Monday, June 12, 2023

HANDSOME FLOWERS OF KOZHIKONDAI TREE - அம்சமான பூமரம் கோழிக்கொண்டை

 

கோழிக்கொண்டை  AFRICAN TULIP TREE
Spathodea Companulata

நான் கூட அதன் அழகில் மயங்கி வாசலில் இரண்டு மரங்களை வைத்திருக்கிறேன். இதுவரை எந்த அடாவடித்தனமும் செய்யவில்லை. அடக்கமாக சிக்கனமாக கொஞ்சமாகப் பூத்து என் வாசலை அலங்கரிக்கின்றன. தமிழில் இதன் பெயர் கோழிக்கொண்டை மரம். பெயர்வைத்த புண்ணியவான்களை பாராட்ட வேண்டும். பூவைப் பாருங்களேன். அசப்பில் சேவல் கொண்டை மாதிரியே இருக்கும்.

10. கோழிக்கொண்டை மரம்

(AFRICAN TULIP TREE)

888888888888888888888888888888888

தாவரவியல் பெயர்: ஸ்பேத்தோடியா கம்பேனுலேட்டா (SPATHODEA COMPANULATA)

தாவரக்குடும்பம்: பிக்னோனியேசி (BIGNONIACEAE)

தாயகம்: ஆப்ரிக்கா (AFRICA)

அழகு பூமரம்

இந்த மரங்களை முக்கியமாக நிழல் மரமாக பயன்படுத்தலாம். சாலை ஓரங்களில் நடலாம். பூங்காக்களில் நடலாம் தோட்டப் பயிர்களின் ஊடாக நிழல் தரும். மரங்களாக நடலாம். நோய்களை குணப்படுத்தும் மூலிகை மரமாகவும் பயன்படக்கூடும்.

இந்த மரத்தை சாலை ஓரங்களில் அழகு பூ மரமாக நடலாம். மண்ணை மேம்படுத்த,  நலிந்துபோன காடுகளை மீண்டும் உருவாக்க, மண் அரிப்பைத் தடுக்க, நிலங்களை சீர்திருத்தம் செய்ய,  உயிர் வேலிகளை உருவாக்க, காபி தோட்டங்களில் உரமாகப் பயன்படுத்த, நிழல் தரும் மரமாக பயன்படுத்தலாம்.

கோழிக்கொண்டைமாதிரி பூக்கள்

அறிமுகம் செய்யும் இடங்களில் வேகமாக வளர்ந்து அங்கு உள்ளுர் மரங்களுக்கு உபத்திரவம் தரும் 100 மரங்களை உலக அளவில் பட்டியல் போட்டிருக்கிறார்கள். அந்தப்பட்டியலில் கோழிக்கொண்டை மரமும் ஒன்று. ஏதோ ஒன்று இரண்டு என நட்டு ஆசைக்கு அழகு பார்க்கலாம். எதற்கும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது என்கிறார்கள் குயின்ஸ்லாந்து பப்புவா நியூ கினியா மற்றும் ஸ்ரீலங்காக்காரர்கள்.

நான் கூட அதன் அழகில் மயங்கி வாசலில் இரண்டு மரங்களை வைத்திருக்கிறேன். இதுவரை எந்த அடாவடித்தனமும் செய்யவில்லை. அடக்கமாக சிக்கனமாக கொஞ்சமாகப் பூத்து என் வாசலை அலங்கரிக்கின்றன. தமிழில் இதன் பெயர் கோழிக்கொண்டை மரம். பெயர்வைத்த புண்ணியவான்களை பாராட்ட வேண்டும். பூவைப் பாருங்களேன். பூக்கள், அசப்பில் சேவல் கொண்டை மாதிரியே இருக்கும். பெங்களுரில் ரோட்டோரத்தில் நிறைய மரங்கள் அட்டகாசமாய் பூத்திருக்கும். சமீபத்தில் ஓசூரில் ஒரு மஞ்சள்நிற கோழிக்கொண்டை மரத்தைப் பார்த்தேன்.

1. கோழிக்கொண்டை மரத்தின் பலமொழிப் பெயர்கள்

1.1. தமிழ்: கோழிக்கொண்டை மரம் (KOZHIKONDAI MARAM)

1.2. கன்னடா: நீரு காயி மரா (NEERU KAAYI MARA)

1.3. இந்தி: ருக்தூரா (RUKDURA)

1.4. மலையாளம்: ஆப்ரிக்கன் பூ மரம் (AFRICAN POOMARAM)

1.5. தெலுங்கு: பட்டாடியா, பட்டாடி (PATTADIA, PATTADI)

1.6. மராத்தி: ஆகாஷ் சேவ்கா (AFRICA)

1.7. ஆப்ரிக்கன்: பேக்கல் பூம், ஆப்ரிக்கா விளம் பூம்: (BEKKAL BOOM, AFRICA VILAM BOOM)

1.8. ஆங்கிலம்: ஆப்ரிக்கன் டியூலிப் ட்ரீ, பவுண்டெய்ன் ட்ரீ, நந்தி பிளேம், நைல் பிளேம், ஸ்குர்ட் ட்ரீ, உகாண்டா ட்ரீ (AFRICAN TULIP TREE,FOUNTAIN TREE, NANDI FLAME, NILE FLAME, SQUIRT TREE, UGANDA TREE)

1.9. பிரென்ச்: இம்மார்டல் எட்ராங்கர் (IMMORTAL ETRANGER)

1.10. பங்ளாதேஷ்: ருத்ர பலாஷ் (RURDA PALASH)

1.11. மலாய்: பேன்சுட் பேன்சுட் (PANSUT PANSUT)

1.12. சிங்களம்: குடல்ல ககா (KUDALLA KAGA)

1.13. ஸ்பேனிஷ்: அம்போலா, எஸ்படோடியா, மம்போலா, டியுலிபன் ஆப்ரிகானோ (AMBOLA, ESPADODIA, TULIPAN AFRICANO)

1.14. ஸ்வாகிலி: கிபோபகாசி (KIBOKASI)

1.15. பிரேசில்: எஸ்படோடியா (ESPATODIA)

1.16. பர்மிஸ்: கியு, லிஸ் (KIYU, LIS)

1.17. மெக்சிகோ: பிளம்போயின் (FLAMBOIN)

1.18. தாய்: கா சயீட் (KA -SAYEET)

1.18. வியட்நாமிஸ்: ஹாங் கீ, சூங் தோ  சயீட் (HONG KI, SOONG THO - SAYEET)

1.19. வெனிசுலா: கலீட்டோ, டுலிபன் ஆப்ரிகானோ (GALEETO, TULIPAN AFRICANO)

1.20. சைனிஸ்: ஹ_வா யான் ஷ_ (HA VA YAN SHA)

மிக அழகான பூ மரம்

உலகத்தின் மிக அழகான பூ மரங்களில் ஒன்று.  பெரிய மரமாக அடிமரம் பருத்து வளரும். இந்த மரம் முதன் முதலாக 1787 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் கோல்ட் கோஸ்ட் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று கோல்ட் கோஸ்ட் என்பதுதான் கானா (GHANA).

இதன் தாவரவியல் பெயர் ஸ்பேத்தோடியா கம்பேனுலேட்டா (SPATHODEA COMPANULATA).

பிக்னோனியா (BIGNONIA) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. கோ.கொ. மரம்  ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மையுடையது. ஆனாலும்  கோடையில் அதிகம் பூக்கும். பூக்கள் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

பறவைகளுக்கு பிடித்தமான மரம்

இதன் பூ மொட்டுகள் மிகவும் வித்தியாசமானவை. இவை சிறிய பெட்டிகள் போல இருக்கும். அந்த பெட்டிகளுக்குள் தண்ணீர் இருக்கும். குழந்தைகள் இந்த பூ மொட்டுக்களை அழுத்திப் பிடித்து தண்ணீரை பீச்சி அடித்து விளையாடுவார்கள். இதன் பூக்கள் கூட குவளைகளை போல இருக்கும். மழை அல்லது பனிக் காலத்தில் இந்தக் குவளைகள் நிரம்பி இருக்கும். இந்தப் பூக்கள், பறவைகளின் தாகத்திற்கு நீரும் பசித்த வயிற்றுக்கு தேனும் தரும். அதனால் பறவைகளுக்கு இந்த மரம் மிகவும் பிடிக்கும்.

அங்கோலா நாட்டு மரம்

இந்த மரத்தின் சொந்த ஊர் அங்கோலா, எத்தியோப்பியா, கென்யா, சூடான், தான்சானியா, உகாண்டா மற்றும் ஜாம்பியா. இந்த மரம் பரவி இருக்கும் இடங்கள் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, பீஜி, இந்தியா ஜமைக்கா, பப்புவா நியூகினியா, போர்டோரிகோ, ஸ்ரீலங்கா, சான்சிபார் மற்றும் பிலிப்பைன்ஸ்.

சக்கரை நோயை சரி செய்யும்

பல்வேறு விதமான நோய்களை கட்டுப்படுத்தவும் இதனை பயன்படுத்துகிறார்கள். மரத்தின் பட்டை, இலைகள்  இவற்றைப் பயன்படுத்தி மலேரியா, எய்ட்ஸ் நோய், சர்க்கரை நோய், கைகால் வீக்கம், சீதபேதி, மலச்சிக்கல், வாயுத் தொல்லைகள், குடல் புண்கள், தோல் சம்பந்தமான நோய்கள், காயங்கள், காய்ச்சல், சிறுநீரகக் கோளாறுகள்,  ஈரல் பாதிப்பு ஆகியவற்றை குணப்படுத்துகிறார்கள். விஷ முறிவுக்கும், மலேரியா மற்றும் கொசுக்களை கட்டுப்படுத்தவும்கூட இது பயனாகிறது.

இதன் இலைகள், பூக்கள், மற்றும் பட்டைகளில் இருந்து எடுக்கும்  குடிநீரைப் பயன்படுத்தி வேர்க்குரு, தோலில் ஏற்படும் வீக்கம், சிறுநீரக்க் கோளாறுகள், காயங்கள், இரத்தத்தில் தேங்கும் சக்கரை, ஆகியவற்றை சரிசெய்யலாம்.

ஒட்டுப்பலகை மரம்

கடைசல் வேலைகள் செய்வதற்கு ஏற்ற மரம் இது. கடைசல் வேலைகள் செய்ய முடியும் என்றால் தரமான மரம் என்று அர்த்தம். மேற்கு ஆப்பிரிக்காவில் கடைசல் செய்து இந்த மரத்தில் ஏராளமான பொருட்களை தயாராகின்றன. ஐரோப்பாவில் மற்றும் எத்தியோப்பியாவில் விறகு மற்றும் கரியாக பயனாகிறது. இந்த மரம் பிளைவுட் என்னும் ஒட்டு பலகைகள் தயாரிக்க உதவுகிறது. இதற்காகவே பிலிப்பைன்ஸ் நாட்டில் இதனை தோட்டப் பயிராக வளர்க்கிறார்கள்.

ஒரு பலவீனமான காற்றுகூட இதன் கிளைகளை பலமாக உடைத்து முறித்துவிடும். அந்த அளவுக்கு இதன் கிளைகள் மென்மையானவை. இதன் வேர்கள் அதிக ஆழத்திற்கு செல்லாது. மேல் மட்டத்து மணகண்டத்திலேயே மேய்ந்து கொண்டிருக்கும். இதன் வயது 50 முதல் 150 ஆண்டுகள்.

நிறைய விதைகள் தரும்

ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் இதன் விதைகளை சாப்பிடுகிறார்கள். புதிய மரங்களை உருவாக்க இதன் விதைகளை விதைக்கலாம்.  ஒரு கிலோ எடையுள்ள விதையில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விதைகள் இருக்கும். பெரிய கிளைகளை வெட்டி நடலாம். வேர்ச்செடிகள் மூலமாகவும் புதிய மரங்களை உருவாக்கலாம். பொதுவாக வேர்ச்செடிகள் தரும் மரங்கள் இயற்கையாகவே வேகமாகப் பரவும். மூக்கை மட்டும் நுழைத்துப் பின் முழு உடம்பையும் கூடாரத்திற்குள் செலுத்தும் ஒட்டகம் மாதிரி நமது கோ.கொ. மரம்.

PLEASE POST YOUR COMMENTS, REGARDS – GNANASURIA BAHAVAN D (AUTHOR)

888888888888888888888888888888888

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...