Sunday, July 14, 2024

RHODEO SHOW IN FORT WORTH - அமெரிக்காவின் ஜல்லிக்கட்டு

 

GLIMPSES OF AMERICA

அமெரிக்காவின் அழகிய அம்சங்கள்

அமெரிக்காவின் ஜல்லிக்கட்டு

RHODEO SHOW IN FORT WORTH 

அன்பு அண்ணா நன்று ...தொடர்ந்து எழுதுக...ஓரு நல்ல Cow boy படம் ஓன்றை பார்க்க தூண்டுகிறது.
நன்றி...பாலா கோயமுத்தூர் 

அன்புள்ள சூரிய பகவான் ஆசான்!
உங்களது கட்டுரைகள் கடித வடிவில் படிக்கும் போது நேரொளி போல் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் அனுபவங்களை படிக்க ஆவலுடன் காத்துகொண்டிருக்கின்றேன்.ஒரு விதத்தில் நீங்களே ஒரு அமெரிக்கர்,சுதந்திரம் வாய்ப்பு மற்றும் சக்தியின் கலவை. உங்கள் குடும்பத்தாற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!

எஸ் டி சுதர்சன், பேங்களூர் 

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் ! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அன்பு விசாரிப்புகள்.

சமீபத்தில் நான் ஃபோர்ட்வொர்த் (FORTSWORTH) என்ற ஊரில் நடைபெற்ற ரோடியோஷோ (RHODEO SHOW)என்னும் கவ்பாய் திருவிழாவில் கலந்துகொண்டேன். 

FORT WORTH LIVESTOCK EXCHANGE

கவ்பாய்த் திருவிழா என்றால் என்ன ? ஏன் அதனைக் கொண்டாடுகிறார்கள் ? எப்படி கொண்டாடுகிறார்கள் ? எங்கு கொண்டாடுகிறார்கள் ? யார் கொண்டாடுகிறார்கள் ? எப்பொழுது கொண்டாடுகிறார்கள் ? எல்லாம் சொல்லுகிறேன்.

சமீபத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் இருக்கும் ஃபோர்ட்வொர்த் நகரில் நடக்கும் ரோடியோஷோவுக்கு நாங்கள் போயிருந்தோம். 

.உண்மையாக இது ஒரு மிகப்பெரிய அதிர்ஸ்டவசமான அரிய எல்லோருக்கும் எளிதில் கிடைக்காத அனுபவமாக இருந்தது. தெக்குபட்டிலிருந்து டெக்சாஸ் போய் போர்ட்ஸ்வொர்த்தில் நடைபெறும் உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும் ரோடியோஷோவில் கலந்துகொள்ளுவது சாதரண விஷயமா ? 

நம் பிள்ளைகள் பெற்ற கல்விதான் நமக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகளை எல்லாம் உருவாக்கித் தருகிறது. என்ன சொல்லுகிறீர்கள் ?

இப்போது ரோடியோஷோ’வுக்கு வருவோம்.

கௌவாய்ப் கலாச்சாரத்தின் அடி நாதமாக விளங்குவது இந்த ரோடியோ ஷோ என்னும் திருவிழா. இந்த திருவிழா 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் இருந்து கோலாகலமாக நடத்துகிறது போர்ட்ஸ்வொர்த் நகரம் .

இந்த  ஃபோர்ட்வொர்த் நகரத்தில் ஆண்டு முழுவதும் நடக்கும் திருவிழா இந்த ரோடியோஷோ. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களுக்கு மட்டும் நடைபெறுகிறது

இந்த ரேடியோஷோவின் முக்கியமான அம்சம் மாடு பிடிக்கும் விளையாட்டு தான். மாடுகளை மடக்கிப் பிடிக்கும் விளையாட்டுக்கு நம்ம ஊரில் அதன் பெயர் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு. 

ஓடும் மாடுகளை பழகிய குதிரைகளில் சவாரி செய்தபடி கயிறுகளை வீசி மடக்கி பிடிப்பது (ROPING)ஒரு விளையாட்டு. இன்னொன்று முரட்டு குதிரைகளில் சவாரி செய்யும் போட்டி. இந்த இரண்டு போட்டி விளையாட்டுக்கும் உயிரை பணயம் வைக்கும் விளையாட்டுகளாக இருந்தன 

ஒரு வட்ட வடிவமான ஸ்டேடியம். நடுவில் ஒரு மைதானம். விளங்குமாறு சொல்வது என்றால் இது ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் மாதிரி இருந்தது. சுற்றிலும் பார்வையாளர்கள் உட்கார்ந்து இந்தப் போட்டிகளைப் பார்க்கலாம். ஆனால் அவ்வளவு பெரியது அல்ல. தோராயமாக அதில் ஐந்தில் ஒரு பங்கு இருக்கும்

RHODEOSHOW STADIUM 1

ஸ்டேடியத்தில் சுற்றிலும் எட்டு திசைகளிலும் அமர்ந்திருப்பவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் சுலபமாக இந்த வீர விளையாட்டுக்களை போட்டிகளைப் பார்க்க முடியும்தான். ஆனால்  முடியவில்லை. 

WITH MY WIFE & SON

நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் மாடுகளை குதிரைகளை தயார் செய்து முடுக்கிவிடும் இடம். அதனால் குதிரைகள் மற்றும் மாடுகள் ஆக்ரோஷமாக வந்து போட்டியளர்களோடு வந்து மோதும் காட்சிகளை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. முடிந்தவரை அந்தக் காட்சிகளை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்தேன்.

ஒரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால் இந்த வீர விளையாட்டுகளில் பெண்களும், குழந்தைகளும் கூட கலந்து கொண்டார்கள் என்பதுதான். 

ஆண்களைப் போலவே  பெண்கவ்பாய்களும் குதிரையில் சவாரி செய்தபடி கன்றுகளை மடக்கிப் பிடித்தார்கள். 

அதைப்போலவே ஐந்து வயது முதல் சுமார் 10 வயதுவரை உள்ள குழந்தை கவ்பாய்கள் குதிரையில் சவாரி செய்து மூன்று இடங்களில் இருக்கும் பாரல்களை சுற்றிவர வேண்டும். 

சீக்கிரம் யார் சுற்றிவருகிறார்களோ அவர்களை வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கிறார்கள். இவர்கள் எல்லாம் குதிரைகளில் சவாரி செய்யவில்லை. பறந்து சென்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இதைப்பார்க்கும்போது குதிரைச் சவாரி கற்றுக்கொள்ளாமல் 75 வருஷம் ஓட்டுபவிட்டோமே என்ற கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தேன். குதிரைச் சவாரியை ஆன்லைனில் இதை யாராவது சொல்லிக்கொடுக்கிறார்களா ?

இன்னொரு விஷயம் ஆச்சரியமாக இருந்தது. ஆண்கவ்பாய்கள் குதிரைச் சவாரி செய்யும் வேகத்திற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள்  குதிரைச் சவாரி செய்யும் வேகத்திற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்பதுதான்.

எல்லோருமே குதிரைகளில் பறக்கிறார்கள். என்னதான் காரில் அசத்தும் வேகத்தில் ஓட்டினாலும் குதிரைச்சவாரி மாதிரி வருமாண்டும் என்றால் மயிர்க் கூச்செரியும் வீர விளையாட்டு. இந்த ரோடியோ ஷோவினைப் பார்ப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும்.

ரோடியோ ஷோ என்றாலே ஃபோர்ட்வொர்த் நகரமே திருவிழா கோலம் பூண்டு விடுகிறது. ஏகப்பட்ட கடை கன்ணிகள் உள்ளூர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.

எள்போட்டால் எண்ணெய் ஆகிவிடும் கூட்டம். அதிகமான அளவில் வெள்ளைக்காரர்கள், அதற்கு அடுத்தபடி ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள், இந்தியர்கள், 

இந்த ரோடியோ சோ வில் எனக்கு பிடித்தமானவை மூன்று.  ஒன்று இந்த வீர விளையாட்டுகள். இரண்டாவது அங்கு நடைபெற்ற லாங் மாடுகளின் அணிவகுப்பு. மூன்றாவது அங்கு உள்ள கௌபாய் கலாச்சார மியூசியம்


இந்த வீர விளையட்டுக்கள் அதற்கான் ஸ்டேடியம் அமைந்திருக்கும் கட்டிடத்தில் நடைபெறுகிறது. அதற்கு அடுத்தக் கட்டிடத்தில்  கௌபாய் கலாச்சார மியூசியம் உள்ளது.

இந்தக் கட்டிடங்களின் எதிராக ஒரு பிரதான சாலை உள்ளது. அதன் இருபுறமும் பார்வையாளர்கள் வரிசையாகத் திரண்டு  நிற்க பாரம்பரிய  தாரை தப்பட்டை மற்றும் இசைக்கருவிகளின் வாசிப்புடன் லாங்க் ஹார்ன் மாடுகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது.

இந்த மாட்டு இனத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதையை பார்க்கும் போது உண்மையில் மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது.

லாங்ஹான் மாடு ஒன்றினை ஒருத்தர் ஏற்பாடு செய்து வைத்துள்ளார். மிகவும் கோபம் கூடிய மாட்டினம் இது. இதனை ஒரு சாதுவான மாடாக  சொன்னதை எல்லாம் கேட்கும் மாடாகப் பழக்கி வைத்துள்ளார்.

அதன் மீது யார்வேண்டுமானாலும் உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நபர் பத்து டாலர் கட்டணமாக தர வேண்டும். பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்க நாங்கள் ஐந்து டாலர் கொடுத்தோம். 

எனக்கும் அதன்மீது உட்கார்ந்து ஒரு எடுக்க ஆசைதான். ஆனால் 2024 ல் நடந்த ஒரு விபத்தில் உடைந்தது எனது வலது கால். அதனை உயர்த்தி மாட்டின் மீது அல்ல ஒரு டூவீலரில் கூட ஏறி உட்கார முடியாது.

வேறு வழி இல்லாமல் ஐந்து டாலர் கொடுத்து மாட்டின் முன்னால் நின்று நாங்கள் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். ஒரு டாலர் இரண்டு டாலர் என்று சொல்லும்போது அது மலிவாக இருக்கிறது ஆனால் ஒரு டாலருக்கு 85 இந்திய ரூபாய் என்று கணக்கு போடும்போதுசொரேர்’ என்று இருக்கிறது.

இப்போது ரோடியொஷோவுடன் தொடர்புடைய பொதுவான தகவல்களை உங்களுக்கு சொல்லுகிறேன். 

இந்த ரோடியோ ஷோ என்னும் திருவிழா பல ஆண்டுகளாக ஃபோர்ட்வொர்த் என்ற நகரில் நடந்து வருகிறது. இது கவ்பாய் கலாச்சாரத்தைக் கொண்டாடும் பாரம்பரியத் திருவிழா.

இன்னும் சொல்லப்போனால் நம்ம ஊரின் பொங்கல் திருவிழா (PONGAL FESTIVAL)மாதிரி தான் இதுவும். இதனை அமெரிக்காவின் பொங்கல் திருவிழா என்று கூட சொல்லலாம். 

இந்தியாவைப் பொருத்தவரை மாடு வளர்ப்பு என்பது விவசாயத்தின் ஒரு துணைத்தொழில் என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் அதையும் விவசாய தொழிலில் ஒன்று என்று கூட சொல்லலாம்.

ஆனால் டெக்ஸஸ் பகுதியில் (TEXAS REGION) பழக்கத்தில் இருக்கும் ரேன்ச் (RANCH)என்பது இறைச்சிக்கான மாடு வளர்ப்பு அல்லது கால்நடை வளர்ப்பு என்று சொல்லலாம்.

இந்த ரேன்ச் பண்ணைகள் (RANCH FARMS)தொடர்பான வேலைகள் மற்றும் அவை தொடர்பான திறமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விழாவினை கட்டமைத்திருக்கிறார்கள்.

குதிரைச் சவாரி, குதிரைச் சவாரி செய்தபடி மாடுகளை மடக்குதல், கன்றுகளை மடக்குதல், கயிறுகளைக் கொண்டு மாடுகளை மற்றும் கன்றுகளை மடக்கிப்பிடித்தல், ஆகியப் போட்டிகள் மற்றும் வீர விளையாட்டுக்கள் இந்த ரோடியோ ஷோவில் நடக்கும்.

தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு மிகவும் பிரபலமான மற்றும் ஆபத்தான வீர விளையாட்டு.  நேருக்கு நேராக காளைகளோடு மோதும் வீர விளையாட்டு உலகில் வேறு எங்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

ரோடியோஷோ வில் குதிரைகளில் சவாரி செய்தபடி கயிறுகளை வீசி மாடுகளின் கழுத்தில் மாட்டி மாடுகளை மடக்குகிறார்கள். இன்னொன்று லகுவாக பின்னங்கால்களில் கயிறுகளை மாட்டி மடக்குகிறார்கள். 

தலைதெறிக்க ஓடும் மாடுகளை கயிறுகளை மாட்டி மடக்குவது என்பது பார்க்க விறுவிறுப்பாக இருக்கிற்கும். நாங்கள் உட்கார்ந்த இடத்தில் வீடியோ எடுக்க புகைப்படம் எடுக்க அவ்வளவாக வசதியாக இல்லை.

COWBOYS FROM THEKKUPATTU

ஒரு குதிரை வீரர் காளையின் கழுத்தில் கயிற்றை எறிந்து சரியாக மாட்டி விட்டார்.  ஆனால் அவர் குதிரையிலிருந்து கீழே விழ கயிற்றின் இன்னொரு நுனி அவர் காலில் சுருக்கிக்கொள்ள அந்தக் காளை அவரை தரதர வென்று இழுத்துக்கொண்டே ஒடியது. அதைப் பார்ர்த்த போது அப்படியே குலை நடுங்கியது.

நல்லவேளையாக அந்த மைதானத்தை போட்டிகள் நடக்கும்போதே டிராக்டர் கொண்டு உழுது விடுகிறார்கள். அதனால் கீழே விழும்போதும் இது போன்ற சமயங்களிலும் அதிகம் அடிபடாது. அதன் தரைப்பகுதி ‘மெத்மெத்’தென இருக்கும்.

முதன்முதலாக ரோடியோஷோ என்பது 1869 ஆம் ஆண்டு கொலரோடோ வில் நடைபெற்றது. அதில் தான் முதன் முதலாக வீர விளையாட்டுகள் மற்றும் குதிரை சவாரி காளைச்சவாரி, காளைச்சண்டை போன்றவை  நடந்தன.

இப்படிப்பட்ட ரோடியோ ஷோக்களை ஏற்பாடு செய்வது பிஆர்சிஏ (PRCA)என்ற அமைப்புதான். பி ஆர் சி என்றால் ப்ரொபஷனல் ரேடியோ கவ்பாய் அசோசியேஷன் (PROFESSIONAL RHODEO COWBOY ASSOCIATION). 1936 ஆம் ஆண்டு இந்த பி ஆர் சி என்னும் கவ்பாய்களுக்கான சங்கம் தொடங்கப்பட்டது. 

மாநிலங்கள் வாரியாக இப்படிப்பட்ட ரோடியோஷோக்கள் நடைபெறும். இதனைத் தேசிய அளவிலும் நடத்துகிறார்கள். இதனை நேஷனல் பைனல் ரோடியோ (NATIONAL FINAL RHODEO)என்கிறார்கள். 

இந்த இறுதிகட்ட விழா  நெவாடா மாநிலத்தில் லாஸ்வேகாஸ் (NEVADA - LOSVEGAS)என்னும் நகரில் கோலாகலமாக நடைபெறுகிறது.

இந்த ரோடியோஷோ திருவிழா போட்டிகள் சிலவற்றில் பெண்களும் கலந்து கொள்ளுகிறார்கள். குழந்தைகளும் கலந்து கொள்கிறார்கள் ரோடியோ ஷோ தொடர்பான பெண்களுக்கான ஒரு அமைப்பையும் 1948 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள் இதற்கு உமன் ப்ரொபஷனல் ரேடியோ அசோசியேஷன் (WOMEN PROFESSIONAL RHODEO ASSOCIATION)என்ற பெயர்.

ரோடியோசோ என்பது மேற்கத்திய அமெரிக்க கலாச்சாரத்தின் அடையாளம் ரேஞ்சின் மற்றும் கௌபாய் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது.

இது அமெரிக்காவில் நடைபெறும் இதர விழாக்களிலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் அடையாளமாக இந்த விழாக்கள் இடம் பெறுகின்றன 

இப்படிப்பட்ட ரோடியோஷோக்கள் நடத்தும்போது இதில் பங்குபெறும் கால்நடைகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன 

அமெரிக்கா மட்டுமின்றி கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் இந்த ரோடியோ ஷோக்கள் பிரபலம் 

ஸ்பெயினில் நடைபெறும் ரோடியோ ஷோக்களின் பெயர் ரெஜோனியோ (REJONEO)மற்றும் டொமோவக்கீரா (DOMO VAQUERA)என்று பெயர்.

குதிரை மீது அமர்ந்து சவாரி செய்தபடி ஒரு காளையுடன் சண்டை போடுவதை ரெஜோனியோ என்று சொல்லுகிறார்கள்.

ஒரு வீரர் குதிரையில் அமர்ந்தபடி ஒரு காளையை அடக்க முற்படுவார். முக்கியமாக இதில் குதிரையில் எப்படி லாவகமாக சவாரி செய்கிறார் என்பதை வெளிப்படுத்தும் போட்டிக்கு டொமோகிரா(DOMO VAQUERA) என்று சொல்லுவார்கள் 

இந்தப் போட்டிகள் அடங்கிய இந்த ரோடியோஷோ வினை ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். இந்த விழாவில் பங்கு பெறுவோர் ஒரு குறிப்பிட்ட வண்ணமயமான சீருடைகளை அணிந்திருப்பார்கள் 

.விரிந்து பறந்த அகலமான குல்லாய்கள், சட்டைக்கு மேல் அணியும் கையில்லாத ஜாக்கெட், குதிகால் உயர்ந்த பூட்டுகள், ஆகியவற்றை அணிந்து கொள்ள வேண்டும் 

மெக்சிகன் ரோடியோஷோன் பெயர் சாரியாடா(CHARREADA ) என்ற பெயர் இந்த விழாவின் நடைமுறை எல்லாவற்றிலும் ஸ்பெயின் நாட்டின் சாயல் (SHADES OF SPAIN)இருக்கும் 

ஒரு ரேஞ்ச் பண்ணையில் கால்நடைகளை கவனிப்பது, பராமரிப்பது தொடர்பான செயல்பாடுகள் மற்றும் திறன்களை சார்புடையதாக இருக்கும் இந்த சாரியாடா திருவிழா 

இந்த சாரியா டா விழாவிலும் குதிரைச் சவாரி, கயிறுகளை பயன்படுத்துதல் (ROPPING) போன்ற திறன்களை காட்சிப்படுத்துதல் தொடர்பான போட்டிகள் மற்றும் வீர விளையாட்டுகள் நடைபெறும்.

மெக்சிகோவின் தேசிய அளவிலான விழாக்கள் கொண்டாட்டங்கள் ஆகியவை எல்லாவற்றிலும் சாரியாடா விழாவின் செயல்பாடுகள் ஒரு அங்கமாக இருக்கும். இந்த விழாவில் பங்கு பெறுவோர் இதற்கான பிரத்தியேகமான அலங்கார உடைகளை அணிவார்கள். 

அகலமான குல்லாய்கள், பின்னல் வேலைப்பாட்டுடன் கூடிய மேல் ஜாக்கெட்டுகள், உடலை கவி பிடிக்கும் பேண்ட்டுகள், காலில் முழங்கால்வரை நீண்டிருக்கும் பூட்டுகள் என்று அணிந்திருப்பார்கள்.

ரோடியோஷோ பற்றி நிறைய சொல்லிவிட்டேன். இன்று இதைப் படித்துவிட்டு தூங்கினால் குதிரைகளில் நீங்கள் சவாரி செய்வது மாதிரி கனவு வரும் கண்டிப்பாய் !

CHARLES GOODNIGHT 

மீண்டும் அடுத்த ஒரு சுவாரஸ்யமான கடிதத்தில் சந்திப்போம். 

பூமி ஞானசூரியன்

A WRITER CUM &

COMMUNICATION

COACH

 

 

 

 

1 comment:

சுப்ரமணிய பாலா said...

அனுபவ பகிர்வுகள் நன்று .குதிரைகள் என்ற உடன் எனக்கு பாலகுமாரன் கதையின் வரிகள் ஞாபகம் வருகிறது.குதிரைகள் மனிதனின் அகங்காரம் ...அதன் மீது அமர்ந்து பயணிக்கையில் ராசாவாக ஓவ்வொரு மனிதனும் தன்னை நினைக்கிறான்...ஆனால் குதிரைகள் நம் மூச்சை நம் உடல் அசைவை வைத்து நம்மை புரிந்து கொள்கிறது ..நம்மை விட அறிவானது குதிரை ...நீங்க எழுதியது எமக்கு என் சின்ன வயது குதிரை ஞாபகம் ...நம்ம வூட்டில் இருந்து அப்பிச்சி தோட்டத்துக்கு போன குதிரை தானாய் நம் வூடு திரும்பி இறந்து போனது...பாசமான அந்த செவலைக்குதிரை மரியாதை உடன் புதைக்கப்பட்டது ...இன்னும் நினைவில் இருக்கு ...எழுதுக அடுத்த முறை கோயமுத்தூர் வரும் போது வீட்டுக்கு வாங்க...ரசியுங்கள் எழுதுங்கள் உங்கள் வழியாக பயணிக்கிறோம்.

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...