Monday, June 12, 2023

A REVENGE பாஞ்சாலி

பாஞ்சாலி

(தளபதி சினிமா படத்தின் வாடை இந்தக் கதையில் இருப்பதாக சொல்லுகிறார்கள். அதற்கு நான் பொருப்பல்ல காரணம் இந்த கதை தினமலர் வாரமலரில் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னால் நான் எழுதி பிரசுரம் ஆன கதை இது)

08. பாஞ்சாலி

   'த்தூ…  இவளும் ஒரு பொம்பளன்னு வெளிய வரா பாரு…”

             "அட நீ ஒண்ணு…. எல்லாத்தையும் வித்துட்டவளுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா…?"

      'முழுக்க முழுக்க நனைஞ்சவளுக்கு முக்காடு எதுக்கு….?"

      'புருசன் செத்து ஒரு வருசம்கூட ஆவலை…. அதுக்குள்ள  புருசனைக் கொன்னவனுக்கே…. முந்தானைய போட்டுட்டா….      ம்கலி முத்திப் போச்சி….மழை பேயல மழை பேயலன்னா எப்பிடிப்பா பேயும்…? ஊர்ல நடக்குற அக்குறும்பு கொஞ்சமா  நஞ்சமா….?"

      வலசைப்பட்டி கிராமம் வாயை மூடவில்லை

      பாஞ்சாலி பஸ்ஸ_க்காக காத்திருந்தாள்.

      இன்னும்கூட மோசமாகப் பேசினால்கூட அது தனக்கு பொருத்தம்தான் என்று தோன்றியது அவளுக்கு.

      இப்போதெல்லாம் இது அவளுக்குப் பழகிப் போயிருந்தது.

      இன்னும் கொஞ்ச நேரத்தில் வேலூர் போகும் பஸ் வரும்.

      வலசைப் பட்டியிலிருந்து வேலூர் போக ஒருமணி நேரம் ஆகும்.

      வேலூர் போய்ச் சேர்ந்த அடுத்த ஒருமணி நேரத்திற்குள் பாஞ்சாலிக்கும் காத்தவராயனுக்கும் கலெக்டர் தலைமையில் திருமணம் நடக்கும்.

     'கணவனைக் கொன்றவனைக் காதலிக்கும் கன்னி" பஸ்ஸில் இவளுக்குப் பின்னால் யாரோ பத்திரிக்கையை சப்தம் போட்டு வாசித்தான்.

     பாஞ்சாலி தன் கழுத்தில் தொங்கிய  இரண்டாவது தாலியை தொட்டுப் பார்த்தக்கொண்டாள். மெலிதாக புன்னகை பூத்தாள்.

     காத்தவராயன் பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

     கலெக்டரும் ஜெயில் அதிகாரியும் அவனைப்பற்றி புகழ்ந்து பேசினார்கள்.

     'உங்களில் பாவம் செய்யாதவர்கள் யாரோஅவர்கள் மட்டும் அவள்மேல் கல்லெரியுங்கள்…. என்று ஏசுநாதர் சொன்னதும் எல்லோரும் தய்கள் கைகளில் இருந்த கற்களை எறிந்து விட்டார்கள்…. குற்றம் செய்து மனம் திருந்தியவனை நாம் மன்னிக்க வேண்டும"; என்றார் கலெக்டர்.

      பளீச்…. பளீச்சென  பத்திரிக்கைகாரர்கள் போட்டோ எடுத்தனர்.

      ஒரு நிரூபர் ஜெயில் அதிகாரியிடம் கேட்டார்…''அந்தம்மாவுக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் இருக்குதா…?"

      'அந்த அம்மாவையே கேளுங்களேன்…”

              ''பாஞ்சாலிகு;கு இவர் என்னா ஒறவு…?"

      'புருஷன்.."

      'நான் கேக்றது பழைய ஒறவு…”

      'செத்துப்போன பரசுராமனோட ஒண்ணுவிட்ட தம்பிதான் இந்த காத்தவராயன்…”

      'பரசுராமனோட கொலைக்குக் காரணம் நிலத்தகறாறு. தகறாறுக்கு காரணமாயிருந்த நெலத்தெல்லாம் பாஞ்சாலிக்கு எழுதி வெக்க முடிவு பண்ணிட்டாரே காத்தவராயன்…. இதெல்லாம் நீங்க அவருக்கு கொடுத்த ஐடியாவா…?"

      'இல்லை….”

      'இந்த மாதிரி ஆயுட் கைதிகளுக்கு எல்லோருமே விருப்பப்பட்டா கல்யாணம் பண்ணி வைப்பார்களா…?"

      'நிராதரவான பாஞ்சாலியை அவளோட கொழந்தைய நெனைச்சுப் பாருங்க. நான் செய்த தப்புக்கு பிராய சித்தமா அந்தக் குடும்பத்தையே காப்பாத்தக் கூடிய தார்மீக பொருப்பை நானே எடுத்துக் கிட்டேன்" இது காத்தவராயன்.

      'சிறைச்சாலை தண்டனை அனுபவிக்கிற எடம் மட்டுமில்ல. அதுமட்டுமில்ல மனம் திருந்தி அதுக்கு மார்க்கம் தேடற எடமும்கூட. அதுக்கு நாங்க ஒத்தாசையா இருக்கறோம்" என்றார் ஜெயில் அதிகாரி.

      'இவரோட தண்டணைக்காலம் குறையறதுக்கு ஏதாவது வாய்ப்பு உண்டா…?"

      'என் சர்வீஸ்ல இந்தமாதிரி ஒரு நல்ல மனசும் நடத்தையும் உள்ள கைதியை பார்த்ததே இல்ல. நாங்க மேல எழுதியிருக்கோம். இந்த தண்டனை குறைய வாய்ப்பு இருக்கு"

      நிரூபர் காத்தவராயனிடம் திரும்பினார்.

      'நீங்க இந்த அம்மாவை கல்யாணம் பண்ணிகிட்டதால உங்களோட தண்டனை பாதியா கொறைஞ்சிடும் போல இருக்கே…’

ஆத்தரத்துல என்னா செய்யறோம்னு தெரியாம செஞ்சிட்டேன்எனக்கு மரண தண்டணை கெடச்சிருந்தாக்கூட சந்தோஷமா ஏத்துக்கிட்டு இருப்பேன்என்னப் பொருத்தவரைக்கும்…. என்னோட வாழ்க்கை முடிஞ்சிப் போச்சிஇனிமே எங்கண்ணணோட குடும்பத்துக்கு ஏதாவது செய்ய முடியும்னாஅதுதான் என்னோட பாக்கியம்….” என்று சொல்லும்போது அவன் கண்கள் கலங்கின.

      பாஞ்சாலி புடவைத் தலைப்பில் முகத்தை புதைத்தபடி விசும்பினாள். காத்தவராயன்  சிறைக்குப் புறப்பட்டான்.

      பாஞ்சாலி இரண்டாவது தாலியுடன் ஊருக்குத் திரும்பினாள்.

      'ஊரு பேசறதை காது வச்சி கேக்க முடியல….ஒல வாயை மூடனாலும் ஊர் வாய மூட முடியுமா..? இவளுக்க ஏந்தா இப்பிடி புத்தி போச்சோ..?" என்று புலம்பினாள் பாஞ்சாலியின் விதவைத்தாய்.

      'பாஞ்சாலின்னா அஞ்சி புருசன் வேணுமே….? ரெண்டுதானே ஆயிருக்கு…?"

      'அப்பொ இன்னும் மூணு எடம் காலியிருக்குன்னு சொல்லு…"

      இப்பிடி மக்கள் நாக்கில் நரம்பில்லாமல் பேசினார்கள். அந்த வருஷம் நல்ல மழை. பாஞ்சாலியின் வயலில் பூத்துக்குலுங்கும் கம்பும் சோளமும். இறங்கி வேலை செய்தாள். நல்ல வெள்ளாமை கண்டிருந்தது.

      காத்தவராயன் பரோலில்  வலசைப்பட்டிக்கு வந்தான். ஏற்கனவே ஏற்பாடு செய்தபடி தனக்கு சொந்தமாக இருந்த நிலம் நீச்சு அத்தனையும் பாஞ்சாலி பெயருக்கு மாற்றி எழுதினான்.

      'என்னடா பெரிசு எழுதிட்டான் எழுதிட்டான்னு…? அவன்தான் அவள கண்ணாளம் பண்ணிகிட்டானே…”

     'அதுசரி…. சொத்தோட சொத்து ஒண்ணா சேந்திடுச்சில்ல…?"

           '' இன்னொரு சங்கதி தெரியுமா…? அவுங்கண்ணன் இருக்கும் போதே இவனுக்கு அவள் பேர்ல ஒரு இதுவாம்…."

      'தகறாறு வந்ததுக்கே இதுதான் காரணமாம்…. நிலத்தகறாறு அதுஇதுன்னு சொல்றதெல்லாம் சும்மாவாம்."

      'அவளுக்கும் அவம்பேர்ல ஒண்ணும் இல்லாமலா கண்ணாளம் கட்டிகிட்டா..?" ஊர்கிணற்றடி குளத்தடி வேம்படி என்று வித்தியாசமின்றி பாஞ்சாலி காத்தவராயன் விஷயங்கள் அலசி ஆராயப்பட்டன.

      வலசைப்பட்டியில் எந்தஒரு சம்சாரியையும்விட பாஞ்சாலி தனது காடு கரம்பில் ஓடியாடி வேலை செய்தாள். வெய்யிலுக்கும் மழைக்கும் வளைந்து கொடுக்காத பாறை போல் பாஞ்சாலி இறுகி இருந்தாள். உடல் கறுத்து அம்மன் சிலை போல் காட்சியளித்தாள்.

      பாஞ்சாலியின் பையனுக்கு இப்போது எட்டு வயது. உள்ளுர் பள்ளிக் கூடத்தில் மூன்றாவது படித்துக் கொண்டிருந்தான்.

      போனதே தெரியாமல் ஏழு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பாஞ்சாலியின் தாய் பரமபதம் அடைந்திருந்தாள்.

      'ஏம்மா அப்பா எப்பம்மா வருவாங்க…?"

      'வந்துருவாங்கப்பா….”

      'அப்பா ஊருக்காம்மா போயிருக்காங்க…?  ராமு சொல்றான். ஜெயிலுக்கு போயிருக்காங்கன்னு…" ராமு அவனோடு படிக்கும் பையன்.

      'ஊர்க்காரங்க எல்லாம் பொய் சொல்வாங்கன்னு சொல்லியிருக்கேனில்ல…?" பாஞ்சாலி சப்பைக்கட்டு கட்டினாள்.

      ஆமாம்மாநான் மறந்து போயிட்டம்மாபாஞ்சாலியின் பையன் இப்போதெல்லாம் இப்பிடி தர்ம சங்கடமான கேள்விகளெல்லாம் கேட்க ஆரம்பித்திருந்தான். தண்டனைக் காலம் குறைந்து அடுத்த வாரம் காத்தவராயன் சிறையிலிருந்து விடுதலையாகும் செய்தி வந்தது.

      பாஞ்சாலிக்கு சந்தோஷமாக இருந்தது. வீட்டுக்கு ஒட்டடை அடித்து கூட்டி மெழுகி வெள்ளையடித்தாள். அடுத்தநாள் காலை வந்த முதல் பஸ்ஸில்; வேலூரிலிருந்து வந்து இறங்கினான் காத்தவராயன். பாஞ்சாலியின் பையனுக்கு நிறைய விளையாட்டு சாமான்கள் வாங்கி வந்தான். அத்துடன் ஒரு முழம் பூவும் இருந்தது.

      காத்தவராயன் எண்ணெய் தேய்த்து தலை முழுகினான். உற்றார் உறவினர் நண்பர்கள் வந்து விசாரித்தனர். பாஞ்சாலியின் பையன் விளையாட்டு சாமான்களோடு விளையாடிக் கொண்டிருந்தான்.

      பாஞ்சாலி பூவை செத்துப் போன பரசுராமன் படத்திற்கு போட்டாள். கோழிக்கறி சாப்பாடு தயாராக இருந்தது. பாஞ்சாலி கைப் பக்குவம் எப்போதுமே அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

      நிம்மதியாக சாப்பிட்டுலிட்டு உறங்கி எழுந்தான். ஊரைச்சுற்றி வந்தான். அன்று பொழுது போனது.

      காத்தவராயன் வந்தவேளை கோடைமழை கொட்டு கொட்டென்று கொட்டியது. சூடேறிக் கிடந்த மண்கண்டம் குளிர்ந்தது. வெயிலுக்கு வெளிக்கிளம்பாமல் புளிய மரத்தடி நிழலுக்கு வாகாய்ப் படுத்துக்கிடந்த விவசாயிகள் உழவுக்கு ஏர் தேடி ஓடினார்கள்.

      காத்தவராயனும் தன் நிலத்தில் ஏர் பூட்டினான்.

      எல்லோரும் இந்த தடவை முன்னதாக கடலை விதைத்தார்கள்.

      காத்தவராயன் இருபத்திநான்குமணி நேரமும் காடுகழனி என்றே காத்துக்கிடந்தான்.

      வயலுக்கு நட்டநடுவில் ஒரு குடிசை போட்டான். அது அவனுக்கு இடைஇடையே ஓய்வெடுக்க வசதியாக இருந்தது.

      'என்னம்மா பாஞ்சாலிகாத்தவராயன் இல்லையா…?"

      'வயக்காட்டுல குடிசையில இருப்பார்….”

      இப்போதெல்லாம் காத்தவராயன் பெரும்பாலான நாட்களை அந்தக் குடிசையிலேயே கழித்தான். அப்படியே வீட்டுக்கு வந்தாலும் வெளியில் வாசலில் கட்டில் போட்டு படுத்துக் கொள்வான்.

      இதுவரை பாஞ்சாலிக்கும் காத்தவராயனுக்கும் கல்யாணமாகி சரியாக எட்டு ஆன்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை ஒரேஒரு முறை கூட அவள் அவனிடம் பேசியது கிடையாது. அவளை அவன் தொட்டதும் கிடையாது.

      அது அவனுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

      ஆனால் பையன்மட்டும் அவனிடம் அப்பாஅப்பா என்று அடையாக ஒட்டிக் கொண்டான்.

      இதைப்பற்றி உறுத்தல் மனசில் இருந்தாலும் இதற்கெல்லாம் நான் அருகதை இல்லாதவன் என்பதைப்போல வயல்வரப்பு காடுகரை என்று காலத்தை ஓட்டினான்.

      முட்டத்தெரியாத சாதுவான பசுவைப்போல காத்தவராயன் மாறிவிட்டிருந்தான். மற்றவர்களிடம் பேசுவது என்பதுகூட வெகுவாக குறைந்திருந்தது.

      அன்று வெளிவாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்தான் காத்தவராயன்.

      வீட்டினுள் பாஞ்சாலி தூக்கம் பிடிக்காமல் புரண்டு படுத்தாள். அவள் தூங்கி பல ஆண்டுகளாயிற்று.

      தலைக்குமேல் விடிவிளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. மணி பன்னிரண்டிற்கு மேல் இருக்கும்.

      தூரத்தில் எங்கோ ஆந்தைகள் கரடுமுரடாய் பேசிக் கொண்டன.

      எழுந்து உட்கார்ந்தாள். எதிரில் செத்துப்போன கணவன் பரசுராமனின் படம்.

      ஒருநீண்ட பெருமூச்சை வெளியிட்டபடி தலையணைக்கடியில் வைத்திருந்த அறுவாளைக் கையிலெடுத்துப் பார்த்தாள்.

      புதிதாக சாணை பிடித்தது….

      எழுந்து வெளியே வந்தாள்….

      முழுசாய் நிலவு காய்ந்து கொண்டிருந்தது

      கயிற்றுக் கட்டிலில் காத்தவராயன்….

      எங்கிருந்தோ ஒரு அசுர பலம்….  ஓங்கி மார்பை நோக்கி இறக்க காத்தவராயன் சட்டென்று கையை இறுக்கிப் பிடித்தான்.

      'என்ன இது முட்டாள்தனமான காரியம்…?"  என்றபடி எழுந்து உட்கார்ந்தான் காத்தவராயன். கத்தியை பிடுங்கி தூரத்தில் வீசினான்.

      'ஆமாம்பத்து வருஷத்துக்கு முன்னாடி நீ செய்த அதே முட்டாள்தனமான காரியம்…” என்று பாஞ்சாலி கையை உதறினாள்.

      'நீங்க இப்போ என்னை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிட்டாஉங்க மகனோட நெலையை நெனச்சிப் பாருங்க…?"

      'எனக்கு அதப்பத்தி கவலை இல்லை….”

      'என் புருஷன் என் முன்னால துடிச்சி செத்ததைப் போல நீயும் சாகணும்…. அதை என் கண்ணால பாக்கணும்….”

      'அப்போஎன்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டது…? இவ்வளவு நாள் அமைதியாக இருந்தது…?"

      'எல்லாமே இந்த நாளுக்குத்தான்….” ஆவேசமாகச் சொன்னாள்.

      'அதுசரிங்க…. இப்போ நான் வாழறதே உங்களுக்காகவும்உங்க பையனுக்காகவும்தான்…  அதை உங்களால புரிஞ்சிக்க முடியலயா…? என்னோட வாழ்க்கை எப்பவோ செத்துப் போச்சி…"

      'நீ சொல்றது உண்மையா இருந்தா நீ சாகணும்…. என் கண்ணெதிரே சாகணும்அவ்ளோதான்…" என்று சொன்னவாறு குலுங்கி குலுங்கி அழுதாள்

      'நான் செத்த பிறகாவது நீங்க என்ன புரிஞ்சிக்குவிங்க…” என்றான் அவன்.

பின் அவள் அழுகையை நிறுத்திவிட்டு எங்கோ வெறித்து நோக்கினாள்….

      பத்து வருஷங்கள் பின்னோக்கி ஓடின

              அன்று காலை இளம் வெய்யில்…. சுள்ளென்று அடித்துக் கொண்டிருக்தது…. பாஞ்சாலி பருத்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

தூரம்…. அதிகரிக்க அதிகரிக்க பாஞ்சாலி பயந்து போய் திரும்பிப் பார்க்கும்போது இருவரும் கட்டிப் புரண்ட வண்ணம் இருந்தனர்.

பாஞ்சாலி ஓட்டமும் நடையுமாய் ஓடினாள்காத்தவராயனின் மேல் உட்கார்ந்தபடி கையினால் ஓங்கி ஓங்கி தாக்கிய வண்ணம் இருந்த  பரசுராமனை விலக்கி ஒரு புறமாக தள்ளினாள்.

      அதுதான் தாமதம்காத்தவராயன் துள்ளி எழுந்தான். இடுப்பிலிருந்து அறுவாளை உறுவினான். பரசுராமன் பின்வாங்கினான்.

      தம்பி  வேணாம்பா…. தம்பி வேணாம்பா….என்று கை கூப்பி வேண்டினாள் பாஞ்சாலி

      அடுத்த கணம் பரசுராமனின் கழுத்தில்  சதக்" என்று அறுவாள் இறங்கி மீண்டும் ஒரு முறை பாய

      பரசுராமன் துவண்டு சரிந்தான்...

              ரத்தம் வெள்ளமாக பாய்ந்தது

      பாஞ்சாலி…. பாஞ்சாலி….  பாஞ்சாலி…’ என்று கடைசி மூச்சுவரை முணுமுணுத்துக் கொண்டே இருந்ததுஅவன் வாய்.

      'அய்யோ என்னை விட்டுப் போயிடாதீங்க…"  என்று பாஞ்சாலி புலம்பிக் கொண்டிருக்கும் போதே பரசுராமன் கண்களை மூடினான்.

      அவள்தன் பழைய நினைவுகளை உதறிக்கொண்டு மீண்ட போது…..எதிரில் நின்றிருந்த பூவரசமரத்தில் காத்தவராயன் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தான். ஒரு கணம் கூர்ந்து கவனித்தாள். அவளுக்குள் ஏதோ ஒரு இனம் தெரியாத சந்தோஷம். உடலின் எல்லா பாகங்களுக்கும் பரவியது..

 பலமாக சிரிக்க ஆரம்பித்தாள்.  நீ சொல்றது உண்மையா இருந்தா…. என் கண்ணெதிரிலேயே நீ சாகணும்…. அதையே திரும்ப திரும்ப சொன்னாள்சிரித்தாள்

      காலையில் போலீஸ் வந்தது…''இதற்கு யாரும் பொருப்பல்ல…” என்று அவன் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. பிணத்தை போஸ்ட் மார்டம் செய்து கொடுத்தார்கள்.

   “எத்தனை வருஷங்கள் ஆகிவிட்டன…  பரசுராமன் இறந்து?" இன்னும்கூட அவள் அந்த ஒரே வாக்கியத்தையே சொல்லியபடி  அந்த கிராமத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறாள் பாஞ்சாலி

'என் புருஷன் என் முன்னால துடிச்சி செத்ததைப் போல நீயும் சாகணும்…. அதை என் கண்ணால பாக்கணும்….” இதைத்தான் அவள் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருந்தாள்.

                            88888888888888

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...