Thursday, July 25, 2024

ARKANSAS HOTSPRINGS அர்க்கன்சாஸ் போய் வெந்நீர் ஊற்று பார்க்கலாமா?

 

அர்க்கன்சாஸ் போய்

வெந்நீர் ஊற்று

பார்க்கலாமா

ARKANSAS HOTSPRINGS

MY HANDS IN HOT SPRINGS

கடிதம்: 24

அன்பின் இனிய நண்பர்களுக்கு வணக்கம் !

நீங்கள் சவுக்கியமா ? எப்படி இருக்கிறீர்கள் ? உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு என் அன்பு விசாரிப்புகள்.

OLD MILL LAKE

சமீபத்தில் நான் அமெரிக்காவின் இயற்கை மாநிலம்(STATE OF NATURE), என்று சொல்லப்படும்  அர்க்கன்சாஸ் மாநிலம் (ARKANSAS STATE) போயிருந்தேன். அங்கு நான் பார்த்த  வெந்நீர் ஊற்றுக்கள் (HOT SPRINGS), கிரீசன் ஏரி(GREESON LAKE), ஓல்டு மில் ஏரி(OLD MILL LAKE), ஆகியவை எல்லாம் உயிரைப் பணயம் வைத்து சேகரித்த புதிய, அரிய, சுவையான செய்திகளை உங்களுக்கு இந்தக் கடிதத்தில் சொல்லுகிறேன். 

நிச்சயமாக இந்தக் கடிதம் உங்களுக்கு பிடித்திருக்கும் சுவாரஸ்யமாக ஆக இருக்கும். படியுங்கள்.

அர்க்கன்சாஸ்  அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலம். 

வடக்கில் மிசவுரி(MISSOURI), கிழக்கில் டென்னிசி(TENNESSEE)  மிசிசிப்பி(MISSISSIPPI), தெற்கில் லூசியானா(LOUISIANA), மேற்கில் ஒக்கலஹோமா(OKLAHOMA), தென்மேற்கு திசையில் டெக்சஸ்(TEXAS) நடுவில் இருப்பது அரக்கன்சாஸ் மாநிலம்.

NIMALAN, MOUSUMI,KALYANI & GSBAHAVAN
IN OLD MILL LAKE

ஒரு சனிக்கிழமையன்று, திட்டமிட்டபடி டெக்சாஸின் ஆலன் நகரில் இருந்து புறப்பட்டோம். காலை சரியாக 10.59 மணி. எங்கள் டொயோட்டா சீயன்னா(TOYOTO SIENNA), கார் புறப்பட்டது. என் மகன் ராஜசூரியன் வழக்கம்போல் காரை ஓட்டினான்.

நானும் என் மனைவியும் காரின் நடுவில், எங்களுக்கு பின்னால் இருந்த சீட்டில் என் பேரன்கள் நிமலன் நிகிதன். முன் இருக்கைகளில் என் மகனும் மருமகளும். 

எங்கள் கார் சராசரியாக நூறு கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.

அர்க்கன்சாஸ் என்றால் முக்கியமாக இரண்டு மலைப்பகுதிகளைச் சொல்லாமல் இருக்க முடியாது. அவற்றில் ஒன்று ஓசார்க்(OZARK), இன்னொன்று அவ்ஷிதா(OUCHITA). இதில் தாழ்வானப் பகுதிகள் என்றால் மிசிசிப்பி ஆற்றின் ஆற்றுப்படுகை(RIVER BASIN). 

நாங்கள் டெக்சாஸ் மாநிலம் தாண்டி ஒக்கலஹோமா தாண்டி அர்க்கன்சாஸ் போக வேண்டும். அதுவும் நாங்கள் போக வேண்டிய பகுதி அர்க்கன்சாஸ் மாநிலத்தின் நடுப்பகுதி.

இங்கு ஆறு முக்கியமான இடங்களில் வெந்நீர்ஊற்றுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ஹாட்ஸ்பிரிங்ஸ் என்னும் நகரில் இருக்கும் வெந்நீர்ஊற்றுக்கள். இங்கு  இதற்கான  ஒரு தேசியப் பூங்கா (HOTSPRINGS NATIONAL PARK) ஒன்றும் உள்ளது. 

ஹாட் ஸ்பிரிங்ஸ் என்றால் வெந்நீர் ஊற்று என்று பொருள். ஆனால் இந்த ஊரின் பெயரே ஹாட்ஸ்பிரிங்ஸ் என்பதுதான். பழைய பெயர் ஏதாவது ஒன்று இருக்கும். 

நாங்கள் டெக்சாஸ் மாநிலத்தைத் தாண்டவே வெகுநேரம் எடுத்துக் கொண்டோம். வழி நெடுக பச்சைப்பசேலென புல்வெளிகள் எல்லாம் இயற்கையே ஆசிர்வதித்த புல்வெளிகள்(NATURE BLESSED GRASSLANDS).

Grasslands of Arkansas

வழி நெடுக ‘ரான்ச்’ என்னும் பெரும் கால் நடைப்பண்ணைகள்(RANCH CATTLE FARM), அதில்  சுற்றிலும் மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட வேலிகள், நீண்டும் அகன்றும் இருந்த புல்வெளிகள், ஊடாக ஓக், பைன், மேப்பிள், ஒன்றிரண்டு வீப்பிங்க் வில்லோ, மற்றும் கிரேப் மிர்ட்டில் மரங்கள், அழகான ஒரு பண்ணை வீடு, எதிரில் டிராக்டர் போன்ற கருவிகள், அவற்றின் ஊடாக மேய்ச்சலில் கண்ணாயிருக்கும்  மோட்டாவான கருப்பு, காவி நிறங்களில் குட்டை கொம்பு மாடுகள், சில இடங்களில் குறைவாக கருப்பு வெள்ளை  ஆடுகள், ஒற்றையாகத் திமிருடன் திரியும் குதிரைகள், மக்காச்சோளம் அறுவடை செய்த அடிக்கட்டைகளுடன் கூடிய வயல்கள், ஊடாக  அறுவடை செய்த மக்காச்சோள தட்டைகளை சுருட்டிவைத்த பேரல்கள் எல்லாம் காரில் போகும்போதே பார்க்க முடிந்தது.

BALED CORN STALKS

இப்போதெல்லாம் நம்ம ஊர்களில் கூட இப்படி எந்திரம் மூலமாக நெல்லை அறுவடை செய்து வைக்கோலை மட்டும் சுருட்டி வைத்து மாடுகளுக்கு  தீவனமாக, விற்பனை செய்கிறார்கள்.

ஆனால், பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் நெல் கோதுமை அறுவடை செய்த பின் வைக்கோலை எரித்து வான மண்டலத்தை புகைமண்டலமாக்கி விடுகிறார்கள். பஞ்சாப் மாடுகள் நெல் வைக்கோல் சாப்பிடவில்லை என்றால் கூட கோதுமை வைக்கோல் சாப்பிடலாமே ?

இப்போது நாங்கள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் பயணம் செய்திருப்போம் அந்த சமயம் என் மகன் அப்பா அப்பாரெட்ரிவர் (RED RIVER) மேல் போய்க்கொண்டிருக்கிறோம்..” என்றான்.  

ரெட்ரிவர் ரேன்ச் பண்ணைகளோடு தொடர்புடைய ஆறு. ஏற்கனவே நாம் பார்த்த ஆறு. பழகிய ஆறு. சீஷோம் கால்நடை வழித்தடத்தில் உள்ள ஆறு. 

போட்டோ அல்லது வீடியோ எடுப்பேன் என்பதற்காக அவசரப்படுத்தினான் என் மகன். அவசரத்தில் நான் செல்போனைத் தயார் செய்வதற்குள் எங்கள் கார் ஆற்றைத் தாண்டி அறுநூறு கெஜம் தாண்டியிருந்தது.

நம்ம ஊரைப் போல் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் காரை ஒதுக்கி நிறுத்திவிட்டு நிம்மதியாய் எதையும் செய்ய முடியாது.

“திரும்பவும் போகட்டுமா” என்று கேட்டான் என் மகன் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம் மறுபடியும் ஒரு பத்து கிலோமீட்டர் கிரிவலம் வர வேண்டும்.

அதற்குள் நாங்கள் ஒக்கலஹாமோ மாநிலத்தில் நுழைந்து விட்டோம். ‘ரெட்ரிவர்’ எனும் சிவப்பாறு டெக்சாஸ் மற்றும் ஒக்கலஹோமொமாநிலம் இரண்டையும்  பிரிக்குமாறு குறுக்காக ஓடுகிறது. 

அங்கு  சாக்டாவ்  கேஸ்பில்லிங் ஸ்டேஷன் (CHOCTAW GAS FILLING STATION)வந்தது. அத்துடன் ஒரு ட்ராவல் பிளாசாவும் (TRAVEL PLAZA)இருந்தது. டிராவல் பிளாசா என்றால் சாலை ஓரக் கடை (ROAD-SIDE SHOP). எங்கள் கார் அதற்கு முன்னால் போய் நின்றது.

CHOCTAW GAS STATION

அமெரிக்காவில் உள்ள பெட்ரோல் பங்க்கில் எல்லாவற்றிம் ஒரு கடையும் இருக்கும்  அங்கு டீ காபி மற்றும் குடிக்க சாப்பிட அனைத்தும் கிடைக்கும். அத்துடன் அங்கு கழிப்பிட வசதியும் இருக்கும்.

அந்த கேஸ் பில்லிங் ஸ்டேஷனுக்கு போனோம். காருக்கும் எங்களுக்கும் பெட்ரோல் போட்டுக்கொண்டு புறப்பட்டோம். 

சாக்டாவ், ன்னு ஏன் இந்த பெட் ரோல் பங்குக்கு பெயர் வச்சிருக்காங்க தெரியுமா ? “என்றான் ராஜு. அதற்குப் பிறகு சொன்னான், “அது ஒரு அமெரிக்க பழங்குடியின் பெயர்”

CHOCTAW NATIVE AMERICAN

அதுமட்டுமல்ல நாகரீகமடைந்து பொதுவான குடிமக்களுக்கு சமமாக வளர்ந்த ஐந்து பழங்குடிகளில் ஒன்று இந்த சாக்டாவ் அமெரிக்க ஆதி குடிகள்(AMERICAN NATIVE TRIBE).

ஒக்கலஹோமா எல்லையில் ஒரு பத்து நிமிடம் பயணம் செய்திருப்போம். அப்போது நடக்கவிருந்த ஒரு பெரிய விபத்திலிருந்து மயிர் இழையில் நாங்கள் உயிர் தப்பினோம். அது எப்படி என்று சொல்லுகிறேன்.

எங்கள் காருக்கு  எதிராக ஏகப்பட்ட போட்டுகளை (BOATS) ஏற்றிக்கோண்டு ஒரு கார் வந்தது. அது  ஒரு பெரிய கார். அந்தக் கார் எங்கள் காருக்கு அருகில் வந்தது. வந்த காரின் மேலிருந்த ஒரு படகு மட்டும் பொத்’தென்று சாலையில் விழுந்தது., விழுந்தப் படகு  அந்தக் காருடன் சேர்ந்து எங்கள் காருக்கு எதிராக வர, “காருக்குள் நாங்கள் எல்லோரும் அலறி விட்டோம். அந்தக் காரும் படகும் எங்கள் காருடன் மோதிவிட்டது என்றே நினைத்து விட்டோம். ஒரே ஒரு வினாடி தான் கண்ணிமைக்கும் நேரத்தில் அது நடந்து முடிந்து விட்டது. என் மகன் ராஜூ மிக சாதுரியமாக மின்னல் வேகத்தில் காரின் ஸ்டீயரிங்க் வீலை சாமர்த்தியமாக திருப்பியதனால், அந்தக் காரின் மீதும் மோதவில்லை, வலது பக்கத்தில் இருந்த பள்ளத்திலும் உருளவில்லை. நாங்கள் எல்லோரும் புதிதாக பத்திரமாக இழுத்து மூச்சு விட்டோம்.

அமெரிக்காவில்  நூற்றுக்கு 99 பேர் வாரக்கடைசி (WEEK ENDS) என்றால் காரை எடுத்துக் கொண்டு குழந்தை குட்டிகளோடு எங்காவது ஊர்சுற்றப் (FAMILY PICNIC)போவார்கள். 

அப்படி போகும்போது அங்கு  ஓட்டுவதற்கு உரிய சைக்கிள், போட், என்று காரின் மீது எல்லாவற்றையும் அடுக்கிக்கொண்டு போவார்கள். பெரியபோட் என்றால்  காருக்கு பின்னால் கட்டி  இழுத்துக் கொண்டு போவார்கள். காருக்கு மேலேயும் அடுக்கி கொண்டு குழந்தைக் குட்டியோடு போவார்கள். 

அப்படி வந்ததுதான் அந்த கார்.

அந்தக்கார் வந்து மோதியிருந்தால் என்ன ஆகும் நினைத்துப் பாருங்கள். எங்கள் காரின் பாதிக்கு மேற்பட்ட பகுதியை பாதியாக துண்டித்து எடுத்துக் கொண்டு போய் இருக்கும். அந்தக் காரும் சிதைந்து போயிருக்கும். அதில் எத்தனை பேர் இருந்தார்களோ ?

உள்ளே இருக்கும் எங்கள் கதியும்  என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

அடுத்த அரை மணி நேரத்திற்கு அது பற்றிய பேசிக் கொண்டு வந்தோம் என் மகன் சிறுவனாக இருக்கும்போது அவனுக்கு  கார் பொம்மைகள் ரொம்பப் பிடிக்கும்.

அதற்குப் பின்னால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கார் ஓட்டும் டிவி கேம் விளையாடுவான். அந்த சமயம் நான் கூட அவனை கருக்திக் கொட்டி இருக்கிறேன்.படிக்கச் சொன்னா அதை விட்டுட்டு மத்ததெல்லாம் செய்வான்’ என்பேன். 

MY SON RAJASOORIAN

இப்போது மாலை 3 மணி நாங்கள் அர்க்கன்ஹாஸ் மாநில எல்லையை தொட்டுவிட்டோம். சாலையின் இரண்டு பக்கமும், நிறைய உயர உயரமான மரங்கள். 

நிறைய கிறிஸ்மஸ் மரங்கள் பைன் மரங்கள், ஒக் மரங்கள், ஊடாக மேப்பிள் மரங்கள், அதன் பிறகு அதன் பிறகு அறிமுகம் இல்லாத அமெரிக்க மரங்கள் எங்கோ ஒரு வீப்பிங்வில்லோ தன் கூந்தலை தொங்கவிட்டபடி நின்று கொண்டிருந்தது.

இப்போது தொலைவில் கீழே அடுக்கடுக்காக மலைகளின் மீது பச்சை ஐஸ்கிரீமை நட்டு வைத்த மாதிரி பைன் மரங்கள்.

மரம் இல்லாத இடங்களில் எல்லாம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பச்சை கம்பளப் புற்கள்.

என் மகன் மருமகள் இருவருக்குமே இது மாதிரி புதிய புதிய இடங்களை சுற்றி பார்க்க பிடிக்கும். என் மருமகள் செல்லில் கூகுள் மேப்பை பார்த்தபடி என் மகனுக்கு வழி காட்டுவார். 

எனக்காக என் மனைவிக்காக ஏற்பாடு செய்த சுற்றுலா இது. ஏற்பட இருந்த விபத்தினை மறந்து பயணம் செய்து கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்கும் பின்னால் என் பேரன்கள் பெரியவன் விமலன், சிறியவன் நிகிதன், ஆகியோர் உட்கார்ந்திருந்தார்கள். 

MY DAUGHTER IN LAW & GRANDSONS

போகும் இடங்களில் எல்லாம் ஊர்களின் பெயர் பலகைகள் தென்படும். எல்லா ஊர்களின் பெயர்களும் மனதில் ஒட்டாது சிலது மட்டும் பசை மாதிரி நினைவில் ஒட்டிக் கொள்ளும். அப்படிப் பார்த்த ஒரு ஊரின் பெயர்மைஹோப்” என்பது.எனது நம்பிக்கை’ எனக்கு பிடித்தமான பெயர். 

ஆர்க்கன்சாஸ்ஹாட்ஸ்பிரிங்ஸ்’ போகும் முன் நாங்கள் கடந்து போனவை என் கண்ணில் புலப்பட்டவை, மூன்று அவற்றில் ஒன்று கிரீசன் ஏரி, இரண்டாவது சலைன் ரிவர் என்றவர் மூன்றாவது லிட்டில் மிஸவுரி ஆறு நான்காவது ஒரு பெரிய ஊர் அதன் பெயர் வில்லன் என்பது. 

கிரீசன் ஏரி மற்றும் லிட்டில்மிசவுரி ஆறு பற்றியும் தனியாக ஒரு கடிதத்தில் பார்க்கலாம். காரணம் கிரீசன் ஏரி 614 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட செயற்கையான நீர் தேக்கம் இதன் நீளம் மட்டும் 10 கிலோமீட்டர் இதனை லிட்டில்மிசவுரி ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது. 

GREESON LAKE

இந்த லிட்டில் மிஸவுரி ஆறு பற்றியும் தனியாக ஒரு கடிதத்தில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். காரணம் இந்த ஆற்றின் நீளம் 237 கி.மீ. இது பிறக்கும் இடம் ஔஷிதா மலை தொடர். 

இந்த லிட்டில் மிசவுரி ஆறு பிறக்கும் இடத்தின் பெயர்மெனா’ (MENA) என்னும் இடம்.  இது இங்கு உள்ள அவுஷிதா மலைப்பகுதியில் தான் இந்த லிட்டில் மிசவுரி ஆறு பிறக்கிறது. 

இந்த ஊரும் அர்கன்சாஸ் போகும் வழியில் தான் இருக்கிறது இந்தமேனா’ என்ற ஊரில் இருக்கும் ஒரு பெட்ரோல் நிலையத்திற்கும் நாங்கள் போய் வந்தோம். நான் கூட இந்த ஊரின் பெயரை எழுத்துக்கூட்டிமீனா’ என்று வாசித்தேன் என் மகன் என்னை திருத்தி நான் மீனா இல்லப்பா மேனா என்றான்.

இன்னும் பாக்கியாய் இருப்பது சலைன்கிரீக் (SALINE CREEK) இது ஔஷிதா ஆற்றின் துணை ஆறு. இதனை சலைங்கிரீக் என்றும் சொல்லுகிறார்கள். மிக நீளமான ஆறு. 

இது ஓடும் தூரம் 325 கிலோமீட்டர். சளையின் ரிவர் என்றால் உப்பு ஆறு என்று பெயர். ஆனால் இந்த ஆற்று நீர் நல்ல தண்ணீர் ஆறு தான். பெயரில்தான் ஒப்பு இருக்கிறது தண்ணீரில் அல்ல.

ஆலன் நகரில் இருந்து சுமார் 5 மணி நேரத்தில் அர்க்கன்சாஸ் ஹாட் ஸ்பிரிங்ஸ் போய் சேர முடியும். ஆனால் பல இடங்களில் இறங்கி ஏறி டீகாப்பி, பர்கர், பீசா, இதெல்லாம் சாப்பிட்டு, கூடுதலாக சில இடங்களைப் பார்ஹ்தல் இப்படியாக நாங்கள் மாலை சுமார் ஆறு மணி வாக்கில் போய் சேர்ந்தோம். 

எங்கள் பயணம் மாதிரியே இந்த கடிதமும் கொஞ்சம் நீளமாகிவிட்டது. நிறைய செய்திகள் சுருக்கியும், சொல்லலாம் தான். ஆனால் சிலவற்றை அப்படியும் சொல்ல முடியாது. 

என்னுடைய கடிதங்களை பற்றிய பொதுவான உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்

நீங்கள் எனக்கு நிறைய பேர் கட்டைவிரல் உயர்த்தி சின்னமிட்டு என்னை உற்சாகப்படுத்துகிறார்கள் 

உங்கள் கருத்துக்களை ஒன்று இரண்டு வாக்கியங்களில் எழுதிச் சொல்லுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். 

உங்கள் கருத்துக்கள் மேலும் எனது கடிதங்களை செரிவானதாக, சுவாரசியமிக்கதாக, எழுத உதவியாக இருக்கும் உங்களுக்கு நன்றி வணக்கம் மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.

GNANASURIA BAHAVAN D

AUTHOR CUM COACH

gsbahavan@gmail.com

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...