Tuesday, September 26, 2023

PORTSMOUTH ONLY ISLAND CITY OF U K 2. போர்ட்ஸ்மவுத் ஐக்கிய நாடுகளின் ஒரே தீவு நகரம்

 

PORTSMOUTH  ISLAND CITY OF UK

 

இன்று மாலை ஒயிட்லி நகரத்திலிருந்து புறப்பட்டு போஸ்ட்மவுத் மற்றும் சவுத்தாம்டன் ஆகிய நகரங்களை சென்று பார்த்து வந்தோம். இந்தப் பதிவில் போர்ஸ்ட்மவுத் பற்றிப் பார்க்கலாம்.

இந்த இரண்டு நகரங்களும்  ஒயிட்லியின் எதிரெதிர் திசையில் அமைந்துள்ளன.   இரண்டுமே இங்கிலாந்தின் மிக முக்கியமான நகரங்கள் உலக சரித்திரத்தின் பல பக்கங்களில் இடம்பெற்ற துறைமுகப்பட்டினங்கள்.

போர்ட்ஸ்மவுத், லண்டனுக்கு அருகில் நீருக்கு நடுவே  அமைந்த தீவு சுமார் இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் நகரம்,  ஹேம்ப்ஷயர் என்னும் கவுன்டியைச் சேர்ந்தது, இங்கிலாந்து நாட்டின் ராயல் நேவியின் தாய்வீடு, மற்றும் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளின் உறைவிடம், அத்துடன் இது ஒரு சுற்றுலா நகரமும் கூட.

போர்ட்ஸ்மவுத், லண்டனிலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவிலும், ஒயிட்லியிலிருந்து 18 கி.மீ.தொலைவிலும் உள்ளது.  

போர்ட்ஸ்மவுத்,ன் முகப்பிலேயே இரண்டு பெரிய முக்கோண வடிவிலான பாய்மர கம்பங்கள் முகப்பிலேயே நமக்கு நல்வரவு சொல்லுகின்றன.

நகரத்தின் சாலைகள் மிகவும் நவீனமாக இருந்தாலும் இரு பக்கங்களிலும் இருந்த பிரம்மாண்டமான கட்டிடங்களில் சரித்திர நெடியை உணர முடிகிறது.

 இப்போது எங்கள் கார் ஒரு செங்காவி நிற கட்டிடத்தை கடந்த போது அதன் எதிரில் கிராமர் ஸ்கூல் என்று ஒரு பெயர் பலகை வைத்திருந்தது.

 ஆங்கில இலக்கணம் சொல்லித் தருவதற்காக தனியாக ஒரு பள்ளிக்கூடமா என்ற என் ஆச்சிரியத்தை கேள்வியாக என் மகனிடம் கேட்டேன்.

கிராமர் ஸ்கூல் என்றால் இங்கிலீஷ் சொல்லித் தரும் பள்ளிக்கூடம். இங்கிலீஷ் என்றால் அவர்களுக்கு உயிர். இங்கிலீஷ் கிராமர் இல்லாமல் பேசினால் இந்த ஊர்க்காரங்களுக்கு பிடிக்காது.

இன்னும் ஒரு மாசம் இங்கே இருக்கணும். இல்லன்னா இங்லீஷ் பேசாம இருந்தா கூட நல்லது தான் என்று என் மனதை தயார் படுத்திக் கொண்டேன்.

ஒரு சமயம் என் மகனும் மகளும் லண்டனில் ஒரு டாக்ஸியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது என் மருமகள் என் மகனிடம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு வந்திருக்கிறார். அப்போது அந்த காரினை ஓட்டிய டாக்ஸி டிரைவர் என் மருமகள் பேசிய ஆங்கிலத்தில் இலக்கணம் சுத்தமாக இல்லை என்று குறிப்பிட்டாராம்.

ஆக  நீங்கள் சரியாக ஆங்கிலம் பேசவில்லை என்றால் ரோட்டில் போகும் யார்  வேண்டுமானாலும் உங்களுக்கு இலக்கண வகுப்பு எடுப்பார்கள் என்பதை நான் புர்ந்துகொண்டேன்.

 ஆங்கிலத்தை சரியாக பேச முடியவில்லை என்றால் ஏன் அதை பேச வேண்டும், என்பதுதான் இங்கே இங்கிலாந்தில் வசிக்கும் மக்களின் கருத்தாக உள்ளது. ஆங்கில மொழியின் மீது அவ்வளவு பற்றும் பாசமும் அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

அவங்க சொல்றதும் சரிதான் என்று எனக்குத் தோன்றியது அதற்குள் நாங்கள் போர்ட்ஸ்மவுத் நகரின் முக்கியமான பகுதியை அடைந்தோம்.

கிராமர் ஸ்கூல் பத்தி போதும்.  அப்பாலே போர்ட்ஸ்மவுத் பற்றி எடுத்து உடுப்பாஎன்று நான் விளையாட்டாக மெட்ராஸ் பாஷையில் பேசினேன்.

இத்தனை வருஷம் மெட்ராஸ்ல இருக்கீங்க இன்னும் கூட உங்களுக்கு இந்த மெட்ராஸ் தமிழ் சரியா வரலையேப்பா என்று சொல்லி சிரித்தான்

 இப்போது எங்கள் கார் போர்ட்ஸ்மவுத் மெமோரியல் என்னும் நினைவு ஸ்தூபியை நெருங்கியது.

 அங்கு சாலை ஓரமாக ஒரு கூட்டமாக அண்டங்காக்கைகள் வானத்தில், ஒரு அரை வட்டம் அடித்து, சரிவாக இறங்கி, அந்த சாலை ஓர புல்வெளியில் அமர்ந்தனசில காக்கைகள் துள்ளித்துள்ளி நடந்தன.

கருப்பு என்றால் அப்படி ஒரு கருப்பு நிறத்தில் இருந்தன அந்த அண்டங்காக்கைகள். எனக்கு தெரிந்தவரை நம் தமிழ்நாட்டு அண்டங்காக்கைகள் இவ்வளவு கருப்பாக இல்லை. இவை நம்ம ஊர் காக்கைகளை விட அளவில் கொஞ்சம் பெரியதாகவும் இருந்தது.

கடலோரத்தில் இருந்தது கார்நிறுத்தம் நல்லவேளை கார்கள் அதிகம் இல்லை ஏறத்தாழ அந்த நினைவு ஸ்தூபியின் எதிரிலேயே காரை பார்க் செய்தோம்.

 “இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல கடல் சாதுவாய் இருந்தது. இது வீசிய காற்றில் காற்றில் ஈரம் அதிகமாக இருந்தது. சட்டைக்கு மேல் போட்டிருந்த ஜர்க்கின்னை தாண்டி குளிர் உள்ளே புகுந்து உடலின் உஷ்ணத்தை காலி பண்ண தொடங்கியது. அப்போது மாலை 6:30 மணி.

அங்கு ரொம்ப பக்கமாக இரண்டு கண்டெய்னர் கப்பல்கள் ஃபெர்ரி என்று சொல்லும் படியான பெரும் படகுகள் நின்று கொண்டும் போய்க் கொண்டும் இருந்தன.

சற்று தொலைவில் உயர உயரமான ராட்சச கொக்குகள் மாதிரியான கிரேன்கள்  கார்களை தூக்கி கப்பலில் ஏற்றிக் கொண்டிருந்தன பல நாடுகளுக்கு இங்கிருந்து கார்கள் ஏற்றுமதி ஆகின்றன. 

1914 முதல் 1918 வரை மற்றும் 1936 முதல் 1945 வரை நடந்த கடல் போர்களில் தங்கள் உயிர்களை காணிக்கையாக தந்த வீரர்களுக்கு செலுத்தும் மரியாதையாக உயர்ந்து நிற்கும் அந்த நினைவு ஸ்தூபியை நோக்கி நடந்தோம் நாங்கள்.

கடலோர சாலை ஓரத்திலேயே நிமிர்ந்து நிற்கிறது அகன்ற ஒரு சதுக்கம் அதன் நடுவில் இந்த ஸ்தூபி, மற்றும் நினைவு மண்டபம். ஏன் எதற்கு எப்படி என்றெல்லாம் செய்திகள், சுற்றிலும் இருந்த பெயர் பலகைகளிலும் சுவற்றிலும் கற்பலகைகளிலும் பொரித்து வைத்திருக்கிறார்கள்.

இந்த நாட்டின் மண்ணையும் அதன் பெருமையையும் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரை தாரை வார்த்த வீரர்களுக்கு கல்லறையாக இருக்க பொருத்தமானது இந்த கடலை விட வேறு என்ன இருக்க முடியும் ?

இந்த நினைவு மண்டபத்தில் நின்று இவற்றையெல்லாம் படிக்கும் போது எனக்கு சாண்டில்யனின் யவன ராணியும் கடல் புறாவும் நினைவில் ஓடியது. 

சாண்டில்யனின் அந்த நாவல்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் என தோன்றியது. சாண்டில்யனின் நாவல்களுக்காக  லதா என்னும் ஓவியர் வரைந்த ஓவியங்கள் எல்லாம் இன்னும் கூட என் நினைவில் இருக்கின்றன. 

“501  ஏ டி யில் போர்ட் என்னும் பெயரை உடைய ஒரு பெரியவர்  தனது பீய்டா, மீக்லா என்ற இரண்டு மகன்களோடு  இங்கு வந்து இறங்கினார். அவர் இங்கேயே தங்கிவிட்டார். அதன் பின்னர் தான் இந்த நகரம் உருவானது. அந்த போர்ட் என்னும் பெரியவர் பெயரால்தான் இன்று வரை அதனை போர்ட்ஸ் மவுத் என்று அழைக்கிறார்கள்  என்று சரித்திரக் கதை சொல்லுகிறதுஆங்கலோ சேக்சன் கிரானிக்கல் (ANGLO SAXON CHRONICLE) இதழ்” 

1194 ம் ஆண்டில் அப்போதைய மன்னராக இருந்த  ஜான் என்பவரின் உத்தரவின்படி முதல் முறையாக போர்ட்ஸ்மவுத்ல்நேவல் பேஸ்உருவாக்கப்பட்டது. 

போர்ட்ஸ்மவுத் நகரம் இங்கிலாந்தில் ஹேம்ப்ஷயர் மாநிலத்தின் முக்கிய துறைமுக நகரம். இங்கிலாந்தின்ராயல் நேவியின் தாய்வீடு என்று சொல்லுகிறார்கள், அத்துடன் அது ஒரு சுற்றுலா நகரமும்கூட.

போர்ட்ஸ்மவுத் துறைமுகப்பட்டினம் பற்றிய அறிமுகமாக சில செய்திகளைப்பார்த்தோம். இந்தச் செய்திகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். நன்றி, வணக்கம்.

பூமி ஞானசூரியன்







No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...