Saturday, July 1, 2023

ANDAMAN SEMMARAM PROTECTS OUR KIDNEY 209. நமது சிறு நீரகத்தை பாதுகாக்கும் அந்தமான் செம்மரம்

 

சிறு நீரகத்தை பாதுகாக்கும்
அந்தமான் செம்மரம்


(ANDAMAN SEMMARAM, PTEROCARPUS INDICUS, FABACEAE, ANDAMAN REDWOOD, AMBOYNA WOOD, MALAY PADAK, POPUA NEWGUINEA ROSE WOOD, PHILLIPINES MAHOGONY, BURMIS ROSEWOOD, NARA,PASH PADOK)

தாவரவியல் பெயர்: டெரோகார்ப்பஸ் இண்டிகஸ் (PTEROCARPUS INDICUS)

தாவரக் குடும்பம் பெயர்: பேபேசியே (FABACEAE)

பொதுப் பெயர்கள்: அந்தமான் ரெட்வுட், அம்பாய்னாவுட், மலாய் படாக், பப்புவா நியூகினியா ரோஸ்வுட், பிலிப்பைன்ஸ் மகோகனி, பர்மிஸ் ரோஸ்வுட், நாரா, பாஷ்  படாக் (ANDAMAN REDWOOD, AMBOYNA WOOD, MALAY PADAK, POPUA NEWGUINEA ROSE WOOD, PHILLIPINES MAHOGONY, BURMIS ROSEWOOD, NARA,PASH PADOK, )

தாயகம்: தென் கிழக்கு ஆசியா

உலகத்தரமான, மரகட்டைகள் தரும். பாரம்பரிய மருத்துவ முறைகளின் மூலம் கேன்சர் உட்பட பல நோய்களைக் கட்டுப்படுத்தும். உணவாகும் பூக்களும் மரங்களும் தரும். தோட்டப் பயிர்களுக்கு நிழல் மரமாகும். கினோ பிசின் தரும். குளிக்க ஷேம்பு தரும். மணல் முதல் களிவரை தாங்கி வளரும். அழகு மரமாகவும் நட பாந்தமான காட்டுமரம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மரம்

தென் கிழக்கு ஆசியா உட்பட பலநாடுகளுக்கு சொந்தமானது இந்த மரம். அவை வடக்கு ஆஸ்திரேலியா, மேற்கு பசுபிக் தீவுகள், கம்போடியா, சைனா, கிழக்கு தைமூர், இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ், நியூக்குத் தீவுகள், சாலமன் தீவுகள், தாய்லாந்து மற்றும் வியட்நாம்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த மரத்தைக் கொண்டாடுகிறார்கள்: காரணம், அது அந்த நாட்டின் தேசிய மரம் (ANDAMAN SEMMARAM).

இந்த மரத்தின் வயிரப் பகுதி கட்டைகளுக்கு சர்வதேச சந்தையில் பெரும் மதிப்பு உள்ளது.  விரல்விட்டு எண்ணக் கூடிய அரிதான மரங்களில் ஒன்று இது.  செங்கல் சிவப்பு மற்றும் கவர்ச்சிகரமான தங்கநிறம் கலந்த காவி நிறத்தில் இருக்கும்.  இந்த மரத்தில் வேலை பார்க்கும்போது ரோஜாப் பூ வாசனை கமகமக்கும்.  கட்டைகள் நடுத்தர எடையும் கடினத்தன்மையும் கொண்டது.

அந்தமான் செம்மரம். நம்பர் ஒன் கட்டை மரம்

ஒரு நல்ல தரமான மரம் என்றால், அது கடைசல் வேலை செய்யப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.  இழைத்து வேலை செய்ய அது சம்மதிக்க வேண்டும். இழைக்க இழைக்க பளபளப்பும், மெருகும் கூட வேண்டும். நீடித்து உழைக்க வேண்டும்.

கரையானால் அரிக்கப்படாமல் இருக்க வேண்டும். நீரில் அமிழ்ந்திருந்தாலும் அது அழுகாமல் இருக்க வேண்டும். மரச் சாமான்களை அழகுபடுத்த, அலங்காரம் செய்ய ஏற்ற மரத்தகடுகள் (VENEER) தர வேண்டும். இவை அத்தனைத் தகுதிகளையும் உடையது. இந்த அந்தமான் செம்மரம். நம்பர் ஒன் கட்டை மரம் இது.

மருத்துவ மரமும் கூட

பல நாடுகளிலும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் காலம் காலமாக பயன்பட்டு வருகிறது. இதன் இலைப்பொடியை தண்ணிரில் கலந்து குடிப்பது தலைவலியை குணப்படுத்தும்.

மலச்சிக்கல், வயிற்றுவலி, காய்ச்சல், ஆஸ்துமா, வாய்ப்புண் போன்றவற்றை குணப்படுத்த, இதன் தளிர் இலைகளிலிருந்து கஷாயம் தயாரித்துக் குடிக்கக் கொடுக்கிறார்கள்.

சிலர் எப்போதும் வறட்டு இருமலாக இருமிக் கொண்டிருப்பார்கள்: அவர்கள், இதன் இலைகளை வெற்றிலைப் பாக்குபோல அவ்வப்போது மென்றால் போதுமானது.

இதன் இளம் தளிர் இலைகளை அரைத்து கூழாக்கிஇ கட்டிகள், புண்கள் ஆகிய வற்றின் மீதுத் தடவ அவை அற்புதமாகக் குணம் ஆகும்.

உலர்ந்த இலைத்தூளைத் தடவுவதன் மூலம், பெண் உறுப்பில் ஏற்படும் புண்களை ஆற்றலாம்.  இதன் இலைச் சாற்றைப் பயன்படுத்தி மேகப்புண் அல்லது கிரந்திப் புண்ணை குணப்படுத்தலாம்.

புற்றுநோயை பரவாமல் தடுக்கும்

பெண்களின் மதவிடாய் பிரச்சினைகளைத் தீர்க்க இதன் பட்டைகளை பயன்படுத்துகிறார்கள்: இதன் இலைகளை மென்றால் போதும், மாதவிடாய் சீராகும்.

இதன் பட்டைக் கஷாயத்தை மருந்தாகப் பயன்படுத்தி நுரையீரல் அமற்சி என்னும் நிமோனியா காய்ச்சலை குணப்படுத்தலாம்.

பட்டைச் சாற்றினை உடலில் ஏற்படும் புண்கள்இ மற்றும் காய்ங்களின் மீது தடவுவதன் மூலம் அவற்றை விரைந்து குணப்படுத்த முடியும்.

இதன் இலைகளில் கேன்சர் என்னும் புற்றுநோயை பரவாமல் தடுக்கும் சக்தி இருப்பதாகக் கண்டுள்ளார்கள். இது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

நம் ஊரில் கடத்தலுக்கு பெயர்போன செஞ்சந்தன மரத்திற்கு நெருங்கிய சொந்தமானது அந்தமான் செம்மரம்.  இதன் பட்டையிலிருந்து எடுக்கும் சிவப்பு சாயம் செஞ்சந்தன சாயத்தை விட தரமாக உள்ளது.

வேங்கை மரத்திலிருந்து கினோஎன்னும் பிசின் எடுத்து வணிகரீதியில் பயன்படுத்துகிறார்கள்.  வெப்ப மண்டலத்தில் வளரும் மரங்கள் எல்லாவற்றிலும் இந்தவகைப் பிசின்கள் கிடைக்கும்.  அவ்வகைப் பிசினையும் இந்த மரம் கொஞ்சம் தாராளமாகத் தரும்.  இதனை தோல் பதனிடவும் பயன்படுத்துகிறார்கள்.  மருந்துகள் தயாரிப்பதில் இதனை துவர்ப்பியாக (ANDAMAN SEMMARAM) உபயோகப்படுத்துகிறார்கள். 

இதன் இளம் தளிர்கள், மற்றும் பூக்களை சமையலில் பயன்படுத்துகிறார்கள்: புதுத்தளிர், மற்றும் பூக்கும் பருவங்களில், இவற்றை உபயோகப் படுத்துகிறார்கள்: இதன் கிளைகள் மற்றும் சிம்புகள், விறகாகவும் உதவுகின்றன.  நல்ல விறகு என்று சொல்ல முடியாது: ஆனால் இந்த மரங்கள் மத்தாப்பு மாதிரி பச்சை நிற ஜுவாலையோடு எரியும்.

தலையில் முடியில்லா இளைஞர்கள்

இன்றைய காலகட்டத்தில், நாற்பது வயதுவரை கூட தலைமுடி தலையில் தாக்குப் பிடிப்பதில்லை. முப்பதுகளின் தொடக்கத்திலேயே இலையுதிர்காலம் போல முடி உதிர் காலம் தொடங்கிவிடுகிறது. அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது அதிகப்படியாகப் பயன்படுத்தும் ஷேம்பு’. அதற்கு வாழும் உதாரணமாக நிறையபேர் இருக்கிறார்கள்.

சீயக்காய் போட்டு குளிக்கும்போது மயிர்க்கற்றைகள் எல்லாம் குச்சிகள்போல ஸ்ட்டிப்பாக எழுந்து நிற்கும்: அதாவது மேலும் மேலும் உறுதியாகும். ஆனால் ஷேம்பு போட்டு குளிக்கும்போது முடியின் உறுதித்தன்மை மட்டுமல்ல முடியும் உதிர்ந்துபோகின்றன. இன்றைக்கு இளைஞர்களுக்கு தலைமுடியைப் பாதுகாப்பது என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. பெரும்பலான இளைஞர்களைப் பார்க்கும்போது எனக்கு தோகை இல்லாத மயில்கள் போலத் தெரிகிறார்கள்.

இதன் வேர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை மடக்கிப் பிடித்து மண்ணில் சேமிக்கின்றன. சேமித்தவற்றை பயிர்களுக்குத் தருகின்றன.  அதனால் இந்த மரங்களை வேளாண்மை நிலங்களில் வளர்க்க சிபாரிசு செய்கிறார்கள். காப்பி பயிர்களின் ஊடாக நிழல் மரங்களாக வளர்க்கிறார்கள். நகர்ப்புறங்களில் சாலைகளில் கூட அழகுக்காக வளர்க்கலாம். 

வெப்பமான பகுதிகளில் கொஞ்சம் ஈரம் மிச்சமான இடங்கள் ஏற்றவை. கடல் மட்டத்திலிருந்து 750 மீட்டர் வரை உயரமான பகுதிகள் இதற்குச் சாதகமான சூழல். கொஞ்சம் கூடுதலாக மழைபெறும் இடங்களில் நன்றாக வளரும். மணல்சாரியான நிலங்கள்  முதல் களிமண் பாங்கான மண்கண்டம் வரை பரவலான மண்வகைகளையும் தாங்கி வளரும். நடுத்தரமானது முதல் அமிலத்தன்மை வரையான மண்ணிலும் நன்றாய் வளரும்.

சிங்கப்பூரில் வளரும் மரங்கள் வேகமாக வளர்கின்றன. ஐந்து முதல் 10 ஆண்டுகளில் பூக்கத் தொடங்குகின்றன. பன்னிரண்டு மாதங்களும் பூக்கும். ஆண்டு முழுவதும் பூக்கும், காய்க்கும், பழுக்கும்.

சிறந்தகிட்னிவுட் என்ற அந்தஸ்தை பெற்ற மரம்

இந்த மரங்களின் வேர்கள் கொஞ்சம் மேலாக ஒட ஆரம்பிக்கும்: அதனால் கட்டிடங்களிலிருந்து, கொஞ்சம் நடுவது நல்லது.

விதைகளிலிருந்து தயாரிக்கும் நாற்றுக்களை நடலாம். வேர்க்குச்சிகளை நடலாம். மணலில், களிமண்ணில், அமில மண்ணில், பரவலான மண்வகைகளில் நடலாம். 

மூன்று நூற்றாண்டுகளாக, சிறுநீர் பெருக்கி என்ற அந்தஸ்தை பெற்ற இரண்டு மரங்களில் ஒன்று, இந்த அந்தமான் செம்மரம். இன்னொரு மரத்தின் தாவரவியல் பெயர் ஐசன்ஹார்ஷியா பாலிஸ்டேச்சா (EYSENHARDTIA POLYSTACHYA) என்புது. இதற்கு மெக்சிகன் கிட்னிவுட்என்று பெயர். அது கிட்னிவுட் என்றால் இதனை அந்தமான் கிட்னி வுட் என்றுகூட சொல்லலாம்.  இந்த அந்தமான் கிட்னி வுட் மரங்களை ஆற்றங்கரை மற்றும் ஒடைக்கரைகளில் வளர்க்கலாம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...