Friday, June 30, 2023

LAVANGAPATHRI MOGHUL KITCHENS FAVOURITE 191. லவங்கப்பத்திரி என்ற பிரியாணி இலை மரம்

லவங்கப்பத்திரி என்ற
பிரியாணி இலை மரம்
 


(LAVANGAPATHRI MARAM, INDIAN BAY LEAF, CINNAMOMUM TAMALA, LAURACEAE)

பொதுப் பெயர்கள்: இண்டியன் பே லீஃப்  இண்டியன் கேசியா.  இண்டியன் கேசியா பார்க், தமலா கேசியா (INDIAN BAY LEAF, INDIAN CASSIA, INDIIAN CASSIA BARK, TAMALA CASSIA)  

தாவரவியல் பெயர்: சின்னமோமம் தமலா

(CINNAMOMUM TAMALA)

தாவரக்குடும்பம் பெயர்: லாரேசி (LAURACEAE)

தாயகம்: இந்தியா

ஒரு தெருவின் ஒரு முனையில் பிரியாணி சமைத்தால் மறுமுனைவரை சாப்பிட்டமாதிரி வாசைன தூக்கும்.  அது சைவம் அசைவம் எதுவாக இருந்தாலும் அதற்கு அப்படி ஒரு மணம் தருவது அதில் போடும் லவங்கப்பத்ரிஇலைதான். 

இதைத்தான் பிரியாணி இலைமரம் என்று எழுதியுள்ளேன். எல்லோரும் அப்படித்தான் சொல்லுகிறார்கள். ஆங்கிலத்தில் இதன் பெயர் இந்தியன் பே லீஃப் ட்ரீ(BAY LEAF TREE)

எப்போதும் பசுமை மாறாத சிறிய மரம் இது.

ரோமானியர்கள் பிரியாணி  இலையை மலோபத்ரம் (MALOPATHRAM)

என்ற பெயரில், வாசனைத்திரவியமாகவும், சமையலிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பல பெயர்களில் இது அழைக்கப்பட்டாலும் தமிழில் லவங்கப்பத்ரிதான். எல்லோரும் சொல்லுவது பிரியாணி இலை. ஆங்கிலத்தில் சின்னமான் லீப் (CINNAMON LEAF)

பிரியாணி இலை பற்றிய ஒரு கட்டுரையை எழுதும்போது பிரியாணி பற்றிய செய்தி ஒன்றையாவது பிரியாணி பிரியர்களுக்கு சொல்லித்தான் ஆகவேண்டும். பிரியாணி என்ற சொல் பெர்சிய நாட்டிற்கு சொந்தமானது. பெர்சியா என்பது இன்றைய ஈரான் நாட்டின் பழைய பெயர்.

முதன்முதலாக பிரியாணியை உருவாக்கியவர் யார் ? அல்லது உருவாக காரணமாக இருந்தது யார் ? அதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மும்தாஜ் அறிமுகம் செய்த பிரியாணி 

ஒருமுறை ஷாஜகானின் மனைவி மும்தாஜ் அவர்களுடைய ராணுவத்தை பார்வையிடச் சென்றார். ராணுவ வீரர்கள் பெரும்பான்மையானவர்கள் எலும்பும் தோலுமாக இருந்தார்கள். நோஞ்சான்களாக இருந்தார்கள். அவர்களை உண்மையான வீரர்களாக மாற்ற விரும்பினார். உடல் வலிமை மிக்கவர்களாக மாற்ற விரும்பினார். அதற்கு ஏற்றதொரு உணவுவகை  ஒன்றை உருவாக்க உத்தரவிட்டார்.  உணவு தயாரிப்பதில் நிபுணத்துவம் உள்ளவர்கள்  அதற்காக உருவாக்கியதுதான் பிரியாணி. இதுதான் பிரியாணியின் சுவையான சரித்திரம்.

ஆனால் பிரியாணி இந்தியாவில் அறிமுகம் அதற்கு முன்னாலேயே ஊன்சோறு என்பது தமிழ் கலாச்சாரத்தில் இருந்தது என்கிறார்கள் தமிழறிஞர்கள். அது மட்டுமல்ல கூட்டாஞ்சோறு என்னும் உணவுவகை பழங்குடி மக்களிடையே இருந்து வந்தது.  ஊன்சோறு மற்றும் கூட்டாஞ்சோறு ஆகிய இரண்டுமே நமது பாரம்பரிய பிரியாணிய வடிவங்கள்தான.

கல்ராயன் மலைப்பகுதியின் கூட்டாஞ்சோறு

கல்ராயன் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடி அவர்களுடைய திருமணத்தின் போது கூட்டாஞ்சோறு தயாரிக்கும் வழக்கம் இன்றும் பழக்கத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டாஞ்சோறுஎன்னும் தலைப்பில் ஒரு வானொலி நிகழ்ச்சியை தயாரித்து சென்னை வானொலியில் நான் ஒலிபரப்பு செய்திருக்கிறேன். அதில்கூட இதுபற்றி சொல்லியிருந்தேன்.

வட இந்திய சமையல்கட்டுகளில் ஆண்டு முழுவதும் நடமாடுவது பிரியாணி இலைதான்.  குறிப்பாக முஸ்லீம்களின் சமையலில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது பிரியாணி. பிரியாணியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது நமது பிரியாணி இலை. பருப்பில்லாமல் கல்யாமா? என்பதுபோல லவங்கப்பத்ரி இல்லாமல் பிரியாணியா ?’ என்கிறார்கள்.

கீழே இருக்கும் பலமொழிப் பெயர்களைப் பார்த்தால் புரியும் பிரியாணி இலை எத்தனை நாடுகளை அசத்துகிறது என்று தெரியும்.

பிரியாணிஇலை மரத்தின் பலமொழிப் பெயர்கள்.

இந்தி: தேஜாபத்தா (TEZAPATTA)

மணிப்புரி: தேJபத் (TEJPAT)

தமிழ்: தாளிசப்பத்திரி (THALISAPATHRI)

மலையாளம்: தமலாபத்ரம் (TAMALABATHRAM)

தெலுங்கு: தாளிசப்பத்ரி, தாளிசா, பத்தா அக்குலு (TALISAPATRI, TALISA, PATTA AKULU)

கன்னடா: பத்ரக்கா (PATRAKA)

பெங்காலி: தேஜ்பத்(TEJPAT)

குஐராத்தி: தமால் பத்ரா (TAMAL PATRA)

உருது: தேஐபத்(TEJPAT)

அசாமிஸ்: மஹ்பத், தேஐ;பத் (MAHPAT, TEJPAT)

பர்மிஸ்: திட்சாபோ (THITSAPO)

சைனிஸ்: சாய் குய் (SAI KUI)

கிரீக்: மாலாபத்ரான் (MALA PATHRAN)

ர்மன்: இண்டிஸ்செஸ் லார்பீர் பிளாட் (INDIESCHES LARBEER PLOT)

ஐப்பானிஸ்: தமரா நிக்கிய் (TAMARA NIKIY)

லேட்டின்: மாலாபத்ரம் (MALAPATHRAM)

ரஷ்யன்: மலபார்ங்காயா கோரிஸ்டா (MALABARNGAYA CORISTA)

தமிழ்: பிரியாணி இலை, தாளிசப்பத்ரி, லவங்கப்பத்ரி, பட்டை (BIRIYANI ILAI, TALISAPATHRI, LAVANGAPATHRI, PATTAI)

கருவாப்பட்டைகளுக்கு மாற்று

இதன் பட்டைகளை கருவாப்பட்டைகளைப் போலவும் அதற்குப் பதிலாகவும் பயன்படுத்துகிறார்கள்.  அதைவிட இது கொஞ்சம் மலிவானது.

பெரும்பாலான லவங்கப்பத்ரி மரங்கள், நீலகிரி, இமயமலையின் தெற்குச் சரிவுகள், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் மலைப்பகுதிகள், மேகாலயாவின் காசி மலைப்பகுதிகள், நேப்பாளம், பர்மா ஆகிய வனப்பகுதிகளில் மற்றும் தனியார் தோட்டங்களில், உள்ளன.      

இந்தியாவின் வட மாநிலங்களில் லவங்கப்பத்ரி பிரபலம்

வட மாநிலங்களில் லவங்கப்பத்ரி பிரபலமாக இருந்தது. அங்கு மட்டுமல்ல உலகம் முழுக்க பெரும்பாலான சமையலறைகளில் வீசும் வாசத்திற்கு உரியது  லவங்கப்பத்திரிதான். ஆனால் தென்னிந்தியாவில், லவங்கப்பட்டைதான் (LAVANGAPATTAI) பிரபலம்.

இதன் இலைகள் சிறியதாய் இருக்கும்.  சிறியதானாலும் முரட்டு இலைகள்.  இலைகளில் 3 நரம்புகள் கோடு போட்ட மாதிரி இணையாக ஒடும்.  அந்த இலைகளை படுக்கை வசத்தில் வைத்தால் நெற்றியில் விபூதி போட்டமாதிரி இருக்கும்.

ஓவ்வொரு ஆண்டும் வறட்சியான பருவத்தில் தளதளவென வளர்ந்திருக்கும் மரங்களில் இலைகளை அறுவடை செய்வார்கள்.  அறுவடை செய்த  இலைகளை உலரவைத்து, சிறுசிறு கட்டுகளாக கட்டிவைத்து விற்பனைக்கு அனுப்புவார்கள்.

பல விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும்

இந்த மரத்தின் பல்வேறு பாகங்களை பல விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.  முக்கியமாக பால் உணர்வு தூண்டியாகவும், வாய்ப்புண், வயிற்றுவலி, இருமல் வாய் துர்நாற்றம், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், பல் ஈறுகள் வீக்கம், எலும்புறுக்கிநோய், ஆகியவற்றை குணப்படுத்தவும் இதனை பயன்படுத்துகிறார்கள்.

இதன் பட்டைப்பொடி நல்ல பல்பொடி

இந்த மரத்தின் பட்டைத்தூளை பற்பொடியாக பயன்படுத்தினால் பல் சம்மந்தப்பட்ட தோய்கள் குணமாகும்.  3 முதல் 5 கிராம் பட்டைத் தூளை தேனுடன் சேர்த்து குழைத்து சாப்பிட இருமல் மற்றும் ஆஸ்துமா குணமாகும்.  இதன் எண்ணெயை 3 முதல் 5 துளிகள் சூதகவலி, மற்றும் கருப்பையில் ஏற்படும் வீக்கத்தை சரி செய்கிறது.

இதன் பட்டைச் சாந்தினை வீக்கம் மற்றும் வலி ஏற்படும் இடங்களில் தடவலாம்.  பட்டைக் கஷாயம் 30 முதல் 40 மில்லி குடித்து வந்தால் இதயத்தசைகள் பலப்படும். இதய பலவீனமானவர்கள் இதனை  நல்ல டானிக்காகப் பயன்படுத்தலாம்.

இன்னும் ஆராய்ச்சிகள் வேண்டும்

மரங்கள் அதிகபட்சமாக 8 மீட்டர் வரை உயரமாக வளரும்.  900 முதல் 2500 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் வளரும்.  மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் பூத்து காய்க்கும்.  பழங்கள் அடர்த்தியான ஊதா நிறத்தில் இருக்கும்.  ஒற்றை விதையுடன் கூடிய இதன் பழங்களைச் சாப்பிடும் பறவைகள் தங்கள் எச்சத்தின் மூலம் புதிய லவங்கபத்ரியை பல இடங்களிலும் பரப்புகின்றன.

பலவிதமான, மருத்துவப் பண்புகளை உடைய இந்த மரத்தை இயற்கையின் அதிசயம்என்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள்.  ஆயினும் கூட இதன் பயன்களை முழுமையாகப் பயன்படுத்த கூடுதலான ஆராய்ச்சிகள் தேவை. 

இந்த மரத்திற்கு மட்டுமல்ல, பல ஆயிரம் மரங்களின் மருத்துவப் பண்புகளை நமது மூதாதையர்கள், அறிந்து வைத்திருக்கிறார்கள்.  அதனை முழுமையாக பயன்படுத்தினால் அவை இந்த சமூகத்திற்கு நல்ல பயனும் தரும், பெரும் பொருளும் தரும்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

  

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...