Tuesday, June 27, 2023

KARUVELAMARAM POPULAR TOOTH BRUSH TREE 132.பிரபலமான பல்குச்சி கருவேல மரம்

 

பிரபலமான பல்குச்சி 
கருவேல மரம்


(BLACK BABUL TREE, GUM ARABIC –ACACIA NILOTICA, FABACEAE)

கருவேலமரம் பல்துலக்க பல்குச்சி, ஒட்டுவதற்கு ஏற்ற தரமான பிசின் தருதல், ஒரு மூலிகை மரமாக சக்கரை நோய், தொழு நோய், புற்று நோய் உட்பட அரை டஜன் நோய்களை கட்டுப்படுத்துதல், ஆண்மைப் பெருக்கியாக செயல்படுதல், தேங்கி நிற்கும் தண்ணீரிலும் தாக்குபிடித்து வளருதல், மரச்சாமான்கள் செய்ய கடினமான மரம் தந்து உதவுதல்  பொது நிலங்களிலும் தரிசு நிலங்களிலும் வளர்ந்து காடு வளர்ப்புக்கும், பருவநிலை மாற்றத்தினால்  ஏற்படும் விளைவுகளை சரிசெய்ய உதவுதல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம்தான் பிளாக் பாபுல் (BLACK BABUL)என ஆங்கிலத்திலும் அகேசியா நிலோட்டிகா (ACACIA NILOTICA)எனும் தாவரவியல் பெயரிலும் அழைக்கப்படும் பலபயன் தரும் மரம்.

தினமும்  பல்விளக்க

எனது இளமைக் காலத்தை முழுசாக கிராமங்களில் கழித்தவன் நான். எனக்கு முதலில் அறிமுகமான இரண்டு மரங்களில் ஒன்று பூவரசு மரம் இன்னொன்று வேலமரம். எங்கள் வீட்டிற்கு ரொம்பப் பக்கத்திலேயே ஒரு வேலங்காடு இருந்தது. 

அந்த நாட்களில் பல்விளக்க தினமும் பயன்படுத்தியது வேலங் குச்சிதான். வேலங்குச்சியை உடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

கவனமாக உடைக்கவில்லை என்றால் கைகளில் முள் ஏறிவிடும். வேலங்காட்டுக்குள் பார்த்து நடக்கவில்லை என்றால் முள் காலில் ஏறிவிடும். ண்ணாந்துப்  பார்த்து கவனமாய் நடக்கவில்லை என்றால் முள் கண்களில் ஏறிவிடும்.

தேங்காய் கொட்டாங்கச்சிகளில்  பிசின்

விடுமுறை நாட்களில் அங்கு போய் மரங்களிலிருந்து வேலம் பிசின் சேகரிப்பேன்.

தேங்காய் கொட்டாங்கச்சிகளில்தான்  பிசினை சேகரிப்பேன். நான் நிறைய வேலம்பிசின் சேகரிப்பேன்.  என்னோடு படிக்கும் நிறைய பையன்களுக்கு ஓசியில்   பிசின் தருவேன். கிழிந்த நோட்டுப் புத்தகங்களை ஒட்ட அதைத்தான் உபயோகப் படுத்துவோம். ரொம்பவும் நன்றாக ஒட்டும். இன்று கடையில் விற்கும் நாகரீகமான பசை, பிசின், கோந்து எல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும்.

இன்னும் கொஞ்சம் பெரியவனாய் வளர்ந்த பின்னால் வேலங்கட்டையில் நானே பம்பரம் செய்திருக்கிறேன். பம்பரத்திற்கு சப்பாத்தி பழத்தின் சிவப்பு சாயத்தை வைத்து வண்ணம் பூசுவோம். பம்பரம் விளையாட்டில் வேல மர பம்பரங்கள், சுலபமாய் மற்றவற்றை உடைத்துவிடும்.  

ஆப்ரிக்காவின் களைமரம்

ஆப்ரிக்காவில் இந்த மரம் பெருமளவில் இயற்கையாக பரவி உள்ளது. அதனால் அவர்கள் இதை ஒரு களை மரமாக கருதுகிறார்கள்.

எதுவும் ஓசியில் கிடைத்தால் அதற்கு மரியாதை இல்லை. தட்டுப்பாடு இருந்தால் தகரம் கூட தங்கத்திற்கு சமமாய் விலைபோகும்.

கருவை மரத்தின் பல மொழிப் பெயர்கள்

தமிழ்: கருவேல் மரம், கருவை (KARUVEL MARAM, KARUVAI)

 தெலுங்கு: நல்ல தும்மா (NALLA THUMMA)

கன்னடா: பப்ளி (PAPLIi)

 மலையாளம்: கரிவேலம் (KARIVELAM)

ஹிந்தி: பாபுல், ஹிக்கார் (BABUL, HIKKAR)

மராத்தி: பாபுல் (BABUL)

குஜராத்தி: பார்பரியா (BARBARIYA)

தாவரவியல் பெயர்  : அகேசியா நிலோட்டிகா   (ACACIA NILOTICA)

பொதுப்பெயர் ஃ ஆங்கிலப்பெயர் : கம் அராபிக்  (GUM ARABIC)

தாவரக்குடும்பம்  :  மைமோசி (MIMOCEAE)

தாயகம்: இந்தியா, ஆப்ரிக்கா, எகிப்து

மூலிகை மரமாக கருவேல மரம்

மரத்தின் வகை:  நடுத்தர அளவு மரம். 5 முதல் 10 மீட்டர் வளரும். எல்லோரின் கவனமும் இயற்கை மருந்தின் பக்கம் திரும்பி உள்ளது. அதனால் கருவேல மரம் எதிர் வரும் காலத்தில் மூலிகை மரமாக முக்கியத்துவம் பெரும் என நம்பலாம்.

சக்கரை நோய் நீக்கும்

மரம் உபயோகம்: காகிதம் தயாரிக்க, வேளாண்மைக் கருவிகள், கட்டிடச் சாமான்கள், மேஜை, நாற்காலிகள், படகுகள், கம்பங்கள், கேபினட்டுகள், உழவு ஏர், மற்றும் சக்கரங்கள்  செய்யவும் மரம் தரும்.

மருத்துவப் பயன்: இலை, பட்டை, கோந்து, நெற்று, வேர், மரம் அத்தனையும் மருந்துகள் செய்ய உதவுகிறது. சக்கரை நோய், ரத்தச் சோகை, தோல், உணவுக் குழாய், சிறுநீர் மற்றும் பால் உறுப்புகள் தொடர்பான பிரச்சினைகள், மூச்சுக் குழாய், டான்சில், வயிற்றுப் போக்கு, பல் சுத்தம் பேணுதல், போன்றவற்றிற்கு  பயன்படுகிறது.

தொழு நோயை குணப்படுத்தும்

இதன் பட்டை தென் ஆப்ரிக்காவின் ஜுலு இன மக்களின் இருமலைப் போக்குகிறது. வேர்கள் சிப்பி இன மக்களின் தொழு நேயைப் குணப்படுத்துகிறது. பட்டை மற்றும் வேர்க் குடிநீர்தான்; கிழக்கு ஆப்ரிக்க மசாய் இன மக்களின் மஜாவான சாராயம்.

இவை தவிர ஆண்மை பெருக்க, வயிற்றுப் போக்கு, சீதபேதி, தொழு நோய், உடல் இளைக்க, புற்றுநோய், ஈரல் மற்றும் மண்ணீரல், பித்தப்பை, சின்னம்மை, பிரச்சினைகள்ஆகியவற்றை குணப்படுத்துகிறது. இந்த மரங்கள் மேற்கு ஆப்ரிக்கா, செனிகல், எத்தியோப்பியா, டோங்கா, இத்தாலியன் ஆப்ரிக்கா, ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுகிறது.

கரிசலுக்கும் கண்மாய்க்கும் ஏற்ற மரம்   

சூழல்: கரிசலுக்கும் கண்மாய்க்கும் என்று உருவான கடினமான கருவைமரம். வேர் மண்டலம் தழைச் சத்தை நிலைப் படுத்தும்.

ஆறுமாதம் தண்ணீர் தேங்கி நின்றால் கூட தாக்குபிடிக்கும் மரம். அதனால்தான் நம் முன்னோர்கள் அதனை கண்மாய்களில் நட்டு வைத்தார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்மாயை சீர்செய்ய காசு கொடுத்து உதவும் மரம்.

பல்லுயிர் ஓம்பும் பண்புள்ள மரம். தேனீக்களுக்கு தேனும், மகரந்தமும் தரும்.

இலை மற்றும் நெற்றுக்களில் டேனின் நிறைந்துள்ளது. உட்புற பட்டையில் 23 சதம்  டேனின் உள்ளது.. அதனால்  தோல்பதனிட உதவும்:

கருவேலம் பிசின் மிட்டாய் செய்ய, துணிகளுக்கு சாயம் ஏற்ற, அதற்கு மெருகேற்ற, மற்றும் கோந்து தயாரிக்க உதவும்.

கனி நெற்றுக்களிலிருந்து உறிக்கப்பட்ட தோல்  இரப்பர் பாலை கெட்டியாக்க பயன்படும். தழை ஆடுகளுக்கு தீவனமாகும். நிலத்திற்கு உரமாகும். அடுப்பெரிக்க விறகாகும்.

 இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படும் மரம்

ஆந்திரப்பிரதேசம், பீஹார், குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது.

களிமண்  மற்றும் கரிசல் மண்ணில் கருவை மரங்கள் நன்கு வளரும். விதைகள், நாற்றுக்கள் மற்றும் வேர்க்குச்சிகளை நடவுப் பொருளாகப் பயன்படுத்தலாம்.

சிறிய மரமாக,னிறைய கிளைகளுடன் பரந்தும் 3 முதல் 5 மீட்டர் உயரம் வளர்ந்து வெள்ளை நிற முட்களுடனும், மஞ்சள் நிற பூக்களுடனும் நீர் நிலைகளுக்கு அழகு தரும்.

ஆதிவாசி மக்களுக்கு பல விதமான நோய்களுக்கும் இன்றும் கைகண்ட மருந்து கருவை மரம்தான். அவர்களைப் பொருத்த வரை கருவை மரம் ஒரு சஞ்சீவி மூலிகை.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...