Sunday, October 1, 2023

THE LOST DONKEY OF MULLA காணாமல் போன முல்லாவின் கழுதை

MULLA  - NASREDDIN HADJA


(முல்லா அவர்களின் இயற்பெயர் நஸ்ருதீன் ஹாட்ஜா. (NASREDDIN HADJA) துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். ஹாட்ஜா என்றால் துருக்கி மொழியில் மதகுரு என்று அர்த்தம். இஸ்லாம் த போதகர். சிவ்ரிஹிசார் (SIVRIHISAR) என்ற பகுதியில் ஹார்ட்டோ (HORTO)என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 1208 ல் பிறந்து 1284 ம் ஆண்டு தனது 76 வது வயதுவரை வாழ்ந்தார். அவர் மனைவியின் பெயர் அக்கிசார் (AKHISAR)

ஒரு நாள் முல்லாவின் கழுதை காணாமல் போய்விட்டது. கழுதை இல்லை என்றால் முல்லாவுக்கு எந்த வேலையும் ஓடாது. முல்லாவைப் பொறுத்தவரை அது அவருடைய அந்த காலத்து டூவீலர் மாதிரி.

 தினம் தினம் பல கிராமங்களுக்கு முல்லா சென்று வருவார். அவர் கழுதையில் பிரயாணம் செய்வதுதான் வழக்கம். இப்போது கழுதை காணாமல் போய்விட்டதால் அவருடைய அன்றாட வேலைகள் அஸ்தமித்து போனது.

 முல்லவைப் பார்த்தவுடன் நண்பர்கள் தெரிந்தவர்கள் என எல்லோரும் கழுதை காணாமல் போனது பற்றி கரிசனமாக விசாரித்தார்கள். புதிதாக கழுதை ஒன்றே வாங்க முல்லாவிடம் பண வசதியும் இல்லை.

 கழுதை தொலைந்து போனதால் முல்லா பெரிதும் மனம் உடைந்து போனார் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். நண்பர்கள் சிலர் தங்கள் கழுதைகளை இரவல் கொடுக்க முன் வந்தார்கள் அவற்றையெல்லாம் இவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

 நண்பர்கள் பலரும் பலவிதமாக முல்லாவிடம் கழுதை தொலைந்தது பற்றி கருத்து தெரிவித்தார்கள்.

“  உங்கள் முதல் மனைவி இறந்த போது கூட நீங்கள் எவ்வளவு வருத்தப்பட்டதாக தெரியவில்லை..இது ஒருவர்.

உங்கள் கழுதை இல்லை என்றால் உங்களால் எதுவுமே செய்ய முடியாதே எப்படி சமாளிக்கிறீர்கள் ..?”  இது இரண்டாம் ஆள்..

எங்களை மாதிரி நண்பர்கள் யாராவது எங்கள்  கழுதையை இரவல் கொடுத்தாலும் உங்களுக்கு பிடிக்காது..?” இது மூன்றாவது நபர்.

 “ஆமாம் ஆமாம் முல்லாவுக்கு யாரிடமிருந்தும் இரவல் வாங்க பிடிக்காது..”  இது நான்காவது ஆள்.

இதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த முல்லா சொன்னார், “ நீங்கள் எனது முதல் மனைவி இறந்ததை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். அந்த சமயத்தில் நீங்கள் எல்லாம் என்ன செய்தீர்கள் ஞாபகம் இருக்கிறதா ?” 

முல்லா அவர்களே.. எங்களுக்கு அதெல்லாம் ஞாபகத்தில் இல்லை.. நீங்களே சொல்லுங்கள் நாங்கள் என்ன சொன்னோம் ? என்ன செய்தோம் ?”

 இப்போது முல்லா மீண்டும் பேச ஆரம்பித்தார்.

அப்போது நீங்கள் எனக்கு ஆறுதல் மட்டும்தான் சொன்னீர்களா ? “

ஆமாம் ஆறுதல் சொன்னோம்… அது ஞாபகம் இருக்கிறது ?”

அதையும் தாண்டி நீங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து என்ன செய்தீர்கள் என்று மறந்து விட்டீர்களா ? நீங்கள் வேண்டுமானால் மறந்த்திருக்கலாம் ஆனால் நான் மறக்க மாட்டேன்..?”

நாங்கள் என்ன செய்தோம் ? ஆறுதல் சொன்னோம், வருத்தப்பட்டோம். வேறு என்ன செய்தோம் ? எங்களுக்கு சுத்தமாக ஞாபகம் இல்லையே முல்லா அவர்களே நீங்களே சொல்லுங்கள் !

நீங்கள் எல்லாம் சுத்தமாக மறந்து விட்டீர்கள். காரணம்   நீங்கள் எனது உண்மையான  நண்பர்கள்..அதனால்தான் நீங்கள் செய்த உதவியை உடனே மறந்து விட்டீர்கள்.  நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நானே உங்களுக்கு சொல்லுகிறேன்”  என்று சொல்ல ஆரம்பித்தார் முல்லா.

மனைவி இறந்து போனதால்,  உங்களை யார் பார்த்துக் கொள்வார்கள் ? யார் உங்களுக்கு உதவி செய்வார்கள் ? உங்களை மாதிரி நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் ? நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை..”

ஆனால் மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து உதவி செய்வது போல் வருமா ?”  இப்படி சொல்லிவிட்டு.. நீங்களே ஒரு அழகான பெண்ணையும் பார்த்து எனக்கு இரண்டாம் திருமணமும் செய்து வைத்தீர்கள்.”

அதை என்னால் மறக்க முடியுமா ? அதற்கான செலவுகளை கூட நீங்கள் ஒரு பைசாவும் வாங்க தயாராக இல்லை. இதையெல்லாம் நீங்கள் வேண்டுமானால் மறந்து இருக்கலாம்

ஆனால் அவை எதையும் நான் மறக்கவில்லை”  என்று உணர்ச்சிபூர்வமாக சொன்னார் முல்லா. 

ஆமாம் ஆமாம்..இப்போது எங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.. நாங்கள் தான் உங்களுடைய இரண்டாவது திருமணத்தை செய்து வைத்தோம். காரணம் நீங்கள் எங்கள் வழிகாட்டி ! நீங்கள் எவ்வளவோ உதவிகளை எங்களுக்காக செய்திருக்கிறீர்கள். அதற்கு முன்னால் நாங்கள் உங்களுக்கு செய்த இந்த சிறு உதவி ஒன்றுமே இல்லை. அதுவும் இந்த உதவியை நாங்கள் யாரும் தனி ஆளாக செய்யவில்லை. எல்லோரும் சேர்ந்து தான் செய்தோம்என்று எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டார்கள்.

 இப்படி அவர்கள் சொல்லி முடித்ததும் இப்போது முல்லா என்ன சொல்லுகிறார் என்று கவனியுங்கள்.

எனக்கு கழுதை  தொலைந்தது பற்றி எந்த கவலையும் இல்லை. காரணம் என்ன தெரியுமா என்னுடைய இரண்டாவது திருமணத்தையே உங்கள் செலவில் செய்து வைத்தீர்கள்.” 

தொலைந்து போன இந்த கழுதைக்கு பதிலாக புதிதாக இன்னொரு கழுதையை எனக்கு வாங்கி தருவது பற்றி நீங்கள் யோசிக்காமலா இருப்பீர்கள் ? எனக்கு தெரியும்நீங்கள் எல்லாம் அதைப் பற்றி பேசத்தானே இப்போது வந்திருக்கிறீர்கள் ?”  என்று பேசிவிட்டு முல்லா ஒரு பெரும் மூச்சு விட்டார்.

 அதற்கு பிறகு அவர் நண்பர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

அவருடைய நண்பர்கள்வாய்ச் சொல்லில் வீரரடிஎன்று பேசிக்கொண்டு இருக்காமல் அவர்கள், என்ன செய்ய வேண்டும் என்பதை இதைவிட புத்திசாலித்தனமாக யாரால் சொல்ல முடியும் ?

முல்லாவின் நண்பர்கள் அன்று மாலைக்குள் புதியதாக ஒரு கழுதையை வாங்கிக் கொண்டு வந்து முல்லா அவர்களுக்கு பரிசாக தந்து விட்டுப் போனார்கள்.

முல்லா அவர்கள் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

கதை பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் ஒன்றிரண்டு வார்த்தைகளில் எழுதுங்கள். நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

 










No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...