Monday, June 12, 2023

HEAP METHOD OF VERMI COMPOST PREPARATION குவியல் முறை மண்புழு உரம் தயாரிப்பு


குவியல்முறை
மண்புழு உரம் தயாரிப்பு

பதிவு எண்: 06 

இன்றைக்கு பல முறைகளில் மண்புழு உரம் தயார் செய்கிறார்கள். ஆனாலும் என்னுடைய அனுபவத்தில் குவியல் முறைதான் மிகவும் சிக்கனமாகத் தெரிகிறது. நான் முதன் முதலாக குவியல் முறையில் பேட்டிகண்ட என்னுடைய அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். நானே அதனை சொல்லுவதைவிட இனி பாஞ்சாலியும் கந்தசாமியும் உங்களுக்கு விளக்கமாக சொல்லுவார்கள்.

(கணவன் மனைவி பாஞ்சாலியும் கந்தசாமியும் ரவியின் மண்புழு பண்ணைக்கு சென்று  அவரிடம் மண்புழு உரம் தயாரி;ப்பதுபற்றி கேட்டு தெரிந்துகொள்ளுகிறார்கள்)

சென்னை பெங்களுர் மெயின் ரோட்டில் புத்துக்கோவில் கிராமத்திற்கு அடுத்திருக்கும் சக்கரை ஆலை கிராமம் கேத்தாண்டப்பட்டியில் இருந்தது ரவியின் மண்புழுபண்ணை. கடந்த பத்து ஆண்டுகளாக மண்புழு உற்பத்தி செய்து அவர்; தனது காய்கறி பூப்பயிர் விவசாயத்துக்கு பயன்படுத்துகிறார்.;  உபரியான உற்பத்தியை விற்பனை செய்கிறார். அவ்வளவு ஏன் அரசாங்கம் கூட அவரிடம் கொள்முதல் செய்கிறது. இருபத்தி இரண்டு காரட் தங்கம் மாதிரி உரம் தரமாக இருக்கும். மண்புழு ரவி என்றால் எல்லோருக்கும் தெரியும். 

வளர்ந்த ஒரு தென்னந்தோப்பு. தென்னை ஓலை வேய்ந்த ஒரு கொட்டகை. அதற்குள் 30 அல்லது 40 குவியல்களாக 15 அடி நீளத்திற்கு மண்புழு உரக்குவியல்கள் இருக்கின்றன. ரகு அவர்களை அந்த மண்புழு உரக்குவியல்களுக்கு ஊடாக பாஞ்சாலி மற்றும் கந்தசாமியை அழைத்துக்கொண்டு போகிறார். இப்போது அவர்கள்  என்ன பேசிக் கொள்ளுகிறார்கள் என்று பார்ப்போம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ரவி: மண்புழு உரத்தின் மேல உங்களுக்கு நம்பிக்கை வரணும். நம்பிக்கை இல்லாம ஒரு காரியத்தை செஞ்சா அது சொகப்படாது. அஞ்சி வருஷம் தொடர்ந்து மண்பழு உரம் போட்டா உங்க மண் தங்கமா மாறிடும். என்னோட நிலத்துல எங்க தோண்டினாலும் அங்க ஒரு மண்புழுவாவது இருக்கும். 

கந்தசாமி: நீங்க சொன்னமாதிரி நாங்க ஒரு சந்தேகத்தோடதான் வந்தோம்.

பாஞ்சாலி: எங்க வீட்டுக்காரர் இருக்காரே எப்பவும் அப்படிதாங்க சந்தேகத்துக்குப் பொறந்தவர். 

கந்தசாமி: ரவி சார். எதச்சொன்னாலும் எனக்கு சந்தேகம் வரும்.; அதனால கேள்வி கொஞ்சம் ஜாஸ்தியா கேப்பேன்..அது தப்பா சார். 

ரவி: கேள்வி கேக்றதுல தப்பு இல்ல. முதல்ல நான் சொல்றத கேளுங்க. அதுல ஏதாச்சும் சந்தேகம் வந்தா கேளுங்க சரிங்களா ? 

பாஞ்சாலி: சரிங்கய்யா நீங்க சொல்லுங்க.. 

ரவி: முதல்ல மண்புழு உரம் தயாரிக்க என்னென்ன பொருளுங்க தேவைன்னு சொல்றேன். புழுப் படுக்கை அமைக்க நிழலான ஒரு இடம் வேணும். சுமார் 500 அல்லது ஒரு கிலோ மண்புழுக்கள்; 500 கிலோ ஆறிய பசுமாட்டுச் சாணம்> 10 முதல் 12 லிட்டர் குளோரின் கலக்காத தண்ணீர்; 500 தேங்காய் உறிமட்டைகள்> 100 கிராம் மிளகாய் தூள் அல்லது மஞ்சள் தூள் அவ்ளோதான். 

கந்தசாமி: ஒரு நிழலான இடம் வேணும்னு சொன்னிங்க. எவ்வளவு இடம் வேணும் ஐயா ? 

ரவி: எவ்வுளவு சிறிய இடத்திலும் இதனை தயார் செய்ய முடியும். குவியல் முறையில் சிமெண்ட் தொட்டி கட்ட வேண்டாம். காசு செலவில்லா சிக்கன முறை இது. இடம் பத்துக்கு அஞ்சடி இருந்தாகூட போதும்.  பாருங்க இதுல ஒரே ஒரு குவியல் போட்டாக்கூட கிடத்தட்ட சுமார் 400 கிலோ மண்புழு உரம் தயார் பண்ணலாம். 

பாஞ்சாலி: இதை பாக்கும் போதே தெரியுது நீங்க போட்டிருக்றது எல்லாமே பதினஞ்சடிக்கு அஞ்சடி இருக்கும் இந்த மனுசன் எப்பவும் அப்படித்தான்.. எதாச்சும் கேட்டுகிட்டே இருப்பார். நீங்க எப்பிடி இந்த குவியலை தயார் பண்ணனும்னு சொல்லுங்கய்யா .. 

ரவி: ஒரு 15 அடி நீளம்; 3.5 அடி அகலத்திற்கு  பாத்தி மாதிரி அளந்து முளை அடிச்சிக்கணும்;. இதுதான் புழுப்படுக்கை. இதன் அகலம் மட்டும் மூன்றரை அடிக்கு மேல் இருக்கக் கூடாது. நீளம் கூடலாம் குறையலாம். 

கந்தசாமி: எதுக்குய்யாஅகலம் மூணறை அடிக்குமேல  இருக்கக் கூடாது ? அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கா ? 

ரவி: அந்த புழுபாத்திய கையினால சரி பண்ணனும்னா மூணறை அடிக்குமேல அதிகமா இருந்தா கை எட்டாது.. புழுப்பாத்திக்கு ரெண்டு பக்கத்திலயும் நிண்ணு சுலபமா சரி பண்ணலாம்நாலடி அஞ்சடி இருந்தா கை எட்டாது.. 

பாஞ்சாலி: ஆத்துல போட்டாலும்; அளந்து போடணும். ல்ல போட்டாலும் கணக்குபண்ணி போடணும்.. நீங்க மேல சொல்லுங்கய்யா.. 

ரவி: புழுப் படுக்கையில் 0.5 அடி அழத்திற்கு மண்வெட்டியால் வெட்டி மண்ணை எடுக்கணும் அப்படி எடுத்த பள்ளத்தில் அதில் சீராக மணலை பரப்பணும். பரப்பிய மணலின் மீது தேங்காய்  உறி மட்டைகளை  முதுகுப்புறம் மணலில் படுமாறு அடுக்க வேண்டும்.. 

பாஞ்சாலி: எதுக்குய்யா புழப்படுக்கையில இந்த மணலும்> தேங்காய் உறி மட்டைகளும் போடணும்..

ரவி: இதச் செய்தாதான் புழுப்படுக்கையில இருக்கும் மண்புழுக்கள் அதைவிட்டு வெளியப் போகாது 

கந்தசாமி: இது எனக்கு அப்பவே தெரியும் அதனாலத்தான் அந்தக் கேள்விய நான் கேக்கல.. 

பாஞ்சாலி: உங்களுக்கு என்ன தெரியும் என்ன தெரியாதுன்னு எனக்குத் தெரியும்.. அதோட அடங்குங்க..நீங்க சொல்லுங்கய்யா

ரவி: ஏற்கனவே சேகரித்து வைத்திருக்கும் பசும் சாணத்தில்; 100 கிலோவை அதன் மீது சீராகப் பரப்பணும். அதன்மீது 4 முதல் 5 குடம் தண்ணீரை சீராக.. தெளிக்கணும். இப்படி 5 அடுக்கு சாணத்தை போட்டு 5 முறை சீராகத் தண்ணீர் தெளிக்கணும்.. இப்போ மொத்தப் புழுப்படுக்கையின் உயரமும் 2 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. 

கந்தசாமி: புழப்படுக்கையோட உயரம் ரெண்டடிக்கு மேல இருந்தா என்னாகும்யா ? 

ரவி: மண்புழுக்கள் சாதாரணமா அதுக்குமேல ஏறிப்போகாது..அதுக்கு மேல உயரம் வச்சா மேல்பகுதி சாணம் சரியா உரம் ஆகாது..

கந்தசாமி: சரிங்கய்யா.. 

ரவி: அதுக்குப் பின்னாடி கைவசம் உள்ள மண்புழுக்களை புழுப்படுக்கையில் பரவலாக விடணும். அப்படி விடப்பட்ட மண்புழுக்கள் சாணப்படுக்கையை துளைச்சிகிட்டு உள்ள போயிடும். அப்புறம்; புழுப் படுக்கையைச் சுற்றிலும் ஒரு அடி இடைவெளிவிட்டு மஞ்சள் தூள் அல்லது மிளகாய் தூளை கோலம் பேடறதுமாதிரி போடணும்;. இதனால் எறும்பு மற்றும் கறையான்கள் புழுப்படுக்கையில் ஏறாமல் தடுக்கலாம். அவ்ளோதாங்க அப்புறம் தினமும் இந்த புழுப்படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒரு தடவை தண்ணீர் தெளிச்சி ஈரமா வச்சிக்கணும். எண்ணி அறுவது நாளுக்குள்ள அதாவது இரண்டு மாசத்துக்குள்ள மண்புழு உரம் தயாராகிடும்.

பாஞ்சாலி: அவ்ளோதானா ரொம்ப சுலபமா இருக்கும்போல இருக்கே.. 

ரவி: ஆமா தாயி ரொம்ப சுலபம்.. குழந்தைகூட மண்புழு உரம் தயார் செய்யலாம்.; நாம விருப்பமா நம்பிக்கையா செஞ்சா எதுவும் சிரமம் இல்ல..

கந்தசாமி: அறுபது நாளைக்கு பின்னாடி எப்பிடி அறுவடை செய்யறது ?

பாஞ்சாலி: அதேமாதிரி உரம் தயாராயிடுச்சின்னு எப்பிடிய்யா தெரிஞ்சிக்கறது ? 

ரவி: அறுபது நாள்ல.. புழப்படுக்கையில போட்ட சாணி எல்லாமே காப்பித்தூள் மாதிரி பொலபொலன்னு தூளாயிடும். சாணி இருக்காது. அதுல வாடை இருக்காது. இதுதான் அறுவடைக்கு அடையாளம். அறுவடை செய்யலாம்னு முடிவுசெய்யறுதுக்கு மூன்று நாளைக்கு முன்னாடியே தண்ணீர் தெளிக்கறதை நிறுத்திடணும். அப்பொ மண்புழுக்கள் குவியலோட அடிப்பகுதிக்கு போயிடும். நாம் மேலாக்க இருக்கும் மண்புழு உரத்தை சேகரிச்சி எடுத்துக்கலாம். இதுதான் குவியல் முறையில மண்புழு உரம் தயாரிக்கும் முறை.

கந்தசாமி: ரொம்ப நன்றிங்கய்யா விளக்கமா சொன்னிங்க. 

பாஞ்சாலி: ஆமாங்கய்யா புரியுமபடியா சொன்னிங்க.  இந்தாங்கய்யா எங்க தோட்டத்துல முதன்முதலா காய்ச்சது லக்னோ 49 கொய்யா. இதுல ஒரு 10 பழம் இருக்குய்யா. வீட்டுல குழந்தைகளுக்குக் குடுங்க..உலகத்துலயே ரொம்ப சத்துள்ள பழம் இதுதான்னு சொல்றாங்க.. 

ரவி: நாங்கூட பத்ரிக்கையில பாத்தேன் நிறைய ஆன்டிஅக்சிடெண்;ட் வைட்டமின் (ANTI OCCIDENT)எல்லாம் இருக்குது இதுல.. 

பாஞ்சாலி & கந்தசாமி: அப்போ நாங்க வரம்ங்க..

ரவி: சரிங்க செயல்முறையா செய்யும்போது நிறைய சந்தேகம் வரும். வந்தா எனக்கு போன்பண்ணி கேளுங்க..

பாஞ்சாலி: சரிங்க..

(பாஞ்சாலியும் கந்தசாமியும் ரவியிடம் விடைபெற்றுக்கொண்டு உடனே தங்கள் பண்ணையில் மண்புழு உர உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்ற முடிவோடு தெக்குப்பட்டு சென்றார்கள். கேத்தாண்டப்பட்டியிலிருந்து தெக்குப்பட்டு கிராமம் கூப்பிடு தூரத்தில் இருக்கிறது)

குவியல் முறையில் மண்புழு உரம் தயாரிப்பில் உங்களுக்கு அனுபவம் இருந்தால் அதுபற்றி சொல்லுங்கள்.

GNANASURIA BAHAVAN D, gsbahavan@gmail.com 



No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...