Sunday, July 7, 2024

SOUTH FORK RANCH A TOURIST SPOT - சவுத் போர்க் ரேன்ச்'ல் என்ன பார்க்கலாம் ?

 

GLIMPSES OF AMERICA

அமெரிக்காவின் அழகிய அம்சங்கள் 

ஒரு வீடு ரான்ச் ஆன கதை

TEXAS LONG HORN BREED


சவுத் போர்க் ரேன்ச்'ல் என்ன பார்க்கலாம் ? 

SOUTH FORK RANCH A TOURIST SPOT 

RANCH CART

கடிதம் 10

அன்பின் இனிய சகோதரர்களே ! ஸ்கோதரிகளே ! அனைவருக்கும் எனது அன்பு வணக்கம். 

எப்படி இருக்கிறீர்கள் ? உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது எனது அன்பு விசாரிப்புகள் ! 

யாரும் அறியப்படாமல் இருந்த சவுத் ஃபோர்க் ரேன்ச் (SOUTH FORK RANCH)எப்படி ஒரு டிவி தொடர் நிகழ்ச்சியால் பிரபலமாகி இன்று ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாக மாறி உள்ளது ? இதனை  நேரடியாகப் பார்க்கப்போன எனது அனுபவம்தான் இந்தக் கடிதம் இது. “ரேன்ச்” என்பது பெரும் கால்நடைப் பண்ணை என்று உங்களுக்கு நினைவு இருக்கும்.

இந்தசவுத் ஃபோர்க் ரேன்ச்’ பார்க்கர் நகரில் (PARKER TOWN)சுமார் 300 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. நான் தங்கி இருக்கும் என் மகன் வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது.

“இது நமக்கு ரொம்பவும் பக்கமா இருக்கு.. அங்க டிவி சீரியல் (TV SERIAL)எடுத்து இருக்காங்க.. சுற்றுலா வர்றவங்க எல்லாம் அங்க போறாங்க..” என்று சொன்னார் என் மருமகள். 

நானும் ஒரு ரேஞ்சை பார்த்து விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதனால் நானும் சரி என்றேன். எல்லோரும் சரி என்றார்கள். 

உடனே காரை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். என் மகனுக்கு சொந்தமான கார் இருக்கிறது இன்னொன்று அவனே ஒரு திறமையான கார் ஓட்டி. கார் ஓட்டுவது என்பதை அவனுக்கு ஒரு பேஷன் (PASSION).

சின்ன வயதில்டிவி கேம்’ விளையாடுவது அவனுக்குப் பிடிக்கும். பெரும்பாலும் கார் ஓட்டும் விளையாட்டுதான் விளையாடுவான்.

அந்த சமயம் எனக்கு கூட அதனை கற்றுக் கொள்ள ஆசை. அந்த சாலையில் ஓடும் மற்ற கார்களுடன் மோதாமல் வளைந்து வளைந்து செல்லும் சாலைகளில் சரியாக ஓட்ட வேண்டும். 

பல முறை முயன்றும் அதனை என்னால் சரியாக ஓட்ட முடிந்ததில்லை. 

இப்போதும் ராஜு சாலைகளில் லாபகமாக ஓட்டும் போது எனக்கு பழைய ஞாபகம் வருகிறது. அப்போதும் நன்றாக ஓட்டினான் இப்போதும் நன்றாக ஓட்டுகிறான். 

ஒரு வேலையை விருப்பமுடன் செய்யும்போது அதில் நிபுணத்துவம் அடைவதை ஒருவராலும் தடை செய்ய முடியாது.

ஓக் புரூக் சாலையிலிருந்து (OAK BROOK)புறப்பட்ட நாங்கள் பத்தாவது வருடம் சவுத்ஃபோர்க் ரேன்ச்” போய்ச் சேர்ந்தோம். நாங்கள் போவதற்கும் ஒரு டிராக்டரில் இணைக்கப்பட்ட ஒரு தொடர் வண்டியில் 10 முதல் 15 பார்வையாளர்களுடன் கிளம்ப தயாராக இருந்தது. 

நாங்களும் அவர்களோடு தோற்றிக் கொண்டோம். முதன்முதலாக ஒரு ரேன்ச்’ஐ பார்க்கப் போகிறோம். ஆயிரக்கணக்கான மாடுகள், ஐம்பது நூறு வகையான குதிரைகள், பத்திருவது  கவ்பாய்கள் என்ற கற்பனையோடு டிரக்டரில் போய்க்கொண்டிருந்தேன். 

போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுக்க தயாராக இருந்தேன், செல்போனுடன் தான். ஆனால் நாங்கள் புறப்பட்ட இரண்டு அல்லது மூன்றாவது  நிமிடம் ஒரு கட்டிடத்தில் முன்னால் நின்றது அந்த டிராக்டர்.எல்லாம் இறங்குங்க’ என்றார் அந்த டிராக்டர் ஓட்டுநர். 

எல்லோரும் டிராக்டரை விட்டு இறங்கினோம். அடுத்து என்ன ? நாங்கள் அந்த கட்டிடத்திற்குள் செல்ல வேண்டும். அநேகமாக ஒரு அறிமுக உரை இருக்கும். அதன் பின்னர் ஆயிரம் மாடுகளை 100 குதிரைகளை பத்துப்பதினைந்து கவ்பாய்களைப் பார்க்கலாம் என்று நினைத்தபடி அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தோம்.

.வெளியில் 100 டிகிரியைத்தாண்டி டெக்சஸ்வெயில் வீசியது. கட்டிடத்திற்குள் நுழைந்ததும் ஏசி எங்களைக் கவ்விப்பிடித்தது.

WITH MY FAMILY

அங்கு 5 பெண்மணிகள். எல்லாம் எனக்கு வகுப்புத் தோழிகளாக இருப்பதற்கு தகுதியான வயதுடையவர்கள். எழுபதைக் கடந்த வெள்ளைக்கார மூதாட்டிகள். எங்களை வரவேற்கும் பாணியில் நின்றிருந்தார்கள். ஒருத்தர் மட்டும்ஹாய்’ என்றார். 

அங்கு இருந்த சிறிய ஹாலுக்கு அழைத்து சென்றார். அது ஒரு வகுப்பறை மாதிரி இருந்தது.  நுழைவு வாயிலில்ஹாய்’ என்று சொன்னவர் மட்டும் எங்களோடு வந்தார்.  நாங்கள் அந்த வகுப்பறையில் உட்கார்ந்தோம். அதன் பின்னர் அவர் எங்களை வரவேற்றார். 

அதன் பின்னர் ரேன்ச்’ஐ எப்போது தொடங்கினார்கள். அதனைக் களமாகக் கொண்டு டிவி சீரியல் எப்படி தொடங்கினார்கள் என்று விளாவாரியாக பேசினார்.

அமெரிக்கன் ஸ்லாங்’கில் (AMERICAN SLANG) அவர் பேசியது, எதுவும் எனக்கு விளங்கவில்லை ஆனால் தோராயமாக அவர் பேசியது இதுவாகத்தான் இருக்கும் என்று மட்டும் எனக்கு புரிந்தது.

ஆனால் ரேன்ச் கால்நடை பெறும் பண்ணை பற்றி (CATTLE RANCH) ஆடுபற்றி, மாடுபற்றி எதுவும் மூச்’ விடவில்லை.  இதனை நான் பின்னர் என் மகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன் 

சுமார் 30 நிமிடம் அந்த மூதாட்டி பேசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் அந்த பழங்கால கட்டிடத்தின் விருந்தினர்அறை, விருந்து தரும் அறை,  குளியலறை, படுக்கையறை, கழிவறை எல்லாம் சுட்டிக்காட்டி எல்லாம் நேர்த்தியாக அழகாக ஒரு ஜமீந்தாரின் வீடுபோல இருந்தது. 

டீவி சீரியல் எடுக்கும்போது, அந்த சிறு அரண்மனையில், என்னென்ன காட்சிகளை எங்கு எங்கு எடுத்தார்கள். அதில் நடித்த நடிகர்கள் நடிகைகள் குசும்புகள் பற்றிய சுவாரஸ்யமான செய்திகளை எல்லாம் அந்த வயதிலும் ஞாபகமாகச் சொன்னார் அந்தப்பெண்மணி. 

எங்களோடு வந்திருந்த உள்ளூர் வெள்ளைக்காரர்கள் எல்லாம் அவர் பேசும்போது, அவ்வப்போது சிரித்து ரசித்தனர். நான் மட்டும் மௌனமாக இருந்தேன். புரியாமல் எப்படி சிரிப்பது ? நான் சிரிக்கிறேனா, என்று வேறு சிலர் என்னை பார்ப்பதாக எனக்குத் தோன்றியது.

ஒரு வழியாக அந்த மூதாட்டியின் மூதுரை வகுப்பு முடிந்தது. அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள நான் அனுமதி கேட்டேன். சரி என்றார்.

புகைப்படம் எடுத்துக் கொண்டு வெளியே வருவதற்கு முன்னர்நீங்கள் வேறு எங்காவது பார்க்க வேண்டும் என்றால் சொந்த முயற்சியில் முன்னூறு ஏக்கரில் எங்கு வேண்டுமானாலும் போய் பார்க்கலாம் பாருங்கள்’ என்றார் 

எங்களை கூட்டிக்கொண்டு வந்த டிராக்டர் அங்கு இல்லை. திரும்பப் போய்விட்டிருந்தது. எங்காவது ஏதாவது பார்க்க வேண்டுமென்றால் நாங்கள் எங்கள் சொந்த முயற்சியில், சொந்த கால்களில் நடந்து போக வேண்டும், 100 டிகிரி தாண்டி காய்ந்த டெக்சாஸ் வெயிலில் வெந்தபடி 

நாங்கள் திரும்பி வரும் வழியில் நாங்கள் பார்த்தது எங்களை உற்சாகப்படுத்தியது. அவை 3 மட்டக்குதிரைகள், ஆரம்ப காலத்தில் ஹென்றி ஃபோர்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த 1908 ம் ஆண்டின் “டி மாடல்” கார் (மோட்டார் சுந்தரம் பிள்ளை கார்), மூன்றாவதாக 1977 ஆண்டு மாடல் லிங்கன் கான்டினென்டல் கார்’  நான்காவதாக தத்வரூபமான டெக்சாஸ் நீண்டகொம்பு மாட்டின் சிலை, ஐந்தாவதாக தென் அமெரிக்காவின்  லாமா’ என்னும் பனிப் பிரதேச மான் மாதிரிப்பிராணி. இவை எல்லாம் எங்களுக்கு அங்கு புதிதாக கிடைத்த பொக்கிஷம் என்று நினைத்தேன் 

அந்த ஐந்து பொக்கிஷங்கள் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்

டெக்ஸஸ் லாங்ஹார்ன் மாடுகள் என்பவை ரேன்ச்’களில் வளர்க்கப்பட்ட பிரபலமான மாட்டினம். இதன் கொம்புகள் அதிகபட்சமாக எட்டடி இருக்குமாம். இது இறைச்சிக்கான மாட்டினம் டெக்சஸ் வெப்பத்தில்  வாழ்வதற்கு மிகவும் பொருத்தமானது. எக்குத்தப்பாக எண்ணற்ற கலப்பினங்களை உருவாக்கியுள்ளார்கள். அதனால் இந்த இனம் காணாமல் போய்விடும் என்பதனால், இந்த மாட்டினத்தை பாதுகாப்பதற்கான ஒரு அமைப்பை 1967ஆம் ஆண்டு உருவாக்கி இருக்கிறார்கள்.

அடுத்து அமெரிக்கன் மினியேச்சர் ஹார்ஸ். இதனை அமெரிக்காவின் மட்டக்குதிரை என்று சொல்லலாம். இந்த குதிரைகள் 18 ஆம் நூற்றாண்டு வாக்கில் சுரங்கங்களில் ஐரோப்பியாவில் வேலை பார்த்தன.

1930 ஆம் ஆண்டு வாக்கில், இந்த மட்டக்குதிரைகளை அமெரிக்காவில் அறிமுகம் செய்தார்கள். இவை 1950 ஆம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்களில் கரி சுமந்தன.

AMERICAN MINIATURE HORSE

இயல்பாக இந்த குதிரைகள் மிகவும் இரும்பு மாதிரி வலிமையானவை இவற்றின் வயது 25 முதல் 35 ஆண்டுகள். இதன் அதிகபட்சமான உயரம் 38 அங்குலம் மட்டுமே. பெரிய குதிரைகளின் வயதைவிட ஐந்து ஆண்டுகள் கூடுதலாக இவை வசிக்கும். மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு. இங்கு மூன்று மட்டக் குதிரைகள் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டிருந்தன.

ஹென்றி போர்டின் டி மாடல் கார் இது. இந்த டீ மாடல் கார் ஹென்றி ஃபோர்டு  1908 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தடீ மாடல்’ கார்கள் எல்லாம் கருப்பு நிறத்தில் தயாரிக்கப்பட்டன.

MODEL T UNIVERSAL CAR

கருப்பு பெயிண்ட் மட்டும் தான் விரைவாக உலர்வதாக இருந்தது. நிறைய எண்ணிக்கையில் கார் தயாரிக்க வேண்டியதாக இருந்தது.  அதனால்  எல்ல கார்களுக்கும் கருப்பு பெயிண்ட் அடித்தார் ஹென்றிபோர்டு. அந்தக் கார்தான் இந்த ரேன்ச்சில் கவனிக்கப்படாமல் ஒதுக்குப்புறமாக நின்று கொண்டிருந்தது அந்த சரித்திரக் கார். இந்த மாடல் கார்  1908 முதல் 1927 வரை 15 மில்லியன் கார்கள் வீற்பனை ஆயின.

லிங்கன் இன்டர்நெட் கான்டினென்டல் கார் இது. இதை ஒரு ஹாலில் சகலவிதமான மரியாதையுடன் வைத்திருந்தார்கள். 1978 ஆம் ஆண்டு மார்க் 5 என்னும் மாடல் கார் இது.

போர்ட் மோட்டார் கம்பெனியின்(FORD MOTOR COMPANY) லிங்கன் டிவிஷனால் (LINCOLN DIVISION)விற்பனை செய்யப்பட்ட கார் இது. இந்த விக்டரி மாடல் கார்கள் (VOCTORY MODEL CARS)1977 முதல் 1979 வகையான காலகட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டவை.

LINCOLN CONTINENTAL LUXARY CAR

ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி இந்த கார் வெளியிடப்பட்டது. இதனை அவர்கள் டைமண்ட் ஜூபிலி எடிஷன் (DIAMOND JUBILEE EDITION)என்று கொண்டாடினார்கள் 

லாமா (LIAMA)என்பதைத் தெரியுமா ? இதன் பெயர் ஆடுகள் மாதிரி மாடுகள் மாதிரி மந்தை மந்தையாக வளர்க்கப்படுகிறது. இதன் ரோமம், பால் இறைச்சி, தோல் அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள் 

பார்ப்பதற்கு ஆடு ஒட்டகம் மான் இவற்றை சம அளவில் கலந்து உருவாக்கிய பிராணி போல இருக்கும். மிகவும் சாதுவான பிராணி இது. ஆனால் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வட அமெரிக்க சமவெளிகளில் உருவான பிராணி என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

தற்போது வட அமெரிக்காவில் சுமார் 40 ஆயிரம் லாமாக்கள்  மட்டுமே இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

LLAMA GLAMA

லாமாக்கள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் மேய்க்கும் போது அவற்றை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்குமாம். கடுமையான குரலை எழுப்பி ஆடுகளை விலங்குகள் வரும்போதுஜாக்கிரதை விலங்குகள் வருகிறது ஆபத்து’ என்று எச்சரிக்குமாம்.

 பாதுகாப்பான இடத்திற்கு போகலாம் வாங்க’ அப்படின்னு ஆடுகளை, செம்மரி ஆடுகளை லாமாக்கள் பாதுகாப்பாய் கூட்டிக்கொண்டு போய்விடுமாம். 

அதன் உடம்பில் ஏகப்பட்ட ரோமம் இருப்பதால் மிருகங்கள் லாமாவை சுலபமாக கடித்து காயப்படுத்த முடியாதாம். இன்னொன்று லாமாக்கள் மணிக்கு 40 மைல் வேகத்தில் ஓடி தப்பித்து விடுமாம். அவற்றைப் பிடிக்க முடியாதாம். 

நாய்கள், நரிகள், கையோடஸ் போன்ற விலங்குகளிடமிருந்து ஆட்டு மந்தைகளை இவை பாதுகாக்குமாம். 

இந்த கடிதத்தில் ரேஞ்ச் பற்றிய செய்திகள் ஏதும் அதிகம் இல்லை என்றாலும். இதில் சொல்லப்பட்ட பல சுவையான செய்திகள் உங்களை கவர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திக்கலாம் நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com

 

 

 


1 comment:

V.Sambasivam said...

I have gone through your letter. I have not visited any Ranch even though I visit USA every year since 1995 .After going through your letter I felt as if I visited a Ranch .You have gathered lot of information and neatly drafted. I appreciate your art of drafting of any visits.In memory of Texas I have a T shirt with longhorn. This T shirt is famous .Your son may be knowing about this T shirt. Keep writing letters of your visit and worth of complaining in to a book. Hearty congratulations. You can title the book as “Nan Kanda America” .
Sambasivam IFS (Retd)
Winston Salem, N C .

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...