Monday, June 12, 2023

THANGA ARALI GIVES ROUND THE YEAR FLOWERS - ஆண்டு முழுக்க அட்டகாசமாக பூக்கும் தங்க அரளி

 

தங்க அரளி - YELLOW BELLS
Tecoma stans

வேலிகளையே பூக்களால் அலங்கரிக்க விரும்புவர்களுக்கும் தோட்டத்தில் ஆண்டு முழுவதும் பூக்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கும் கைக்கெட்டும் தொலைவில் ஒரு தங்க அரளியை நட நான் சிபாரிசு செய்கிறேன். 

05. தங்க அரளி

(YELLOW BELLS)

88888888888888888888888888888888888888888

சிறப்பு, தென் அமெரிக்க மரமாக இருந்தாலும் இந்தியா முழுக்க உள்ளுர் மரம் போல வீட்டுக்கு வீடு காணப்படுவது, சீக்கிரமாய் வளர்வது, ஆண்டு முழுவதும் பூப்பது, அரைத்த மஞ்சள் நிறத்தில் கவர்ச்சிகாட்டுவதுகொளுத்தும் வெப்பத்தைத் தாங்குவது, தாக்கும் பூச்சி நோய்களைத் தாக்குப் பிடிப்பது, குறைவான நிலப்பரப்பில் தன்னை வளர்த்துக் கொள்வது, வானத்தைத் தொட்டுவிட துடிக்காமல் 15 முதல் 20 உயரத்தில் வளர்ந்து நிற்பது, சிம்புகளை கிளைகளை எவ்வளவு கழித்தாலும் கவலைப்படாமல் தொடர்ந்து வளர்வது.

கொலம்பஸ் பெயர்வைத்த மரம்

சொந்த மண், அமெரிக்காவின் விர்ஜின் தீவுகள். அந்தத் தீவின் அரசு மரம். கரிபியன் கடலில் இருக்கும் தீவுகளுக்கு, கரிபியன் தீவுகள் என்று பெயர். கரிபியனில் உள்ள இன்னொரு கொத்து தீவுகள்தான் விர்ஜின் தீவுகள். இதற்கு ஒரு சிறப்பு உண்டு. இவற்றிற்கு பெயர் வைத்தது  கிறிஸ்டோபர் கொலம்பஸ்.

இது ஒரு மூலிகையாகக்கூட பயன்படுகிறது. சிறுநீர்ப்பெருக்கியாக (DIURETIC), உடல் உரமூட்டியாக (TONIC), மேகப்புண் நோய் நீக்கியாக (ANTI SIPHILIC), சக்கரைநோய்த் தடுப்பாக, குடற்புழுக் கொல்லியாக (VERMIFUGE) இதன் இலை, பட்டை, பூ, காய், வேர், என எல்லாமே மருந்தாகிறது.

பீர் தயரிக்கலாம்

மேக்சிகோவைச் சேர்ந்த வளைகுடா நாடு வேராகுரூஸ். இங்கு தங்க அரளியின் பூக்கள் மற்றும் பட்டைகளிலிருந்து எடுக்கும் சாற்றை வயிற்றுவலிக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். குவாதலஜரா (GWADALAJARA) என்னுமிடத்தில் இதன் வேர்களில் பீர் தயாரிக்கிறார்கள். எந்த வேர்கொடுத்தாலும் அதில் பீர் தயார் பண்ணிவிடுவார்கள் மெக்சிகோக்காரர்கள்.  மெக்சிகோ, மத்திய அமேரிக்கா, மற்றும் தென் அமெரிக்காவில் சக்கரை நோயை குணப்படுத்தவும் இது  பயன்படுகிறது.  

 

1.பல மொழிப் பெயர்கள்

1.1. தமிழ் : தங்க அரளி, சொர்ணப்பட்டி (THANGA ARALI, SORNAPATTY)

1.2. இந்தி: பிலியா, சோனாப்பட்டி (PILIA, SONAPATTY)

1.3. கன்னடா: கோரநேக்லார் (GORANAKELAR)

1.4. தெலுங்கு: பச்சகோட்லா (PACHAKOTLA)

1.5. பெங்காலி: சந்த்ரப்பிரபா (CHANDRAPRABA)

1.6. மராத்தி: கண்டிபுல் (GHANTIFUL)

1.7. நேப்பாலி: கட்டாபுஷ்பா, சவாரி (GHATA PUSHPA, SAWARI)

1.8. பிரென்ச்: பிட்டி (PITTY)

1.9. ஸ்பேனிஷ்: பேலோ அமரில்லோ (PELO AMARILLO)

1.10. தாவரவியல் பெயர் :  டெக்கோமா ஸ்டேன்ஸ்  (TECOMA STANS)

1.11. தாவரக்குடும்பத்தின் பெயர் : பிக்னோனியேசி (BIGNONIACEAE)

1.12. பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : (YELLOW BELLS, YELLOW TRUMPET, YELLOW ELDER)

விண்ட் டிஸ்பெர்சல் மரம்

தங்க அரளி அதிகம் பரவி உள்ள நாடுகள், இந்தியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, மெக்சிகோ.

தங்க அரளி எனக்கு அறிமுகமான விதம் வித்தியாசமானது. 1970 களில் எனது அக்காள் ராணிமேரி கல்லூரியிலிருந்து இந்த விதை கொண்டுவந்து தோட்டத்தில் போட்டார். அடுத்த ஆறு மாதத்தில் எங்கள் தோட்டம் முழுக்க தங்க அரளிதான்.

அந்த சமயம் எங்கள் ஊர்ப்பக்கம் வேறு எங்கும் அந்த மரம் கிடையாது. மரமும் புதுசு; அந்தப்பூவும் புதுசு. அந்தப் பக்கம் யார் வந்தாலும் என்ன பூ தம்பிஎன்று என்னிடம் கேட்பார்கள். உடனே சொல்வேன் விண்ட் டிஸ்பெர்சல்’. ங்கள் அக்கா எங்களுக்கு  சொன்ன பெயர்.

காற்றின் மூலம் பரவும் விதை என்ற அர்த்தம் அப்போது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த அர்த்தம் தெரிந்த பின்னாலும் கூட நாங்கள் அதே பெயரிலேயே அழைத்து வந்தோம். சமீபத்தில்தான் எனக்குத் தெரியும், தங்க அரளி, வெளிநாட்டு மரம் என்று.

பாக்கட் சைஸ் தாஜ்மகால்

எனக்குத் தெரிந்து அழகுக்காக அதிகம் வளர்க்கும் மரம் மயில்கொன்றைதான். ஆனால் அதைவிட இன்று வீட்டுத் தோட்டங்களில் அதிகம் தென்படும் மரம் தங்க அரளிதான். பாக்கட் சைஸ் தாஜ்மகால் என்பதுபோல இதுவும் ஒரு பாக்கட் சைஸ் மரமதான். முகத்துப் பக்கம், முதுகுப்பக்கம், இடக்கைப்பக்கம், வலக்கைப்பக்கம், கதவுப்பக்கம், ஜன்னல்பக்கம் என உள்ளங்கையளவு இடம் இருந்தால் கூட உள்ளளபடியே ஒரு மரம் நடலாம்.

எங்கள் சமையலறை ஜன்னலில் கூட ஒரு தங்க அரளி எப்போதும் ஒரு ஆயிரம் பூக்களுடன் எனக்கு ஹாய் சொல்லிக் கொண்டிருக்கும். ஒரு தேன்சிட்டு, ஒரு பட்டாம்பூச்சி, ஒரு தும்பி, ஐந்தாறு தேனீக்கள், என்று எப்போதும் அந்த மரத்தைச்சுற்றி கிரிவலம் வந்துகொண்டிருக்கும்.

மரம், காவி நிறத்தில் இருக்கும். பெட்டிகள் செய்யலாம். சிறு கருவிகள் செய்யலாம். கட்டிட கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தலாம், நாட்பட உழைக்கும். ஆனால் காணாமல் போகாது !

சாக்லட் அவரைக்காய்

நெற்றுக்கள், எட்டு அங்குல நீளத்தில் அகலம் குறைந்த அவரைக்காய் மாதிரி சாக்லட் நிறத்தில் இருக்கும். நெற்றுக்களில் சிறகு வைத்த விதைகள் வெடித்துச் சிதறி பறந்துபோகும்.

முகம் சுளிக்காமல் வளரும்

சில மண்ணில் நீர் கோர்த்துக்கொண்டு வடியமாட்டேன் என அடம் பிடிக்கும். அப்படிப்பட்ட மண்கண்டம் இதற்கு சரிவராது. அதுபோல இந்த மரத்திற்கு தண்ணீர் கட்ட வேண்டாம் காட்டினால் போதும்.

தானாக வளர்ந்தால் அது காட்டுப்பூ மரம். நாமாக வளர்த்தால் அழகு மரம். சூரியன் சுடுகதிர் வீசும் இடத்திலும் வளரும். மிதமான வெப்பத்திலும் முகம் சுளிக்காமல் வளரும்.

ஆச்சர்யமான செய்தி, கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் தனி அழகு, எப்போதும் கொத்து கொத்தாய் தங்க முலாம் பூசிய பூக்களைச் சூடிக்கொண்டிருப்பதுதான்.

வேலிகளையே பூக்களால் அலங்கரிக்க விரும்புவர்களுக்கும், தோட்டத்தில் ஆண்டு முழுவதும் பூக்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கும் கைக்கெட்டும் தொலைவில் ஒரு தங்க அரளியை நட நான் சிபாரிசு செய்கிறேன்.

ங்க அரளியின் பூக்கள் பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் குட்டிநாதஸ்வரம் போல இருக்கும். பூக்கள் கொத்து கொத்தாகப் பூக்கும். ஆண்டு 365 நாளும் பூக்களோடு இருக்கும் மரம். அதே போல இந்த மரம் எப்போதும் தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும், தேன்சிட்டுக்களும்,  பாடும் பறவைகளும் சூழ்ந்திருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிற ஊதுகுழல் போன்று இருக்கும். இதன் பூ காம்புகள் சிறியதாக இருக்கும்.  இந்த பூக்களின் தொண்டைப் பகுதியில் மங்கலான செந்நிற ரேகைகள் அல்லது கோடுகள் தென்படும்.

ஆண்டு முழுக்க இந்த மரம் பூக்கும் என்பது இதனுடைய முக்கியமான அம்சம். இதன் பூங்கொத்துக்கள் 5 முதல் 15 சென்டி மீட்டர் நீளம் இருக்கும். இந்த பூவின் அடிப்பகுதி உடல் போல 30 முதல் 50 மில்லி மீட்டர் நீளத்திற்கு இருக்கும்.

Post your comments please, regards. Gnanasuria Bahavan D

99999999999999999999999999999999999999

 

 

 

 

 

 

No comments:

HOW TO ENHANCE PULICAT ECO SYSTEMS - பழவேற்காடு ஏரியின் சூழல் பிரச்சனைகளுக்கான எனது மூன்று ஆலோசனைகள்

  கடிதம்  2 பழவேற்காடு ஏரியின்   சூழல் பிரச்சனைகளுக்கான எனது மூன்று  ஆலோசனைகள் ! DR.P.SATHYASELAVAM, DR.SELVAM அன்பின் இனிய   நண்பர...