Friday, June 30, 2023

POPULAR POLY-BUSINESS TREE SAL 179. பிரபலமான பல் தொழில் மரம் சால் மரம்

 



(KUNGILIYAM MARAM, SAL TREE, SHOREA ROBUSTA, DIPTEROCARPACEAE )

தாவரவியல் பெயர்  : ஷோரியா ரோபுஸ்ட்டா (SHOREA ROBUSTA)

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் :  சால் மரம் (SAL TREE)

தாவரக்குடும்பம்  :  டிப்டிரோகார்பேசி (DIPTEROCARPACEAE)

தாயகம்: இந்தியா

ராஜவம்சத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிரசவம் பார்த்துக்கொள்ள தனது தாத்தாவின் ராஜ்யத்திற்கு போகிறாள். போகும் வழியிலேயே சால் என சொல்லும் குங்கிலிய  மரத்தடியில் பிரசவம் நடக்கிறது. சுகப்பிரசவம். அழகான ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

மரத்தடியில் பிறந்து வளர்ந்த அந்த குழந்தைக்கு பிற்காலத்தில் ஒரு மரத்தடியிலேயே ஞானம் கிடைக்கிறது. இனி அந்த ஞானக்குழந்தைதான் கவுதம புத்தர் என என்று நான் சொல்ல வேண்டாம்.

கேட்பரீஸ் தயாரிப்பில் சால் பட்டர் பயன்படுத்தப்படுகிறது. சால் பட்டரும், கோகோ பட்டரும் ஏறத்தாழ ஒரே மாதிரிதான். கோகோ பட்டருக்கு பதிலாக சால் பட்டர் பயன்படுத்துகிறார்கள்.  

இதன் எண்ணெய் மற்றும் பிசினில் பெயிண்ட், வார்னிஷ், ஆட்டோ ஆயில், கார்பன் பேப்பர்ஆகியவை தயாரிக்கவும் சாக்லட் மற்றும் மிட்டாய் செய்யவும்  பயன்படுகிறது.

இந்தியக் காடுகளில் வசிக்கும் 20 முதல் 30 மில்லியன் மக்களுக்கு சால் விதை சேகரிப்பும்  எண்ணெய் உற்பத்தியும் வருமானமும் வாழ்வாதாரமும் தருகிறது.

இந்தியாவின் சால்மர மாநிலங்கள் என்று அழைக்கும் வகையில் 45 சதம் சால் மரக்  காடுகளைக் கொண்ட மூன்று மாநிலங்கள் ஓரிசா, மத்தியப் பிரதேசம், மற்றும் சத்திஷ்கர். இந்தியாவில் தேக்குக்கு அடுத்தபடியாக முக்கியமானது சால் என்ற குங்கிலிய மரம்தான்.

சத்திஷ்கர், ஜார்கண்ட் ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களின் மாநில மரம் என்னும் பெருமைக்குரியது, சால் மரம்.

தமிழ்நாட்டின் மலைப் பகுதிகள், பஞ்சாப், பீஹார், மேற்குவங்காளம், நேப்பாளம், ஆகிய இடங்களிலும் அதிகம் காணப்படும் மரம்.

குங்கிலிய மரத்தின் பலமொழிப் பெயர்கள்:

இந்தி: சால், சால்வா, சாக்கு, சாக்கர்  (SAL, SALVA, SAKKU, SAKKAR)

மலையாளம்: கரிமருது, குங்கிலியம், மராமரம் (KARIMARUTHU, KUNGILIYA MARAM, MARAMARAM)

கன்னடம்: அஷ்வகர்மா, அசினா, அசு, பைல் போகிமரா (ASHVAKARMA, ASINA, ASU, PAILE BOGIMARA)

சமஸ்கிருதம்: அக்னிவல்லபா, அஷ்வகர்மா, அஷ்வகர்னிகா  (AGNIVALLABA, ASHVAKARMA, ASHVAKARNIKA)

மராத்தி: சால், குகிலு, ராலா, சஜ்ரா (SAL, KUGILU, RALA, SAJRA)

பெங்காலி: சால் (SAL)

ஒரியா: சர்கி கேட்சோ (SARKI KETSO)

உருது: ரால், சபேத் தம்மார் (RAL, SABETH THAMMAR)

அசாமிஸ்: சால், ஹால் (SAL, HAL)

மரத்தின் வகை  :   வாணிக  மரம்

மரத்தின் வயிரம், அடர்த்தியான சிவப்பேறிய காவி வண்ணத்தில் இருக்கும். கடினமாக் எடை கூடுதலாக இருக்கும். அதிக நாள் உழைக்கும். கரையான் தாக்காது. மரத்தை சுலபாக அறுக்கலாம். சிரமம் இருக்காது.

சில மரங்கள் அறுக்கும்போது வாள் கூட உடைந்துவிடும். இது அப்படி இல்லை. ஆனால் சரியாக இழைக்க வராது. காரணம் மரத்தில் கூடுதலாக இருக்கும் மரப்பிசின். இப்படி மரப்பிசின் கூடுதலாக இருப்பதால், இதற்கு குங்கிலிய மரம் என பெயர் வைத்திருக்கலாம்.

இந்த மரப்பிசின் இழைக்கும்போது இடைஞ்சலாக இருக்கும். கட்டுமானப் பணிகளுக்கு உதவும். கப்பல் கட்ட, ரயில் தண்டவாளப் பாதைக்கு கீழே சிலிப்பர் கட்டைகள் போட, ரயில்பெட்டிகள் கட்டுமானத்திற்கு, ஜன்னலுக்கு சட்டம் போட, கட்டிடங்களில் தரைகள் மேவ, ஏர் கலப்பை, மண்வெட்டி காம்புகள் என வேளாண்மைக் கருவிகள் அனைத்தும் செய்யலாம்.   

பிசின் மற்றும் எண்ணெய், பெயிண்ட், வார்னிஷ், சாம்பிராணி, படகுகளுக்கு  ஓட்டையை அடைக்கும் லப்பம், கர்பன் பேப்பர்களுக்கு ஒட்டும் மை, தட்டச்சு இயந்திர நடாக்களுக்கு பூசிடும் மை, ஆகியவற்றை தரும் பிசின் தரும். ஒட்டுப்பலகைகள், மற்றும், அஸ்பெஸ்டாஸ் பலகைகளைக் கூட ஒட்டும்.

சுமார் 15 மீட்டர் உயரம் வரை வளரும். இந்த இந்திய மரம் ஈரச் செழிப்பான மண் கண்டத்தில் வளரும். இதற்கு நல்ல வடிகால் வசதி வேண்டும். கடினத் தன்மை இல்லாத சற்று இளகிய மண் கண்டத்தில் நன்கு வளரும். அடிமண் கண்டத்தில் கூட தண்ணீர் வடிந்து ஓட வேண்டும். அப்படிப்பட்ட இடங்களில் சால் மரம் சர்வ சாதாரணமாக வளரும்.

சால் மரத்தில் இன்னொரு வகை உண்டு. அதன் பெயர் ஜலரி மரம். அது மூன்று வருஷத்துக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவம் சிவராத்திரி சமயம்தான் பூக்கும். அதனால் அது சிவபெருமானுக்கு உரிய மரமாகக் கருதுகிறார்கள். அதனாலேயே இதனை விறகாகக் கூட உபயோகப்படுத்த மாட்டார்கள்.

பல நாடுகளில் மரவிதைகளிலிருந்து பயோ டீசல் தயாரித்துப் பயன்படுத்தகிறார்கள். அதிக காசு பணம் செலவில்லாமல் சால் விதைகளிலிருந்து பயோ டீசல் தயாரிக்க முடியும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல  மொத்த சால் எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 சதம் சோப்பு தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

பெரும்பாடு மேகம் போம் பேரா உடலில்

அரும்பிய புண் ஆறும் இவையல்லால்

துரும்பாம்

எலும்புருக்கி புண்சீழும் ஏறும் உலகில்

சலம் பருகும் குங்கிலியத்தால்

என்னும் பழம் பாடல் குங்கிலியத்தின் மருத்துவச் சிறப்பினைப் பேசும்.

இதன் விதைகள் அருமையாக முளைக்கும். விதைகளை 12 மணிநேரம் நீரில் ஊரவைத்து விதைத்தால் வேகமாக முளைக்கும்.

ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட இது ஒரு அருமையான மூலிகை. ஆனாலும் கூட இது அதிகபட்சமாக ஒரு தொழிற்சாலை மரம். இந்த மரத்தை அடிப்படையாகக் கொண்டு பல தொழில் தொடங்கலாம்.

ஏற்கனவே கிட்டத்தட்ட 30 மில்லியன் பேருக்கு வாழவாதாரம் வழங்கும் இம்மரம் இன்னும் பல மில்லியன் கிராம மக்களுக்கு சோறு போடும். அதற்கான வாய்ப்புக்கள் இந்த மரத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...