Thursday, September 14, 2023

VISIT BAMBOO THEME PARK IN THIRIPURA - திரிபுரா போனால் மூங்கில் கருத்துப்பூங்கா பாருங்கள்

 

மூங்கில்  நடைபாதை

மூங்கில் பாலம்

1,இந்தியாவின் முதல் மூங்கில் கருத்துப்பூங்கா (BAMBOO THEME PARK)என்னும் பெருமைக்கு உரிய  இடத்திற்கு செல்லும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த மூங்கில் கருத்துப்பூங்கா இருக்கும் கிராமம் எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது, என்பதை பற்றி எல்லாம் இந்த கட்டுரையில் உங்களுக்கு சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

 2, “பேஷ் என்னும் இந்த மூங்கில் கிராமம்  திரிபுரா மாநிலத்தில்    அதன் தலைநகரான அகர்தலாவின் மேற்குப் பகுதியில் பங்க்ளாதேஷ் எல்லையில் அமைந்துள்ளது.  அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர கார் பயணம் தூரத்தில் 38 கி.மீ. தொலைவில் உள்ளது.  இது ஒரு சூழல் சுற்றுலா கிராமம் (ECO TOURISM VILLAGE )என்பது சிறப்புத் தகவல்..  

3,  இந்த மூங்கில் கிராமம் அமைந்துள்ள பகுதியை கட்டலமாரா என்றும் சிம்னா (KATLAMARA & SIMNA )என்றும் அழைக்கிறார்கள். இரண்டும் பேஷ் கிராமத்திற்கு அருகில் உள்ள கொஞ்சம் பெரிய கிராமங்கள்.

 4, பேஷ் கிராமம் என்றால் யாருக்கும் அதிகம் தெரிவதில்லை. அதனை மூங்கில் கிராமம் (BAMBOO VILLAGE)என்று சொல்ல வேண்டும். ஆனால் கட்லமாரா  மற்றும் சிம்னா ஆகியவை  சின்ன கிராமங்கள் ஆனாலும் அவை தெரிந்த கிராமங்களாக உள்ளன. 

5, அகர்தலாவிலிருந்து இருந்து சுமார் 38 கிலோமீட்டர் பயண தூரத்தில் அமைந்துள்ளது என்றும், இந்த பேஷ் கிராமம் வங்காள தேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது என்றும் பார்த்தோம்.

6. இந்த கிராமத்திற்கு செல்லும் போது நான் அகர்தலாவில் இருந்து கார் மூலமாக சென்றேன். காரின் கதவைத் திறந்து கையை நீட்டினால் பங்களாதேஷ் நாட்டின் இரும்பு வேலியை எட்டிப் பிடிக்கலாம்.

 7. இந்த பேஷ் கிராமம், கட்டலமரா மற்றும் சிம்னா கிராமங்கள் எல்லாம் பங்களாதேஷ் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளன. 

8. வழிநெடுக சாலையின் இரு புறத்திலும் ஏகப்பட்ட ரப்பர் மர தோட்டங்கள் நிறைய இருந்தன. காரில் பயணம் செய்யும்போதே ரப்பர் மரங்களில் ரப்பர் பாலை வடிப்பதற்காக பொருத்தி இருந்த சிறு சிறு கிண்ணங்களை எங்களால் பார்க்க முடிந்தது.

9.  என் மகன் மருமகள் இரண்டு பேரக் குழந்தைகள் எனது சம்பந்தி நான் ஓட்டுனர் என்று ஏழு பேர் இந்த கார் பயணத்தில் இருந்தோம் எனது வேண்டுகோளின் படியே இந்த பயணத்தை எனது சம்பந்தி டெப்னாத் அவர்கள்  ஏற்பாடு செய்திருந்தார்.

10. எனது சம்பந்தி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர், கம்யூனிஸ்ட் காரர், நம்ம ஊர் காமராஜர் மாதிரி மதிக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் ஒருவரின் நண்பர் மற்றும் கல்லூரி தோழர். எனது மகன் மற்றும் மருமகள் இருவரும் தற்போது அமெரிக்காவில் டல்லஸ் நகரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப்ப் பொறியாளர்கள்.

 11, ஆறு ஆண்டுகளுக்கு பின்னால்  நாங்கள் சந்தித்துக் கொண்டோம் திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவின்  தலேஷ்வரர் பகுதியில்உள்ளது எனது சம்பந்தியின் வீடு.

12. அகந்தலாவின் மேற்கு பகுதி மலை கிராமத்தில் ரப்பர் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு இடையே இந்த மூங்கில் கிராமம் அமைந்துள்ளது. அதில் என்னவெல்லாம் இருக்கும் என்று எங்களால் யோசிக்க முடியவில்லை ஆனால் திரிபுரா மாநிலம் மூங்கில் மரங்களுக்கு பேர் போன மாநிலம் என்று தெரியும்.

13. இந்தியாவில் ஏறத்தாழ 130 மூங்கில் ரகங்கள் இருக்கின்றன. அவற்றின் 40 வகையான மூங்கில் ரகங்கள் இங்கு திரிபுரா மாநிலத்தில் உள்ளன. மேலும் மூங்கில் மரங்கள் அதிகமான அளவில் வனங்களாக இருப்பது வடகிழக்கு மாநிலங்களில் தான் என்பதை நாம் அறிவோம்.

14. இது ஒரு மூங்கில் தீம் பார்க் என்று சொல்லுகிறார்கள். இதன் முக்கியமான நோக்கம் சுற்றுச்சூழல் தொடர்பான சூழலை மேம்படுத்துவது. இன்னொன்று மூங்கில் தொடர்பான தொழில்களையும் மேம்படுத்துவது.

15. இந்த இரண்டையும் மையப்படுத்தி தான் திரிபுரா மாநிலத்தில் இந்த மூங்கில் தீம் பார்க் என்ற இந்த மூங்கில் பூங்காவை அமைத்திருக்கிறார்கள். இது போன்ற மூங்கில் பூங்காக்கள் கேரளா போன்ற பல மாநிலங்களிலும் பரவலாக இருப்பதாகத் தெரிகிறது.

16. இந்த மூங்கில் பூங்கா மிகவும் சிறிய ஒரு பூங்கா தான், இதன் பரப்பளவு வெறும் 9 ஏக்கர்தான், திரும்பிய பக்கம் எல்லாம் மூங்கில் தான். ஒரு பூங்கா என்றால் நம்ம ஊரில் எல்லாம் அதில் பல வகையான மரங்கள் இருக்கும். இதில் எல்லா இடங்களிலும் மூங்கில் தான் இருக்கும். பூங்காவின் வலக்கைப்புறம் ஒரு சிற்றுண்டி சாலை, எதிரில் ஒரு 30 பேர் அமரும்படியான  ஒரு கலையரங்கம், ஒரு சிறிய தேநீர் கடை, அழகான ஓர் பெரிய குளம், தாமரை பூத்திருந்து நம் வருகைக்காக காத்திருக்கும் ஒரு பூங்குளம், குழந்தைகள் விளையா சறுக்கு மரம், ஊஞ்சல் போன்ற அமைப்புகள், ஏணிகளில் ஏறி உயரமான இடத்திற்கு சென்று அங்கிருந்து சுற்றுவட்டாரத்தை பார்ப்பதற்காக அமைப்புகள் போன்றவை எல்லாம் வைத்திருக்கிறார்கள். இவை எல்லாமே சின்ன மூங்கில் பெரிய மூங்கில், கட்டை மூங்கில் தட்டை மூங்கில், சுற்றிப்பார்க்கும் நம்மைத் தவிர எல்லாமே மூங்கில்தான்.

17. இந்த மூங்கில் பூங்காவின் நுழைவு வாயிலில் ஒரு கடை வைத்திருக்கிறார்கள் இங்கு அங்கு மூங்கில் செய்யப்பட்ட அனைத்து விதமான அழகுப்பொருட்களும்,  இங்கு விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் சுற்றுலா வருபவர்கள் இதனை வாங்கிச் செல்லலாம்.

18. தினமும் நூறு பேருக்கு குறையாமல் சுற்றுலா வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் பள்ளி குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் இங்கு வருவதை அதிகம் விரும்புகிறார்கள். யோகாவில் ஆர்வம் உடையவர்களும் இயற்கை விரும்பிகளும் குழந்தைகளும் இந்த இடத்திற்கு விரும்பி வருகிறார்கள்.

19. ஒரே ஒரு வகை மரத்திற்காக இப்படி ஒரு தீம் பார்க் இங்கு வைத்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது இதுபோல நமது தமிழ்நாட்டிலும் அந்தந்த மாவட்டத்திற்கு ஏற்ப பகுதிகளில் பிரபலமான மரங்களுக்கு இப்படிப்பட்ட தீம் பார்க் என்று சொல்லும்படியான கருத்து பூங்காக்களை அமைக்கலாம் எனக்கு  தோன்றியது.

20.இங்கு சுற்றுலா வருபவர்களுக்கு மூங்கிலின் சிறப்பு பற்றி அவர்கள் எதுவும் சொல்வதாக தெரிவதில்லை அது எனக்கு ஒரு குறையாகவே தெரிந்தது சுற்றுலா வருபவர்களுக்கு உடன் சென்று இந்தப் பூங்காவின் நோக்கம் மற்றும் இப்பகுதி மக்களுக்கு அது எப்படி பயன் தரும் வகையில் உள்ளது என்பதை பற்றியும் யாராவது ஒருவர் விளக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன்.

21. அமெரிக்கா போன்ற இடங்களில் ஒரே ஒரு மர வகைக்கா பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கும் தேசிய பூங்காக்களை நான் பார்த்திருக்கிறேன் இப்படி நம் நாட்டில் இதுபோல இதுவரை நாம் செய்யவில்லையே என்று எனக்குத் தோன்றும்.

22. ஆனால் ஒரே ஒரு வகை மரத்திற்கு இப்படி ஒரு தீம் பார்க் அமைக்க முடியும் என்று தெரிந்து கொள்வதற்கு ந்த மூங்கில் பூங்கா எனக்கு உதவியாக இருந்தது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

23. அப்போதே என் மனதில் தோன்றியது திருப்பத்தூர் மாவட்டத்தில் சந்தன மரங்களுக்கான ஒரு பூங்காவினை(SANDAL WOOD THEME PARK) அமைக்க முடியும். அமைக்கலாம் அதே போல செம்மரம் என்னும் செஞ்சந்தன மரத்திற்கான ஒரு பூங்கா வனம் ஒன்றையும் அமைக்கலாம். அதற்கு பொருத்தமான இடம் திருப்பத்தூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் இப்போது இருக்கும்  ஆட்சிதலைவரும் இதற்குப் பொருத்தமானவர்தான், என்று நினைத்தபடி அந்த பூங்காவில் இருந்து வெளியே வந்தேன்.

 நன்றி கூறிய நண்பர்களே உங்கள் மாவட்டங்களில் இதுபோல எந்த வகை மரங்களுக்கு தீம் பார்க் என்னும் கருத்துப் பூங்கா அமைக்கலாம் என்று எனக்கு சொல்லுங்கள் நன்றி வணக்கம்.

பூமி ஞானசூரியன் 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...