Wednesday, June 28, 2023

ALA MARAM A BIRDS' SANCTUARY 147. பறவைகள் சரணாலயம் ஆலமரம்

  

பறவைகள் சரணாலயம் ஆலமரம்

தாவரவியல் பெயர்: பைகஸ் பெங்காலென்சிஸ் (FICUS BENGHALENSIS)

பொதுப்பெயர் / ஆங்கிலப் பெயர் :   BANYAN TREE

தாவரக்குடும்பம் :  மோரேசி (MORACEAE)

மரத்தின்  வகை :  பெரிய மரம்

எங்கள் கிராமத்தில் பிள்ளையார்க் கோயிலுக்குப் பின்னால் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்த மரத்தில் எப்போதும் குறைந்த பட்சம் ஒரு நூறு குருவிகளாவது கத்திக் கொண்டிருக்கும். அதில் அதிக பட்சம் இருப்பவை மைனா குருவிகள்தான். எங்கள் பக்கம் அதனை ராமனாத்தி என்பார்கள்.

அதற்கு அடுத்தபடியாய் இருப்பவை காகங்கள் மற்றும்  கருவாட்டுவாலி என்று சொல்லப்படும் கரிக்குருவி. அளவில் சிறுசாய் இருக்கும்  கருவாட்டுவாலிகள் பெரிய சைஸ் காகங்களை துரத்தித் துரத்திக் கொத்துவது எங்களுக்கு அதிசயமாய் இருக்கும்.

இன்னொரு பக்கம் கிளிகள் சரஞ்சரமாய் பறந்து வந்து விருந்தினர் மாதிரி கொஞ்ச நேரம் இருந்துவிட்டு கொஞ்சத் தொலைவில் இருந்த இலுப்பை மரத்திறகுச் சென்றுவிடும். ங்கள் ஊர் கிளிகளுக்கு ஆலம் பழங்களைவிட இலுப்பைப் பழங்கள் ரொம்பப் பிடிக்கும்.

இந்த மரம் பழம் பழுக்கும் பருவத்தில் பள்ளிக்கூடம் போகும்போது கொஞ்சம் பழங்களை பொறுக்கி எடுத்துக் கொண்டு போவோம். அப்படி பழம் பொறுக்கும்போது குருவிகள் சத்தம் எங்கள் காதுகளை செவிடாக்கிவிடும். அதைவிட முக்கியமானது மரத்தின் மேலிருந்து தெறித்து விழம் பறவைகளின் எச்சங்களிலிருந்து தப்பிக்க முடியாது. 

ஆல மரத்தின் இலைகள்தான் கிருஷ்ணபரமாத்மா உறங்கி ஓய்வு எடுக்கும் பஞ்சணை என்கிறது இந்திய புராணங்கள். ஆலமரத்தைப் பார்த்துவிட்டு முதன்முதலாக மூக்கின் மேல் விரல் வைத்த ஐரோப்பியர், மாவீரன் அலக்சாண்டர்.

அதன் பின்னர் 17 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் தனது பேரடைஸ் லாஸ்ட் காவியத்தில், ஆதாம் யோவாள் முதன் முதலில் தனது ஆடையாக அணிந்துகொண்டது, அழகான ஆலமரத்து இலைகளை, என்று எழுதி பெருமை சேர்த்துள்ளார்.  

கிளைகளிலும் வேர்கள் மாதிரியான விழுதுகளை புமிக்குள் அனுப்பும் வித்தியாசமான மரம் ஆலமரம். அதனால்தான் ஒரு கவிஞர் ஆலமரத்தைப் பார்த்து எழுதினார், தாடிவைத்த ஆலமரம் என்று.

2000 விழுதுகளுடன் உடைய ஒரு அபூர்வமான ஆலமரம் கல்கத்தாவில் உள்ளதாம். உலகில் அதிக பரப்பளவில் பரந்து வளரும் மரம் இது. ஆந்திராவில் ஒரு ஆலமரம் 4.7 எக்டர் நிலப் பரப்பில் படர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பிரபலமானது அடையார் ஆலமரம். ஒரு சமயம் அடையார் ஆலமரம் என்று ஒரு பஸ் ஸ்டாப்பிங்கே இருந்தது.

நூறு அடி உயரம் வளரும். பல ஏக்கர் பரப்பில் பரந்து வளரும். இதனை தொட்டிச் செடியாகக் கூட வளர்க்கலாம். ஆனால் அதற்கு ஏற்புடைய தொழில்நுட்பங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

பறவைகள் மற்றும் பிராணிகள் பழங்களை சாப்பிட்டுவிட்டு அதன் மூலமாக விதைகளை பல இடங்களில் பரப்பும் முறைக்கு புரூஜிவோர் டிஸ்பெர்சல் ஆப் சீட்ஸ்  என்று பெயர். ஆல விதைகள் கூட அப்படித்தான் பரவுகின்றன.

ஆலமரத்தின் பல மொழிப் பெயர்கள்

தமிழ்:  ஆலமரம் (ALAMARAM)

தெலுங்கு: மர்ரி சேட்டு (MARRI CETTU)

கன்னடம்: ஆலட மரா (ALADA MARA)

இந்தி: பார் (BARH)

சமஸ்கிருதம்: வாட் விருக்ஷா (WAT VRIKSHA) 

மரத்தின் பயன்கள் :

மருத்துவப் பயன்கள்: சக்கரை நோய், காது சம்மந்தமான பிரச்சினைகள், முடி உதிர்தல், நாசியில் ரத்தம் வடிதல், பலவலி, சிறுநீரகக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு, கண்வீக்கம், குடற்புண், போன்றவற்றை குணப்படுத்தும் மருத்துவப் பண்புகளை உடையது.

கனிகள்: பறவைகளுக்கு தின்ன பழங்கள் தரும். பள்ளிப் பையன்களுக்கும் தரும்.

வளரும் சூழல் : இளம் ஈரப்பசை கொஞ்சம் அதிகம் வேண்டும். ஆனால் நீர் தேங்கக் கூடாது. வளர்ந்த மரங்கள் வறட்சியைத் தாங்கும். ஃபிராஸ்ட் என்னும் பனிப் பொழிவைத் தாங்கும்.

மரத்தின் தாயகம் :  இந்தியா

ஏற்ற மண் :  பரவலான மண்வகை

நடவுப் பொருள் :   விதைநாற்று, வேர்க் குச்சி.

 மரத்தின் உயரம் :  6 - 8  மீட்டர்.

ஆலமரம் திருவாலங்காடு, திருவாலம்பொழில், திருப்பழுவூர் கோயில்களின் ஸ்தல விருட்சமாக உள்ளது. ஆலமரம் இந்தியாவின் தேசிய மரம் இந்தோனேசிய அரசு தங்களுடைய இலச்சினைகளில் ஒற்றுமையின் அடையானமாக ஆல மரத்தை வைத்திருக்கிறார்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...