Friday, September 29, 2023

DEMISE OF MS SWAMINATHAN FATHER OF GREEN REVOLUTION - பசுமைப் புரட்சியின் தந்தை எம் எஸ் சுவாமிநாதன் மறைவு

DEMISE OF MS SWAMINATHAN 

FATHER OF GREEN REVOLUTION

இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை

விவசாய விஞ்ஞானி

எம் எஸ் சுவாமிநாதன் மறைவு

உலக அளவிலான வேளாண்மை விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள் தனது 98 வது வயதில்சென்னையில் செப்டம்பர் 28ஆம் தேதி வியாழக்கிழமை இயற்கை எய்தினார். அவர் ஒரு உழவியல் நிபுணர் வேளாண்மை விஞ்ஞானிமற்றும் சமூகவியல் அறிஞர். இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என கொண்டாடப்படுபவர்

இந்தியாவில் ஏற்பட்ட பசுமை புரட்சிக்கு,அடித்தளமாக மூல வேராக விதையாக விளங்கியவர்  எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள். இந்தியாவிற்கு மட்டுமல்ல உலக அளவிலான வேளாண்மை நிபுணராக அறியப்பட்டவர்.

வேளாண்மை ஆராய்ச்சியின் மூலமாக புதிய பயிர் ரகங்கள் புதிய பயிர் உற்பத்திக்கான தொழில் நுட்பங்கள் என்று உருவாக்கி நாட்டின் வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கி  உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்ற நிலையை உருவாக்கியதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் சுமார் 31 பெரிதுமான பஞ்சங்கள் தோன்றின கோடிக்கணக்கான மக்கள் பட்டினியில் செத்துப் போனார்கள். 

அப்போது இருந்த மக்கள் தொகைக்கு தேவையான உணவு தர இறக்குமதியை நம்பி இருந்தோம். 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 34 கோடியாக இருந்தது.  இன்ரைய இந்தியாவின் மக்கள் தொகை 143 .16.கோடி.  இன்று இந்தியா  பிற நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யும் நிலையில் உள்ளது.  அதற்கு முக்கியக் காரணம் பசுமைப் புரட்சி. அதற்கு அடித்தளம் அமைத்த எம் எஸ் சுவாமினாதன் அவர்கள்.

எம் எஸ் சுவாமினாதன், முதுமை காரணமாக சில காலம் சென்னையில் தேனாம்பேட்டை உள்ள தனது இல்லத்தில் ஓய்வாக வசித்து வந்தார். அண்மை காலமாக உடல் நலிவுற்றிருந்த அவர் வியாழக்கிழமை காலை 11 20 மணிக்கு இயற்கை  எய்தினார்.

எம் எஸ் சுவாமிநாதன் அவர்கள் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்.  அவருடைய குடும்பம் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் குடியேறியது. அங்கு  அவர் பிறந்தது 1925 ஆம் ஆண்டு. அங்கேயே வளர்ந்து கும்பகோணத்திலேயே அவர் தனது பள்ளி படிப்பை படித்து முடித்தார். 






அவருடைய தந்தை பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர்.அவருடைய  பெயர் எம் கே சாம்பசிவம். சுதந்திர போராட்டத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

சுவாமிநாதன் இளம் வயதில் தனது தாய் பார்வதி தங்கம்மாள் அரவணைப்பில் வளர்ந்தார் இளம் வயதிலேயே அவருக்கு வேளாண்மையில் நாட்டம் இருந்தது.

பள்ளிப்படிப்பை முடித்ததும் அவர் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியிலும் கோவை வேளாண்மை கல்லூரியிலும்  இளநிலை பட்டங்களை பெற்றார்.

1949 ஆம் ஆண்டு  வேளாண்மை ஆராய்ச்சியைத் தொடங்கிய தனது இறுதி மூச்சு வரை அதனைத்  தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆனது அதன் உணவு உற்பத்தி என்பதில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். உணவு உற்பத்தி இல்லாமல் அல்லது அதனை தவிர்த்து விட்டு இதர வளர்ச்சிகளை உருவாக்குவது என்பது அடித்தளம் இல்லாமல் வீடு கட்டுவது போன்றது என்று அவர் நம்பினார்.

ஆரம்ப காலத்தில் அவர் உருளைக்கிழங்கு நெல் மற்றும் கோதுமை ஆகிய பயிர்களின் மரபணுக்கள் குறித்த ஆராய்ச்சிகளை செய்து வந்தார்.

அமெரிக்காவின் வேளாண்மை விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்ற நார்மன் போர்லக்குடன்  இணைந்து அவருடைய ஆலோசனையுடன் இந்தியாவிற்கான உயர்  விளைச்சல் தரும்  கோதுமை ரகங்களை கண்டறியப்பட்டது.

எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த உயர்வு விளைச்சல் கோதுமை ரகங்கள் தான் இந்தியாவில் ஏற்பட்ட பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக விளங்கியது. அதனால் தான் இந்தியாவின் பசுமை புரட்சியின்  தந்தை என்று இன்றளவும் போற்றப்படுகிறார்.

இந்தியாவிலும் பல அயல் நாடுகளிலும் இயங்கி வந்த ஆராய்ச்சி நிறுவனங்களில், பல உயர் பொறுப்புகளை அவர் வகித்து வந்துள்ளார். 1979 ஆம் ஆண்டு மத்திய வேளாண்மை துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றினார்.

சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் தலைவராகவும் தேசிய விவசாயிகள் ஆணையம் மற்றும் உலக உணவு பாதுகாப்பு அமைப்பின் நிபுணர் குழுவின் தலைவராகவும் ஆக்கப்பூர்வமாக பணியாற்றியுள்ளார்.

 2007 ஆம் ஆண்டு அன்றைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் , ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,   சாந்தி ஸ்வரூப் பட் நாகர்,   மகசேசேசர்வதேச உணவு பாதுகாப்பு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.இதுவரை 84 கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.

சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், பொருளாதார நிபுணர் மதுரா சுவாமிநாதன்சமூக செயல்பாட்டாளர் நித்யா ராவ் ஆகிய மூவரும் எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எம் எஸ் சுவாமிநாதன் அவர்களின் உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்  வெங்கையா நாயுடு உட்பட பல பிரபலங்கள் அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்களின் அஞ்சலிக்காக அவருடைய உடல் தரமணியில் உள்ள எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 30ஆம் தேதி) காலை 10 மணி வரை வைக்கப்பட உள்ளது இறுதி சடங்கும் அன்று  நடைபெற உள்ளது.

எம் எஸ் சுவாமிநாதன் அவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை மரியாதையுடன் சனிக்கிழமை(செப்30) அன்று இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நமது குடியரசு தலைவர் திரவ்பதி முர்மு அவர்கள், உணவு பாதுகாப்பிற்காக தொலைநோக்கு பார்வையுடன் ஓய்வின்றி உழைத்தவர் என்று தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் அவர்களின் இரங்கல் செய்தியில் உணவுப் பாதுகாப்பை பல  லட்சக்கணக்கான விவசாயிகளின் வளமைக்கும் ஏற்பாடு செய்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அவருடைய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது, நமது தேசத்தின் உணவு பாதுகாப்பையும் உறுதி செய்தது என்று தெரிவித்துள்ளார்.

நவீன பாரதத்தை கட்டமைத்தவர் அவர், எப்போதும் நம் இதயங்களிலும் மனதிலும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார், என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி. 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேட்டிவ் மேல்நிலை பள்ளி  மாணவர்கள்  எம் எஸ் சுவாமினாதன் அவர்களுக்கு, தங்கள் பள்ளியின் பழைய மாணவர் என்ற  முறையில் அஞ்சலி செலுத்தினர்.

 பூமி ஞானசூரியன்

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...