Monday, June 12, 2023

DRAGON FRUIT CULTIVATION HINTS டிராகன் பழப்பயிர் சாகுபடிக்குறிப்புகள்

 

டிராகன் பழ சாகுபடி (INDIA SUPPORTS DRAGON)

நல்ல வருமானம் தரும் என்று இதனை பரிந்துரை செய்கிறது இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் (ICAR).பூச்சி நோய் தொல்லை அதிகம் இல்லை.பரவலான  மண் வகைகளில் நன்கு வளரும். வைட்டமின் சத்து நிறைந்த பழங்கள் தரும். இதனை ஏக்கர் கணக்கிலும் சாகுபடி செய்யலாம் காட்டிலும் வளர்க்கலாம். வீட்டிலும் வளர்க்கலாம்.

டிராகன் பழம் பரவி உள்ள நாடுகள் (DISTRIBUTION)

சர்வதேச அளவில் தாய்லாந்து, ஸ்ரீலங்கா, இஸ்ரேல் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள், புதிதாக அறிமுகமான இந்த பழப்பயிரை கைகளில் ஏந்திக்கொண்டார்கள். இந்த நாடுகள் எல்லாமே தங்கள் சொந்தத் தேவையைக் கருதி இதைச்செய்யவில்லை, ஏற்றுமதி. உள்ளூர் சந்தயைவிட குறைந்த பட்சம் 10 மடங்காவது ஏற்றுமதி வாரிக்கொடுக்கும் என்று தெரியும் அவர்களுக்கு.

மருத்துவ பயன்கள் (MEDICINAL VALUES)

சக்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.கொலெஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். ஆர்த்ரைட்டிஸ் நோயை தடுக்க உதவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உடல் எடையை குறைக்க உதவும். ஆஸ்துமாவை கட்டுப்படுத்த உதவும். வயது முதிர்ச்சியை கட்டுப்படுத்த உதவும். முக்க்கியமாக முதுமையை தள்ளிப்போடும் என்கிறார்கள்.

இரண்டு காரியங்களுக்காக டிராகன் பழத்தை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒன்று உடல் எடை குறைக்க, இன்னொன்று வயதவதை வெளிக்காட்டாமல் இருப்பது. இந்த இரண்டு சமாச்சரங்களுக்காக எவ்வளவு பணமும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். 

டிராகன் பரவியிருக்கும் மாநிலங்கள் (INDIAN STATES)

வெஸ்ட் பெங்கால், மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், கேரளா, கர்னாடகா, மகாராஷ்ட்டிரா, குஜராத், சத்திஷ்கர், ஒரிசா, மிசோரம், நாகலாந்து, ஆகிய இந்திய மாநிலங்களில் டிராகனை அதிகம் விரும்பி சாகுபடி செய்கிறார்கள். தர்போதுள்ள சூழலில் மிசோரம் மானிலத்தில்தான் இதனை அதிகம் சாகுபடி செய்கிறார்கள்.

டிராகன் பழத்தின் சொந்த மண்  (NATIVE COUNTRY)

இது கேக்டஸ் எனும் கற்றாழை இனத்தைச் சேர்ந்தது. இதற்கு ஹானலூலு குயின் என்ற பெயரும் உண்டு. மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா இதன் சொந்த ஊர்.

இதன் சுவை, கிவி மற்றும் பேரியின் சுவையை சேர்த்தது மாதிரி இருக்கும்.

தெற்கு மெக்சிகோ,  மத்திய அமெரிக்காவும் மற்றும் தென் அமெரிக்காதான் டிராகன் பழப்பயிரின் சொந்த நாடுகள். மெக்சிகொவிலும், மதிய அமெரிக்க நாடுகளிலும் இந்த டிராகன் பழ மரங்கள் இயற்கையாக பரவியிருப்பதாக சொல்லுகிறார்கள்.

என்னென்ன சத்துக்கள் இருக்கு ? (NUTRIENT STATUS)

டிராகன் பழங்களில், கொழுப்பு சத்து அதிகம் உள்ளது ஆன்ட்டி ஆக்சிடெண்ட்ஸ் நிரம்ப உள்ளது வைட்டமின்கள் நிறைந்தது. தாது உப்புக்கள் நிறைந்தது

ஏற்ற பருவ நிலை (CLIMATE  SUITABILITY)

வெப்பமான பருவநிலை 20 முதல் 30 டிகிரி சென்டிகிரேட் வேண்டும்,

40 முதல் 60 சென்டிமீட்டர் மழைபெறும் இடங்களாக இருத்தல் நல்லது. கடுமையான வெப்பம் ஏற்றதல்ல. அதிக வெப்பமான பகுதிகளில் நிழல் கொடுக்கலாம். 

பொருத்தமான மண்வகை (SUITABLE SOILS)

பரவலான மண்வகைகளில் வளரும் மணல்சாரியான இருமண்பாட்டு மண் முதல் களிமண் பாங்கான இருமண்பாட்டு மண் வரை. நல்ல அங்ககச் சத்து நிறைந்த மண் மண்ணின் கார அமிலநிலை – 5.5 முதல் 7.00 வரை இருத்தல் வேண்டும். 

சாகுபடிக்கு நிலம் தயாரிப்பு (PREPARATION OF LAND)

மண் நன்கு புழுதிபட ஈருழவு உழவு செய்ய வேண்டும். களை இல்லாமல் இருத்தல் அவசியம். 

எருவும் உரமும் (MANURES)

நிலத்தின் தன்மைக்கு ஏற்ப ஏக்கருக்கு தொழு எரு 10 டன் இடலாம். குப்பை எரு அல்லது கிடைக்கும் அளவு குளத்து வண்டல் மண்ணும் அடிக்கலாம்.

ஒரு குத்து செடிகளுக்கு (4 செடிகளுக்கு) 2 கிலோ மண்புழு உரத்தை அடி உரமாக இடலாம். செடியின் வயதுக்கு ஏற்ப, நிலத்திற்கு ஏற்ப உரத்தின் அளவை கூடுதலாகவோ குறத்தோ தரலாம்.

இயற்கை உரங்களை இடுவதன் மூலம் பழங்கள் தரமாக சுவையாக உருவாகும்.

அமுதக் கரைசல், பஞ்சகவ்யம், வேஸ்ட் டிகம்போசர், .எம் எனும் எஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கனிசம் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். (இவை தயாரிக்கும் முறைகள் இணைப்பு பகுதியில் இறுதியாக தந்துள்ளேன். பார்க்கவும்) 

நடவுப்பொருட்கள் (PLANTING MATERIALS)

கிளைத்துண்டுகளை நடலாம். விதைகளை விதைக்கவும் செய்யலாம். விதை மூலம் உருவாகும் மரங்கள் பலன்தர நீண்ட காலம் பிடிக்கும். விதை மூலம் உருவாகும் மரங்கள் தரமாக இல்லாமல் போக வாய்ப்பு உண்டு. கனத்த காய்ப்பு தரும் தாய் மரங்களில் கிளைத் துண்டுகளை தேர்வு செய்யும்போது அவை தாய் மரத்தைப் போலவே நன்கு காய்க்கும்.

காய்களை அறுவடை செய்த பிறகு 20 செ.மீ. நீளமுள்ள கிளைத் துண்டுகளை தேர்வு செய்து எடுக்க வேண்டும். அப்படி தேர்வு செய்த செடிகளில், நடவு செய்வதற்கு  5 முதல் 7 நாட்களுக்கு முன்னர்    கிளைத் துண்டுகளை வெட்டி எடுத்து நிழலில் உலரவிட வேண்டும். 

இடைவெளி (SPACING)

2.5 X 2.0 மீட்டர், 3.0 X 1.5 மீட்டர், 3 X 3 மீட்டர், 4 X 3 மீட்டர் என்ற  அளவுகளில் குழிகளை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறார்கள்.

இந்த கொடிகளில் முட்கள் இருப்பதால் இரண்டு வரிசை கொடிகளுக்கு இடையே நடந்து செல்ல வாகாக கொஞ்சம் கூடுதலான இடைவெளி தரலாம்.

ஊடாக ஒரு டிராக்டர் செல்லும் அளவுக்கு இருந்தால் அறுவடை செய்ய சுலபமாக இருக்கும்.

களை எடுத்தல், கவாத்து செய்தல், இயற்கை உரம் அளித்தல் ஆகியவற்றை சுலபமாக செய்ய கொஞ்சம் கூடுதலாக இடைவெளி தருவது அவசியம் என்கிறார்கள் அனுபவசாலிகள். 

குழிகள் எடுப்பது எப்படி ? (PITTING)

60 சென்டிமீட்டர் நீளம், 60 60 சென்டிமீட்டர் அகலம், 60 சென்டிமீட்டர் ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும்.

கிளைகளை ஒழுங்கு செய்வது எப்படி ? (PRUNING)

ஒவ்வொரு குழியிலும் ஒரு சிமென்ட் அல்லது மரத்தால்  ஆன சுமார் 4 அடி கம்பத்தினை நட வேண்டும்.

கம்பத்தின் முனையில் சைக்கிள் சக்கரம் மாதிரி ஒரு வட்ட வடிவமான அமைப்பினை உருவாக்க வேண்டும்.

கம்பத்தைச்சுற்றி திசைக்கு ஒன்று என நான்கு கன்றுகளை நட்டு அத்தோடு ஒரு சிறிய கயிறு கொண்டு கட்ட வேண்டும்.

கம்பத்தின் நுனிவரை வளர அவற்றை அனுமதித்து மூன்று கிளைகளை மட்டும் கீழ் நோக்கி வளருமாறு ஓர் கயிற்றினால் கட்டிவிட வேண்டும்.

இப்போது அந்த கம்பத்திலிருந்து நான்கு செடிகளிலிருந்து 12 கிளைகள் வளைந்து கீழிறங்கும்.

இப்படி ஒழுங்கு செய்த கிளைகளில்தான் பழங்கள் உருவாகத் தொடங்கும்.

தொட்டிமண் தயார் செய்யும் முறை (PREPARATION OF POT MIXURE)

மக்கிய தொழு எரு ஒருபங்கு, குழியிலிருந்து எடுத்த மண் ஒருபங்குடன் இருபங்கு மணல் சேர்த்து தொட்டி மண் தயார் செய்ய வேண்டும். இந்த தொட்டிமண் கலவையை தொட்டிகளில் நிரப்ப வேண்டும் நடவு செய்வதற்கு முன் தொட்டிகளை நிழலில் வைக்க வேண்டும்.

நீர்ப்பாசனம் தருவது ஏப்படி ? (IRRIGATION)

இதற்கு வாரம் ஒருமுறை  பாசனம் தர வேண்டும். நடவு சமயம், பூக்கும் தருணம், பழங்கள் வளர்ச்சி அடையும்போது, மற்றும் வறட்சியான சமயங்களில் போதுமான பாசனம் அளிக்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் பாசனம் தருவது சிறப்பு. 

என்ன ரகம் போடலாம் ?

ஊதா மேல்தோல் வெள்ளை தசை உடைய ரகம். ஹைலொசெரியஸ் அண்டேடஸ் (HYLOCEREUS UNDATUS)

ஊதா மேல்தோல் சிவப்பு தசை உடைய மெக்சிகோ ரகம். ஹைலொசெரியஸ் பாலிரைசஸ் (HYLOCEREUS  POLYRHIZUS)

ஊதா மேல்தோல் சிவப்பு நிற தசை உடைய கோஸ்டரிகா ரகம். ஹைலொசெரியஸ் கோஸ்டாரிசென்சிஸ் (HYLOCEREUS  COSTARICENCIS)

மஞ்சள் மேல்தோல் வெள்ளை தசை உடைய தென் அமெரிக்க ரகம். செலினிசெரஸ்  மெகலாந்தஸ் (SELENICERUS MEGALANTHUS)

நீல நிற மேல்தோல் உடைய சீன ரகம் ஒன்றும் உள்ளது. குட்டை ரகம் ஒன்றும் இருப்பதாக சொல்லுகிறார்கள்.

இந்திய விவசாயிகளின் விருப்ப ரகங்கள் (CHOICE VARITIES)

வெள்ளைதசையும் ஊதா நிறத்தோல், சிவப்பு தசை  ஊதா நிறத்தோல், வெள்ளைதசையும் மஞ்சள் நிறத்தோல் ஆகிய மூன்று ரகங்கள் இந்திய விவசாயிகளின் விருப்ப ரகங்கள்.

சன் பர்ன் - சூரியனின் சுடு கதிர்கள் (SUN BURNS)

வெப்பம் அதிகம் இருப்பதால்சன்பர்ன்என்ற நோயினால் பாதிக்கப்படுவதால் டிராகன் பழச்செடிகளுக்கு ஊடாக பி கே எம் 1 முருங்கை ரகம், சணப்பை, மற்றும் மலைவேம்பு மரங்களை வளர்க்கிறார்கள்.

இதனால் 25 முதல் 30 சதவிகித சூரிய வெப்பத்தை தடுக்க முடியும் என்கிறார்கள். 

பூச்சி நோய்கள் (PEST & DISEASES)

இதுவரை எந்த விதமான பூச்சி நோய்களும் அதிகம் தாக்கவில்லை. ஆனாலும் மிக்க் குறைவான அளவு மாவுப்பூச்சி தாக்குதல் இருக்கு என்கிறார்கள்.

அறுவடை (HARVEST)

செடிகள் முதல் ஆண்டிலேயே பூத்து காய்க்கும். மே, ஜூன் மாதத்தில் பூக்கள் பூக்கும். பழங்கள் முதிர்ச்சி அடைய 27 முதல் 30 நாட்கள் ஆகும். ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை அந்து மாதங்கள் பழங்கள் அறுவடை செய்யலாம்.

பழங்கள் முதிர்ந்தவுடன் பறிக்க வேண்டும், நான்கைந்து நாட்கள் தாமதித்தால் கூட பழங்கள் அழுகிவிடும். எக்டருக்கு 10 முதல் 30 டன் கிடைக்கும்.

விலை (MARKET PRICE)

இந்திய மார்கெட்டுகளில் டிராகன் பழங்கள் ஒரு கிலோ 200 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

தமிழ்நாட்டில் கூட ஒருசில விவசாயிகள் டிராகன் பழபயிரிட்டு நல்ல காசுபார்ப்பதாக்ச் சொல்லுகிறார்கள், உங்களுக்கு யாராவது தெரியுமா ?

Agri D. GNANASURIA BAHAVAN, gsbahavan@gmail.com

 

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...