Thursday, June 29, 2023

PAVALAMALLI TEMPLE GARDEN TREE 166. பவளமல்லி என்னும் பாரிஜாதம் கோயில் மரம்

 

 பவளமல்லி கோயில் மரம்


(PAVAZHAMALLI, TREE OF SORROW, NICTANTHES ARBORTRISTIS, OLEACEAE )

தாவரவியல் பெயர்: நிக்டேன்தஸ் ஆர்பட்டிரிஸ்டிஸ் (NICTANTHES ARBORTRISTIS)

தாவரவியல் குடும்பம்: ஓலியேசியே (OLEACEAE)

ஆங்கிலப் பெயர்: ட்ரீ ஆஃப் சாரோ (TREE OF SORROW)

தாயகம்: தென் கிழக்கு ஆசிய நாடுகள்

பலமொழிப் பெயர்கள்:

தமிழ்: பவளமல்லி (PAVALAMALLI)

இந்தி: ஹர்சிங்கர் (HARSINGAR)

மலையாளம்: பாரிஜாதம் (PARIJATHAM)

பெங்காலி: ஷிபாலி (SHIPALI)

சமஸ்கிருதம்: பாரிஜாத் (PARIJATH)

பவளவல்லி என்னும் பெயரால் பரவலாக அறியப்படும்

பாரிஜாத மரத்தின் நதிமூலம் சொல்லுகிறேன் கேளுங்கள்

ஒரு ஊரில் ஒரு அரசகுமாரி இருந்தாள். அழகான அரசகுமாரிகள் அரிதாக இருந்த காலம்அதுஅவள் பெயர் பாரிஜாதம் !

அவனி அம்பத்தாறு தேசத்தின் அரசகுமாரர்களும் அந்த

அதி ரூபினியான அந்த அரசகுமாரியைக் காதலித்தார்கள் !

ஆனால் அவளோ ஆயிரம் கிரணம் அணிந்து 

ஆகாயத்தில் பயணிக்கும், ஆதவனைப் பார்த்து மயங்கினாள்

அருணன் ஓட்டிய அழகு ரதத்தில் ஆதவன் அனுதினமும் பயணம் செய்தான்.

அணையா அனலையும் தணலையும் அழகாய் மூட்டிச் சென்றான், அவள் மனதில்.

பாரிஜாதம் தன் மனதில் ஆசையை விதைத்தாள்விதை முளைவிட்டு கிளைவிட்டு காதலாய் முகிழ்த்தது. விரைவாய் முகிழ்த்த காதல் ராட்சசமாய் வளர்ந்தது.

பாரிஜாதம் நீ அழகின் சிகரமாக இருக்கலாம். ஆனால் என் மனதில் நீ ஒரு மண்மேடாகக் கூட இல்லைஎன்றான் ஆதவன் ஒரு நாள். அவள் மனதில் இடியாய் இறங்கியது அந்த சேதி.

பாரிஜாதம, அழுது புரண்டாள். வெடித்து விம்மினாள். அவள் காதல் கானல் நீரானது. ஒரு தலையாய் தொடர்ந்த காதல் ஒன்றுமே இல்லாமல் போனது. மனம் உடைந்த அந்த மகாரூபினி மரணத்தின் கரம் பற்றினாள்அவள் அது ஆனாள்.

அவள் அஸ்தியிலே அதிசயமாய் முளைத்தது. ஒரு அபூர்வ மரம். அந்த அபூர்வமே பாரிஜாதம் ஆனது, பவளமல்லியும் ஆனது.

மரமாக ஜனித்த பாரிஜாதம் அர்த்த ராத்திரியில் பூ பூப்பாள். அடுத்த நாள் ஆதவன் முகம் காட்டும் முன்னால் அத்தனையும் உதிர்த்துவிட்டு நிற்பாள்.

அவள் கரம்பற்ற மனம் இன்றி கைவிட்ட ஆதவனின் முகம் பார்க்க விரும்பாமல்.

முகிழ்த்த பூக்கள் அத்தனையும் முற்றாக உதிர்ப்பாள். உதிர்த்து பூமிக்கு பூச்சூட்டுவாள்.

இதுதான் பாரிஜாத மரத்தின் சோக சரித்திரம் !

பாரிஜாத மரத்தின் பூக்கள் மல்லிகையாய் வாசம் தரும். நாசியை மிரட்டாத சுவாசம் தரும் !

பாரிஜாத மரங்களை வீட்டின் முகப்பில் நடலாம். வீதியின் முகத்தில் நடலாம்.

கும்பிடும் கோயிலில் நடலாம். மகிழ்வாய் மசூதியில் நடலாம். தேடிப்பிடித்து தேவாலயத்தில் நடலாம்.

இந்த தேவ விருட்சத்தின் விதை எடுத்தும் விருப்பமாய் நடலாம். வெட்டி எடுத்த போத்தையும் நடலாம்.

வளர்ந்த செடியை வெட்டிவிட்டால் குட்டிப் புதராய் குறுகி வளரும்;; வெட்டாமல் விட்டாலும் சிறு மரமாய் சிக்கனமாய் வளரும். 

காசு மண்டலமே கதி எனநாம் ஆனதனால் காற்று மண்டலமே தூசு மண்டலமானது.

பசுமை இல்ல வாயு அத்தனையும் பலமாய் சே அந்த காற்று மண்டலம் மாசு மண்டலமானது.

தூசையும் மாசையும் துடைத்து எடுத்து அழகான காற்றை மட்டுமே சுவாசிக்க அள்ளித் தரும் இந்த பவழமல்லி.

இமயம் முதல் குமரி வரை வளரும் இந்திய மரம். உயரம் அதிகம் வளராத அகத்தியர் மரம்.

சில இடங்களில் குறு மரம்.பல இடங்களில் சிறு மரம்

பவள நிறக் காம்பில் சங்கு நிறப் பூக்கள். ஆண்டு முழுவதும் அயராமல் பூக்கும்.

மழை வந்தால் மரம் நிறைய பூக்கும். ஆசைக்கும் சூடலாம். பூசைக்கும் சூடலாம்.

தைலம் தரும் பூக்கள். சாயம் தரும் காம்புகள். முட்டைக்கு மூக்கு வைத்தது போன்ற நீள்வடிவ இலைகள்.

பயிர்களுக்கு இட்டால் உரமாகும். நிலங்களுக்கு இட்டால் அவை தரமாகும். நட்டு வளர்த்தால் கண்ணுக்கு விருந்தாகும். கசக்கிப் பிழிந்தால் மருந்தாகும். பூக்களை கட்டி விற்றால் காசாகும்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...