Tuesday, June 27, 2023

BIO DEISEL TREE NATTU BADAM MARAM 127. நாட்டு பாதாம்கொட்டை பயோடீசல் மரம்

நாட்டு பாதாம்கொட்டை
பயோடீசல் மரம்


நாட்டு பாதாம் கொட்டை மரம் (அ) வாதுமை மரம் என்று சொன்னாலும் கடையில் விற்கும் பாதாம்பருப்பு உற்பத்தி செய்யும் மரம் இது இல்லை என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். அது வேறு மரம். இது வேறு மரம்.

இதன் தாவரவியல் பெயர் டெர்மினேலியா கட்டப்பா (TERMINALIA CATAPA). காம்பிரிட்டேசி (COMBRETACEAE)என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. பாதாம்பருப்பு மரத்தின் தாவரவியல் பெயர் புரூனஸ் டல்சியஸ்(PRUNUS DULCIUS). ரோசேசி  (ROSACEAE)என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

கன்ற அழகான இலைகள்.

முதல் தளம் இரண்டாம் தளம் என்பதை வீடுகளில் பார்க்கலாம். இதர கட்டிடங்களில் பார்க்கலாம். இந்த மரத்திலேயே நீங்கள் முதல் தளம் இரண்டாம் தளம் என இந்த மரத்திலேயே பார்க்கலாம்.

பெரிய பசுமையான, சில சமயம் மஞ்சளான, இன்னும் சில சமயம் சிவப்பாக ஊதா நிறமாக வண்ண ஜாலம் காட்டும் இலைகள்தான் இந்த மரத்திற்கே அழகு.

இது பெரிய மரமாக படர்ந்து வளரும். தோள்பட்டை உயரத்தில் திசைகாட்டிபோல நீண்டிருக்கும் கிளைகள். கன்ற அழகான இலைகள். ஆண்பெண் பூக்கள் தனித்தனி.

சிறிய பாதாம் பருப்பு

காய்கள் பசுமை நிறத்தில் காய்க்கும். கனிந்ததும் ஊதாச் சிவப்பாக மாறும். கனியில் அதன் உள்ளே இருக்கும். ஒல்லியான பருப்பை உடைத்து எடுப்பது சுலபம் அல்ல. பகீரதப் பிரயத்னம் எடுக்க வேண்டும்.

ஆனால் பருப்பு அநியாயத்திற்கு சிறுசாய் இருக்கும். அந்த பாதாம் பருப்பு மரத்துக்கு துருப்புசீட்டே அதன் பருப்புதான். ஆனால் இந்த நாட்டு பாதாம்மரம், பெரும்பாலும் அழகுக்காகவே வளர்க்கப்படுகின்றது. 

மருந்து தயாரிக்கிறார்கள்

ஹேப்படைடிஸ் வைரஸ் நோய்விரைந்து விந்து வெளிப்படுதல், ஈரல் புற்று நோய், மன இறுக்கம், வயிற்றுப்போக்கு, சீதபேதி, ஆஸ்துமா, குடற் புழுக்களின் குடைச்சல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த இந்த நாட்டு வாதாம்கொட்டையிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்.

மரத்தின் வேர், பட்டை, மரம், சிம்புகள், இலைகள், மற்றும் கனிகள் எல்லாம் மருந்துகள் தயாரிக்க ஆதாரமாக உள்ளன.

ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற இயற்கை மருத்துவ முறைகள் தற்போது பிரபலமாகி வருகின்றன. ஆகவே கிராம மக்கள் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் இதுபோன்ற மருந்துகள் தயாரிப்பதை தொழிலாகக் கொள்ளலாம்.

உதாரணமாக தற்போது டெங்கு போன்ற வைரஸ் நோய்களிலிருந்து உடனடி நிவாரணம் தருவது நிலவேம்பு கஷாயம்தான். மூல நோயிலிருந்து  உடனடி நிவாரணம் துத்தி இலைகள்தான்.   

சிலருக்கு தோல் சிவந்து வீக்கம், புண், கொப்புளங்கள், தோன்றும். இதனை டெர்மடைட்டிஸ் என்கிறார்கள். இதனை சரி செய்ய இதன் இலைச்சாற்றை இன்றும் பயன்படுத்துகிறார்கள் பழங்குடி மக்கள்.

சிலருக்கு இளம் வயதாக இருந்தாலும் அவர்களுடைய தோல் சுருக்கங்களுடன், பார்க்க நசுங்கிப்போன அலுமினியப் பாத்திரம் போல தெரிவார்கள். இவற்றை எல்லாம் சரி செய்யும் மந்திர சக்தி கொண்டது, நாட்டு பாதாம் பருப்பு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சிறு படகுகள் செய்யலாம்

இந்த மரத்தினை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தலாமா ? எந்த அளவிற்குப் பயன்படுத்தலாம் ? கெனோ போன்ற சிறு படகுகள் தயாரிக்க பயன்படுமா ? இப்படிப்பட்ட ஆய்வுகளெல்லாம் நைஜீரியா நாட்டில் செய்தார்கள். இவை அத்தனைக்கும் ஆராய்ச்சியாளர்கள் டபுள் ஓகேசொல்லிவிட்டார்கள்.

இதன் கொட்டைப் பருப்பை பச்சையாக அல்லது வறுத்து சாப்பிடலாம். கொட்டை எண்ணெய் சமைக்க உதவும். பழங்கள் நல்ல மணத்துடன் இருந்தாலும் நார் நிறைந்து இருப்பதால் சாப்பிடுவதில் சங்கடம் இருக்கும். இலைகள் பட்டுப்புழுக்களுக்கு கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகிறது.

மரங்கள், பாலங்கள் கட்ட, கட்டிடங்களில் தரை மேவ, வண்டிகள், மரத்தொட்டிகள், பெட்டிகள், இதர மரச்சாமான்கள் செய்யப் பயன்படும். தோல் பதனிட, சாயங்கள் மற்றும் இங்க் தயார் செய்ய இதன் பட்டைகள், வேர் மற்றும் பழங்கள் உதவுகின்றன.

ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களை சொந்த மண்ணாகக் கொண்ட இந்த மரம் 35 மீட்டர் உயரம் வரை அழகாய் வளரும்.

இந்த மரங்கள் வளர ஏற்ற மணல்சாரி, இருமண்பாடான மண், களிமண், சுமாரான உப்பு மண் மற்றும் அமில மண்ணில் வளர வடிகால் வசதி வேண்டும்.

இந்த மரத்தின் தாயகம், இந்தியா, ஆஸ்திரேலியா, கம்போடியா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம்.

இதன் விதை எண்ணெயிலிருந்து பயோடீசல் தயாரிக்கலாம். இந்த பயோடீசல் அமெரிக்க மற்றும் ரோப்பிய  தரத்திற்கு சமமாக உள்ளது என்று ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.

இப்போது நாட்டு வாதுமை மரத்தை வெவ்வேறு மொழிகளில் எப்படி அழைக்கிறார்கள் என்று பாருங்கள். இதைப் பார்க்கும்போது எங்கெல்லாம் இந்த மரம் ஆட்சி செய்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

பலமொழிப் பெயர்கள்:

தமிழில் வாதாம்கொட்டை மரம், நாட்டுவாதுமை மரம், வாதுமை,(VATHAMKOTTAI MARAM, NAATTU VATHUMAI MARAM, VATHUMAI)

இந்தியில் தேஷி பாதாம், ஹிஜிலி பாதாம், ஜங்லி பாதாம் (DESHI BADAM, HIJILI BADAM, JANGLI BADAM)

மலையாளத்தில் கெட்டாபாக் (KETABAK)

தெலுங்கில் தபசதரூவு (THABASATHARUVU)

கன்னடத்தில் காடுபதாமி (KADU BADAMI)

தாவரவியல் பெயர் டெர்மினேலியா கட்டப்பா (TERMINALIA CATAPA) 

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : இண்டியன் அல்மாண்ட் ட்ரீ  (INDIAN ALMOND TREE)

தாவரக்குடும்பம் பெயர் :  காம்பிரிட்டேசி (COMBRETACEAE)

பயோடீசல் தயாரிப்பில் கவனம்

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் அதிகரித்துவரும் இந்த நாட்களில் பெட்ரோலிய எரிபொருட்களுக்கு மாற்றாக இதுபோன்ற பயோடீசல் தயாரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். முன்னேறிய நாடுகள் எல்லாம் பயோடீசல் தயாரிப்பை முடுக்கிவிட்டுள்ளன. 

நாம் கூட இதுபற்றி யோசிக்கலாம். மற்ற நாடுகளைவிட நமக்கு வாய்ப்புகள் நிறைய்ய,. இயற்கை வளங்கள் நிறைய்ய்ய, அறிவு நிறைய உள்ள அறிவாளிகள் நிறைய்ய்ய்ய்ய்ய ! 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...