Saturday, June 22, 2024

GLIMPSES OF AMERICA -- அமெரிக்க பயணம் கடிதங்கள் - எண் : 1


அமெரிக்காவின் 

அழகான 

அம்சங்கள்

கடிதம் எண் : 1

ஜூன், 21, 2024

பூமி ஞானசூரியன்

21.06.2024

கடிதஎண்: 1


(வாய்ப்பு சுதந்திரம் சக்தி மூன்றின் கலவைதான் அமெரிக்கா – ரால்ஃப் வால்டோ எமர்சன்)

“America Means Opportunity, Freedom And Power” - Ralph Waldo Emerson

அன்பு  நண்பர்களுக்கு வணக்கம்,

நீண்ட  நாட்களாய் நீங்கள் என்னை கேட்டுக் கொண்டிருக்கிர்கள்,  நான் வெளியூர் போகும்போதெல்லாம் அந்த ஊர் பற்றி, அந்த மக்கள் பற்றி, அந்த பகுதியின் சிறப்புபற்றி எழுதுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். அதிர்ஷ்டவசமாய் நான் அமெரிக்காவில் டெல்லாஸ் மாநிலத்திற்கு வந்துள்ளேன்.  

அமெரிக்கா வந்த பின்னர் நான் உனக்கு எழுதும் முதல் கடிதம்.

நீ எப்படி இருக்கிறீர்கள் ? சவுக்கியமாக இருக்கிறீர்கள் ?

நான் அமெரிக்கா சென்றிருப்பது உங்களுக்கு தெரியும். நான் இங்கு 63 நாட்கள் தங்கி உங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு செல்ல இருக்கிறேன்.

ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், தேசியப்பூக்கள், அமெரிக்க கலாச்சார விழுதாக விளங்கும் கவ்பாய் கலாச்சாரம் ஆகியவை எனது கடிதத்தின் கருப்பொருளாக இருக்கும்.

இங்கு எனக்குக் கிடைக்கும் அனுபவங்களை தொகுத்துச் சொல்லுவேன் .

சிறப்பு செய்திகளைச் சொல்லுவேன்.

அரிதான செய்திகளைச் சொல்லுவேன்.

வித்தியாசமான செய்திகளைச் சொல்லுவேன்,

நாம் அறிந்திராத செய்திகள் அனைத்தையும் இயன்றவரை உங்களுக்கு தர உள்ளேன்.

இன்று இந்தக்கடிதத்தில், எப்படி இந்தப் பயணத்தைத் திட்டமிட்டோம். இந்தப் பயணம் எப்படி தொடங்கியது ? என்பதுபற்றிச் சொல்லுகிறேன்.

19.0624 அன்று மாலை 3.30 மணிக்கு நான் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஆலன் என்ற பகுதியைச் சென்றடைந்தேன்.

நமக்கு ராத்திரி என்றால் அவர்களுக்கு காலை.

இனி இங்குதான் எனக்கு ஜாகை. நான் 63 நாட்கள் தங்கி இருந்து ஊர் சுற்றப்போகிறேன்.

லுஃப்தான்சா என்ற ஜெர்மன் நாட்டு விமானத்தின் மூலம் இங்கு வந்து இறங்கினோம். லுஃப்தான்சா ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனம்.

எங்கள் விமானப்பயணம் மகிழ்ச்சியாக இருந்தது, நானும் எனது துணைவியாரும் பிரச்சினை இல்லாமல் இங்கு வந்து சேர்ந்தோம்.

எனது மகிழ்ச்சிக்கு முக்கியமான காரணம் வீல்சேர் உதவியாளர்கள்தான். இதனைச் சிபாரிசு செய்தது என் மகன்தான்.

“வீல் சேர் ஏற்பாடு செய்யறேன் .. பிரச்ச்னை இல்லாமல் வாங்க..”என்று சொன்னது அமெரிக்காவில் இருக்கும் என் மகன்தான்.

சென்னையில் நாங்கள் புறப்பட்டபோது ஏர்போர்ட் செல்லும்போது எங்களை வரவேற்றது கடுமையான மழை. நாங்கள் எங்கள் மகேந்திரா டி யூ வி 300 ல் ஜீப்பில் போய்க்கொண்டிருந்தோம்.

என் மனைவி கொஞ்சம் பயந்தாள். காற்று மழை என்றால் அவளுக்கு பயம். இந்த மழை நிற்குமா ?  நிற்காதா ? என்று. டல்லஸ் புறப்பட முடியாமல் போனால் என்ன செய்வது ?

எங்களையும் பயங்காட்டினாள்.  

எங்களோடு எனது மறுமகன் சசிகுமார், பூமி சகோதரர் வெங்கடேசன், மற்றும் ஓட்டுனர் தம்பி விஜயகுமார் ஆகியோர் இருந்தார்கள்.

“வீல்சேர் உதவியாளர்கள் ..உங்க லக்கேஜை எடுத்துக்குவாங்க… போர்டிங்க் பாஸ் வாங்க.. செக் இன் டெர்மினல் போக.. எல்லாத்துக்கும் ஹெல்ப் பண்ணுவாங்க..” இதுவும்  என் மகன் சொன்னது சரிதான்.

“ஏங்க இனிமே என்னால ஒரு அடிகூட  நடக்க முடியாது... என் காலைப் பாருங்க எப்பிடி வீங்கிக் கெடக்கு.. உங்களுக்கு மட்டும் என்ன சின்ன வயசா ? உங்களுக்கு செப்டெம்பர் வந்தா 75 எனக்கு  நவம்பர் வந்தா 73..இப்பொ போயி அமெரிக்கா ஆஸ்திரேலியா ஒண்ணும் வேணாங்க..” இது என் மனைவி.

“நாலு இடம் போனால்..  நாலு விஷயம் தெரிஞ்சிக்கலாம்.. நாப்பது மரங்களை பாக்கலாம் அஞ்சாறு ஆறுகளை பாக்கலாம்…ஏழெட்டு ஆளுங்களெப் பாக்கலாம்” இந்தப் பேராசை என்னோடது.

இருந்தாலும் அடக்கி வாசிப்பேன். ஏன்னா எனக்கு பிடிச்சதை செய்யணும்னு நினைப்பாள் என் மனைவி. மினிமம் சப்போர்ட் பிரைஸ் மாதிரி அது.

இந்த கதை கட்டுரை இதெல்லாம் ஆரம்ப காலத்தில் அவளுக்கு பிடிச்சது. இப்போல்லாம் ஆகாது… அவள் கணக்கில் இதெல்லாம் நஷ்டக் கணக்கு.

ஆனா மனசுக்குள்ள நினைப்பாள் “அந்த காலத்துல இருந்து இந்த ஆள் திருந்தவே இல்லன்னு..இருந்தாலும் பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் புளியமத்துக்கு புளியமரம் ஏறித்தான் ஆகணும்..” அதை முழுசாய் புரிந்து கொண்டாள் என் மனைவி.

அப்படித்தான் இந்த அமெரிக்க பயணம் பழமாச்சி..!

“எனது மகன் விரும்பினான் ..அதனால்தான் இந்தப் பயணம்..” என்று எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டேன். உடனே வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டேன்.  நிறைய லைக்ஸ் வந்தது. பெரும்பாலும் கட்டைவிரல் லைக்ஸ்தான்.

ஏர்போர்ட்டில் போய் இறங்கியதும் “வீல் சேர் உதவி வேணும்” என்று சொன்னதுதான் பாக்கி. நீ நான் என்று  நிறையபேர் வந்தார்கள். பின்னர் அவர்களே சமாதானமாகி, இரண்டு பேர் வந்தார்கள்.

இதுவரை 6 விமானப்பயணம் வாய்த்திருக்கிறது. வட அமெரிக்காவிற்கு மூன்று முறை, ஒரு முறை தென் அமெரிக்காவிற்கு, பிரேசிலுக்கு ஒரு முறை, லண்டனுக்கு ஒரு முறை மற்றும் மலேசியாவிற்கு ஒரு முறை போயிருந்தேன்.

எனது விமானப் பயண அனுபவத்தில் நமக்கு இருக்கும் பிரச்சினை என்பது இரண்டு. ஒன்று நமது லக்கேஜ்ஜை எடுத்து செல்வது.  

இன்னொன்று விமான நிலயத்திற்கு சென்ற பிறகு இமிக்ரேஷன் கவுண்டருக்கு செல்வது. இவை எல்லாமே கண்ணைக்கட்டி காட்டில் விட்டமாதிரி இருக்கும்.

இதப்பற்றி எல்லாம் கவலைப்பட வாய்ப்பு இல்லாமல்  எனக்கு உதவி செய்தவர்கள் “வீல்சேர் மனிதர்கள்”.

வீல்சேர் உதவியாளர்கள் நமது பொருட்களை தூக்கிக் கொண்டுவந்து கொடுப்பவர்கள் என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்கிறது. நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். அப்படி அல்ல என்பதை இந்தப் பயணத்தின் மூலம் உணர்ந்தேன்.

அதுபோல போர்டிங்க்பாஸ் (BOARDING PASS) வாங்குவது, விமானத்தில் செக்இன் பாய்ன்ட்டிற்கு (TERMINAL)கொண்டு செல்வது ஆகியவற்றில் பேருதவியாக எங்களுக்கு இருந்தார்கள்.

விமான நிலயத்தில் நுழைந்த பின்னால் விமானத்தில் ஏறி அங்கு சீட்டில் உட்காரும் வரை, எல்லா பயணிகளுக்குமே ஒரு “டென்ஷன்” இருக்கும். எங்களுக்கு ஒரு டென்ஷனும் இல்லை.    

காரணம்  எல்லாத்தையும் அப்பொப்ப சொன்னாங்க “இங்க போர்டிங்க்பாஸ் மட்டும் காட்டுங்க.. இங்க பாஸ்போட்டை ரெடியா வச்சிக்கங்க..சார்.. வாஷ்ரூம் அங்க இருக்கு சார்… டெர்மினல் அங்க இருக்கு..”

“தேங்க்ஸ் மட்டும் சொன்னிங்கன்னா போதும்..நாங்க யார்கிட்டயும் பணம் வாங்கமாட்டோம்.. வாங்கக்கூடாது..” இதைச் சொன்னது ஃபிரங்க்ஃபர்ட் வீல்சேர் நண்பர்.

“ நான் வேலூர் சிஎம்சிக்கு வந்திருக்கேன். திருப்பதி வந்திருக்கேன். எங்க அப்பா கூட்டிகிட்டுப் போனார். எனக்கு சொந்த ஊரு நேப்பாளம். டல்லஸ் வந்து செட்டில் ஆகி 26 வருசம் ஆச்சி. எல்லாம் வீல் சேர் வருமானம்தாம். எம்பையன் ஐ.டி. படிக்கறான். எம்பொண்ணு ஐஸ்கூல் படிக்குது..” இது ஃபொர்ட்வொர்த் ஏர்போர்ட்டில் எங்களுக்கு உதவிய வீல்சேர் நண்பர்.

இப்படி வீல்சேர் உதவியாளர்களாக பெண்களும் வேலைபார்ப்பது டல்லஸ்சில் எனக்குத் தெரிந்தது. டல்லஸ்’சில் பல பெண்களும் இதைச் செய்கிறார்கள்.

ஒரே வீல்சேர் உதவியாளர் ஒரே சமயத்தில் இரண்டு வீல்சேர்களைக்கூட  தள்ளிக்கொண்டு போகிறார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்தக் காலத்தில் “சைபால்” என்று ஒரு மருந்து பிரபலமாக இருந்தது. அதற்கு செய்த விளம்பரத்தை யாராலும் மறக்க முடியாது. கிராமம் நகரம் என்ற வித்தியாசம் இல்லாமல் கருப்பு மையினால் சுவர்களில் எழுதி இருப்பார்கள்.

அந்த வாசகம் இதுதான்.

“சிரங்கு இருந்தால் ஒரே வேளை”

அதுபோல எனது பரிந்துரை இதுதான்.

விமானப் பயணமா உங்கள் தேவை ஒரு வீல்சேர் உதவிதான்.

மீண்டும் அடுத்தக் கடிதத்தில் சந்திப்போம்.

வணக்கம் !


 

 

 

 

 

 

 

 

 

 

3 comments:

Narayanaswamy Coimbatore said...

சுவையான காமென்டரி, உங்க எழுதுகின்ற பழக்கத்திற்கு பாராட்டுக்கள்.இனி என்ன அடுத்த இர‌ண்டு மாசத்துக்கு, உங்க பயண அனுபவங்களை எழுதி தள்ளுங்க

உங்க குடும்பதார்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

GNANASURIA BAHAVAN DEVARAJ said...

அன்புமிகு நாரயணசாமி
அவர்களுக்கு வணக்கம் !
தங்கள் அன்பு கலந்த
பாராட்டிற்கு மிக்க நன்றி !
தங்கள் குடும்பத்தினருக்கும்
எனது விசாரிப்புகள் .
நன்றி ! வணக்கம்
பூமி ஞானசூரியன்

S T SUDARSAN said...

அன்புள்ள சூரிய பகவான் ஆசான்!
உங்களது கட்டுரைகள் கடித வடிவில் படிக்கும் போது நேரொளி போல் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் அனுபவங்களை படிக்க ஆவலுடன் காத்துகொண்டிருக்கின்றேன்.
ஒரு விதத்தில் நீங்களே ஒரு அமெரிக்கர்,சுதந்திரம் வாய்ப்பு மற்றும் சக்தியின் கலவை.
உங்கள் குடும்பத்தாற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...