GLIMPSES OF AMERICA
அமெரிக்காவின் அழகான அம்சங்கள்.
கடித எண்:3
அமெரிக்காவில்
ஒரு பஞ்சாபி தாபா
PUNJABI DHABA IN AMERICA
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்
இன்ரு நாங்கள் “ரெட் ரிவர்” பார்ப்பதற்காக வேக வேகமாக காரில் போய்க் கொண்டிருந்தோம்.
எனக்கு சிவியர் கோல்டு. ஜலதோஷம். தலைபாரம். தொண்டையில் ஒரு மாதிரியான கரகரப்பு.
இன்று “ரெட்ரிவர்” போவதை எந்த காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக்கூடாது என்று நான் எனது மகன் ராஜாவுடன் கிளம்பிவிட்டேன்.
என் மனைவிக்கு என்னை இன்று வெளியில் பயணம் அனுப்புவதில் உடன்பாடு இல்லை தான். “சொன்னால் கேட்க மாட்டேன்” என்று தெரியும். அதனால் அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு "டோலப்பர்” மாத்திரை மட்டும் கொடுத்தாள்.
எனக்கு எப்போதும் ஜலதோஷம் தான் பிரச்சனை தரும். அதனால் என் கையில் ஒரு ஸ்ட்டிரிப் டோலப்பர் கொடுத்திருந்தாள் என் மனைவி.
நாங்கள் இதுவரை ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆலன் நகரிலிருந்து ரெட்ரிவர் நோக்கி காரில் பயணம் செய்திருப்போம்.
ரெட்ரிவர் போக இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும், என்று சொன்னான் என் மகன்.
"அப்பா அப்பா..இங்க பாருங்கப்பா.." ஏதோ முக்கியமான சமாச்சாரம் இருக்கு என்று அர்த்தம்.
உட்னே கார் ஜன்னல் வழியாக வெளியில் பார்த்தேன்.
அங்கு ஒரு பஞ்சாபி தாபா !
அந்த போர்டு. அதன் பின்னால் அந்த தாபா. எதிரில் ஏகப்பட்ட கார்கள் ! எனக்கு ஆச்சர்யம் !
"போய் பார்க்கலாமா? " என்றான் ராஜா. "சரி" என்றேன்.
அதற்குள் எங்கள் கார் ஒரு கிலோ மீட்டர் தாண்டி சென்று விட்டது. அதனை மடக்கிப்பிடித்துக் கொண்டு வந்து காரை தாபா எதிரில் நிறுத்தினான் ராஜா.
காரை விட்டு இறங்க, வெளியே வெய்யில் நெருப்பாய்க் கொளுத்தியது. வெளிச்சம் கண்களை மிரட்டியது. அவசரமா வெளிப்புறத்தில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம்.
பஞ்சாபி தாபா போனால் அங்கு அவர்கள் கொதிக்க கொதிக்க தரும் தேநீர் ரொம்ப பிடிக்கும் எனக்கு.
உள்ளே நுழைந்ததும் ஐந்தாறு பெஞ்சுகளில் நான்கைந்து பஞ்சாபிகள் சப்பணமிட்டு உட்கார்ந்து ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
தாபாவின் உட்புறமாக நீல நீளமான டேபிள்களின் பெரும்பாலும் பஞ்சாபிகள் தான். ஆண்களும் பெண்களும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.
நாங்கள் அங்கு சாப்பிடுவதற்காக போகவில்லை. சும்மாதான், வேடிக்கை பார்க்க தான் போனோம்.
ஏதாச்சும் சாப்பிடலாமே என்றான் என் மகன் அப்போது நேரம் மதியம் 12 மணி 30 மணி ஆனது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று யோசித்தோம்.
இறங்கியதுதான் இறங்கினோம் மதிய உணவு முடித்து விடலாமே என்றேன் நான். சரி என்றான் என்மகன்.
இரண்டு பிளேட் ரைஸ். இரண்டு கப் டால், ஒரு மேங்கோ ஷேக் (என் பேரனுக்கு) ஆர்டர் செய்து விட்டு போய் உட்கார்ந்தோம்.
கால் மணி நேரமாச்சு அரை மணி நேரமாச்சு முக்கால் மணி நேரமாச்சு இன்னும் எதுவும் வரவில்லை.
ஒரு பக்கம் 75 இன்ச் டிவி ஓடிக்கொண்டிருந்தது அதில் நிறைய லேட்டஸ்ட் பஞ்சாபி படங்களின் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது.
எல்லாமே பங்கரா இசை பாடல்கள் தான் ஆனால் அதில் நடித்த இளைய தலைமுறை பஞ்சாபி நடிகர்கள் ரேப் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு “ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதில் தான் சுகம் சுகம்” பாடலுக்கு எம்ஜிஆர் எல்.விஜயலட்சுமி பாடல் நடனம் நினைவுக்கு வந்தது.
ஒரு மணி நேரமாச்சி..இன்னுமும் கூட எதுவும் வரவில்லை
எனக்கு காளமேகப்புலவர் பாடியப் பாட்டு, ஞாபகத்திற்கு வந்தது.
"கத்தும் கடல் சூழ் நாகை
காத்தான் தன் சத்திரத்தில்
குத்தி உலையிலிட ஊரடங்கும்
ஓரகப்பை அன்னம் இலையிலிட
வெள்ளி எழும்"
ஒரு நாள் காளமேகப்புலவர் நாகப்பட்டினத்தில் ஒரு சத்திரத்துக்கு சாப்பிட போனார். அங்கு இதுமாதிரிதான் நெடுநேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. வந்தது கோபம். பாட்டும் வந்தது. அந்தப்பாட்டுதான், இந்தப்பாட்டு.
இப்போது ஒரு வழியா வந்தது இரண்டு பிளேட்டில் பாஸ்மதி அரிசி சாதம் மற்றும் 2 குவளை டால் மற்றும் மேங்கோ ஷேக்.
காளமேகம் அவர்களை அப்படியே விட்டுவிட்டு நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம்.
இதன் தொடர்ச்சியை அடுத்தக் கடிதத்தில் பார்ப்போம்.
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment