ஜோர்டான் ஆறு இஸ்ரேல் |
ஒரு குழந்தை பிறந்தால் ஒரு மரம், அது தவழ்ந்தால் ஒன்று, நடந்தால் ஒன்று, பிறகு பள்ளியில் சேர்ந்தால், கல்லூரியில் சேர்ந்தால், திருமணம் ஆனால், கார் வாங்கினால், வீடு வாங்கினால், மேலே போக டிக்கெட் வாங்கினால் கூட ஒரு மரம் என்று 770 லட்சம் மரங்களை நட்டு முடித்தார்கள் 12 ஆண்டில், இஸ்ரேல் நாட்டினர்.
ISRAEL'S RAZOR SHARP INTELLIGENCE
மயிர் கூச்செறியும் புத்திசாலித்தனம்
88888888888888888888888888888888888888888888888
இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அப்போது உலகத்தின் பல பகுதிகளில் வசித்த யூதர்கள் இஸ்ரேலில் திரண்டனர்.
இஸ்ரேலில் பெரும்பகுதி பாலைவனம்.கோடையில் தீ பொறி பறக்கும். குளிர் காலத்தில் குளிர் பல்லைக்கிட்டும் .ஆனால் அங்கு விவசாயம் பார்க்க வேண்டிய தேவை இருந்தது. அன்று அது அவர்களுக்கு பழக்கம் இல்லாத தொழில்.
விவசாயம் செய்வதற்கு முன்னர் மரங்கள் அவசியம் வேண்டும், என்பதை மட்டும் உணர்ந்தார்கள். சாலை ஓரங்களில், குடியிருப்புப்பகுதிகளில், பொது நிலங்களில் மற்றும் பள்ளிகளில் மரங்களை நட்டார்கள்.
உலகம், மூக்கின் மீது விரல் வைத்தது
ஒரு குழந்தை பிறந்தால் ஒரு மரம், அது தவழ்ந்தால் ஒன்று, நடந்தால் ஒன்று, பிறகு பள்ளியில் சேர்ந்தால், கல்லூரியில் சேர்ந்தால், திருமணம் ஆனால், கார் வாங்கினால், வீடு வாங்கினால், மேலே போக டிக்கெட் வாங்கினால் கூட ஒரு மரம் என்று 770 லட்சம் மரங்களை நட்டு முடித்தார்கள் 12 ஆண்டில், இஸ்ரேல் நாட்டினர்.
ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோல இஸ்ரேலின் இலுப்பைப்பூ, ஜோர்டான் நதி. அதன் நீரை 'கலிலோ' என்னும் ஏரியில் மடக்கிப் பிடித்தார்கள்.
இந்த ஏரி பூமியின் மட்டத்திலிருந்து 700 அடிக்கும் கீழே உள்ளது. இந்த நீரை 800 அடிக்கு மேலே பம்ப் செய்து இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்குப்பகுதியில் நம்பிக்கையை மட்டும் முதலாக வைத்து விவசாயம் பார்த்தார்கள்.
இதெல்லாம் மணலை கயிறாய் திரிக்கும் வேலை
6.25 மில்லியன் எக்டர் மீட்டர்தான் அந்த நாட்டின் மொத்த நீர்வளம். அது சராசரியாக நம்மூர் பவானிசாகர் அணையில் ஒர் ஆண்டில் வந்து சேரும் நீருக்கு சமம். இந்த அளவு நீரைக்கொண்டு அவர்கள் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்கிறார்கள். பலமுறை சொன்ன செய்தி இது.
சாதிக்கப்பிறந்த சம்சாரிகள்
இஸ்ரேலில் பெரும்பகுதியாய் உள்ள பாலைவனப் பகுதியில் கிடைக்கும் ஆண்டு சராசரி மழை அளவு வெறும் ஐம்பது மில்லிமீட்டர்தான். தட்டுப்பாடான தண்ணீரைக்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார்கள். சொட்டுநீர் பாசனத்தை அறிமுகம் செய்தார்கள். நம்பிக்கை அவர்களை கைவிடவில்லை
சொட்டுநீர்ப்பாசனம் சோறு போடுகிறது.
இஸ்ரேல் நாட்டில் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களும் அரசாங்கத்திற்கு சொந்தம். சொட்டுநீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் இரண்டில் ஒன்றைத்தான் இஸ்ரேல் விவசாயிகள் பயன்படுத்தமுடியும்.
விவசாயத் தேவைக்கு ஏற்ப தண்ணீரை அளந்துதான் கொடுப்பார்கள். தேவைக்கு அதிகமாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது.
பாசன நீரை 10 அடி விட்டமுள்ள குழாய்களில் அதிக அழுத்தத்தில் எடுத்துச் செல்லுகிறார்கள். இந்த நீர் எல்லா பகுதிக்கும் கோவில் சுண்டல் மாதிரி பகிர்ந்து கொடுப்பார்கள். நமது நகரங்களில் குடிநீர் விநியோகம் ஆவது மாதிரி.
நம்மூர் ஆட்டோ ரிக்க்ஷாவில் இருப்பதுபோல அங்கும் பாசனக்குழாயில் தண்ணீர் மீட்டர் இணைத்திருக்கிறார்கள். மீட்டருக்குமேல் மூச். ஒரே ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டார்கள். கறாரான மீட்டர் !
ஏற்றுமதிதான் குறி
அரிசி, கோதுமை, பயறுவகை ஆகியவை தேவை இருந்தாலும்கூட வருமானம் குறைவு என்பதால் அவற்றை அளவாக செய்கிறார்கள். பூக்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள்தான் அவர்களின் விருப்பப்பயிர்கள்.
காரணம் இந்த பயிர்களில்தான் குறைவான தண்ணீர் செலவில் அதிக வருமானம் பார்க்கமுடிகிறது என்பது அவர்களின் கருத்து. அவர்களுடைய விவசாயம் திடிர் விவசாயம்தான் ஆனால் திட்டமிட்ட விவசாயம்.
அவர்களுக்கு ஏற்றுமதிதான் குறி. ஏன் என்றால் உள்ளூர் மார்கெட்டில் ஒரு பழத்தை ஒரு ரூபாய்க்கு விற்றால் ஏற்றுமதியில் 100 ரூபாய்க்கு தள்ளிவிடலாம்
'எந்த பழங்கள் ? எந்த காய்கறிகள் ? எந்த பூக்கள் ? எந்த நாட்டிற்கு தேவை ? என்ற தகவல் எல்லாம் அவர்களுக்கு விரல் நுனியில்.
ஆனால் ஏற்றுமதிக்குத் தேவை மூன்று விஷயங்கள் ஒன்று தரம் இரண்டு தரம் மூன்று தரம். தரமான பொருட்கள் உற்பத்தி செய்வதில் அவர்கள் கில்லாடிகள்.
தரமான பொருட்களை வாங்க உலக நாடுகள் நீ நான் என்று க்யூவில் நிற்கின்றன. இங்கு ஒரு விவசாயியின் ஆண்டு சராசரி வருமானம் 66000 யூ எஸ் டாலர். எல்லாம் ஏற்றுமதியின் மகிமைதான் !
ஒருசதம் உழைப்பு 99 சதம் நம்பிக்கை
இஸ்ரேல் நாட்டின் பரப்பளவு மிகவும் குறைவு. அங்கு உள்ள இயற்கை வளங்கள் அதைவிட குறைவு. உலகில் பல நாடுகளுக்கு லாபகரமான விவசாயத்தை சொல்லிகொடுக்கும் நாடாக விளங்குகிறது இன்றைய இஸ்ரேல்.
மனித சமூகத்திற்கு மிகவும் உபயோகமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை தந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். உங்கள் வெற்றிக்கு என்ன காரணம் ? என்று நிருபர்கள் கேட்டபோது 'ஒரு சதம் உற்சாகம் 99 சதம் உழைப்பு' என்றார்.
அதுபோல இஸ்ரேல் நாட்டுக்காரர்களை கேட்டால் 'ஒரு சதம் உழைப்பு 99 சதம் நம்பிக்கை ' என்கிறார்கள்.
யூதர்கள் மயிர்கூச்செறியும் புத்திசாலிகள்.
அவர்களுடைய மிகப்பெரிய பலம் பல் விளக்கக்கூட பற்றாத தண்ணீரைக் கொண்டு பணம் பண்ணுவது எப்படி என்ற வித்தையை உலக நாடுகளுக்கு சொல்லிக் கொடுத்து கனத்த காசு பார்ப்பது !
இதுதான் மயிர் கூச்செரியும் புத்திசாலித்தனம் என்பது !
8888888888888888888888888888888888888888888888
No comments:
Post a Comment