Sunday, September 24, 2023

DRUMSTICK IN LONDON WHITELEY - டெஸ்கோ பெருங்கடையில் வாங்கிய முருங்கைக்காய்..

LONDON WHITELEY TESCO

 நான் லண்டன் போய் சேர்ந்த பிறகு மூன்றாவது நாள் எனது மகனுடன் ஃபேர்ஹாம்'ல் உள்ள டெஸ்கோ என்ற ஒரு பெரும் கடைக்கு போயிருந்தேன். ஒயிட்லி என்பது லண்டனை சேர்ந்த ஒரு சிறிய நகரம். இங்குதான் என் மகன் வசித்து வந்தான். லண்டனிலிருந்து ஒயிட்லி 139,8 கி,மீ. தொலைவிலும் ஃபேர்ஹாம்  ஒயிட்லியிலிருந்து  8.3 கி.மீ.  தொலைவிலும் உள்ளது. அறுபது நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். அற்புதமான அந்த நாட்களின் அனுபவங்களை உங்களோடு பகிந்து கொள்ளுவதில் இது எனது முதல் கட்டுரை.  

டெஸ்கோ சூப்பர் ஸ்டோர்

அந்த கடையின் பெயர் டெஸ்கோ என்பது. அதனை சூப்பர் மார்க்கெட் என்றும் சொல்லுகிறார்கள். அது ஒரு சிறிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர். 

நமக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து எடுத்துக் கொண்டு அதன் கவுண்டரின் பில் போட்டு பணத்தை கட்டி விட்டு பொருட்களை வெளியே எடுத்து வரலாம். 

பில் போட்டு தருவதற்கு ஒரு ஆள், பில்லை வாங்கிக் கொண்டு பணத்தை வாங்குவதற்கு ஒரு ஆள். ஆனால் பெரும்பாலும் யாரும் பணமாக தருவதில்லை எல்லாம் கார்டு தான். ஆன் லைன் பேமண்ட்.

ஒரு பக்கம் காய்கறிகள் இன்னொரு பக்கம் பழங்கள்மளிகை சாமான்கள் ஒரு பக்கம்அரிசி கோதுமை பார்லி என தானியங்கள் ஒரு பக்கம், குழந்தைகள் உணவு ஒரு பக்கம்சோப்பு சீப்பு கண்ணாடி போன்றவை ஒரு பக்கம்இப்படி ஒரு வீட்டிற்கு தேவைப்படும் அத்தனை பொருட்களும் அங்கு இருந்தன.

இந்தியர்கள் வசிக்கும் பகுதி

அந்த சுற்று  வட்டாரத்தில்  அதிகமான இந்தியர்கள் வசிக்கும் பகுதியாக அது இருக்க வேண்டும் அல்லது கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் இருக்கலாம் காரணம் அவர்களுக்கு தேவைப்படும் பொருட்கள் அதிக அளவில் அங்கு இருந்தன.

இப்படி ஒரு சில கடைகளில் தான் இந்தியர்களுக்கு தேவைப்படும் பொருட்களை அதிகம் வைத்திருப்பார்கள் அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய அந்த கடைகளுக்கு தான் இந்தியர்கள் தேர்வு செய்து அங்கு சென்று வாங்குகிறார்கள்.

 வரிசையாக பெட்டிகளை அடுக்கி வைத்து அவற்றில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொட்டி வைத்திருந்தார்கள் அதற்கு அருகில் அதன் விலையையும் குறித்து வைத்திருந்தார்கள் யாரிடமும் போய் விலை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 நமக்கு என்ன காய்கள் தேவையோ எவ்வளவு தேவையோ அதை நாமே அங்கு எடை போட்டு எடுத்துக் கொள்ளலாம்.

எல்லாவற்றிற்கும் கார்டுதான்

நாம் தேர்வு செய்து எடுக்கும் அத்தனை பொருட்களையும் பில் போடும் கவுண்டருக்கு எடுத்து சென்று பில் போட வேண்டும் அடுத்த கவுண்டரில் அதற்கான பணத்தை கார்டு மூலமாக செலுத்தி விட்டு வர வேண்டும்.

 இப்போது அந்த பெரும் கடைகள் நுழைந்ததும் காய்கறிகள் வைத்திருக்கும் இடத்திற்கு சென்று அங்கு இருக்கும் காய்களையும் அவற்றின் விலைகளையும் பார்ப்போம்.

ஒரு முருங்கைக்காய் விலை

முருங்கைக்காய் ஒன்னு நூற்று ஐம்பது ரூபா  என்ற விலையை பார்த்ததும் எனக்கு மூச்சு நின்னு போச்சு. என் மகன் அதுபற்றி கவலைப்படாமல் ஐந்து காயை எடுத்து வைத்தான். நான் கையில் வாங்கி பார்த்தேன் பாதி உலர்ந்து போய் பச்சை விறகு மாதிரி இருந்தது.

ஆயிரம் காய்ச்சி முருங்கை

இந்தியாவில் தெக்குப்பட்டில் என் தோட்டத்தில் பறிக்கும் முறுங்கைக்காயை ஒரு ரூபாய்க்கு விற்றால் அது பெரிய சமாச்சாரம்.

போன வருஷம் என் தோட்டத்தில்  ஒரு முருங்கை மரம் ஆயிரம் காய் காய்த்தது. இந்தியா திரும்பியதும் அதற்கு திருஷ்டி சுத்தி போட வேண்டும். 

ஒரு சுரைக்காய் பாகற்காயை விட கொஞ்சம் பெரிசு 200 ரூபாய் 100 கிராம் பாகற்காய் 300 ரூபாய்.

சுரையும் பூசணியும்

எங்கள் கிராமத்து வீட்டுக்கூரையிலும் மாட்டுக்கொட்டகைக் கூரையிலும் பத்திருபது சுரையும் பூசணியும்  சுகமாய் மேய்ந்து கொண்டிருக்கும்.

ஊத்த சுரைக்காய் சோத்தைக் கெடுத்ததுஎன்பார் என் அப்பா, என் அம்மா அதில் பால் கூட்டு வைப்பார், அவ்வளவு சுவையாக இருக்கும். இங்கு ஒரு மினி சைஸ் சுரைக்காய்க்கு 300 ரூபாய் போர்டு வைத்திருந்தார்கள்.

நெத்திலி கருவாடும் சுரைக்காயும்

சில சமயம் சுரைக்காய் உடன் நெத்திலி கருவாடு சேர்த்து குழம்பு வைப்பார்கள், அதன் சுவையே தனி. இப்பதெல்லாம் யாரும் அதிகம் சுரைக்காயை சீண்டுவது கிடையாது.

 நிறைய வீடுகளில் குழந்தைகள் காய்கறி சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன.  இந்த காய் சாப்பிடுவது பற்றி உங்கள் வீட்டில் ஒரு பழமொழி உலவுவது உண்டு. என் மகன் இன்னும் கூட அதை ஞாபகத்தில் வைத்திருக்கிறான்.

நீ காய் சாப்பிடலெ...

 “நீ காய் சாப்பிடலன்னா அழிஞ்சி பழஞ்செவுரா  போயிடுவேஅவன் இன்னும்கூட பயந்துகொண்டு காய் சாப்பிடுகிறான். இதெல்லாம் என் மனைவி தன் தாய் வீட்டிலிருந்து கொண்டுவந்த சீதனங்கள். 

மரமேறியின் சுரைக்குடுக்கை

எங்கள் ஊர் மரமேறி சுரைக்குடுக்கையில் இருந்து பதனி ஊற்றித் தருவார். முற்றிய சுரைக்காயிலிருந்துதான் அவ்வளவு உற்தியான குடுக்கையைத்  தயார் செய்கிறார்கள் என்பது அப்போது எனக்கு தெரியாது. 

நம்ம ஊரு காயெல்லாம் இங்கே விளையற மாதிரி தெரியலஅதெல்லாம் இந்தியாவில் இருந்ததுதான் வரணும்..எனறு சொன்னான் என் மகன். 

குளிர்ப்பிரதேசசம்

இங்கு விளைவது  எல்லாமே குளிர் பிரதேசக் காய்கறிகள் தான். காரணம் லண்டன் ஒரு குளிர்ப்பிரதேசம்.

கேபேஜ், கேரட், காலிபிளவர்டர்னிப்எல்லாம் அங்கிருந்தது. இவை தவிர வெண்டைக்காய், பூசணிக்காய், தக்காளி, சக்கரை வள்ளி, கருணைக்கிழங்கு போன்றவைகளும் இங்கு விளைகின்றன. அந்த கிழங்கு வகைகளும் அந்த வரிசையில் இருந்தன.

மூட்டை மூட்டையா பணம் வேணும் 

லண்டன்ல நம்ம ஊர் காய்கறிகளை சாப்பிடணும்னா மூட்டை மூட்டையாக பணம் வேணும். விலை ஜாஸ்தி.இந்தியாவில இருந்து  வரணும் இல்லையா “ என்றான்

லண்டன் போய் சேர்ந்த மூன்றாம் நாள் காலை 11 மணி இருக்கும் வீட்டில் காலிங் பெல் அடித்தது எட்டிப் பார்த்தால் வாசலில் ஒரு வேன்.டெஸ்கோஎன்று எழுதி இருந்தது.

போய் கதவை திறந்ததும் பேக் செய்த ஒரு அட்டைப்பெட்டியை டெலிவரி செய்துவிட்டு மறக்காமல் என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு போனார் அந்த வேன் டிரைவர்.

டெஸ்கோவுக்கு போயும் வாங்கலாம் இப்படி வீட்டுக்கே கொண்டு வந்தும் தருகிறார்கள்.

அந்தப் பெட்டியை எடுத்துக் கொண்டு போய் என் மகனிடம் தந்தேன் என் மகன் அதைப்  பிரித்தான் அந்த பெட்டிக்குள் முருங்கைக்காய், சுரைக்காய், வால்பெரி, சிக்கன், மீன், கோழி இறைச்சி, எல்லாம் தனித்தனியாக சூப்பராய் பேக்கிங் செய்து இருந்தது. டெஸ்கோ இங்கு நம்பிக்கயான கடை.

 கடை கண்ணிக்கு போய் பொருள் வாங்குவது என்பது அரிதாகி விட்டது. எல்லாம் ஆன்லைன் மயம் தான். ஆர்டர் கொடுத்து விட்டால் போதும் எல்லாம் வீட்டிலேயே வந்து இறங்கி விடுகிறது, ஹோம் டெலிவரிதான் ! அதற்காக கடைக்கு போகாமலும் இல்லை. அது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கும் கூட. 

கடைக்கு நேராக போயிருந்தால் பார்த்து பொருட்களை வாங்கலாம். அந்த பேச்சுக்கே இங்கு இடம் இல்லை. அவர்களே பார்த்து பார்த்து அஅனுப்புகிறார்கள்.

பொருளின் தரம் குறித்து எதுவும் அவர்களுடன்  பேசலாம். அவர்களுக்கு  கடிதம் எழுதலாம், அதற்கு அவர்கள்   நமக்கு உதவியாக இருக்கிறார்கள். தொடர்ந்து நீங்கள் அவர்களின் கஷ்டமராக இருக்க வேண்டும் அவ்வளவுதான். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

டெஸ்கோ என்பது ஒயிட்லி என்ற ஒரு சிறு நகரில் இருக்கும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர். என் மகன் வீட்டிலிருந்து 10 நிமிட கார்பயண தூரத்தில் அது இருந்தது. எது வாங்குவதாக இருந்தாலும் அங்கு தான் இவர்கள் வாங்குகிறார்கள். நம்பிக்கை.

இன்னொரு முக்கியமான விஷயம் இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள் ஆர்கானிக் என்ற லேபிள் ஒட்டியுள்ளது. அந்த லேபில் இருந்த பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். வாங்குபவர்களும் கண்ணை மூடிக்கொண்டு வாங்குகிறார்கள்.

அடுத்த நாள்  டெஸ்கோ முருங்கைக்காயை சமைத்த போது  சாம்பாரில் இந்திய வாசனை வீசியது, சாம்பாருக்கென்றே அவதாரம் எடுத்தது முருங்கை.
பூமி ஞானசூரியன்                                                                                                                                                                                                                                                                                             
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        







No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...