Wednesday, October 4, 2023

A WARSHIP DEFEATED NAPOLEON நெல்சனுக்கு வெற்றியும் மரணமும் தந்த போர்க்கப்பல்

H M S VICTORY


ஒரேசமயத்தில் இரண்டு மாவீரர்களில் ஒருவருக்கு தோல்வியையும் இன்னொருவருக்கு வெற்றியும் மரணத்தையும் பரிசாகத்தந்த போர்க்கப்பல் இந்த எச் எம் எஸ் விக்டரி. யார் அந்த மாவீரர்கள்  ? தொடர்ந்து படியுங்கள்.

போர்ட்ஸ்மவுத்ல்  ராயல் ஹிஸ்டாரிக் டாக் யார்டில் (ROYAL HISTORIC DOCK)காலையில் எஸ் எம் எஸ் வாரியர் போர்க்கப்பலை பார்த்து முடித்ததும் மதிய உணவை முடித்துக் கொண்டு எச் எம் எஸ் விக்டரி (HMS VICTORY)போர்க்கப்பலை பார்க்க சென்றோம்.

எச் எம் எஸ் விக்டரியில் நுழைவதற்கு முன்னால் சில எச்சரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்.

எஸ்எம்எஸ் விக்டரி கப்பலை பார்ப்பதற்கு செல்லும் முன் இதய பலவீனமானவர்கள், இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்வது மாதிரி சில எச்சரிக்கைகளை விட்டிருக்கிறார்கள் துண்டு பிரசுரமாக, அவை என்ன என்று பார்க்கலாம்

1. கப்பலில் உள்ள படிக்கட்டுகள் மிகவும் செங்குத்தானவை (பார்த்து ஏற வேண்டும் இறங்க வேண்டும்)

2.  கப்பலின் கீழ் தளத்தில் கூரை தாழ்வானவை (நிமிர்ந்துகினு திரியாதிங்க)

3. கப்பலில்  கதவுகள் குறுகலான தாழ்வானவை (குனிஞ்சு அடக்க ஒடுக்கமா போங்க)

4.  தளங்கள் வழுக்கலாம் ஈரமாய் இருந்தால் கண்டிப்பாக வழுக்கும் (மேல பாத்துகிட்டு போனா கண்டிப்பா விழுவிங்க ஜாக்கிரதை)

5.  கப்பலுக்கு உள்ளே வெளிச்சம் குறைவாக இருக்கும்.(இருட்டுல பள்ளம் மேடு தெரியாது, பார்த்துப் போங்க)

6.  கப்பலை சுற்றி வரும் போது ஏற்படும் உடல் உபாதைகள் ஏற்படும் என்றால் அதற்கு உரிய ஏற்பாடுகளுடன் போகவும். (வாந்தி, மயக்கம் ஏதாச்சும் வருமான்னு பாத்துக்கோங்க. மாத்திரை மருந்து எதாச்சும் கைவசம் வச்சிக்கங்க)

7.  இதில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் எங்கள் பணியாளர்களுடன் பேசுங்கள் (தனியாக புலம்பிட்டு  நிக்காதிங்க)

8. எங்களால் இயன்ற அளவு இந்த கப்பலை பாதுகாப்பாக பராமரித்து வருகிறோம் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கவனமாக படித்து பாருங்கள்.(படிக்கறதுதான் கஷ்டம்)

9.  நீங்கள் உங்கள் சொந்த பொறுப்பில் இந்த கப்பலை சுற்றிப் பார்க்கிறீர்கள். இதில் ஏற்படும் இழப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.(அது தெரிஞ்சதுதான்)

 இப்படிக்கு தி நேஷனல் மியூசியம் அண்ட் எஸ் எம் எஸ் விக்டரி

 குறிப்பு: இந்த எச்சரிக்கை நோட்டீசை யாரும் வாங்கி படித்ததாக தெரியவில்லை, என்னை தவிர.

விக்டரி போர்க்கப்பல் வாரியர் போர்க்கப்பலைவிட விட மிகவும் பழமையானது. இங்கிலாந்து போர்க்கப்பல்களிலேயே மிகவும் பிரபலமானது..

நெல்சன், நெப்போலியனை  வெற்றி கொள்ள உதவியது இந்த கப்பல்.  உலக பிரசித்தி பெற்ற டிராஃபல்கர் (TRAFALGAR) போரில் இங்கிலாந்து வெற்றிபெற காரணமாக இருந்ததும் இந்தக் கப்பல்தான். இதன் அதிகாரப்பூர்வமான  பெயர் எச் எம் எஸ் விக்டரி (H M S VICTORY).

டிரஃபல்கர் போரில்  வெற்றியைத் தேடித் தந்தாலும்இங்கிலாந்தின் கடற்படை அட்மிரல் நெல்சன் போரில் வெற்றி பெற்றாலும், அவர் அந்தக்  கப்பலிலேயே ஒரு ஃபிரான்சு சிப்பாயினால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

மாவீரன் நெல்சன் தனது நாட்டிற்காக தனது உயிரை தானமாகத் தந்தது  1805 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி. 

விக்டரி கப்பலின் மேல் தளத்தில், துப்பாக்கி குண்டு பாய்ந்து சாய்ந்த இடத்தில் ஒரு அழகியய் பித்தளைத்  தகட்டின் இங்கே தான் குண்டடி பட்டு கீழே சாய்ந்தார் நெல்சன் என்று குறித்து வைத்திருக்கிறார்கள். 

அந்த இடத்தினை அடைந்த போது மனசு படபடத்தது, கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் நடந்து போல  இருந்தது. அங்கு நின்றபடி ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டோம்.

இங்கு வரும் வரை இந்த விக்டரி கப்பலைப் பார்க்கப்போகிறோம் என்பது எனக்கு தெரியாது. கப்பலின் உள்ளே ஏறும்போதுதான் என்மகன் சொன்னான், நெல்சன் குண்டடிபட்டு விழுந்த இடத்தைகூட இந்த கப்பலில் நாம் பார்க்கலாம்..என்றான்.

குண்டடிப்பட்டதும், அவரை கீழ் தளத்திற்கு கொண்டு வந்து அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்திய படுக்கை, மற்றும் இதர உபகரணங்களை, பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் நாங்கள் படபடப்புடன் பார்த்தோம்.

கப்பலின் சர்ஜன் டாக்டர் வில்லியம் பெட்டி (DR.WILLIYAM PETTY) என்பவர் தான், குண்டடிபட்ட நெல்சனை பரிசோதித்து சிகிச்சை அளித்தார். ஆயினும் நெல்சனை காப்பாற்ற முடியாமல் போயிற்று.

 ஹொரோஷியோ நெல்சன் (HOROSHIO NELSON)பர்னாம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர். 1771 ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தின்  ராயல் நேவியில் (ROYAL NAVY)பணியாற்றிய நெல்சன் 1805 ஆம் ஆண்டு இறக்கும்போது வைஸ் அட்மிரல் என்னும் முக்கிய பொறுப்பில் இருந்தார் .

பதினேழு  போர்களில் பங்கு பெற்ற அனுபவம் கொண்டவர் நெல்சன்குறிப்பாகநெப்போலியனின் போர்களில் (NAPOLEONIC WARS) எல்லாம் பங்கேற்றவர். அதில் மிக முக்கியமானது இந்த டிராஃபல்கர் போர். அந்தப் போரில் வெற்றி பெற்றும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது.

சாந்தா குரூஸ் டி .டெனிரிஃப்  (SANTA CURUS D TENERIF)என்ற இடத்தில் நடைபெற்ற போரில் நெல்சன் தனது வலது கரத்தை இழந்தார். கார்சிகா (CORCICA) என்ற இடத்தில் நடந்த போரில் ஒரு கண்ணை இழந்தார். 1805 ஆம் ஆண்டு   நடந்த டிராஃபல்கர் போரில் தனது உயிரையே  இழந்தார்.

ஒவ்வொரு மனிதனும் தனது கடமையை ஒழுங்காய் செய்ய வேண்டும் என இங்கிலாந்து எதிர் நோக்குகிறது என்ற வாக்கியத்தை  நெல்சன் அடிக்கடி எல்லோரிடமே சொல்லிக் கொண்டிருப்பார்.

ஏகப்பட்ட  நெல்சனின் நினைவுச் சின்னங்கள் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை லண்டனில் உள்ள டிரஃபல்கர் ஸ்கொயர் (TRAFFALKAR SQUARE)மற்றும் எடின்பரோவில் உள்ள நினைவுச் சின்னம்.

ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளின் கப்பற்படையும் இணைந்து இங்கிலாந்துடன் போரிட்டன. போர் நடந்த இடம் ஸ்பெயினில் உள்ள டிரஃபல்கர் என்ற இடம்.

இங்கிலாந்து கடப்படையின் நெல்சன் 27 கப்பல்களை வழிநடத்தி போரை நடத்தினார். அதற்கு எதிராக  பிரெஞ்சு படைக்கு சார்லஸ் பியரி  வில்லெனிவ் என்பவர் தலைமை வகித்தார், ஸ்பெயின் படைக்கு தலைமை விகித்தவர்  பிடரிக்கோ கிராவீனா என்பவர்.  அந்த இரண்டு படைகளிலும் மொத்தம் 37 கப்பல்கள் இருந்தன.

நெல்சன் தன்னிடம் இருந்த 27 கப்பல்களை கொண்டு எதிரிகளின் 37 கப்பல்களில் 22 ஐ அடித்து நொறுக்கினார். மீதமுள்ளவற்றை  ஓட ஓட விரட்டி அந்தப் போரை வெற்றி கொண்டார்.

போரில் இங்கிலாந்து ஒரே ஒரு கப்பலை கூட இழக்கவில்லை ஆனால் பிரான்சு மற்றும் ஸ்பெயின் நாடுகள் தங்களது 37 கப்பல்களில் 22 கப்பல்களை இழந்தன.

ஃபிரான்சு   நாட்டின் அட்மிரல். வில்லெனிவ்புசெண்டார்   என்பவர் கப்பலுடன் கைது செய்யப்பட்டார். ஸ்பானிஷ் அட்மிரல் ஃபெடெரிகோ கிராவினா ஏராளமான காயங்களுடன் ஒரு கப்பலில் தப்பி ஓடினார்.

குறைவான வீரர்கள் மற்றும் குறைவான போர்க் கப்பல்கள் ஆகியவற்றுடன் இந்தப் போரை ஜெயித்துக் காட்டினார் நெல்சன்.

இந்த போர் இப்படித்தான் இருக்கும் இதன் தாக்குதல் இப்படித்தான் இருக்கும் என்று எதிரிகள், எதிர்பாராத முறையில் போர் முறையை திட்டமிடுவதில் அட்மிரல் நெல்சன் கெட்டிக்காரர்.

எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து தன் மூளையை கசக்கி போரை வகுப்பவர் அல்ல நெல்சன். படைகளின் முன் வரிசையில்  நின்று போரின் தன்மைக்கு ஏற்ப  தனது தாக்குதல் வியூகத்தை மாற்றி அமைத்து வெற்றிக்கனியை இலகுவாக பறிப்பதில்  வல்லவர் நெல்சன். 

ஹெச் எம் பி எஸ் விக்டரி

சில முக்கிய குறிப்புகள்

 சுமார் 6000 மரங்களை வெட்டி எடுத்து, அதிலிருந்து தான்  விக்டரி கப்பலை கட்டி முடித்தார்கள்.

விக்டரி  கப்பலில் பயன்படுத்தப்பட்ட பாய் மரத்தின் அளவு  19500 சதுர அடி,

இதன் அதிகபட்சமான வேகம் என்பது 11.5 கிலோமீட்டர்.(10 நாட்) நாட் என்பது கடலில் செல்லும் வேகம்  இந்த கப்பலில் 98 முதல் 104 பீரங்கிகளை பொறுத்த முடியும்.

2015 ஆம் ஆண்டில் இதன் வயது 256 ஆண்டுகள்இதன் 250 ஆவது வயதை 2009 ஆம் ஆண்டு விமரிசையாக கொண்டாடினார்கள்.

இந்த கப்பலில் குவாட்டர் டெக்  என்ற இடத்தில் தான் சுடப்பட்டு சாய்ந்தார் நெல்சன்.. அதற்குப் பிறகு  தனது படையின் வெற்றி செய்தியை தெரிந்து கொண்ட பின்தான் அவர் உயிர் பிரிந்தது. அந்த வெற்றி செய்தியை கேட்கும்வரை அவருடைய உயிர் அந்த உடலில் ஒட்டிக் கொண்டிருந்தது.1805 ஆம் ஆண்டு நெல்சன் இறந்த சமயம் அவருடைய வயது 47 மட்டுமே.

இந்த கப்பலில் மொத்தம் 821 போர் வீரர்கள் பணி செய்தார்கள் இவர்கள் அத்தனை பேருக்கும்அத்தனை போருக்கும்  பிராடி ஸ்டவ் என்ற ஒரு சிறிய அடுப்பில் தான் சமையல் செய்யப்பட்டது.

1765 ஆம் ஆண்டு தனது போர்ப் பணியை தொடங்கிய விக்டரி கப்பல் 1812 ஆம் ஆண்டு 47 ஆண்டுகளுக்கு பின் தனது சேவையை முடித்துக் கொண்டது.

1922 ஆம் ஆண்டு  போர்ட்ஸ் மவுத்தின் டிரை டாக்கில் (DRY DOCK) கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.. டிரை டாக் என்றால் தரையில் நிறுத்துவது என்று அர்த்தம், (தண்ணீரில் அல்ல)..

டாக்யார்டுக்கு எப்படி போகலாம் ? ரயிலில் போகலாம் இறங்க வேண்டியது போர்ட்ஸ்மவுத் ஹார்பர் டிரெய்ன் ஸ்டேஷன்,. வெறும் 200 மீட்டர் தான்.அங்கிருந்து நடந்து செல்லலாம்.

பஸ் மற்றும் கோச்சில் வந்தால்டாக்யார்டின்”  கேட் எதிரில் இறங்கலாம். படகு சவாரியின் மூலம் வருவது என்றால்காஸ்போர்ட்துறைமுகத்திலிருந்து வரவேண்டும்.

கட்டுமரம் மூலமாகவும் வரலாம் அதன் மூலமாக வருவது என்றால் வைட் தீவிலிருந்து வர வேண்டும்.

எந்த ரோடு ? எம்.27 என்ற சாலையிலிருந்து 12 வது திருப்பத்தில், எம்.275 சாலையில் உள்ளது போர்ட்ஸ்மவுத்ன் ஹிஸ்டாரிக் டாக்யார்ட்.

போர்ட்ஸ்மவுத்ன் ஹிஸ்டாரிக் டாக்யார்ட்லிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில், நிறைய கார் நிறுத்தும் இடங்கள் உள்ளன. காரை அங்கு நிறுத்தி விட்டு நடந்து செல்லலாம்.

 தினசரி எத்தனை மணி வரை நுழைவு சீட்டு தருவார்கள் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காலை 10 மணி முதல் மாலை நாலு முப்பது மணி வரை.

நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

வேலை நாட்கள் ஓராண்டில் 362 நாட்கள்டிசம்பர் 24 25 26 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை நாட்கள்..

 இந்தத் தொடரை தொடர்ந்து படியுங்கள் நீங்கள் படித்து முடிக்கும் போது பாதி லண்டனை பார்த்த மாதிரி படித்த மாதிரி இருக்கும். மீதி லண்டனை நீங்கள் னேரடியாகப் போகும்போது பார்க்கலாம். 

இந்த செய்திகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் கமெண்ட் காலத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன்

1 comment:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...