Thursday, July 11, 2024

COTTON TAIL RABBITS IN TEXAS - எனக்கு நண்பனான டெக்சாஸ் முயல்

 

GLIMPSES OF THE WORLD

அமெரிக்காவின் அழகிய அம்சங்கள்

கடிதம் 14


எனக்கு நண்பனான டெக்சாஸ் முயல்

COTTON TAIL RABBITS IN TEXAS


IF YOU CHOOSE TWO RABBITS, YOU WONT CATCH EITHER - CONFUCIUS 

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம்.

அமெரிக்காவின் டெக்ஸஸ் பகுதியில் வீட்டுத் தோட்டங்கள் மற்றும் சுற்றிலும் இருக்கும் புல்வெளிகளில் தொல்லை தரும் உயிரினமாக கருதப்படுவது இந்த பருத்திவால் முயல். அது எப்படி எனக்கு நண்பன் ஆனது என்று சொல்லும் கதைதான் இந்தக் கடிதம். 

இதனை ஆங்கிலத்தில் காட்டன் டெயில் ராபிட் என்று சொல்லுகிறார்கள்.

நான் தங்கி இருக்கும் என் மகன் வீட்டின் பின்புறம் ஒரு புல் தரை இருக்கிறது அதன் அருகில் நான் உட்கார்ந்து படிப்பது எழுதுவது பழக்கம்.

ஒரு பருத்திவால் முயல் மாலை சுமார் ஏழு மணி அளவில் இந்த புல் தரைக்கு வரும். அந்த நேரத்தில் நானும் அங்கு போய் விடுவேன். 

சுமார் பத்து நிமிடம் என்னை கண்டு கொள்ளாமல் அது புல் மேயும். இங்கு இருக்கும் முயலகளுக்கெல்லாம் மனிதர்களைப் பார்த்து பயப்படுவதில்லை. 

அதற்குள் புல் தரையில் இருக்கும் ஸ்பிரிங்லர் ஆட்டோமேட்டிக்காக தண்ணீரை சுற்றி சுற்றி  சுற்றி பீச்சு அடிக்கும். நான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து எழுந்து விடுவேன்.

ஒருநாள் முயலை வேடிக்கை பார்த்தபடியே இருந்து விட்டேன். நம்மைப்பார்த்து பயப்படாமல் “என்னைப் பார் என் அழகைப்பார்’ என்று ஏன் எட்டிப்பிடிக்கும் தூரத்தில் புல்லைக் கொறித்துகொண்டிருக்கிறது ? நம்ம ஊர் முயலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ?  

நம்ம ஊர் முயல்கள் என்னைப்பார்த்து பயப்படுகின்றன. என்னை நம்புவதில்லை. டெக்சாஸ் முயல் என்னை முழுசாய் நம்புகிறது. அதற்கு கேடு எதுவும் செய்யமாட்டேன் என நம்புகிறது. 

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஸ்பிரிங்க்லர் தண்ணீரை பீய்ச்சி அடிக்க ஆரம்பித்துவிட்டது. அது அதன் வேலையை சரியாக 7.30  க்கு தொடங்கிவிட்டது. அது ஆட்டோமேட்டிக் 

எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும் அது அதன் வேலையை அது தொடங்கிவிடும். அதற்கு சாக்குப்போக்கு சொல்லத் தெரியாது.  

நானும் எனது நோட்டு புத்தகங்களும் முழுசாக  நனைந்துவிட்டோம். முயல் வேகமாக எதிரில் இருந்த வேலி சந்துக்குள்  புகுந்து ஓடிவிட்டது. அது எந்த வழியில் வருகிறது ? எப்படிப் போகிறது என்று எனக்கு அத்துப்படி 

இப்போதெல்லாம் ஜாக்கிரதையாக இருக்கிறேன். எது எப்படியோ கடந்த 20 நாட்களில் நானும் இந்த டெக்சாஸ் பகுதி பருத்திவால் முயலும் நண்பர்கள் ஆகிவிட்டோம்.

டெக்ஸஸ் மாநிலத்தில் மொத்தம் ஐந்து வகையான காட்டன்டெயில் முயல்கள் இருக்கின்றன.

இந்த ஐந்து வகை காட்டன்டெயில் முயல்களில் ஜாக் ராபிட் (JACK RABBIT)என்னும் முயல்வகையின் காதுகள் மிகவும் நீளமாக இருக்கும்.

 அதன் நீளம் மற்றும் 125 மில்லி மீட்டர் வரை இருக்கும் என்கிறார்கள்.

 நாம் விருப்பம் போல இங்கு முயல்களை கொண்டு வந்து வீட்டில் வளர்க்க முடியாது

ஒரு முயல் குட்டி அல்லது அணில் குட்டியை நீங்கள் வீட்டில் வளர்க்க வேண்டும் என்றால் கூட உள்ளூரில் இருக்கும் வன விலங்குகள் காப்பகத்திற்கான அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

நாமாக எந்த வனவிலங்கையும் வீட்டில் கொண்டு வந்து வளர்க்க முடியாது.

இந்த முயல்கள் இனப்பெருக்க காலத்தில் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும். அந்த சமயங்களில் இப்படி பக்கத்தில் இருந்து பார்க்கமுடியாது. தனது குட்டிகளை காப்பாற்ற அது என்ன வேண்டுமானாலும் செய்யுமாம்.

உங்கள் வீட்டைச் சுற்றி முயல்கள் சுற்றி சுற்றி வருகிறது என்றால் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என்று அர்த்தமாம். இங்கும் அந்த நம்பிக்கைகள் நிறைய இருக்கின்றன. 

உங்கள் வீட்டையே ஒரு முயல் சுற்றி சுற்றி வருகிறது என்றால் உங்கள் வீட்டைக்ச் சுற்றி அதிகமாக குப்பை போட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தமாம். 

மூன்றாவது காரணம் அந்த முயலின் வீடு அதன் வளை அல்லது அதன் பொந்து உங்கள் வீட்டின் அருகில் இருக்கலாமாம். 

அல்லது உங்கள் தோட்டத்தில் அவை சாப்பிடுவதற்கு ஏற்ற சமாச்சாரங்கள், பூக்கள் பழங்கள் காய்கள் மற்றும் புற்கள் அதிகம் இருக்கும் என்று அர்த்தமாம்.

பருத்திவால் முயல்களுக்கு பிடித்தமான உணவு என்பவை துளிராக இருக்கும் பொருட்கள், தளிராக இருக்கும் இலைகள், மற்றும் சிறுசாக இருக்கும் செடிகள்.  விவசாய நிலங்கள் என்றால் பயிர்களையும் பதம் பார்க்கும்.

ஒரு பருத்திவால் முயலின் உடல் எடை 1.8 முதல் 4.4 பவுண்டு இருக்கும். அதன் மொத்த வயது நான்கு முதல் ஐந்து ஆண்டுகள்.

முயல் என்றால் அதற்கு காரட் பிடிக்கும் என்று நினைக்கிறோம் ஆனால் முயல் வளர்ப்பவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு ஒரு அரை கேரட் கொடுக்கலாம் என்கிறார்கள், அதற்கு மேல் தரக் கூடாது என்கிறார்கள்.

முயல்களில் சிலவற்றை ஆங்கிலத்தில் ஹேர் (HARE)என்கிறோம் சிலவற்றை ரேபிட்(RABBIT) என்கிறோம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு ?

‘ஹேர்’ என்பவை அளவில் பெரியதாக இருக்கும் காதுகள் நீளமாக இருக்கும்.  பின்னங்கால்களும் நீளமாக இருக்கும். இவை  நிலப் பரப்பின் மீது கூடுகளை அமைத்து அதில் வசிக்கும்.

ஆனால் ரேபிட் என்பவை அளவில் சிறியதாக இருக்கும். ஒரு சிறு குழுவாக அல்லது கூட்டமாக வசிக்கும். தரைக்கு கீழே உள்ள பொந்துகளில் அல்லது வளைகளில் வசிக்கும்.

அமெரிக்காவில் இறைச்சிக்காக நியூசிலாந்து வெள்ளை (NEWZEALAND WHITE) என்னும் முயல் ரகம் வளர்கிறார்கள். விற்பனையும் அதிகம் ஆகின்றது. 

அதுபோல ஜெயண்ட் சின்சில்லா (GIANT CHINCHILLA) என்ற முயல் இனத்தையும் இறைச்சிக்காகவும் அதன் ரோமத்திற்காகவும் பயன்படுத்துகிறார்கள்.

THE RABBIT RUNS FASTER THAN FOX BECAUSE THE RABBIT IS RUNNING FOR HIS LIFE, WHILE THE FOX IS RUNNING FOR ITS DINNER.

 

பூமி ஞானசூரியன்

gsbahavan@gmail.com


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...