Saturday, July 1, 2023

ODAL CURES PREMATURE EJACULATION IN MEN 208. ஆண்மையின்மையைத் தடுக்கும் ஒடல் மரம்

 

ஆண்மையின்மையைத் தடுக்கும்
ஒடல் மரம்


(ODAL / YAANAIKATTY MARAM, STERCULIA VILLOSA, MALVACEAE)

தாவரவியல் பெயர்: ஸ்டெர்குலியா வில்லோசா (STERCULIA VILLOSA)

தாவரக் குடும்பம் பெயர்: மால்வேசியே (MALVACEAE)

பொதுப் பெயர்: எலிபெண்ட் ரோப் ட்ரீ: (ODAL / YAANAIKATTY MARAM)

 தாயகம்: இந்தியா (அந்தமான் நிகோபார் தீவுகள்)

தேக்கு போன்ற மரங்கள் டிம்பர் டின்னும் கட்டைகளுக்கு பெயர்போனவை. வேம்பு போன்றவை மருத்துவ குணங்களுக்கு பிரபலமானவை. மாமரங்கள் பழத்துக்கு உரியவை. சரக்கொன்றை பூக்களுக்கு உரியவை.  அதுபோல ஓடல் மரம் கயிறுகள் தயாரிப்புக்குப் பெயர்போனது. இந்த மரத்தின் பெயரே யானைக்கயிறு மரம். ஆங்கிலத்தில் எலிபண்ட் ரோப் ட்ரீ.

இது அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு உரிய மரம்.  சிறிய மரம்.  சாதகமான சூழலில் பெரியதாக படர்ந்து கூட வளரும்.  அதிகபட்சமாக 10 மீட்டர் உயரம் வரை வளரும்.  இதன் வேர்கள், பட்டைகள், மரம், பிசின் ஆகிய அனைத்துமே உணவாகப் பயன்படுத்துகிறார்கள்.  இதற்காக காடுகளிலிருந்து இவற்றை சேகரித்து வருகிறார்கள்.  இதிலிருந்து எடுக்கும் நாருக்காக இதனை வளர்க்கவும் செய்கிறார்கள்.

இந்தியா உட்பட சைனா, நேப்பாளம், பூட்டான், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா, ஆகிய நாடுகளிலும் ஒடல் மரம் பரவியுள்ளது.  500 முதல் 1500 மீட்டர் உயரம் உள்ள காடுகளில் இந்த மரங்கள் வளருகின்றன.

கூடுதலான வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளருகின்றன.  ஆண்டுக்கு சராசரியாக 1300 முதல் 1900 மி.மீ. மழை பெரும் இடங்கள் இதற்குப் பொருத்தமானவை.  அதிக மழை பெய்யும் இடங்களை இது தாக்குப் பிடிக்காது.  நிறைய சூரிய ஒளி தேவை.  வடிகால் வசதி உள்ள மண்ணில் நன்றாக வளரும்.  ஆனாலும் சுமாரான மண்கண்டம் மற்றும் கல்லாங் கரடுகளைக்கூட தாங்கி வளரும்.      

இதன் வேர்களை மாவாக்கி அதனை இதர மாவுடன் கலந்து ரொட்டி சுட்டு சாப்பிடுகிறார்கள்.  இந்த மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களில் இந்த பழக்கம் உள்ளது.  அப்படி சேர்த்தால் அந்த ரொட்டிகள், மிருதுவாகவும், சுவையாகவும் மாறிவிடுகின்றன, என்கிறார்கள்.  வேர்கடலை போல இதன் விதைகளை வறுத்து அல்லது அவித்து சுண்டலபோல சாப்படுகிறார்கள்.

வளர்ந்த மரங்களில் பிசின் வடிக்கிறார்கள். ஒரு மரத்தில் அதிகபட்சம் 5 முறை பிசின் எடுக்கலாம். இந்தப் பிசினை மிட்டாய்கள், கேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்.  இதற்காக உபயோகப்படுத்தும்  டிரகாகான்த் (TRAGACANTH) என்னும் பொருளுக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்துகிறார்கள். இந்த டிரகாகான்த்ஐ பாலைவனங்களில் வளரும் ஒருவிதமான செடிகளிலிருந்து எடுக்கிறார்கள்.

ஒடல் மரத்தின் பட்டைகள் மிகவும் பிரபலமானவை. மேல்பட்டையிலிருந்து ஒரு முரட்டு கயிறு தயார் செய்யலாம்.  அடிப்பட்டையிலிருந்து சராசரி கயிற்றினை தயாரிக்கலாம்.  இந்தக் கயிறுகளை தண்ணீரில் நனைக்க, மேலும் உறுதியாகும்.  அடிக்கடி நனைக்கப்படும் கயிறுகள் அதிகபட்சமாக ஆறுமாதம்வரைதான் தாக்குப் பிடிக்கும். அநேகமாக இந்தக் கயிறுகளை யானைகள் கட்ட பயன்படுத்தியிருக்க வேண்டும். 

இந்த மரத்திலிருந்து எடுக்கும் மரக் கூழிலிருந்து தரமான பேப்பர் தயாரிக்கிறார்கள்.  மற்றபடி மரங்கள் உறுதியானதல்ல.

இந்தியாவில், அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம், ஒரிசா ஆகிய இடங்களில் அதிகம் உள்ளது: மஹாராஷ்ட்ராவில், பூனா, ராய்காட் மற்றும் ரத்னகிரி, சிந்துதுர்க், கர்நாடகாவில், கூர்க், நார்த் கேனரா, மற்றும் சவுத்கேனரா: கேரளாவில், இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம், திருச்சூர், மற்றும் வீநாடு, தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் இந்த மரங்கள் பரவியுள்ளன.  இவை தவிர அந்தமான் நிகோபார் தீவுகளும் இந்தப் பட்டியலில் அடங்கும்.

மரங்கள் நடுத்தரமானவை. இலைகள் அகலமான பிளவுகளை உடைய பெரிய இலைகள். இளம் இலைகள் சிவந்து இருக்கும். மரத்தின் தலைக்கம் அடர்த்தியாய் இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பூக்கும்.

ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை. ஏப்ரல், முதல் ஜூன் வரையான காலங்களில் கனிகளாகும். விதைகள் பளிச்சென்ற கருப்பு நிறத்தில் இருக்கும். பழங்கள் செங்காவி நிறத்தில் இருக்கும்.

ஓடல் மரத்தின் பல மொழிப் பெயர்கள்

தமிழ்: ஒடல் (ODAL)

அசாமிஸ்: ஒடல், உடல் (ODAL / UDAL)

ஆங்கிலம்  பொதுப் பெயர்: எலிபெண்ட் ரோப் ட்ரீ(ELEPHANT ROPE TREE)

மலையாளம்: லக்கநாரு மரம், வக்கா (LAKKANARU MARAM, VAKKA)

இதர பெயர்கள்: முருத்தன், வக்க நார், சர்தோல் (MURUTHAN, VAKKANAR, SARDOL)

மராத்தி: சர்தோல் (SARDOL)

பங்ளாதேஷ்;: சாம்பிங், சாம்பை, பி யோ பா, யா சிங், டியா சிங், உமாக் - பழங்குடி மக்களின் மொழிகளில் (SAMPING, SAMBAI, PI YO PA, YA SING, UMAK)

இந்த மரம் மருத்துவ குணங்களை உடையதும் கூட. சிலருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு சிரமமின்றி சிறுநீர் கழிக்க வகை செய்யும். அது மட்டுமின்றி தோல் சம்மந்தப்பட்ட நோய்களை  குணப்படுத்தும். பெரும்பாலும் பழங்குடி மக்களிடையே தோல் சம்மந்தப்பட்ட நோய்கள்தான் பெரும் பிரச்சினையாக இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும். 

சிலரின் உடம்பு அடுப்பு மாதிரி எப்பொதும் கபகபவென எரிந்துகொண்டெ இருக்கும். அதுமாதிரியான உடலின் சூட்டைத் தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும். முக்கியமாக சிற்றின்ப நுகர்வைத் தூண்டுவது, ஆண்மையின்மையைப் போக்குவது போன்ற காரியங்களுக்குத்தான் இது அதிகம் பயனாகிறது.     பங்ளாதேஷின் காடுகளில் ஒடல் மரங்கள் அதிகம் உள்ளன: அவை சிட்டகாங், காக்ஸ் பர், காசிப்பூர், டாங்கெயில், கோமில்லா மற்றும் ஹபிகன்ஞ்.

ஒடல் மரத்திற்கு ஏகப்பட்ட தமிழ்ப் பெயர்கள்

ஒடல் மரத்திற்கு ஏகப்பட்ட தமிழ்ப் பெயர்கள் இருந்துள்ளன. ஆனைநார், கொட்டை தணக்கு, முருத்தான், ஒடல், வாகை, வாகைநார், வாகு, வாகுநார் - இப்படி பல தமிழ்பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அத்தோடு கன்னடத்தில் 30 பெயர்களும், தெலுங்கில் 17 பெயர்களும், இந்தியில் 10 ம், மலையாளத்தில் 6 ம், மராத்தியில் நான்கும் உள்ளன.

ஆனைக் கயிறு மரம்

ஒரு காலத்தில் கயிறு திரிப்பதுஎன்றால் கொண்டா ஒடல்என்பார்கள் என நினைக்கிறேன்.  அப்போது யானையைக்கூட கட்டுவது என்றால் ஒடல்கயிறுதான் பயன்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.  இல்லை யென்றால் இதற்கு ஆனைக் கயிறு மரம்என்று பெயர் வைத்திருப்பார்களா?  ‘ஆனைநார்என்று கூட ஒரு பெயர் இருக்கிறது.  ஆனால் அது பற்றிய அதிகாரப் பூர்வமான தகவல் எதும் கிடைக்கவில்லை, இப்போதைக்கு.

புதிய இலைகளைப் பறித்து தண்ணீரில் போட்டு ஒர் இரவு முழுக்க ஊறவைத்து தினமும் காலையில், வடித்துக் குடித்தால் உடல் பலவீனம் சரியாகும். புதிய உற்சாகமும் சுறுசுறுப்பும் பிறக்கும்.

இதன் இலைக் காம்புகள் மரவள்ளிபோல, ஆமணக்கு போல நீளமாக உள்ளது. இலைகள் கூட முக ஜாடை அப்படியே உள்ளது. இந்த இலைக் காம்புகளை சர்பத்போட்டு சாப்பிட கீல்வாதம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளும் சரியாகும்.

ஆண்மையின்மை, மற்றும் விரைந்து விந்து வெளியேறுதல்  போன்றவற்றை குணப்படுத்த அதன் இலைகளை பயன்படுத்துகிறார்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...