அக்கினயின் அவதாரம் புரசுமரம் |
கவி தாகூரின் பூஜைக்கு வந்த மலர் புரசு
மலர். அவருக்கு இது பிடித்தமான மலர். தாகூரின்
சாந்திநிகேதன் ஆசிரமத்தில் புரசுப்பூக்கள் இல்லாமல் எதுவும் நடக்காது.
பெங்காலி மொழியில் பலாஸ் என்றால் புரசு
என்று பொருள். தமிழ் பிராமணர்கள் அக்னிஹோத்ரா சடங்கின்போது செய்யும் அக்கினி
அபிஷேகத்தின்போது இதன் பட்டையைப் பயன்படுத்துகிறார்கள். காரணம் இந்த மரம்
அக்கினியின் அவதாரமாகக் கருதப்படுகிறது.
இந்திய வரலாற்றை திருப்பிப் போட்ட ஒரு
சம்பவம் பிளாசியுத்தம்;. வங்காள நவாப்பு பிரென்ச் படைகளுடன் சேர்ந்துகொண்டு வெள்ளைக்காரர்களின் கிழக்கிந்திய கம்பெனியை
எதிர்த்து 1757 ம் ஆண்டு சண்டைபோட்ட இடம் பிளாசி.
புரசு’வின் பெயரால் நடந்த யுத்தம்
பிளாசி என்னும் இடத்தில் நடந்ததால் இது
பிளாசி யுத்தம் ஆனது. நவாப்பிடம் ராணுவத் தளபதியாக இருந்த மீர்ஜாபருக்கு வஞ்சகமாக
வலைவீசி அந்த யுத்தத்தில் ஜெயித்தான் ராபர்ட் கிளைவ். அப்போதுதான் கல்கத்தா வெள்ளைக்காரர் வசமானது. அதன் பிறகுதான்
கிழக்கிந்திய கம்பெனி மெல்ல இந்தியா முழுக்க கடைவிரித்து கபளிகரம் செய்தது.
பிளாசி என்னும் ஊர் கல்கத்தாவிலிருந்து 150 கி.மீ. தொலைவில் பகீரதி ஆற்றங்கரையில் உள்ளது. ஆங்கிலத்தில் பிளாசி என்பது வங்காளத்தில்
பலாஷி. பலாஷி என்றால் புரசு மரம் என்று பெயர். உலகிலேயே ஒரு மரத்தின் பெயரால்
சண்டை நடந்தது அநேகமாய் இதுவாகத்தான் இருக்கும்.
என்ன மரமாக இருக்கும் என்று நான் தொலை
தூரத்தில் நின்று பார்த்து அசந்த மரம் இந்த புரசு மரம். இவ்வளவு அழகழகான பூக்களைக்
கொண்ட மரம் என்ன மரமாக இருக்கும் என்று நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்து வியந்த மரம்.
திருவள்ளுர் மாவட்டத்தில் வீரகநல்லூர் என்ற
கிராமத்து வயல் வரப்பில் இந்த மரத்தைப் பார்த்தேன். ஒருத்தரிடம் கேட்டேன் ‘என்ன மரம்ங்க?’ ‘காட்டு மரம் சார்’ என்றார்.
அதற்குப்பிறகு இப்போது நான் வசிக்கும் தெக்குப்பட்டு
கிராமத்தில் நிறைய புரசு மரங்களைப் பார்க்கிறேன். பெரிதாக அதை யாரும்
உபயோகப் படுத்தவில்லை.
கிளி மூக்கு பூக்கள்
இது இலை உதிர்க்கும் மரம். சில சமயம் அது
இலைகளை உதிர்த்துவிட்டு பூவும் மரமுமாக இருக்கும். சிவப்பும் பழுப்புமாக
அக்கினிக்கு அபிஷேகம் செய்வது போலத் தோன்றும்.
ஏன் இந்த மரத்தை “பிலேம் ஆப் தி பாரெஸ்ட்;’
என்று சொல்லுகிறார்கள் என்று புரிந்தது. அந்த சமயம் அருகில் போய்
செல்போனில் ஒரு படம் எடுத்துக்கொண்டு வந்துவிடுவேன்.
ஒரு சமயம் இரண்டு மூன்று பூங்கொத்துக்களை
பறித்துக் வீட்டுக்குக் கொண்டு வந்தேன். அதன் பூக்கள் அசப்பில் கிளிமூக்கு
மாதிரியே சிவப்பாய் அழகாய் வளைந்து கூர்மையாய் இருந்தது. அதனால்தான் அதற்கு கிளி மூக்கு பூக்கள் என்ற பெயரும் விளங்குகிறது.
இது ஒரு நடுத்தரமான மரம். அதிகபட்சமாக பதினைந்து மீட்டர் உயரம் வளரும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை
பூக்கும்;. மார்ச் முதல் ஜுலை வரை
இலைகளை உதிர்த்துவிட்டு பூக்களை மட்டும் உடுத்திக்கொண்டு நிற்கும்.
ஓவ்வொரு மாநிலத்துக்கும் என்று ஒரு அரசு மரம்
உண்டு. தமிழ்நாட்டின் அரசு மரம் பனைமரம். நம்ம அரசு மரம் என்பதற்காக நாம் எதையம்
செய்வதில்லை, அவற்றை
வெட்டுவதைத் தவிர.
இந்தப் புரசு மரம் ஜார்கெண்ட் மாநிலத்தின்
அரசு மரம். இதனை சிலர் ஆயுர்வேத மரம் என்று சொல்லுகிறார்கள். காரணம் அத்தனை வகையான மருந்துகள் தயாரிக்க ஆயுர்வேதம் புரசு
மரத்தை நம்பியுள்ளது.
சக்கரை நோய் மற்றும் வெள்ளைப்படுதல்
இதன் பிசின் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியை குணப்படுத்துகிறது. இதன்
விதைகளைப் பொடித்து மருந்தாகக் கொடுத்து வயிற்றில் இருக்கும் பூச்சிகளைக்
கட்டுப்படுத்தலாம்.
சக்கரைநோய் மற்றும் தொண்டைப் புண்களை
சரிசெய்ய இதன் இலைகள் பயன்படுத்தலாம். இலைகளை அரைத்து கூழாக்கி தடவுவதன் மூலம் சொறி, சிரங்கு, படை, தோல் அரிப்பு போன்ற தோல் நோய்களைக்
குணமாக்கலாம்.
வெள்ளைப்படுதல் என்ற நோய்க்கு புரசு இலைக்
கஷாயம் நல்ல பலன் தரும். இந்த இலைக் கஷாயத்தால் பாலியல் உறுப்புகளை கழுவுவதன்
மூலம் சுகம் தரும்;.
சிலருக்கு சிறுநீர் வருவதைக் கட்டுப்படுத்த
முடியாது. அந்த உணர்வு வந்தால் உடனடியாக சிறுநீர் கழிக்க
வேண்டும். கழிப்பறை வரைகூட செல்ல முடியாது. அப்படிப்பட்டவர்கள் இலைக் கஷாயத்தால்
அடிவயிற்றுப் பகுதியை அடிக்கடி கழுவ அற்புத பலன் தரும்.
தரமான கரிகள் இதன் மரத்திலிருந்து
கிடைக்கிறது. மிக மிருதுவான நியூஸ்பிரிண்ட் காகிதம் தயாரிக்க மரக்கூழ் தருகிறது.
இந்த நியூஸ் பிரிண்ட் காகிதத்தை 100 சதம் புரசு மரத்திலிருந்தும் செய்யலாம். அல்லது 60:40 என்ற விகிதத்தில் புரசு மூங்கில் என கலந்தும்; செய்யலாம்.
மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், பீஹார் ஆகிய மாநிலங்களில் அரக்குப்பூச்சிகள் வளர்க்க இந்த மரங்களைப்
பயன்படுத்துகிறார்கள்.
எள் எண்ணெய்க்கு சமமானது.
இலைகள் பீடிசுற்றவும், சாப்பாட்டு தையல்இலைகள்,
தேனீர்க்கோப்பைகள் செய்யவும் உபயோகமாகிறது.
இதன் கொட்டை எண்ணெயில் சோப்பு தயாரிக்கலாம். இது கடலை
எண்ணெய் மற்றும் எள் எண்ணெய்க்கு சமமானது.
இந்த மரப்பிசினுக்கு பெங்கால் கினோ என்ற
பெயர் உண்டு. பிசின் வியாபாரத்தில் முக்கியமானது வேங்கைப் பிசின். வேங்கைப்
பிசினுடன் கலந்தும் தனியாகவும் வியாபாரம் செய்கிறார்கள்.
யூகாலிப்டஸ் மற்றும் வேங்கை மரப்பிசின்
பிசின்களிலேயே பிரபலமானவை.
இதிலிருந்து டேனின், சாயம், மற்றும் மருந்துப் பொருட்கள் தயார்
செய்யலாம்.
இந்தியாவில் இதன் தளிர் இளம் இலைகளை எருமை
மாடுகளுக்கு தீவனமாகப் போடுகிறார்கள். வைக்கோலுக்கு சமமான சத்துக்களைக் கொண்டது.
மரம் சுமாரான மரவேலைகளுக்கு பயன்படும். கடினத்தன்மையில்லாத லேசான மரவகையைச்
சேர்ந்தது.
வறண்ட செவ்வல் நிலம், செஞ்சரளை, கரிசல் மண், களிமண், உப்புமண், களிமண்பாங்காள
இருமண்பாட்டு நிலம், மற்றும் நீர் தேங்கும் மண் இதற்கு ஏற்றவை.
கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம்வரை நன்கு
வளரும். விதை மற்றும் வேர்க்குச்சிகள் மூலம் சுலபமாக புதிய கன்றுகளை உற்பத்தி
செய்யலாம்.
இந்தியா, இந்தோனேசியா, கம்போடியா, ஜப்பான், மியான்மர், நேப்பாளம், லாவோஸ், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைத் தாயமாகக் கொண்ட மரம் இது.
இந்தியா முழுக்க பரவலாக வளர்ந்திருக்கிறது
இந்த புரசு மரம். இது பரவியுள்ள பிற நாடுகள், பங்ளாதேஷ், நேப்பாளம், ஸ்ரீலங்கா, மியான்மார்,
தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் மலேசியா.
பாலியல் ரீதியான இயலாமையையும் இது
குணப்படுத்தும். இதன் பூக்களை உலரவைத்துப் பொடித்து ஒரு டீஸ்பூன் பவுடரை மிஸ்ரி
மற்றும் பாலுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை குடிக்க இயலாமை சரியாகும்.
புரசு மரத்தை பல மொழிகளில் எப்படி அழைக்கிறார்கள் என்று
பாருங்கள்.
புரசு மரத்தின் பலமொழிப் பெயர்கள்
மரத்தின் தமிழ்ப் பெயர் : புரசு (PURASU)
இந்தி: தாக், பலாஸ், தேசு,
பலாஷ் (DHAK, PALAS, TESU, PALASH)
தெலுங்கு: மூடுகா, பலாசமு (MOODUGA,
PALASAMU)
கன்னடம்: மட்டுகா (MATTUGA)
பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : பிலேம் ஆப்
பாரெஸ்ட், பாஸ்ட்டர்ட் டீக், பேட்டில் ஆப் பிளாசி ட்ரீ, பெங்கால் கினோ, பாலாஸ் ட்ரீ, பேரட் ட்ரீ,(FLAME OF FOREST,
BASTARD TEAK, BATTLE OF PLASSEY TREE, BENGAL KINO, PALAS TREE, PARROT TREE)
தாவரக்குடும்பம் பெயர் : பாபேசி (FABACEAE)
தாவரவியல் பெயர் : பூட்டியா
மானோஸ்பெர்மா (BUTEA MONOSPERMA)
இங்கு நான் சொல்லும் வைத்திய முறைகளை
எல்லாம் ஒரு மருத்துவரின் சிபாரிசுப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். படித்தவுடன்
ஆரம்பித்தவிட வேண்டாம். காரணம் நான் ஒரு டாக்டர் இல்லை. நான் ஒரு ஆய்வாளன்தான்.
இந்த மரத்தில், இலைகளில், இதன் பட்டைகளில், கொட்டைகளில், பூக்களில், வேரில் இருக்கும் மருத்துவப்
பண்புகள்பற்றி நான் தொகுத்து சொல்லுகிறேன்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU
FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,
PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW
THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO
COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY.
GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment