Friday, June 30, 2023

ACHA GIVES RAGA FOR MUSIC INSTRUMENTS 196. ஆச்சா மரம் இசைக்கருவிகளுக்கு ராகம் தரும்

 

இசைக்கருவிகளுக்கு ராகம் தரும்
ஆச்சா மரம் 

(ACHA MARAM, ANJAN TREE, HARDWICKIA BINATA, FABACEAE)

தாவரவியல் பெயர்: ஹார்ட்விக்கியா பினேட்டா (HARDWICKIA BINATA)

தாவரக்குடும்பம்: சிசால்பீனியேசி (FABACEAE)

பொதுப்பெயர்: (ANJAN TREE)

தாயகம்: இந்தியா

சங்க காலத்தில் தமிழ் இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்ட மரம் ஆச்சாமரம்.  ஆனால் அந்த சமயம் இதன் பெயர் யாமரம். இந்த யாமரம்; என்றால் யானைகளுக்கு அல்வா மாதிரி.

ஆச்சா மர கயிற்றில் யானைகளை கட்டலாம்

ஆச்சா மரத்தின் பட்டையுடன் மற்றும் தென்னை நார் சேர்த்து மிகவும் வலிமையான கயிறுகளை தயார் செய்யும் வழக்கம் 12ஆம் நூற்றாண்டு வாக்கில் இருந்துள்ளது.

இந்த கயிறுகளை யானைகளை கட்டுவதற்காக பயன்படுத்தியுள்ளனர். அந்த சமயம் மூன்றாவது சோமேஸ்வரர் என்ற சாளுக்கிய மன்னர் அரசாட்சி செய்தார்.

இவர் ஆறாவது விக்கிரமாதித்ய மன்னனின் மகன். இவருடைய காலத்தில் உருவான மானசொல்லாசாஎன்னும் கலைக்களஞ்சியத்தில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன.

சங்க இலக்கிய நூல்களிலும் இது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியம் நற்றிணை இந்த யா மரம்பற்றி சொல்லுகிறது.  பாலை நிலத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில்  ஒரு தாய் தனது மகளைத் தேடிப் போகிறாள். அந்த காட்டில் ஆச்சா என்னும் யாமரங்கள் உயரமாக வளர்ந்து நிற்கின்றன. பக்கவாட்டில் நீண்டு படர்ந்து வளரும்படியான ஓமை மரங்களும் வளர்ந்திருக்கின்றன. அந்த காட்டுப்பாதையில் ஓரு ஆடவனைப்பார்த்து என் மகளைப் பார்த்தீர்களா ? என்று கேட்கிறாள்.

சேயின் வருஉம் மதவலி! யா உயர்ந்து

ஓமை நீடிய கான் இடை அத்தம்

முன்நாள் உம்பர் கழிந்த என் மகள்…”

வால்மீகி ராமாயணத்திலும் யாமரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ராவணன் சீதையை சிறை வைத்த அசோகவனத்தில் யா மரங்களும் இருந்ததாக எழுதி உள்ளார். புராண இதிகாச காலத்திலேயே புழக்கத்தில் இருந்த மரம் ஆச்சா.

இந்தியாவின் வலிமையான மரங்களில் ஒன்று

இந்தியாவில் இருக்கும் மரங்களில் மிகவும் கடினமான வலிமையான மரம் என்கிறார்கள். வண்டிச்சக்கரங்கள் எண்ணை பிழியும் நாட்டுச்செக்குகள், உரல், உலக்கை, கலப்பை ஆகியவை செய்வதற்கு பெரும்பாலும் கடினமான மரங்களைத்தான் பயன்படுத்துவார்கள்.

இதுபோன்ற வேலைகளைச் செய்ய மிகவும் பொருத்தமான மரம் ஆச்சா மரம்.

ஆச்சாவின் பட்டைகள், இலைகள் அனைத்தும் தாவர உணவை உட்கொள்ளும் விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு  சரியான தீவனம். அதனைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் குறுந்தொகையில் வரும் அற்புதமான பாடல் இது. 

கடுமையான வறட்சி. அடர்த்தியான காடு கூட வறண்டு கிடக்கிறது. ஒரு மானுக்கு வேண்டிய உணவு கூட கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் அந்த மான் அங்கு இருக்கும் கற்றாழை மடல்களைப் மேய்கிறது. அப்போது ஆதங்கத்துடன் அருகில் இருந்த ஆச்சா மரத்தைப் பார்க்கிறது.   மானுக்கும் பிடித்தமான உணவு ஆச்சா.  ஆனால் அந்த மரத்தை யானைகள் ஏற்கனவே கிளைகளை உடைத்தும் முறித்தும் தின்றுவிட்டு போய்விட்டன. மீதியாக அதில் எதுவும் இல்லை.  மான் வேறு வழியில்லாமல் அந்த ஆச்சா மரத்தின் நிழலில் படுத்து தூங்கு ஆரம்பிக்கிறது. குறுந்தொகையில் வரும் பாடல் இது.

மரற் புகா அருந்திய மாஎருத்து இரலை

ஊரற் கால் யானை ஒடிந்து உண்டு எஞ்சிய

யுhஅ வரி நிழல் துஞ்சும் …(குறுந்தொகை – 232)

நீரில் கலந்து இருக்கும் பாதரசத்தை நீக்கும்

பொதுவாக மரங்கள் சுற்றுச்சூழலில் இருக்கும் மாசுக்களை களைந்து சுத்தப்படுத்தும். ஆச்சா மரத்திற்கு ஒரு சிறப்பு குணம் உண்டு நீரில் கலந்து இருக்கும் பாதரசத்தை உறிஞ்சி நீக்கக்கூடிய சக்தி உடையது என ஆய்வில் கண்டறிந்துள்ளார்கள்.

மரத்திலிருந்து வடியும் பிசினை யானைகளின் உடலில் ஏற்படும் புண்களைத் துடைத்து சுத்தம் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.

ஆச்சா மரத்தின் பலமொழிப் பெயர்கள்

தமிழ்: ஆச்சா, யாமரம், கராச்சி (ACHA, YAMARAM, KARACHI)

இந்தி: அஞ்சான் (ANJAN)

இருளா: கராச்சி (KARACHI)

மலையாளம்;ஆச்சாமரம், ஆச்சா (ACHA MARAM, ACHA)

தெலுங்கு: எப்பி (EPPI)

ஆச்சா சுமாரான மண் வகைகளில் கூட நன்றாக வளரும்.  லேசாக அமிலத்தன்மையும் நடுத்தரமான கார அமில நிலை உள்ள மண்ணில் கூட நன்கு வளரும். பாறைகள் நிறைந்த மண்ணில் கூட வளரும்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு வெட்டி கேட்டது வேம்புவெட்டாமல் கெட்டது பூவரசு’. சில மரங்கள் வெட்ட வெட்ட துளிர்க்கும். சில மரங்களை வெட்டினால் பட்டுப்போகும்.

வயதான ஆச்சா மரங்களைக்கூட வெட்டிவிட்டால் நிறைய துளிர்க்கும். ஆனால் மரங்களை தரையோடு வெட்டக் கூடாது தரையிலிருந்து 3 அடி அல்லது ஆறு அடி விட்டு வெட்ட வேண்டும்.

இந்தியாவில் இருக்கும் மர வகைகளில் மிகவும் கடினமான மரம் என்று சொல்லுகிறார்கள். ஆச்சா மரத்தில் மென்மரப் பகுதி (SOFT WOOD) மிகவும் மெல்லியதாக இருக்கும.  

முரட்டு கட்டுமான்ங்களுக்கு  ஏற்றது

ஆனால் மரத்தின் வயிரப்பகுதி பருமனாக இருக்கும். வயிரம் அடர்த்தியான செம்மை நிறம் கலந்த வண்ணத்தில் இருக்கும். ஆச்சாவின் கடினமான மரங்களை, சுரங்கங்கள், மேம்பாலங்கள் பெரிய கட்டுமானப் பணிகள் போன்ற முரட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்.

ஆச்சா மரத்தில் புதிய விதைகள் நன்கு முளைக்கும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் அவை முளைக்கும் தன்மையை இழந்துவிடும் விதைகளை மண்ணைத் தோண்டி அதில் விதைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விழும் இடத்திலேயே பூமிக்கு மேலேயே முளைத்து விடும்.

ஆச்சா மரங்களின் இலைகள் மிகவும் அழகானவை. ஒவ்வொரு இலையும்  பச்சை நிறமுடைய சிறிய பட்டாம்பூச்சி உட்கார்ந்து இருப்பது போலத் தோன்றும். ஏறத்தாழ இதே போல இலை அமைப்புடைய மரம் ஒன்று ஆப்பிரிக்காவில் உள்ளது. அந்த மரத்தின் பெயர் மோப்பன் (MOPPAN TREE)

இந்தியாவில் மேற்கு இமயமலைப் பகுதி மத்திய மற்றும் தென் இந்தியா ஆகிய பகுதிகளில் ஆச்சா மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன. தென்னிந்தியாவில் கடப்பா நெல்லூர் காவிரி மற்றும் பவானி ஆறுகளில் பள்ளத்தாக்குகளில் இவை அதிகம் வளர்ந்துள்ளன.

நாதஸ்வரம் செய்ய

தமிழ்நாட்டின் மங்கள வாத்தியங்களின் ஒன்று நாதஸ்வரம். இதனை செய்வதற்கு தற்போது மூங்கில்,  சந்தனமரம், எபனிஐவரி போன்ற மரங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பாரம்பரியமாக பல நூறு ஆண்டுகளாக நாதஸ்வரம் செய்ய பயன்பட்டது ஆச்சா மரம் மட்டுமே.

ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆச்சா மரங்கள் பூ எடுக்கும்.  மே மற்றும் ஜூன் மாதங்களில் ஆச்சா மரத்தின் பழுத்த பழங்களை மரங்களிலிருந்து சேகரிக்கலாம். சேகரித்த பழங்களை சுத்தம்செய்து டின்களில் சேமித்து வைக்கலாம்.

ஒரு கிலோ எடையில் 3000 முதல் 5000 விதைகள் இருக்கும். விதைகளை 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து விதைத்தால் நன்கு முளைக்கும். விதைத்த 20 நாட்களில் முளைக்கும்.  மழைக்காலத்தில் வேரச்செடிகளையும் சேகரித்து நடவு செய்யலாம். வேர்க்குச்சிகள் தயார் செய்தும் நடவு செய்யலாம். 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...