H M S WARRIERSHIP |
அந்த காலகட்டத்தில் உலகின் மிகவும் பயங்கரமான கப்பல் என்றும், கரும்பாம்பு என்று நெப்போலியனால்
வர்ணிக்கப்பட்ட கப்பலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இந்த கப்பலின் பெயர் எச் எம் எஸ்
வாரியர் (HMS WARRIOR).
போர்ட்ஸ் மவுத்தில் காரை பார்க் செய்துவிட்டு, ஹிஸ்டாரிக் டாக் யார்ட் என்ற போர்
கப்பல் செய்யும் துறைமுக வளாகத்திற்கு நடந்து சென்றோம். அங்கிருந்து மிகவும்
பக்கம் தான்.
லண்டனில் குடை வேண்டும்
கூட்டம் அதிகம் இருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை நாள்
கூட்டம் அதிகமாக இருந்த்து. வரிசையில் நின்றோம் டிக்கெட் எடுக்க..
மழை பிசுபிசு’ வென தூறிக்
கொண்டிருந்தது. நனையாத அளவுக்கு லேசாகத்தான் இருந்தது, பூமழை. எச்சரிக்கையாக சிலர் குடையுடன்
வந்திருந்தார்கள். நாங்கள் ஜெர்கின் மட்டும் போட்டிருந்தோம்.
லண்டன் மற்றும் சுற்றுவட்டார நகரங்களில் வசிப்பவர்கள், எல்லோரும் கையில் ஒரு குடையுடன் அலைந்து
கொண்டிருந்தார்கள். மழை வந்தாலும் வரவில்லை என்றாலும் அவர்களுக்கு குடை வேண்டும்.
பலமான மழை வராது என்று நினைத்தோம்.
நினைத்த மாதிரியே வரவில்லை. ஆனால் சூரியன் வெளியில் தலை காட்டவில்லை.
குளிர் மட்டும் அதிகமாய் இருந்தது.
தலைக்கு மேல் அடிக்கடி கொத்து கொத்தாய் கடல் புறாக்கள் கத்தியபடி பறந்து
கொண்டிருந்தன. அவற்றின் குரல் அவ்வளவு
மென்மையாக இல்லை. மீண்டும் எனக்கு சாண்டில்யன் ஞாபகத்தில்
வந்தார்.
உலக சரித்திரத்தின் டிரஃபல்கார் யுத்தம்
ராயல் டாக் யார்டில் (ROYAL DOCK YARD)டிக்கெட் எடுக்க
குடும்பம் குடும்பமாக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். எல்லாம் யூகே காரர்கள்.
அந்த கும்பலில் நான் என் மனைவி என் மகன் என, நாங்கள் மட்டும்தான்
வெளி நாட்டுக்காரர்கள். ஒரு 50 பேருக்கு குறையாமல்
பள்ளிக்கூட வாண்டுகளுடன் இரண்டு
வாத்திச்சிமார்களும் வந்திருந்தார்கள்.
உலக சரித்திரத்தில் படித்த டிரஃபல்கார்
வெற்றி பெற்ற விக்டரி கப்பலை நேரில் பார்க்க போகிறோம். எவ்வளவு பெரிய சமாச்சாரம். நன்றியுடன்
ஒரு முறை என் மகனைப் பார்த்தேன்.
நெல்சன் துணை அட்மிரலாக இருந்து போரில் நெப்போலியன் கடற்படையை ஓட ஓட விரட்டிய
கப்பலை பார்க்கப் போகிறோம்.
ஒரே ஒரு டிக்கெட் போதும்
போரில் வெற்றி பெற்றாலும் அந்த கப்பலின் மடியிலேயே உயிர் துறந்த
நெல்சனின் ஆவியை விக்டரி போர்க்கப்பலில் சந்திக்கப் போகிறோம் என்று நினைத்தபோது
ஒரு சோகம் வந்து மேகம் மாதிரி மனதை மூடியது.
ஒரே ஒரு டிக்கெட் போதும், போர்ட்ஸ்மவுத்’தின் ராயல் டாக் யார்டில் பார்க்க வேண்டிய இடங்கள் அத்தனையும் பார்க்கலாம். ஆனால் அவை
எல்லாவற்றையும் ஒரே நாளில் பார்க்க முடியாது. குறைந்தபட்சம் ஒரு வாரம் வேண்டும்.
நீங்கள் ஒரு முறை
டிக்கெட் எடுத்தால் போதும். ஒரு வருஷம் வரை அது செல்லுபடியாகும். அதைக் கொண்டு பலமுறை நீங்கள் இந்த ராயல்
டாக் யார்ட்’ஐ பார்க்கலாம்.
போர் கப்பல்கள்
இந்த இடத்தில் போர் கப்பல்கள் ஹெச் எம் எஸ் எம் 33, எச் எம் எஸ் வாரியர் 1860, எச் எம் எஸ் விக்டரி, மேரி ரோஸ், எச் எம் எஸ் அலையன்ஸ் ஆகியவற்றையெல்லாம்
பார்க்க முடியும்.
இவை தவிர இங்கு உள்ள ராயல் நேவியின் நேஷனல் மியூசியம், ராயல் மரைன் மியூசியம், நேஷனல் மியூசியம் ஆப் நேவல் ஃபயர் பவர், ஆகியவை எல்லாம் இந்த ஹிஸ்டாரிக் டாக்
யார்டில் நம்மால் பார்க்க முடியும்.
இந்த நுழைவு டிக்கெட்டுடன் ஒரு புத்தகமும் கொடுத்தார்கள். டாக் யார்ட் பற்றிய
ஒரு கையேடு. அதை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டு வெளியே வந்தோம்.
வாரியர் 1860 போர்க்கப்பல்
வாரியர் கப்பல் உலகத்தில் அதிவேகமானது. அளவில் மிகவும் பெரியது. முதன்முதலாக இரும்பு கவசம் அணிந்தது. பாய் மரம் மற்றும் நீராவி இயந்திரம் இரண்டையும் கொண்டது. சக்தி வாய்ந்த பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் இதன் கூடுதலான பலம்
அங்கேயே ஒரு காபி கடை. பில்டர் காபி வாசனை மூக்கைத் துளைத்தது ஆனாலும் மனசை அடக்கி கொண்டு
வெளியே வந்தோம்.
அருகிலேயே பிரம்மாண்டம் காட்டி நிற்கிறது வாரியர் 1860 போர்க்கப்பல் இதுவும் போர்ட்ஸ்
மவுத்தின் தயாரிப்பு தான் 1860 இல் டிசம்பர் 29ஆம் தேதி வெள்ளோட்டம்
விடப்பட்ட கப்பல்.
வாரியர் கப்பலின் மேல் தளத்தை அடைய மரப்பலகைகளால் செய்த படிக்கட்டுகளில்ஏறி கப்பலின் உள்ளே சென்றோம்..
மேல் தளத்தில், லைப் போட்டுகள் இருந்தன., கப்பலைச் சுற்றிலும்
பீரங்கிகள் பொருத்தி இருந்தார்கள்., பாய்மரங்கள், மற்றும் புகைக் குழாய்கள் உயர
உயரமாக நின்றுகொண்டிருந்தன.
கீழ்த்தளங்களுக்கு இறங்குவதற்கும்
மரப் ப டி க் க ட் டு க ள் அமைக்கப் பட்டிருந்தன.
ஃபிரான்ஸ் பார்த்து பயப்பட வேண்டும்
1860 ஆம் ஆண்டு வாக்கில் உலகிலேயே வாரியரை விட சிறந்த போர்க்கப்பல்கள் எதுவும் இல்லை.
வாரியரின் பிரதான தளத்தில், பீரங்கிகள் 68 பவுண்டு எடை உள்ளவை 26 ம், 110 பவுண்டு எடையுள்ள பீரங்கிகள் நான்கும்
பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கப்பலை பார்த்து பிரிட்டன் மீது படையெடுக்க பிரான்ஸ் யோசிக்க
வேண்டும் என்று நினைத்து பிரம்மாண்டமாக இந்தக் கப்பலை உருவாக்கினர்.
பூச்சாண்டி கப்பல்
அந்த காலகட்டத்தில் பிரான்சிடம் “லா குளோரி” (LA GLORIE) என்ற சக்தி வாய்ந்த
போர்க்கப்பல் இருந்தது. அதைவிட வாரியர் அறுபது சதம் பெரிய கப்பல், இரும்பு கவசம் பூண்டது. வேகமாக சீறியபடி போகக் கூடியது. அதிகமான ஆயுதங்களை கொண்டது. ஆக பிரான்ஸ் நாட்டை மிரட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட
பூச்சாண்டிக்கப்பல் இது.
வாரியர் தயாரித்த சமயம் இதைவிட சக்தி வாய்ந்த போர்க்கப்பல் உலகில்
எந்த பகுதியிலும் இல்லை.
அடுக்கி வைத்த துப்பாக்கிகள்
மேல் தளத்தையும் சேர்த்து நான்கு தளங்களை கொண்டது இந்த கப்பல்
பீரங்கிகள், துப்பாக்கிகள், ரிவால்வர்கள், நீண்ட வாள்கள், பீரங்கிக் குண்டுகள், என கப்பல் முழுவதும் ஒழுங்கா அடுக்கி
வைத்திருந்தார்கள்.
பல போர்களில் யுத்தங்களில் பயன்படுத்தப்பட்ட
இப்படிப்பட்ட ஆயுதங்களை எல்லாம் முதன் முறையாகப் பார்க்கிறோம் என்று
நினைக்கும்போது புல்லரித்தது. யாரும்
பார்க்கிறார்களா என பார்த்துக்கொண்டு சிலவற்றை மட்டும் தொட்டுப்பார்த்துகொண்டேன்.
(எதையும் தொடக்கூடாது என்று போர்டு இருந்த்து).
செங்குத்தான படிக்கட்டுகள்
ஒரு தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு இறங்கும் மரத்தால் அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் மிகவும் செங்குத்தாக இருந்தன. மிகவும் ஜாக்கிரதையாக கவனமாக அதில் இறங்கவோ ஏறவோ செய்ய வேண்டும்.
இந்த கப்பலில் பயன்படுத்தும் கயிறுகள் மற்றும் இரும்பு செயின் நம்மை
கலவரப்படுத்தும் படியான அளவில் இருந்தன.
வாரியர் வந்த சில ஆண்டுகளிலேயே அதை தூக்கி சாப்பிடும் படியான பல
போர்க்கப்பல்கள் வந்துவிட, கிழக்கப்பல்களுக்கு 1871 இல் கடலோர காவல் மாதிரியான சுலபமான வேலைகளை கொடுத்தார்கள்.
முயல்களுக்கு ஊடாக கரும்பாம்பு
முயல்களுக்கு இடையே இருக்கும் கரும்பாம்பு என்று வாரியர் கப்பலை நெப்போலியன் வர்ணித்தார்.
வாரியர் கப்பலை வேக வேகமாக பார்த்து முடித்துவிட்டு பக்கத்தில்
இருந்த விடுதி ஒன்றில் மதிய உணவை சாப்பிட்டு முடித்தோம். மதிய உணவுக்குப் பின் நெப்போலியன்
தோற்கடித்த எச்எம்எஸ் விக்டரி கப்பலை பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளோம் முடிவு செய்தோம்.
வாரியர் கப்பல்
தொலைதூர பயணம் செய்யும்போது அதன் மேல் தளத்தில், ஆடுகள் கோழிகள் மற்றும் வாத்துகள் நிரம்ப இருக்கும். இவற்றை
பராமரிப்பதற்கு ஒரு
மேலாளர் இருப்பார். (வீரர்களுக்கு புதுசாய் நாக்கு
ருசியாய் சமைச்சு போடத்தான் இந்த ஏற்பாடு)
டாக்யார்டுக்கு எப்படி போகலாம் ? ரயிலில் போகலாம் இறங்க வேண்டியது போர்ட்ஸ்மவுத் ஹார்பர் டிரெய்ன் ஸ்டேஷன்,. வெறும் 200 மீட்டர் தான். அங்கிருந்து நடந்து செல்லலாம்.
பஸ் மற்றும் கோச்சில் வந்தால் “டாக்யார்டின்”
கேட் எதிரில் இறங்கலாம். படகு சவாரியின் மூலம் வருவது என்றால் “காஸ்போர்ட் “துறைமுகத்திலிருந்து வரவேண்டும்.
கட்டுமரம் மூலமாகவும் வரலாம் அதன் மூலமாக வருவது என்றால் வைட்
தீவிலிருந்து வர வேண்டும்.
எந்த ரோடு ? எம்.27 என்ற சாலையிலிருந்து 12 வது திருப்பத்தில், எம்.275 சாலையில் உள்ளது, போர்ட்ஸ்மவுத்’ன் ஹிஸ்டாரிக் டாக்யார்ட்.
போர்ட்ஸ்மவுத்’ன்
ஹிஸ்டாரிக் டாக்யார்ட்’லிருந்து
ஐந்து நிமிட நடை தூரத்தில், நிறைய
கார் நிறுத்தும் இடங்கள் உள்ளன. காரை அங்கு நிறுத்தி விட்டு நடந்து செல்லலாம்.
தினசரி
எத்தனை மணி வரை நுழைவு சீட்டு தருவார்கள் ? ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காலை 10 மணி முதல் மாலை நாலு முப்பது மணி வரை.
நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
வேலை நாட்கள் ஓராண்டில் 362 நாட்கள், டிசம்பர்
24 25 26 ஆகிய
மூன்று நாட்கள் விடுமுறை நாட்கள்..
அடுத்து விக்டரி
எஸ் எம் எஸ் விக்டரி கப்பல் பற்றிய செய்திகளை அடுத்த பதிவில்
பார்க்கலாம் இந்தப் பதிவில் சொல்லப்பட்ட செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால்
உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் எழுதுங்கள், நன்றி வணக்கம்.
பூமி ஞான சூரியன்
No comments:
Post a Comment