Friday, June 28, 2024

TRUCKING BUSINESS IN AMERICA - அமெரிக்காவில் டிரக்கிங் பிசினஸ்

 

GLIMPSES OF AMERICA

அமெரிக்காவின் அழகான அம்சங்கள்.

கடித எண்:3 


அமெரிக்காவில் டிரக்கிங் பிசினஸ்

TRUCKING BUSINESS IN AMERICA 

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் !

அமெரிக்கா வந்த பின்னால் நான் எழுதும் மூன்றாவது கடிதம் இது. முக்கியமாக நான் இங்கு தங்கி இருக்கும் டெக்சஸ் மாநிலம் கவ்பாய் கலாச்சாரம், முளைவிட்ட பகுதி, காய் கனி என வளர்ந்த பகுதி. இனி அது பற்றிய செய்திகள் அதிகம் வரும். 

தமிழுக்கு இது புது செய்திகளாக அமையும், அதற்கான ஆய்வுகளை நான் மேற்கொண்டுள்ளேன். உங்களுக்கு அரிய புதிய தகவல்களாகத் தருவேன் என்ற உறுதியை அளிக்கிறேன். 

----------------------

ஒரு தட்டு பாசுமதி அரிசி சாதத்தை நானும் ராஜாவும் சாப்பிட்டு முடித்துவிட்டு, இரண்டு அட்டைக் கோப்பைகளில் தந்த  தேனீர் மற்றும்  நிகிதன் பாதியாய் குடித்துவிட்டு வைத்திருந்த மேங்கோஷேக்’ஐயும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.

இப்போது தாபாவை விட்டு வெளியே வந்தோம்.  அங்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. ஏகப்பட்ட  ட்ரக்குகள் அங்கு நின்று கொண்டிருந்தன. எல்லாம் சர்தார்ஜிக்களுக்கு சொந்தமான டிரக்குகள்.

அவற்றிலிருந்து   ஐந்தாறு சர்தார்ஜிகள் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். அது மதிய நேரம்.

இன்னும்கூட வெய்யில் கடுமையாக இருந்தது. அனல் காற்று  நெருப்பை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. காரில் ஏறி அமர்ந்தோம். தாபாவில் இழந்த  நேரத்தை ஈடுகட்ட என் மகன் ராஜு, டொயோடோ "சீயனா"வை காரை வேகமாக ஓட்டினான். 

ஆனால் என் மனம் மட்டும் இன்னும் தாபாவைத் தாண்டி வரவில்லை. 

தாபா என்றால் ரோடு டீக்கடை என்று அர்த்தம். அவை வெறும் டீக்கடைகள் மட்டுமல்ல, அவை பஞ்சாபி மக்களின் கலாச்சார அடையாளம் என்பது தான் உண்மை. 

நான் எப்போது “தாபா” போனாலும் என் விருப்பம்   “ச்சாயா” மட்டும்தான். ஜாக்கிரதையாக குடிக்கவில்லை என்றால் நுனி நாக்கு கொப்பளித்து அட்சரம் வந்துவிடும். அட்சரம் என்றால் கொப்புளங்கள் ! அது சரியாக ஒரு வாரம் பிடிக்கும்.

அமெரிக்காவில் எல்லா மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 44 தாபாக்கள் இருக்கின்றனவாம்.

டிரக்கு ஓட்டுநர்கள் மற்றும் இந்த தொழில் தொடர்பானவர்கள் எத்தனை பேர் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நமக்கு மயக்கமே வந்துவிடும். ஒருவர் அல்ல இருவர் அல்ல ! முப்பதாயிரம் பேர் என்கிறது ஒரு புள்ளி விவரம். 

அமெரிக்காவில் வாழும் பஞ்சாபிகள் மொத்தம் மூன்று லட்சத்து 20 ஆயிரம் பேர். இவர்கள் அதிகமாக வசிக்கும் மாநிலம் கலிபோர்னியா. அதிகம் வசிக்கும் நகரம் யுபாசிட்டி. அங்கு  20 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். 

பஞ்சாபிகள், அமெரிக்காவில் 1960 ம் ஆண்டிலிருந்து டிரக்குகள் வைத்து ஓட்டுகிறார்கள். மொத்தமாக டிரக்குகளுக்கான நிறுவனங்களைத் தொடங்கி  பிசினஸ் செய்து வருகிறார்கள். 

கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் இந்த டிரக்குகள் பிசினஸ் பலமடங்கு வளர்ந்துள்ளது.

இங்கு நார்த் அமெரிக்கன் பஞ்சாபி ட்ரக்கிங்க் அசோசியேஷன் (NORTH AMERICAN TRUCKING ASSOCIATION) செயல்பட்டு வருகிறது. 

கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒடும் டிரக்குகளில் 40 % பஞ்சாபிகளுக்கு சொந்தமானவை.

அமெரிக்காவில் ஓடும் டிரக்குகளில் 20 சதம் பஞ்சாபிகளுக்கு சொந்தமானவை என்று சொல்லுகிறது ஒரு புள்ளிவிவரம்.

1980 களுக்குப் பிறகு அமெரிக்காவில் டிரக்குகள் தேவை அதிகரித்தது. அதே சமயம் டிரக் ஓட்டுவதில் இந்தியாவில் பல ஆண்டுகள் அனுபவம் இருந்தது பஞ்சபிகளுக்குத்தான். இந்த இடைவெளியை பஞ்சாபிகள் சரியாக பயன்படுத்தி கொண்டார்கள். 

அமெரிக்காவில் தமிழ்நாட்டுக்காரர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், என்று பார்க்கலாம். 

அமெரிக்காவில் வசிக்கும் மொத்தத் தமிழர்கள் 3 லட்சத்து 41 ஆயிரத்து 396 பேர்.

இவர்களில் பெரும்பாலானோர் மென்பொருள் பொறியாளர்கள், மருத்துவர்கள், அறிவியல் வல்லுநர்கள், பேரசிரியர்கள், மற்றும் நிதி ஆலோசகர்கள்.

ஆமாம் ஒரு ட்ரக் டிரைவர் மாதத்தில்  எவ்வளவு சம்பாதிப்பார் ? என் மகனிடம் கேட்டேன்.

“ஒரு டிரக் டிரைவர் இங்கு ஆண்டுக்கு 59000 டாலர் சம்பாதிப்பார்..கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் 83000 டாலர் வரை கூட சம்பாதிக்கிறார்கள்.. ”

டிரக்குகள் பற்றிய சில சுவாரஸ்யமான செய்திகளைச் சொல்லுகிறேன்.

முதன் முதலாக ஒரு ஜெர்மானியர்தான் ஒரு டிரக்கை செய்தார். அவர் கூட எப்படிச் செய்தார் தெரியுமா ? ஒரு குதிரை வண்டியில் நான்கு குதிரைசக்தி கொண்ட இருசிலிண்டர் எஞ்சினைப் பொருத்தினார்.

அவ்வளவுதான் டிரக் தயாராகிவிட்டது. இதனைக் முதன்முதலாகக் கண்டுபிடித்தது, கோட்லிப் டையம்லர் (GOTTLIEP DAIMLER) என்பவர். 1896 ம் ஆண்டு கண்டுபிடித்தார். 

அதன்பிறகு முதன் முதலாக  டிரக்குகளை தயார் செய்ய ஆரம்பித்தது ஹென்றிஃபோர்டு (HENRY FORD). அவர் தனது டிரக்குகளுக்கு வைத்த பெயர் பிக்அப் (PICKUP)

டிரக்குகளைப் பற்றிப் பேசும்போது நம்ம ஊர் டிவிஎஸ் (T V S)பற்றி ஏ பி டி (A B T)பற்றி பேசாமல் இருக்கமுடியாது.

டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் தொடங்கியது 1955 ம் ஆண்டு, ஆனால் அது தனிக் கம்பெனி ஆனது 2004 ம் ஆண்டுதான். ஏபிடி பார்சல் சர்வீஸ் 1921 ம் ஆண்டு தொடங்கியது.

இப்போது  ரெட்ரிவர் வந்துவிட்டது.

மீண்டும் அடுத்த கடிதத்தில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

பூமி ஞான சூரியன்

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...