEET GUM, WATER OAK, EASTERN RED CEDAR) ஆகிய மரங்கள் இங்கு உள்ளன

அவ்ஷிதா மலையில் பிறக்கும் லிட்டில் மிஸிசிப்பி ஆறு, 150 கிலோ மீட்டர் ஓடி பின்னர் அது அவ்க்ஷிதா என்ற ஆற்றுடன் கலக்கிறது.

இந்த கடிதத்தில், லேக் கிரீசன் ஏரி பற்றி சொன்னேன். அதில் முக்கியமாக லிட்டில் மிஸிசிப்பி ஆறு, மற்றும் அவ்ஷிதா மலை பற்றியும் செயற்கையான ஏரிகளை ஏன் அதிகம் வெட்டுகிறார்கள் என்பதையும் சொன்னேன்.


புதிய ஏரி புதிய ஆறு புதிய மலை பற்றிய புதிய செய்திகள் அனைத்தும், உங்களுக்கு பிடித்திருக்கிறதா சொல்லுங்கள்.

மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம். நன்றி வணக்கம்.

பூமி ஞான சூரியன்

gsbahavan@gmail.com


 

1 comment:

Anonymous said...

Your experience through these beautiful landscapes has truly been an exploration of natures bounty. Your description for the rivers, ranches and green meadows are marvelous.Wish you all the best.
V.Sambasivam IFS (Retd)
Houston, Texas.

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...