Tuesday, August 13, 2024

CANNON BEACH IN PACIFIC OCEAN பசிஃபிக் மகா சமுத்திரத்தின் கேனன் பீச்

ஓல்டுமில் ஏரியை நாங்களும் பார்த்த நிறைவு.நீரும் நிலமும் பழமை குன்றாமல் இன்றைக்கும் நமக்கு விருந்தளிப்பது இங்கேதான் அருமை, மகிழ்ச்சி - கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ (தாங்கள் தொடர்ந்து கருத்து சொல்லுவது எனக்கு விருந்து தருவது போல, கவிஞருக்கு நன்றி- பூமி ஞானசூரியன்)

அருமை ஆதிவாசிகள் நம் முன்னோர்களின் பிம்பமே எந்த கண்டத்தில் இருந்தாலும் நம்மவர்களே...நன்று - சுப்பிரமணிய பாலா (யாதும் ஊரே யாவரும் கேளீர், நமது முன்னோர் சொன்னது, நன்றி பாலா)

THE  SEA CURES ALL AILMENTS OF MAN - PLATO

கடிதம்:31

பசிஃபிக் 

மகா சமுத்திரத்தின் 

கேனன் பீச் 

CANNON BEACH IN 

PACIFIC OCEAN

 

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் ! நீங்க எப்படி இருக்கிங்க ? சவுக்கியமா ? உங்க குடும்பத்தில் பெரியவர்கள், குழ்ந்தைகள், எல்லாம் சவுக்கியமா ?

இன்றைக்கு இந்த கடிதத்தில் நான் சொல்லப்போவது உலக பிரசித்தி பெற்ற பசிபிக் மகாசமுத்திரம்(PACIFIC OCEON), அதன் கரையோரத்தில் இருக்கும் கேனான்பீச் நகரம்(CANNON BEACH CITY), அதன் தோற்றம், வளர்ச்சி அதன் பழங்குடிகள், நீளமான மணல்  நிறைந்த கடலோரம், மற்றும் அந்த ஊரின் அடையாளமான 235 அடி உயர்ந்த கடலோர ஒற்றைபாறை(HAYSTACK ROCK).

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தின்(OREGON STATE),  பசுபிக் கடலோர நகரம். வட மேற்கு கடலோர நகரம். போர்ட்லேண்டில் (PORTLAND)இருந்து 128 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும், தினம் தினம் ஆயிரக்கணக்கன சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் சுற்றுலா நகரம்.

நாங்கள் முதல் நாள் இரவு போர்ட்லேண்ட் நகரில் ஒரு விடுதியில் தங்கி இருந்தோம். அடுத்த நாள் காலை புறப்பட்டோம். வழக்கம்போல பசிவிக்கா கார்(PACIFICA CAR) பயணம் தான் அந்த சாலை ஏறத்தாழ பசுஃபிக் கடலோரமாகவே வந்தது என்று நினைக்கிறேன். 

அரிஸ்டோரியா (ARISTORIA)பகுதியில்  நாங்கள் கொலம்பியா ஆற்றையும் அதில் கட்டி இருந்த மிகப்பெரிய அயன்பிரிட்ஜ் (IRON BRIDGE)ஒன்றையும் தாண்டி வந்தோம். கடல் போல அகன்று இருந்த கொலம்பியா ஆற்றின்(COLUMBIA RIVER) நீரோட்டம் எங்களை மிரட்டுவதாக இருந்தது.அதன் மீது கட்டப்பட்டிருந்த அயன் பிரிட்ஜ் இன்னும் அதைவிட மிரட்டலாக இருந்தது.

16 MILLION YEAR HAYSTACK ROCK

கேனான் பீச் ஒரு சிறியகடலோர நகரம். இதன் சிறப்பு இதன் இயற்கை அமைப்பு .அதன் நீண்ட நெடிய மணல் பரப்பு. அதன் அலை வாசலில் 235 அடி உயரத்திற்கு நிற்கும் 16 மில்லியன் ஆண்டுகள் வயது ஒற்றைப் பாறை. ஆழமில்லாத அழகிய நீர் பரப்பு. நீரில் இறங்கி நின்றால் முட்டி காலுக்கும் கீழே வந்து மெல்ல பாதங்களை வருடி செல்லும் அலைகள். மனிதர்களைப் பார்த்து பயப்படாத சாண்டில்யன் நாவல் கடல் புறாக்கள். பெற்றோர்களின் பிடியிலிருந்து இறங்கி மணலில் விளையாடும் குழந்தைகள். வெறுங்காலுடன்  ஈர மணலில் நடக்கும் அமெரிக்க மற்றும் இதர தேசத்து சுற்றுலாப் பயணிகள். சிறிய நகரம், ஆனாலும் ஒவ்வொரு தெருவுக்கும் ஒன்றிரண்டு, அம்பது நூறு கார்களை நிறுத்தும் இடங்கள்.சாலமன்மீன், காட்மீன், இறால், மட்டி, மணக்க மணக்க கடல்உணவு பறிமாறும் உணவு விடுதிகள். இவற்றின் கூட்டு தான் இந்த கேனன் பீச். 

CANNON BEACH TOWN

கேனன் பீச்சின் உண்மையான பெயர் ஈக்கோலா(ECOLA) என்பது. ஈக்கோலா என்றால் திமிங்கலம் என்று அர்த்தம். இந்த பெயரை வைத்தவர்கள் இந்த பகுதியில் பழங்குடிகளாக வசித்த தில்லாமூக் (TILLAMOOK)என்ற சமூகத்தினர். காரணம் அடிக்கடி சுற்றுலாப் பயணிகள் மாதிரியே திமிங்கலங்கள் கேனான் பீச்சுக்கு வந்து போகின்றன.

இந்தப் பழங்குடிகள் வசித்த கிராமத்திற்கு முதன்முதலாக வந்து இறங்கியவர் கேப்டன் வில்லியம் கிளார்க் என்பவர். அவர் இங்கு வந்து இறங்கிய நாளில் அவர் பார்த்தது கரை ஒதுங்கிய ஒரு திமிங்கலம்.

CAPTAIN WILLIAM CLARK

இந்த கடலோர நகரத்திற்கு ஏன் கேனன்பீச் என்ற பெயர் வந்தது தெரியுமா ? அதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது அதனை நான் உங்களுக்கு சுருக்கமாகச் சொல்லுகிறேன். 

1821 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்க ராணுவத்தில் ஒரு கப்பல் இருந்தது அந்த கப்பலின் பெயர் ஷார்க் (SHARK)என்பது. அது சூனர் (SCHOONER)வகைக் கப்பல். அந்த கப்பல் கடல் கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட கப்பல். 

அந்தக் கப்பல் 1846 ஆம் ஆண்டுவாக்கில் பசிபிக்கின் வடமேற்கு பகுதிக்கு வந்தது. அது கொலம்பியா ஆற்றில் இருந்து பசிபிக் கடலில் நுழைய முற்படும்போது அந்த கப்பல் விபத்துக்குள்ளாகி அது சுக்குநூறாக உடைந்து போனது.

அதன் கேப்டன் மற்றும் மாலுமிகள் மற்றும் உயிர் தப்பினார்கள். கப்பல் தப்பவில்லை. 

இது நடந்து 50 ஆண்டுகள் கழித்து இந்த கேனன்பீச் அருகில் ஒரு நங்கூரமும், ஒரு பீரங்கியும் (CANNON)கரை ஒதுங்கின அமெரிக்க ராணுவத்தின் முக்கிய அங்கமான ஷார்க் கப்பலின் பீரங்கி கண்டெடுத்த இடம் என்பதால் அந்த நகரத்திற்கு கேனான்சிட்டி (CANNON CITY)என்ற பெயரை வைத்தார்கள்.

தில்லாமுக்கு பழங்குடிகள் கொலம்பியாநதியின் முகத்துவாரத்தில் (ESTUARY OF COLUMBIA RIVER)வசித்தவர்கள் இவர்களின் வாழ்வாதாரம் கடல் சார்ந்த ஒன்றாக(SEA BASED LIVELIHOOD) இருந்தது. சாலமன் மீன்களை (SALOMON)பிடிப்பது, கடல் பிராணிகள்(SEA MAMMALS) அகியவற்றை வேட்டையாடுவது, கிளிஞ்சல்கள் மற்றும் கிழங்குகளை சேகரிப்பது எல்லாம் பழங்குடிகளின் பிரதானத் தொழிலாக இருந்தது. 

ல்லாமுக்கு பழங்குடி மக்கள் செடார் மரங்களில்(CEDAR TREES) கேனோ என்னும் ஒருமரப்படகு களை (CANOE BOATS) செய்து அவற்றை மீன்பிடிக்க பயன்படுத்தி வந்தார்கள். 

TILLAMOOK NATIVE INDIAN

ஐரோப்பிய குடியேறிகள் இங்கு வந்த போது 18 ஆம் நூற்றாண்டு வாக்கில் அவர்களை எதிர்த்தார்கள் இவர்கள். சில சமயம் அவர்களைக் கொல்லவும் செய்தார்கள். ஆனால் 19 ஆம் நூற்றாண்டு வாக்கில் அவர்களோடு இணங்கி இணைந்து வியாபாரம் செய்ய தொடங்கினார்கள்.

அதனால் அவர்களுக்கு பல புதிய பொருட்கள் அவர்களிடமிருந்து கிடைத்தது. அதுபோலவே பீர் பிராந்தி போன்ற மது வகைகளையும்,  அவற்றை குடிக்கும் பழக்கத்தையும் கற்றுக் கொண்டார்கள்.

இவையெல்லாம் அவர்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சின்னப்பின்னமாக்கியது. அவர்களுடைய மக்கள் தொகை இறங்குமுகமானது. அது மட்டுமல்லாமல் அவர்களுடைய வாழ்விடங்கள் மற்றும் நிலங்களை 19 ஆம் நூற்றாண்டுவாக்கில் பறித்துக்கொண்டு  இந்தியன் டெரிட்டரி (INDIAN TERRITORY)என்ற இடத்திற்கு விரட்டப்பட்டார்கள். 

தில்லாமுக்கு சமூகத்தை பசிபிக் கடலோர சமூகம் என்று சொல்லலாம். கடலின் உப்பு காற்றோடு உறவு கொண்ட சமூகம்.

MY FAMILY IN PACIFIC SANDS

எங்கள் குடும்ப உறுப்பினர்கள் நான் என் மனைவி முதியவர்கள் என் மகன் மற்றும் மருமகள் இளைஞர்கள் என் பேரன்கள் இருவரும் குழந்தைகள். இப்படி எல்லா வயதினரும் மிகுந்த மகிழ்ச்சி அடையும் விதமாக இருந்தது இந்த கேனன்பீச். 

புதிய இடங்களை, மனிதர்களை, அவர்களின் சுற்றுச் சூழலை, பழக்க வழக்கங்களை, அங்குள்ள மரங்களை, செடிகொடிகளை, பிராணிகளை, பார்ப்பதும் படிப்பதும்  எழுதுவதும், உங்களோடு பகிர்ந்துகொள்ளுவதும் எனக்குப் பிடிக்கும்.

இங்கு எங்களை விட என் பேரன்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தங்களை மறந்து விளையாடினார்கள். மணலில் விளையாடுவது அவர்களுக்குப் பிடித்திருந்தது. அலைகள் வருவதும் போவதும் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

எல்லோரும் தங்கள் காலணிகளை கழற்றிவிட்டு அலையில் இறங்கி நடந்தார்கள். சிலர் அலைகள் வந்து போகும் இடத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். 

பெரியவர்கள் வயதில் முதியவர்கள் கூட தங்களை வயதை மறந்து பசிஃபிக் மணலில், அதன் சாதுவான நீர்அலைகளில் நனைந்து விளையாடினார்கள்.

மகிழ்ச்சியாக இருந்தார்கள். அதனை விலைதந்து வங்க முடியாது.

நான் மட்டும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கலாம் என்று போட்டபடி அலைந்து கொண்டிருந்தேன்

அப்போது எனது பேரன் சிறியவன் நிகிதன் மட்டும் பயப்படாமல் பின்னால் உள்வாங்கி செல்லும் அலையை துரத்திக் கொண்டே ஓடினான்.

NIHITHAN BEHIND THE PACIFIC WAVES

‘போகாதே போகாதே’ என்று குரல் கொடுத்தும் அலைஓசையில் அது அவனுக்குக் கேட்கவில்லை.  எங்களை சட்டை செய்யாமல்  ஒரு அலையின் பின்னால் ஓடிக் கொண்டே இருந்தான்.

பின்வாங்கும் அலைக்குப் பின்னால் ஒரு பெரியஅலை உபரியான நீரை சுருட்டியபடி வந்து கொண்டிருந்தது.

அதனால் எனக்கு அது வேறு விதமாகப் பட்டது. உலர்ந்த மணலில் நின்று கொண்டிருந்த நான் அவன் பின்னாலே ஓடிப் போய் அவனை எட்டிப் பிடித்தேன்.

அவனைப் பிடித்த இடத்தில் ஏறத்தாழ முட்டிக்கால் அளவு கடல் நீர் முன்னும் பின்னும் ஆக ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால் இந்த சம்பவத்தை என்னைத் தவிர வேறு யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் எனக்கு கடலில் குளித்து அலைகளின் ஊடாக சிக்கிக் கொண்டு, அதிலிருந்து இரு முறை தப்பித்த அனுபவங்கள் உண்டு. ஒருமுறை கோவா அரபிக்கடலில், இன்னொரு முறை சென்னை வங்கக் கடலில். 

கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரத்திற்கு மேல் பசிபிக் கடலின் உப்பு நீரில் நனைந்தோம். அதன் பின்னர் அங்கு ஏகப்பட்ட கடல் உணவு உணவகங்கள் எங்களை வரவேற்றன. அங்கு மதியம் தி வே ஃபாரர் ரெஸ்டாரெண்ட் (THE WAY FARER RESTARANT)என்ற இடத்தில் சாப்பிட்டு முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். 

சாலமன் மீன், டூனாமீன், இறால் மீன், சிலாப்பியா, காட் மீன் கடல் நண்டு ஆகியவை முக்கியமான கடல் உணவாக, இந்த உணவகங்களில் தயார் செய்கிறார்கள். 

அங்கிருந்து புறப்பட்டோம். அங்கு சாலை நேடுக பைன் மர்க்க்காடுகள். ஆனால் இங்கு அதிகமாக இருப்பவை டவுக்ளஸ்ஃபிர், மற்றும் பிக் லீப் மேப்பில்(DOUGLAS FIR & BIG LEAF MAPLE) என்ற மரங்கள் தான். இப்பகுதி காடுகளை அப்லேண்ட் பாரஸ்ட் (UPLAND FOREST)என்று சொல்லுகிறார்கள்.

BYE TO PACIFIC WAVES

அன்பின் இனிய நண்பர்களே இதுவரை பசிபிக் கடலோர நகரம் கேனன்பீச், அதன் நீண்ட மணல்பரப்பு, ஹேஸ்டேக் பாறை, அதன் பழைய பெயர், புதிய பெயர், அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் அனைத்தும் பார்த்தோம். 

இந்த கடிதம் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் ஒருவரி ஒரு வரி எழுதிப் போடுங்கள்.

நாம் மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திக்கலாம் நன்றி  

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com

 

1 comment:

Anonymous said...

Super sir BABU Ravi kpd

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...