யுகயுகமாய் |
(நான் எழுதியவற்றுள் எனக்கு பிடித்தமான
கதை. கண்ணாடி மாதிரிதான் இது. இதில் உங்கள் முகம் கூட தெரியலாம். கேரள தமிழ்
சங்கத்தால் ஓருஆண்டின் சிறந்த கதையாக தெரிவு செய்யப்பட்டது.)
12. யுகயுகமாய்
வாசலில் இருட்டு கவிந்திருந்தது.
மூடிய கதவின் முன்னால் கொஞ்சம் யோசித்து நின்றேன். இதில் யோசிக்க ஒன்றும்
இல்லை. லேசாக தட்டினேன். கதவு திறக்க காத்து நின்றேன்.
நிச்சயம் என்னை எதிர் பார்க்க மாட்டாள். 'யார்…?"
என்று உள்ளிருந்தே கேட்டாள். யார்
என்று சொல்வது…? நான் என்று தெரிந்தால் திறக்கக்கூட
மாட்டாள். இதையும் எதிர் பார்த்துத்தான் வந்திருக்கின்றேன். ஒருவேளை நேற்று
ராத்திரி நடந்தது மாதிரியான ஒரு யுத்தம் கூட இப்போதும் நடக்கலாம். ஆனால் அப்படி நடந்தால் அதில் தோற்றுப் போவது எனக்கு
சந்தோஷமாக இருக்கும்.
'என்னை
என்ன கொத்தடிமைன்னு நெனைச்சீங்களா…? இந்த லை.ஃப் லீட் பண்ண என்னால
முடியாது. மரியாதையா வெளியப் போயிடுங்க. உங்களுக்கும் எனக்கும் இனிமே ஒண்ணும்
கெடையாது." வில்நாணில் தெறித்த அம்புகளாய் பாய்ந்தன.
நான் வெந்து பழுத்து கனிந்தேன்.
“ எனக்கும்
ஒன்ன இதுக்கு மேல சகிச்சிக்க முடியாது…. நீயா
என்னை தேடி வர்ற வரைக்கும் இந்த வீட்டு வாசல நான் மிதிக்க மாட்டேன்…” கடப்பாறையையும் கஷாயத்தையும் விழுங்கி
விசுவாமித்திரனாக நிலைப்படி இறங்கி நடந்தேன்.
எங்கள் நான்கு வருஷ தாம்பத்ய வாழ்க்கையின் வரத்து இரண்டரை வயசில் தேவதையாய் ஒரு பெண் ஏழு
மாதத்தில் ஒரு இளவரசன். அவைதான் என்னை மீண்டும் மடக்கிப்பிடித்து இங்கே
நிறுத்தியிருக்கிறது.
அப்பா அம்மா தேடி வைத்த சீர்அல்ல எங்கள் வாழ்க்கை. நாங்களாகவே தேடிக்
கொண்டது.
சிலர் இதை காதல் திருமணம் என்றனர். சிலர் அப்படி அல்ல என்றனர். இந்த
இரண்டுமே சரிதான். சினிமா டிராமா என்று சுற்றாமல் கோன் ஐஸ் சாப்பிடாமல். ஒரே ஒரு
முறை மட்டும் காந்தி மண்டபத்தில் சந்தித்து கல்யாணம் பண்ணிக் கொள்வதில் இருக்கும்
கஷ்ட நஷ்டங்களைப் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம்.
உண்மையில் இதை ஒரு முற்போக்கு கல்யாணம் என்று கூட சொல்லலாம். ஆனால் இப்போது
அப்படி சொல்வதும் சரியல்ல.
இந்த நான்கு வருஷங்களில் சிராய்ப்பாய் சில சச்சரவுகள் வரும் போகும். ஆனால்
நேற்று மாதிரி ஒரு த்வந்த யுத்தம் வந்ததில்லை. விளைவுகளை கணக்கிலெடுக்காத ஒரு போர்.
ஒருத்தரை ஒருத்தர் கிழித்து நசுக்கி முறித்துப் பொடித்து பூஜ்யமாய்
பண்ணிவிடுவதற்கான வெறி.
கதவை மீண்டும் தட்டினேன். கொஞ்சம் அமைதி காத்து நின்றேன். லேசாக தள்ளினேன்.
திறந்து கொண்டது.
அவள் அடுப்படியில் வேலையாக இருந்தாள். பார்வையில் அவளை நிராகரித்து விட்டு
நடையில் திரும்பி நடந்தேன்.;
நானும் எத்தனையோ விதமான பொம்மனாட்டிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இவளை
மாதிரி இலுபத்திநாலு மணிநேரமும் ஏதாவது ஒன்றை நோண்டி சீண்டிக் கொண்டிருப்பவளை
பார்க்க முடியாது. அவளாக ஏதாவது செய்துகொண்டிருந்தாள் கூட கழுதை கிடக்கிறது என்று இருந்து விட்டுப்போகலாம்.
நம்மையும் அதில் இழுத்துப் போட்டு உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள்.
“ அப்பா
அப்பா அம்மா அடிச்சாப்பா " என் மகள் ஓடி வந்து காலை கட்டிக் கொண்டாள்.
சேர்த்து நெஞ்சில் பதிய அணைத்துத் தூக்கிக் கொண்டேன்.
அந்த அணைப்பில் ஒர வேகமும் வித்தியாசமும் இருந்தது. கை நழுவிப் போனது
திரும்பக் கிடைத்த சந்தோஷத்தின் பூரிப்பு.
மீண்டும் இப்படி வந்திருப்பது அவளுக்கு எரிச்சல் மூட்டியிருக்குமா…?
சந்தோஷம்
தந்திருக்குமா…? என்று எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயம் அதிர்ச்சியாக இருக்கும்.
அவளுக்குத் தெரியும் என் வைராக்கியம்.
உள்ளே அவள் அம்மா உட்கார்ந்திருந்தார்.
என் மாமியார். காலை கஷ்டப்பட்டு மடக்கிக் கொண்டார். மரியாதை.
“ வாங்க…” என்று மெதுவாக சொல்லிவிட்டு
வலுக்கட்டாயத்தில் ஒரு சிரிப்பை பிடித்திழுத்து முகத்தில் பூசிக் கொண்டேன்.
உடம்பு பரவாயில்லையா…? என்று கேட்டுவைத்தேன். கொஞ்ச நாட்களாக
நடக்கப் பிடிக்க முடியாமல் இருந்தார்.
அவள் அம்மாவை வரவழைத்திருந்ததில் அவ்வளவு சீக்கிரம் என்னை
எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது.
மாமியாருக்கு உள்ளுரில்தான் ஜாகை.
அவள் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிவிடும் என் வெளியேற்றம் நிச்சயம்
அவளை நடைப் பிணமாக்கிவிடும். பின்னர் தன்னை வளைத்துக் கொண்டு என்னை சகித்துக்
கொள்ளல் அவளுக்கு நிர்பந்தமாகிவிடும். இந்தக் குரூர சந்தோஷத்தில் தான் நான் வெளியே
சென்றேன்.
மாமியார் என்னை ஒன்றும் கேட்கமாட்டாள். மகள் வாய் அவளுக்குத்
தெரிந்ததுதான்.
என் மகள் கையிலிருந்த பையை வாங்கி ஆராய்ச்சி பண்ணினாள்.
பையன் ஏணையில் தூங்கினான்.
மாமியார் அவன் பையன்களைப் பற்றி பேச அரம்பித்து “ அவர் இருந்தால் இப்படி ஆகுமா…? “ என்று பழங்கதை ஆரம்பித்தார். நான் “ ம் “ கொட்டினேன்.
ஆவள் இரண்டு மூன்று முறை உள்ளே வந்து நான் இல்லாதது மாதிரியே சலனப்படாமல்
ஏதேதோ எடுத்துக் கொண்டு போனாள்.
இப்போது அவள்மீது எனக்கு கோபம் இல்லை.
அவள் முகம் வாடி கண்கள் ஜீவகளை இன்றி செத்துப் போயிருந்தது. அவள்
இன்னும்கூட பல் துலக்கவில்லை என்று மாமியார் சொன்னாள் பேச்சுவாக்கில்.
நான் ஆபிஸ் கேன்டீனில் சாப்பிட்டிருந்தேன்.
நல்ல நாளிலேயே அவள் நாயகம். இருவத்திநாலு மணிநேரம் கொண்ட ஒரு நாளில்
எப்படியோ அவள் மட்டும் இருவத்தியைந்து மணி நேரத்திற்கு வேலை செய்தாள். இதில் ஒரு
நாளைக்கு பத்து தடவை பெருக்கி இருப்பாள். பாத்ரூமை பத்து தடவை கழுவியிருப்பாள்.
பாத்திர பண்டங்களை பத்து தடவை பத்து
தேய்ப்பாள். இப்படி நாள் பூராவுமாய் லோல்பட்டு
லொங்காடிக் கிடப்பாள்.
அன்று காலை போனதிலிருந்து திரும்பவும் வீடு வந்து முழுசாக மனைவி மக்களை
பார்க்கும் வரை எதுவும் எப்போதும் நடந்துவிடலாம் என்ற அச்சம் ஒவ்வொரு கணமாய் என்னை
மென்று கொண்டிருந்தது.
பேப்பரை பரித்தால் மண்ணெண்ணையில்
எரிந்து செத்துப் போன பெண்களின் சேதி வராத நாள் உண்டா…?
அன்று ஆஃபீசில் ஒவ்வொரு முறை போன்
பெல் அடிக்கும் போதும் நான் செத்துப் பிழைத்தேன்.
'உங்களுக்கு
என்னா…? நான் செத்துப் போனா இன்னொருத்தி…
ஆனா ஏம்பிள்ளைங்கதான அலஞ்சிப் போகும்…?" இதை விளையாட்டாகவும் வினையமாகவும் இந்த
நாலு வருஷத்தில் குறைந்தது நானூறு தடைவயாவது சொல்லியிருப்பாள்.
இதற்கு நான் பதிலாக எதுவும்
சொன்னது கிடையாது. இதற்கு ஆமோதிப்பதாக அர்த்தமில்லை. சராசரியாய் ஆம்பிள்ளைகள்
விஷயத்தில் இது இப்படித்தான் ஆகிவிடுகிறது என்பதால்தான்.
அவள் படித்தவள். போஸ்ட் கிராஜூவேட். லோகாயதமான சமாச்சாரங்களில்
எக்ஸ்பெர்ட். நான் அதில் ஜீரோ. அவளை கல்யாணம் பண்ணிக் கொண்டதற்கு அதுவும் ஒரு
காரணம். தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருக்கும்போது அவர்களிடம் ஒரு
மரியாதை ஏற்படுவதில்லையா…? அதுதான் அவள் பலமும் பலவீனமும்.
முப்பது நாட்கள் அடங்கிய ஒரு மாதத்தில் இருவத்தொன்பது நாட்களாய் ஒண்ணாந்தேதியை எதிர்பார்க்கும் ஒரு அரசாங்க
உத்தியோகஸ்தனின் குடும்பத்தில் இப்படி புருஷன் பொண்டாட்டி சண்டைகள் வராமல்
போய்விடுமா…?
அவள் எதைப் பேசினாலும் காரமாகவே இருக்கும். சுலபமாக மனசைக் குத்தி
கிழித்துவிடும். அது நியாயமாகவே கூட இருக்கும். ஆனால் வலியை பொருட்படுத்தாத
காயப்படுத்தலாக இருக்கும்.
அது நியாயமாக இருந்தாலும் வலிக்கப்பண்ணி காயப் படுத்துவதில் எனக்கு
உடன்பாடில்லை.
இதில் நாங்கள் ஒத்துப்போக முடிவதில்லை.
அப்படித்தான் அது அன்றும் ஆரம்பித்தது. நான்தான் கிளறினேன் பெரிசாய் வளர்க்க வேண்டும் என்ற
முனைப்பில்லாமல்தான். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே வார்த்தைகளில் உஷ்ணமேறி விஷயம்
வினையமாகி விட்டது.
நானும் அவளும் எதிரும் புதிருமாக நின்றுவிட்டோம். இனி இதை நிறுத்தும்
சாத்தியம் இல்லை. அதனதன் போக்கில் சென்று வேகம் முறிந்தால்தான் இதற்கு ஒரு முடிவு
உண்டு.
அவள் வார்த்தைகள் அக்கினிச் சரங்களாய் என்னை ஊடுருவின. நான் நிராயுத
பாணியாய் நின்றுவிட்ட உணர்வு. எனக்கு
வார்த்தைகள் பலவீனமடைந்து தொண்டைக் குள்ளேயே சிக்கிக்கொண்டன. லாவகமான
வில்லாளியிடம் எக்கு தப்பாய் மாட்டிக்கொண்ட ஒர் கற்றுக் குட்டியைப் போல் சிக்கிவிட்டேன்.
இதில் பின்வாங்குவதற்கு வழி இருப்பதாய் தெரியவில்லை. அபிமன்யுவாய்
வியூகத்தை உடைத்து உள்ளே நுழைந்து விட்டேன். வியூகம் மீண்டும் மூடிக்கொண்டது. அதன்
வியூகத்தின் பிரமாண்டமும் உக்கிரமும் இப்போதுதான் தெரிந்தது. வெளியேற சாத்தியமில்லை.
கைவேறு கால்வேறு உடல்வேறு என்று ஆவது நிச்சயப்பட்டது. இனி இதில் தர்மமாக
ஜெயிப்பது சாத்தியமில்லை.
எனக்கு அபிமன்யுவாக இருக்க பிரியம் இல்லை.
துரோணரைக் கொல்ல தர்மனே பொய் சொன்னான்.
வார்த்தைகள் எனக்கு கை கொடுக்காது என தெரிந்த கொண்டேன்.
அவள் முகத்தில் மாறி மாறி அறைந்தேன். பலவீனத்தின்மீது பலத்தின் வெறி.
வெறியின் பலம்.
எனக்குள்ளேயே நானாகவே இருந்து
வேறொன்றாய் வெளிவந்து தாக்கும் இன்னொரு நான்.
அற்பமாய் என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.
“ ச்சீ… “ இவ்வளவு தானா…?
என்று கேட்பதுபோல் தோன்றினாலும் அதற்கு
இன்னும் எவ்வளவோ அர்த்தங்கள் இருக்கக்கூடும்.
மீண்டும் பேசினாள். அவை என் தாக்குதலையும் என்னையும் ஒன்றுமில்லாமல்
பண்ணிவிட்டு அவளை வேர்விடச் செய்பவை.
அதற்கு எப்படியும் பதில் சொல்லியாக வேண்டும். இப்படித்தான் என்று
ஒன்றுமில்லை.
கருடப்பாய்ச்சலாய் பாய்ந்தேன். கைகளாலும் கால்களாலும் அடித்து
நொறுக்கினேன்.
இன்னும் நிறைய நிறையப்பேசிச் சொல்ல வேண்டும் என்பதைப் போல என்
தாக்குதலுக்கு அவளை முழுசாய் அனுமதித்தாள்.
மறைந்திருந்த என் ஆம்பிளைப்புலி நகங்கள் வெளியே நீண்டு ஆழமாய்ப் பாய்ந்தன.
அவள் காயங்களின் ரத்தருசி என் நகங்களுக்கு காலங்காலமாய் பழக்கப்பட்டதாக இருந்தது.
இவ்வளவிற்கும் அவள் கீழே விழவே இல்லை.
என் தாக்குதல் பந்தை அடித்து அமுக்கிவிடும் முயற்சியில் இருந்தது.
நான்தான் ஒவ்வொரு முறையும் உயரமாக கிளம்பி பாய்ந்து தாக்கி கீழேசரிந்தேன். ஒவ்வொரு முறையும் நான்தான்
ஆழமாக இன்னும் ஆழமாக விழுந்து தளர்ந்தேன். அவள் உயரம் எட்ட முடியாததாய் இருந்தது.
நான் பாக்கியில்லாமல் பற்றி எறிந்தேன்.
அவள் மீண்டும் மீண்டும் என் ஹோமகுண்டத்தில் எண்ணெய் வார்த்துக் கொண்டே
இருந்தாள்.
“என்னுடைய
காலாய் கையாய் என் சட்டையாய் பேனாவாய் இல்லாதவரை உனக்கும் எனக்கும்
ஒன்றுமில்லை" என்று சொல்லி விட்டேன்.
“ அது
சரிதான். சாத்தியமில்லைதான். " என்றாள்.
என் பலம் முழுசையும் திரட்டி எம்பி அவள்மீது சொத்தென்று பிரேதமாய் விழுந்து
கிடந்தேன்.
அவள் சர்வமுமாய் வியாபித்து அமானுஷ்யமாய் நின்றாள்.
ஏறிந்தகல் குறியை மீறி அனாவசியப்பட்டதாய் என் உடல் முழுவதும் வலித்துக்
கிடந்தது.
நான் அல்லாத என்னை எதிர்கொள்ள அவள் அல்லாத அவளை தயார் படுத்திவிட்டாள்.
அது அவள் அல்ல. புதை மணலில்
பாரவண்டி இழுக்கும் அவள் அல்ல அது. பின்னங்கால் பிடறியில் இடிபட பொதி சுமக்கும்
அவள் அல்ல அது. அவளிடம் மூக்கணாங்கயிறு இல்லை. நுகத்தடி இல்லை.“ சீ சீ " எந்த ஆபரணங்களுமே இல்லை.
பிறந்த மேனியாய் நெருப்பாய் ஜ்வலிப்பாய் நிற்கும் அவள் அல்ல அது.
நான் பேண்ட் சட்டை மாற்றி கைலியுடன் கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தேன்.
மாமியார் பெரிய மகன் வேலை விஷயமாய் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். நான்
ஸ்மரணையற்றவனாய் “ ஆமாம் “ “அப்படித்தான் “ பார்க்கலாம் “ என உதிரியாய் சம்பாஷித்தேன்.
மாமியாரின் ஏவலில் அவள் வேற்றாளுக்கு வைப்பதாய் சாப்பாடு கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனாள்.
ஒரு வார்த்தையும் சிந்திவிடாமல் கட்டிலிலிருந்து இறங்கி சாப்பிட உட்கார்ந்தேன்.
அகோரப்பசி. இருந்தாலும் சாப்பாட்டில் மனசு லயிக்கவில்லை.
வீட்டில் அவளைத்தவிர்த்து மற்ற எல்லாவற்றிலும் ஒரு இறுக்கம் தளர்ந்த சகஜ
நிலைமை திரும்ப ஆரம்பித்திருந்தது.
அவள் பழையபடியாகவே சாப்பிட்டு காலிபண்ணிய பாத்திர பண்டங்களை சேகரம்
பண்ணிக்கொண்டு போனாள்.
ஏணையில் பையன் மூத்திரம் பேய்ந்துவிட்டு காலை உதைத்து அழுதான். ஏணை அசைந்து
ஆடியது.
88888888888888
No comments:
Post a Comment