Tuesday, July 2, 2024

WHISPERS OF SAN ANTONIO - சேன்ஆன்டோனியோ சொல்லும் ரகசியங்கள்

 

அமெரிக்காவின் அழகான அம்சங்கள்

GLIMPSES OF AMERICA


SAN ANTONIO RIVER, TEXAS







சேன்ஆன்டோனியோ 

சொல்லும் ரகசியங்கள்

WHISPERS OF SAN ANTONIO

கடித எண்: 7

“THE RIVER HAS GREAT WISDOM & WHISPERS ITS SECRETS TO THE HEARTS OF MEN” Mark twain 

இந்தக் கடிதத்தில் சேன் ஆன்டோனியோ ஆற்றினை அந்த நகரத்து மக்கள் எப்படி தங்கள் நடைப்பயிற்சிக்கு பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்து நான் மிரண்டு போனென். அந்த ஆறும் ஊரும் தந்த அனுபவம்தான் இந்தக் கடிதம்.

டெக்சஸ் மாநிலத்தில் நான் தங்கியிருந்த ஆலன் சிட்டியிலிருந்து 5 மணி நேர கார்ப்பயண தொலைவில் உள்ளது “சேன் ஆண்டனியோ” நகரம். ஜூன் 29ம்தேதி காலை 11.36 மணிக்கு சரியாக ஆலன் நகரிலிருந்து புறப்பட்டோம்.

டெக்சஸ்’சின் தலைநகரம் ஆஸ்டின் நகரைத் தாண்டி செல்ல வேண்டும். வழியில் ஆஸ்டின் உட்பட டல்லஸ், வேகோ, நியூபிரான்ஃபெல்ஸ், ஆர்லிங்க்டன், கிரேப்வைன், சேன் மார்கோஸ் பல முக்கிய நகரங்களைத் தண்டிச் சென்றோம்.

என் மகன் ராஜூ சாலை எண் 75 வழியாக தனது டொயோடொ சீயன்னாவை 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டினான். என்னோடு என்மனைவி, என் மகன், என் மறுமகள் என் பேரன்கள் இருவர் என என் பயணம் சுவாரஸ்யம் மிக்கதாக இருந்தது.

நாங்கள் புறப்பட்ட 6 வது மணி நேரம் சேன் ஆன்டோனியோ போய்ச் சேர்ந்தோம். அங்கு போய் இறங்கிய பின்னால்தான் தெரிந்தது. அது எவ்வளவு முக்கியமான சுற்றுலா நகரம் என்று. உலக நாடுகள் 213 லிருந்தும் ஓரிருவர் வந்திருப்பாரோ எனத் தோன்றியது.

இன்னொரு ஆச்சரியம் ! கார்  நிறுத்தப் பக்கத்திலேயே ஒரு ஆறு மாடிக்கட்டிடம். எங்கள் காரை நிறுத்த ஆறாவது மாடியில்தான் இடம் கிடைத்தது. கார்  நிறுத்தம் மாடியிலா ? யோசித்துப் பாருங்கள் !

என் மனைவி கொஞ்ச நாளாய் வாக்கிங்க் ஸ்டிக் உதவியோடு நடக்கிறாள். இன்று அந்த வாக்கிங்க் ஸ்டிக்கை எடுத்துவர மறந்து விட்டோம்.

பாருங்கள் ! ரிவர் வாக்கிங்க் போக வாக்கிங்க் ஸ்டிக் எடுக்காமல் போய் விட்டோம். இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் நான் வாக்கிங்க் ஸ்டிக் இல்லாமலே ரிவர் வாக்கிங்க் போக முடியும் என்று நினைக்கிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை.

WITH MY FAMILY

ஆறாவது மாடியிலிருந்து இறங்க எல்லாம் லிஃப்ட் இருந்தது. அங்கு போய்ப்பார்த்தால் இன்னொரு ஆச்சரியம் ! ஆற்றின் ஓரமாக நடக்க 24 கிலோமீட்டர் கணக்கில்  நடைபாதை இருக்காம் ! முடிந்தவரை நடப்போம் !

முடியாத இடத்தில் உட்கார வசதி. அங்கு போய் பார்த்தால் படகுப்பயணம் களைகட்டியிருந்தது. ஏகப்பட்ட படகுகள் ! ஒரு படகில் 30 - 40 பேருக்கு குறையாமல்  பயணித்தார்கள்.

படகுகள் பயப்படும் வேகமில்லாமல், பாதுகாப்பான வேகத்தில் சென்று கொண்டிருந்தன. மனசு படபடத்தது. நாங்களும் இப்போது படகில் பயணம் செய்து கொண்டிருந்தோம். ஒரு 5 நிமிடத்தில் இறக்கி விட்டு விடுவார்கள் என்று நினைத்தால் சுமார் 30 முதல் 40 நிமிடப் பயணம்.

THE BOAT DRIVER NARRATES THE  RIVER STORY

இன்னொரு ஆச்சரியம் ! இந்த ஆற்றின் சரித்திரம், இதனை எப்படி பரமரிக்கிறார்கள் ? உள்ளூரில் இதன் நீரை எப்படி பயன்படுத்துகிறார்கள் ? எப்படி இதன் தரத்தை பரமரிக்கிறர்கள் ? இந்த ரிவர் வாக்கிங்க் எப்படி எவ்வளவு சிறப்பாக எத்தனை ஆண்டுகளாக நடக்கிறது ? இத்தனை



கேள்விகளுக்குமான பதில்களை ஒரே பெண்மணி படகின் ஒருமுனையில் நின்றபடி ஒரே ஒருநிமிட இடைவெளியும் இல்லாமல் மைக்கில் ஓங்கி ஓங்கி சொல்லிக்கொண்டே இருந்தார்.

சேன் அன்டோனியோவில் பிறக்கும் இந்த ஆறு 386 கி.மீ. ஓடி டிவோலி நகரில் குவால்டிப்பி   ஆற்றுடன் கலந்து மெஃஸிகோ ஜலசந்தியில் சங்கமமாகிறது. எதைப்பற்றியும் கவலைப்படாத ஆறு. 

த சேன் அன்டொனியோ ரிவர் அத்தாரிட்டி(THE SAN ANTONIO RIVER AUTHORITY) மற்றும் யூ எஸ் ஃபிஷ் அண்ட் ஒயில்ட் லைஃப் செர்வீஸ் (US FISH AND WILD LIFE SERVICES), டெக்சஸ் கமிஷன் ஆன் என்வைரான்மென்டல் குவாலிட்டி (TEXAS COMMISSION ON ENVIRONMENTAL QUALITY)  இரண்டும், இந்த ஆற்றின் தண்ணீரின் தரத்தை  மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள்.

நீர்வடிப்பகுதி பாதுகாப்புத் திட்டங்கள் (WATERSHED PROTECTION PROJECTS) மற்றும் மக்கள் பங்கேற்பு மூலமாக இந்த ஆற்று நீர் மாசுபடாமல் பாதுகாக்கிறார்கள். விவசாயத்திற்கு பாசன நீராகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த ஆற்றினை பாதுகாப்பதில் சேன் ஆன்டொனியோவின் 2.49 மில்லியன்  மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

வழி நெடுக வாணவேடிக்கைதான்  என்று சொல்லும்படியான காட்சிகள். அவ்வளவு சுலபமாக அவற்றை வார்த்தைகளில் வடித்து விடவும் முடியாது பிடித்துவிடவும் முடியாது.

ஆற்றின்  இருபக்கமும், சுமார் 24 கி.மீ. தொலைவிற்கு, நடை பாதைகள், அதில் ஏகப்பட்ட கடைக்கண்ணிகள், சிறுசிறு சிற்றுண்டி மற்றும் பேருண்டிக் கடைகள், தங்குமிடக் கட்டிடங்கள், இதர மகிழ்ச்சி தூண்டும் கேளிக்கை அமைப்புகள் எல்லாம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றன.  

ஓர் ஆண்டில் மில்லியன் கணக்கில் ஜனங்கள் சந்தடியில்லாமல் வந்து போகிறார்களாம். அன்றாட இடியப்ப சிக்கல்களை மறக்க இப்படிப்பட்ட இடங்கள் தேவைப் படுகின்றன.

WITH MY FAMILY

குழந்தைகள், இளைஞர்கள் இளைஞிகள், வெளி நாட்டினர், அமெரிக்க மக்கள், உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள், பலர் நடக்க, சிலர் அங்கிருந்த  மரப்பெஞ்சுகளில் ஓய்வாக அமர்ந்திருக்க, சிலர் எண்ணற்ற சிற்றுண்டி  சாலைகளில் பீசா, பர்கர், ஐஸ்கிரீம், ஜூஸ்,  என வெளுத்துக்கட்ட, சிலர் குழுக்களாக இசைக்கச்சேரிகளில் பாட இசைக்க, படகில் சேன் ஆன்டோனியோ பற்றி ஆற்றொழுக்காய் விளக்கம் தந்த பெண்மணிக்கு  நன்றி சொல்லிவிட்டு நாங்கள் நடையைக்கட்டினோம்.

இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் சேன் ஆன்டோனியோ ஆறு அமைதியாக ஓடுகிறது. 


“FOR MEN MAY COME AND MEN MAY GO,

BUT I GO ON FOR EVER”

-    Alfred Lord Tennyson








 

                                                                                                                                                                                                   

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...