Friday, June 30, 2023

NOCHI A TREE CLOSE RAPPORT WITH TAMIL CULTURE 173. சங்க இலக்கிய கொசுவிரட்டி மரம் நொச்சி

கொசுவிரட்டி மரம் நொச்சி


(NOCHI, FIVE LEAVED CHASTE TREE, VITEX NEGUNDO, VERBANACEAE)

தாவரவியல் பெயர்  :  வைடக்ஸ் நெகுண்டோ (VITEX NEGUNDO)

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : பைவ் லீவ்டு செஸ்ட் ட்ரீ (FIVE LEAVED CHASTE TREE)

தாவரக்குடும்பம்  :  வெர்பனேசி (VERBANACEAE)

தமிழ் கலாச்சாரத்தை உற்று நோக்கினால், ஒரு செய்தி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  அது என்ன வென்றால் அந்த காலத்தில்  பெண்களை விட ஆண்கள் பூக்களை சூடுவதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். 

நீங்களே பாருங்கள், போரில் வெற்றி பெற்ற வீரர்கள் வாகைப்பூ சூடினார்கள். பகைவர்களின் ஆநிறை கவரச்சென்றால் வெட்சிப்பூ சூடினார்கள். கோட்டைக் கொத்தளங்களை காவல் காக்க வேண்டுமானால் நொச்சிப்பூ மாலை சூடினார்கள்.

ஆனால் பெண்கள் விரும்பிய பூக்கள் பற்றி தமிழ் அறிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.

இன்னொரு உதாரணத்தைக் கூட என்னால் சொல்ல முடியும். சங்க இலக்கியம்  புறத்திணைகள் ஏழு என குறிப்பிடுகிறது. அவை வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை மற்றும் வாகை. இதில் நொச்சித்திணை என்பது என்ன தெரியுமா ?

ஒரு வேற்று நாட்டு படை திடீரென ஒரு அரசனின் கோட்டையை முற்றுகை இடுகிறான். அப்போது கோட்டைக்குள் இருக்கும் அரசன் வெளியில் இருக்கும் படையோடு உள்ளிருந்தபடியே போரிடுகிறான். அதற்குப் பெயர்தான் நொச்சித்திணை.   

ஆக சங்க காலத்திலேயே பிரபலமாக விளங்கிய மரம் நொச்சி மரம். நாம் இப்போது வெறும் கொசுக்களை மட்டுமே ஓட்டப் பயன்படுத்துகிறோம் என்று ஒரு நணபர் வருத்தப்பட்டார்.

எனக்கு சிறு வயதிலேயே அறிமுகமான இரண்டு மரங்களில் ஒன்று நொச்சி. இன்னொன்று ஆடாதோடை. அப்போது நாங்கள் பண்ருட்டிக்குப் பக்கத்தில் புலவனூர் என்ற கிராமத்தில் வசித்தோம்.  அங்கு எங்கள் முன்பக்க வேலியை அலங்கரித்தவை இந்த இரண்டு மரங்கள்தான். இவற்றை மரங்கள் என்றும் சொல்ல முடியாது. செடிகள் என்றும் சொல்லமுடியாது. குறு மரம் அல்லது சிறு மரம் என்று சொல்லலாம்.

கூட்டமாவே பறந்து வரும் கள் குருவிகள்

இந்த மரங்களோடு தவறாமல் இன்னொன்றும் ஞாபகத்திற்கு வருவபவை கள்குருவிகள் என்னும் செவன் சிஸ்டர்ஸ் பறவைகள். வேலூர் மாவட்டத்தில் இதற்கு வேறு பெயர்.

அவை எப்போதும் கூட்டமாவே பறந்து வரும். கூட்டமாகவே பறந்து போகும். அதிக தூரமும் பறக்காது. அதிக உயரமும் பறக்காது. ஒரு குடம் நிறைய சில்லரைக் காசுகளை ஒரே சமயத்தில் கொட்டியது போல கத்திக் கொண்டிருக்கும்.

வெளிரான காவி நிறத்தில் சிறகுகள். அலகுகளும் கால்களும் மட்டும் அரைத்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆங்கிலத்தில் இதனை ஜங்கிள் பாப்ளர்

எப்போதும் எங்கள் நொச்சி ஆடாதோடை வேலிகளில் அடைந்து கிடக்கும்.

தலைவலி என்றால் நொச்சித் தழைதான்

அப்போதெல்லாம் தலைவலி என்றால் நொச்சித் தழைதான் எங்கள் பிரதான சிகிச்சைக்கான மருந்து. அமிர்தாஞ்சன், விக்ஸ், அனாசின், ஆஸ்ப்ரோ எல்லாம் கிராமங்களில் காலடி வைக்காத காலம் அது. சிரங்கு இருந்தால் ஒரே வேளை சைபால் மட்டும் பிரபலம். வுசதியான வீடுகளில்தான் இருக்கும் சைபால் கூட. யாருக்காவது அவசரம் என்றால் ஒரு பூவரசு இலையில் சிக்கனமாக வழித்துக் கொடுப்பார்கள். 

இளம் நொச்சி இலைகளை கைகளில் வைத்து கசக்க வேண்டும். கசக்கினால் சாறுவடியும். வுடிந்த சாற்றை ஒரு சிறு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். சேகரித்த சாற்றுடன் கோஞ்சம் உப்புக்கல் சேர்த்துக் கரைக்க வேண்டும். உப்பு கரைத்த நொச்சிச் சாற்றை நெற்றியில் பூசிக்கொள்ள  வேண்டும். ஆச்சரியப்படும் வகையில் தலைவலி குணமாகும். நிரூபிக்கப்பட்ட தலைவலி நிவாரண சிகச்சை முறை இது. முயற்சிசெய்து பாருங்கள்.

ஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி  

குடற்புழு நோய், தோல் நோய்கள், தசைப்பிடிப்பு, மூட்டு வலி, மண்ணீரல் கோளாறுகள், வயிற்றுப் புற்று கட்டி, கண் நோய்கள், சளி, ஆஸ்த்துமா, சுவாசக் கோளாறுக்ள், இருமல், கொலஸ்ட்ரால் மிகைப்படுதல், வயிற்று உப்பிசம், மலச்சிக்கல் ஆகியவை அனைத்தையும் குணப்படுத்தும். கூந்தல் வளர்ச்சி, நச்சு முறிவு, காயங்களை குணப்படுத்துதல், கொசு விரட்டல், நினைவாற்றலை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கும்  மருத்துவத் தீர்வு அளிக்கும் மர மூலிகை நொச்சி.

நொச்சி இலைச்சாந்தை லேசாக சூடு படுத்திப் பற்றிட தலைவலி, விதை வீக்கம், மூட்டுவலி, எலும்பு தேய்மான நோய் ஆகியவை அதிசயப்படும்படி குணமாகும்.

இலைக்குடிநீர் தயாரித்துக் கொப்பளிப்பதன் மூலம் வாய்ப்புண், தொண்டைவலி ஆகியவை சரியாகும்;. இலைகளை எரித்துச் சாம்பலாக்கி அதனை முகர்வதனால் தலைவலி மற்றும் மூக்கொழுக்கு முற்றிலும் குணமாகும்.

நொச்சி மரத்தின் பலமொழிப் பெயர்கள்

தமிழ்: நொச்சி (NOCHI)

இந்தி: நிர்குண்டி (NIRGUNDI)

மணிப்புரி: விரிக் ஷிபி (VIRIK SHIFI)

மலையாளம்: வெண்ணொச்சி (VENNOCHI)

தெலுங்கு: வாவிலி (VAVILI)

கன்னடம்: நொச்சி (NOCHI)

பெங்காலி: நினிண்டா (NININDA)

சம்கிருதம்: சிந்துவாரா (SINDUVARA)

உருது: சம்பாலு (SAMBALU)

கூடைகள், தட்டுக்கள், படல்கள்

நொச்சி மரத்தை, வேலிகளில், ஓடைக் கரைகளில், நடலாம். மண்அரிப்பை தடுக்கும். தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்தும். நொச்சியின் சிறிய ஊதா நிறப் பூக்கள். தேனீக்களுக்கு, தேன் உபயம் தரும்;. இலைகள், கிளைகள், மரம், அடுப்பெரிக்க விறகாக தரும்

தானியக் குதிர்களில், தானியத்துடன் நொச்சி இலைகளை சேர்த்து மூடிவைத்து, பூச்சிகள் வராமல் செய்யலாம். நொச்சியின் போத்துக்கள் நீளமாக இருக்கும். ஒரே சீராகவும் இருக்கும். கூடைகள், தட்டுகள், படல்கள் செய்வதற்கு தோதாக இருக்கும். 

நொச்சி ஈரமான கரிசல் மற்றும் மணல்சாரி மற்றும் பரவலான மண் வகைகளில் 4 முதல் 6 மீட்டர் உயரம் வளரும.; வேர்க்குச்சிகள் மூலம் சுலபமாக வளர்க்கலாம்.

நொச்சியை ஐந்திலை என்றும் சொல்லுகிறார்கள். கரணம் அதன் இலைக்கொத்து ஐந்து இலைகளின் தொகுப்பாக இருக்கும். சிங்கப்பூரில் இருக்கும் ஒருவகை நொச்சி மூன்று இலை தொகுப்பாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர் வைடக்ஸ் டிரைபோலியா (VITEX TRIFOLIYA).

இதில் பெரிய மரமாக வளரம் ரகமும் உள்ளது. இது கிட்டத்தட்ட 20 மீட்டர் உயரம் வளரும். இது லேமியேசி (LAMIACEAE) குடும்பத்தைச் சேர்ந்தது.

நொச்சி மரம் என்றாலே கொசுக்களுக்கு அலர்ஜி !  தொடர்ந்து நொச்சித் தழைகளைப் போட்டு புகை மூட்டம் போட்டால் உங்கள் வீட்டுப் பக்கம் வர கொசுக்கள்  பயப்படும்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

No comments:

THE FIRST BOOK ON 100 TAMIL RIVERS - நூறு தமிழ் ஆறுகள் பற்றிய புதிய நூல்

நூறு தமிழ் ஆறுகள்  புதிய நூல்  எழுதியவர்  பூமி ஞானசூரியன் STORY OF 100 RIVERS நூலின் 15  சிறப்புகள் 1. தமிழகத்தின் 100 ஆறுகளை பதிவு செ...