Monday, June 12, 2023

LOCAL POLITICAL GAMES அண்ணன்மார் தம்பிமார் கதைi

அண்ணன்மார்
தம்பிமார் கதை

 நகைச்சுவைக் கதை  

(ஒரு துரும்பு மாதிரி சமாச்சாரத்தை ஊதிஊதி பெரிசாக்கினேன். இந்த கதை கிடைத்தது. 'நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்" என்று பாடத் தோன்றுகிறது. நான் அரசியலுக்கு போகாததைத்தான் சொல்லகிறேன். ஆனால் எழுத்துத் துறையில் இருக்கும் அனைவரும் அரசியலுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதைப்போல அவர்களுக்கு எதனால் தீனிபோட முடியும்?)

19. அண்ணன்மார் தம்பிமார் கதை

      இன்ஸ்டர் சாது செல்லையா டி.எஸ்.பி. க்கு  அடிக்கும் சல்யூட்டை அம்பலத்தரசனுக்கு அடித்தார்.

      கச்சேரியில் புதுசாய் சேர்ந்திருந்த கான்ஸ்டபிள் பொன்னையா கலவரப்பட்டவராய் டீயோகாபியோ வாங்க ஓடினார்.

அம்பலத்தரசன் எதிர் கட்சியை சேர்ந்த உள்ளுர் தலைவராக இருந்தாலும் கோட்டையூரைப் பொருத்தவரை அப்படி ஒரு செல்வாக்கு இருந்தது.

       அம்பலத்தரசன் பொதுக் கூட்டமென்று மேடையேறி மைக்கை பிடித்துவிட்டால் எதிர்கட்சிகாரர்களுக்கு வயிற்றில் புளி கரைக்கும்.

      இதுதவிர ரேஷன் கடை போலீஸ் ஸ்டேஷன் சினிமா தியேட்டர் கள்ளச்சாராயம் இவை சம்மந்தப்பட்ட ஆசாமிகளும் கதிகலங்குவார்கள்.

      அப்படிப்பட்ட ஆசாமி இப்படி திடுதிப்பென்று போலீஸ் ஸ்டேஷனில் வந்து உட்கார்ந்தால் இன்ஸ்பெக்டர் சாது செல்லையா என்ன செய்வார்…?

      'உங்கள அடிச்சுட்டானா…?  யாருசோன்பப்டி விக்கிறமாதிரி இருப்பானேஅவனா…?'  என்றார் இன்ஸ்பெக்டர்.

      'ஆமாஆமா…  அவனேதான். வன் பேரு என்ன…?"  திரும்பி தன்னுடன் வந்திருந்த தம்பிகளைப் பார்த்தார்.

      அவருக்குப் பின்னால் நின்றிருந்த நாலைந்து தம்பிகளும் கோரஸ்ஸாய் சொன்னார்கள்  ஒலகங்காத்தான்.

      'நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க சார். ஒலகங்காத்தானாம் ஒலகங்காத்தான். இந்த ஒலகத்துல இனி அவன ஒரு பயலும் காப்பாத்த முடியாது…. முட்டியப் பேத்துடறேன்…. நீங்க காப்பி சாப்பிடுங்க சார்.."

      அண்ணன் அம்பலத்தரசனும் தம்பிகள் நால்வரும் காப்பி குடித்தனர். 'நாங்க மட்டும் அப்போ அண்ணன்கூட இருந்திருந்தா கொலையே விழுந்திருக்கும்…’ தம்பிகள் ஆவேசப்பட்டனர்.

      ஆம்பலத்தரசன் அவர்களை கையமர்த்திவிட்டு நடந்ததை விளக்கமாகச் சொன்னார்.

      'காலைல ஒரு எட்டுமணி இருக்கும்….நான் வீட்லேர்ந்து கௌம்பி சைக்கிள்ல வந்துக்கிட்டிருந்தேன்…  பெரு வட்டம் தர்மராஜ் அண்ணன் (ஆளுங்கட்சியின் உள்ளுர் தலைவர்) உட்கார்ந்து இருந்தாருவணக்கம் சொன்னேன்அவரும் வணக்கம் சொன்னாருசரின்னிட்டு நானும் போயி கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தேன்ஒரு அஞ்சி நிமிஷம் இருக்கும்.. இந்த ஒலகங்காத்தான் அங்கு வந்தான்….கிட்ட வந்து எங்கண்ணனைப்பற்றி நீ என்னடா மீட்டிங்ல பேசினேன்னு கேட்டுக்கிட்டே வந்து சட்டுண்ணு கன்னத்துல பொறி கலங்கறமாதிரி அடிச்சுட்டு ஓடிட்டான்…. எல்லாம் கண்ணை மூடி கண்ணைத் தொறக்கறதுக்குள்ள நடந்துடுத்து…"

      எழுதிய கம்ப்ளயிண்ட்டில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் அம்பலத்தரசன்.

      'அதுக்கு பெருவட்டம் தர்மராஜ் ஒண்ணும் கேக்கலையா…?" கேட்டார் இன்ஸ்பெக்டர்.

      'அவரு காலுல போட்டுக்கிட்டு இருந்த செருப்பைக் கழட்டி அவன் மேல வீசி எறிஞ்சாரு அவன் ஓடிப் போயிட்டான்…."

' பெருவட்டம் பேர்ல உங்களுக்கு  ஏதாவது சந்தேகம் இருக்கா…?"

      'அவரு ஆளுங்கட்சிக் காரரு…  நான் எதிர்க்கட்சிக் காரன்.  அப்பப்போ பப்ளிக் மீட்டிங்ல ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிப் பேசறது சகஜம்தான்…. .ஆனா தனிப்பட்ட முறையில எனக்கும் அவருக்கும் எந்த தகறாரும் இல்லஅவரும் அப்படி நடந்துக்க மாட்டாரு…."             

கடலைவிட ஆழமானது எது என்று கேட்;டால் எல்லாரும்; பெண்களின் மனசு என்பார்கள். ஆனால் கோட்டையூர்க் காரர்களிடம் கேட்டால் அது பெருவட்டம் என்றுதான் சொல்வார்கள்.

அவருக்கு நெருக்கமானவர்கள் அவர் பம்முவதற்கும் தும்முவதற்கும் கூட தனித்தனி அர்த்தம் சொல்வார்கள்.

அவருக்கு சொந்தமாக ஒரு விறகுக்கடை வைத்திருந்தார். அவருக்கு கட்சிப் பணிமனையாகவும் அது பயன்பட்டது. பெருவட்டம் அரசியல் அத்தனையும் அங்குதான் நடக்கும்.

பெருவட்டம் தர்மராஜ்ராஜ் அந்த ஊர் எம்.எல்.ஏ. வை விடவும் செல்வாக்கானவர். இன்னும் சொல்லப் போனால் மந்திரிகளைவிட இவருக்கு செல்வாக்கு உண்டு. கொல்லைப்புற வழியாக (ராஜ்யசபை) அமைச்சராகப் போகிறார் என்று பத்திரிகையில் கிசுகிசுக்கள் கசிந்து கொண்டிருந்தன.

சாலையில் அம்பலத்தரசனை அடித்துவிட்டு ஓடிப்போன உலகங்காத்தான் மெதுவாக விறகுக் கடைக்குள் நுழைந்தான்.

 'என்னடா  சொத்த அடி அடிக்கறே…. அடிக்கற அடியை ஆயுசுக்கும் அவன் மறக்கக் கூடாது…." என்றார் பெருவட்டம்.

     உலகங்காத்தான் தலையை சொறிந்துக்கொண்டு அமைதியாகச் சொன்னான்.

      'அவுங்க போலிஸ் கம்ப்ளயிண்ட் கொடுத்திருக்காங்களாம். ..

      'சரி…. சரி நான் பாத்துக்கறேன். இன்னக்கி போஸ்ட்டர் ஒட்ட நீ போக வேணாம். ரெண்டு நாளைக்கி வீட்லயே கெட…" 

      'சரிங்கண்ணே…."

  உலகங்காத்தான் வெளியே போனான்.

 போன் மணியடித்தது….

      'அலோவணக்கம்நான்தான் தர்மராஜ்ராஜ் பேசறேன்….”

      'தலைவரே வணக்கம்நான் இன்ஸ்பெக்டர் பேசறேன்…”

        "வணக்கம்வணக்கம்இன்ஸ்பெக்டர் சாரு எப்பிடியிருக்கீங்க…?"

           'நல்லா இருக்கேன் தலைவரே….'

      ரொம்ப நல்லதுங்கஎன்னா சமாச்சாரங்க…? “

      'தலைவரே நம்ம ஒலகங்காத்தான்  பேர்ல ஒரு கம்ப்ளயிண்ட் வந்திருக்குஅதான் ஒங்ககிட்ட ஒரு வார்த்தை…. கேட்டுகிட்டு …”  இழுத்தார் இன்ஸ்பெக்டர்.

      'இன்ஸ்பெக்டர் சார் என்னை உங்களுக்கு எத்தனை வருஷமாகத் தெரியும்..?"

      'என்னங்க இப்பிடி கேட்டிட்டீங்க….? உங்கள எனக்கு  பதனஞ்சி வருஷமா தெரியும் நேரடிப் பழக்கம்…. அதுக்கு முன்னாலயே ஒரு பத்து வருஷமா உங்களப்பத்தி கேள்விப் பட்டிருக்கேன்ல…?

      'பின்ன என்னங்க…? இந்த மாதிரி கேள்விய எங்கிட்ட கேக்கறீங்க…? உங்க நிர்வாகத்துல நான் தலையிட மாட்டேன். உங்களுக்கு சட்டம் என்ன சொல்லுதோ அதைச் செய்யுங்க…" போனை டக்கென்று வைத்தார் பெருவட்டம்.

      'இன்ஸ்பெக்டருக்கு எவ்ளோ கொழுப்புன்னா ஒலகங்காத்தான அரெஸ்ட் பண்ணப்போறேன்னு எங்கிட்டயே சொல்றான்அநேகமாக அவனை சாயங்காலம் மூணு மணிக்குள்ள அரெஸ்ட் பண்ணிடுவான்னு நெனைக்கறேன்…. நீங்க நாலு மணிக்கெல்லாம் போயி ஜாமீனில் எடுத்துக்கிட்டு  வந்திடுங்க…" எனறார்  தர்மராஜ.;

      'சரிங்கண்ணே…” தம்பிகள் உடனடியாக தயாரானார்கள்.

அம்பலத்தரசன் வீடு.

அங்கு ஒரு குட்டி மந்திராலோசனை நடந்துக் கொண்டிருந்தது.

ஒரு தம்பி அவசரமாக ஓடிவந்தார்….

      'அண்ணேஅண்ணே…. ஓலகங்காத்தானை அரெஸ்ட் பண்ணிட்டாங்கண்ணே…" சந்தோஷமாக சொன்னான்.

      'யார்டா சொன்னது… ?"; அம்பலத்தரசன்.

      'நானே பார்த்தேன் அண்ணேபெருவட்டம் போலீஸ் ஸ்டேஷனுக்கே போன் பண்ணி அரெஸ்ட் பண்ணச் சொல்லிட்டாராம்….!" 

      'நான் சொல்லல….?  இதுக்கும் அவருக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இருக்காதுன்னு…" அப்பாவியாய் சொன்னார் அம்பலத்தரசன்.

      போலீஸ் ஸ்டேஷன்.

      பெருவட்டம் தர்மராஜ் தம்பிகள் உலகங்காத்தானை பெயிலில் எடுத்தார்கள்.

      இன்ஸ்பெக்டர் காதும்காதும் வைத்தமாதிரி; சொன்னார். 'நான் அண்ணன்கிட்ட கேட்டுக்கிட்டுதான் கேஸ் பைல் பண்ணேன்…..” பெருவட்டத்தின் தம்பிகளிடம் சொன்னார்.

      'அண்ணன் கண் முன்னாலேயே நடந்திருக்குன்னாஅண்ணன் கண்டுக்காம விட்டிடுவாரா…?" அண்ணன் நேர்மையை புகழ்ந்தார் ஒரு தம்பி. 

      'இருந்தாலும் அண்ணன் உங்க பேர்ல ரொம்ப கோபமா இருக்காரு…” என்றார் தம்பி நெம்பர் இரண்டு.

      தம்பிமார்கள் உலகங்காத்தானுடன் கோபமாக வெளியேறினார்கள் போலீஸ் ஸ்டேஷனைவிட்டு.

      போலீஸ்காரர்கள் அரெஸ்ட் செய்தது சரியா தப்பா  என்று பட்டிமன்றம் நடத்தினார்கள். நடுவராக இருந்தும் தீர்ப்பு சொல்ல முடியாமல் தடுமாறினார் இன்ஸ்பெக்டர் சாது செல்லையா.

      நாட்கள் நகர்ந்தன. தேர்தல் கூப்பிடும் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. தம்பிமார்கள் கடைத் தெரு கலெக்க்ஷனை ஆரம்பித்தார்கள். ஒழிகவாழ்க கோஷமிட்டார்கள். கட்டிப்போன தொண்டைக்கு மாப்பிள்ளை விநாயகர் சோடா குடித்தார்கள். கொடி ஏற்றினார்கள்…  மாறி மாறி போஸ்டர் ஒட்டினார்கள்.

      விறகுக்கடை சம்பவமும் உலகங்காத்தானையும் எல்லோரும்  மறந்து விட்டிருந்தார்கள்.

      பெருவட்டம் தர்மராஜ் மிகப் பெரிய ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்தார்;.

      கட்சியின் கொடியேந்தியபடி ஊர்வலத்தின் முகப்பில் அலங்கரிக்கப்பட்ட யானை…. அதன் பின்னால் வெள்ளை சீருடை அணிந்த தொண்டர்கள் …. அதற்கும் பின்னால் பச்சைப் புடவை பெண்கள் அணிகாக்கி யுனிபார்ம் மாணவர்கள் அணி நீலசட்டைகளில் தொழிற் சங்க அணி. ஊர்வலம் ஒரு இடத்தை தாண்டிச் செல்ல  மூன்று மணி நேரம் ஆனது.

      'கோட்டையூரில் வரலாறு காணாத பேரணிஎன்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி போடுமளவிற்கு ஊர்வலம்  பிரமாண்டம்.

ஊர்வலம் மலைப் பாம்பைப் போல் வளைந்து நெளிந்தது. 'வாழ்கஒழிக" கோஷங்கள் வானைப் பிளந்தன

ஊர்வலம் கோட்டையூர் அருகாமையில் இருந்த காந்தி சிலையை அடைந்த போது பத்து பதினைந்து சோடா பாட்டில்கள் பறந்தன. அவற்றைத் தொடர்ந்து சரஞ்சரமாக சரளைக் கற்கள்.

முகம் தெரியாத ஒரு கலவரம். கத்தி, கடப்பாரை, வெட்டறிவாள், குத்தீட்டி இப்படி பெயர் தெரியாத ஆயுதங்களை ஏந்தி கும்பல் ஒன்று கண்ணில்பட்டவர்களை எல்லாம் தாக்கினார்கள். மக்கள் மூலைக்கொருவராய் சிதறி ஓடினர்.

நூற்றுக் கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பின்னர் போலீஸ் விரைந்து வந்து கலவரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 

மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல்  உலகங்காத்தான் இறந்து போனான்.

கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று அம்பலத்தரசன் கட்சிக்காரர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர்.

அம்பலத்தரசன் நடந்து முடிந்த வன்முறை சம்பவங்களுக்கு தார்மீகப் பொருப்பேற்;று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். குற்றம் செய்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென்று போலீஸ் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தல் ஒரு வாரம் இருக்கும் போது மீண்டும் ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம் நடந்தது. கோட்டையூர் பஜாரில் காந்தி சிலைக்கு அருகாமையில் உலகங்காத்தான் சிலையை பெருவட்டம் தர்மராஜ் திறந்து வைத்தார்.  அந்தக் கூட்டத்திற்கு அம்பலத்தரசன் தலைமை வகித்தார்.

      அப்போது இருவருமே ஒரே கட்சியில் இருந்தார்கள்.

தேர்தல் வெற்றிக்காக தனது கட்சித் தலைவரே தன்னை காவு கொடுத்ததை  வெளியே சொல்லாமல் உலகங்காத்தான், காந்தி சிலைக்கு அருகில் சிலையாக நின்றிருந்தான்.

. 88888888888888

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...