Monday, June 12, 2023

A PICKPOCKET மனுஷண்டா நீ

 

நகைச்சுவைக் கதை 

(ஏன் நல்லவர்கள் பெரும்பாலும் ஏமாளிகளாகவும் அப்பிராணிகளாகவும் இருக்கிறார்கள் ? தண்டனைகளை அனுபவிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். தப்பு செய்பவர்கள் எப்போதும் தப்பிக்கிறவர்களாகவே இருக்கிறார்களே, அது ஏன் ?)

             பஸ்ஸில் உட்கார்ந்திருப்பவர்களைவிட நின்றிருப்பவர்கள் கூட்டம் ஜாஸ்தியாக இருந்தது. மதுரை புராதனமான நகரம். அந்த தோஷம். பஸ் குதிரை மாதிரி துள்ளிச் சென்றது. இந்தத் துள்ளலுக்கு என்னைத் தவிர, இதர பிரயாணிகள் பழக்கப் பட்டிருந்தனர். தினம் ஏறும் குதிரை.

      நான் மதுரைக்கு புதுசாய் வந்த குமாஸ்தா.

      ஜனத்தொகையில் பட்டியலில் இடம்பெறும் ஓரு சராசரி.

      மேலும் என்னைப்பற்றி சொன்னால் - யூகேஜியில் ஒரு பெண்    எல்கேஜில் ஒரு பையன். மேல்அதிகாரிக்கும் மேலாக மிரட்டும் மனைவி. இன்றும் பி எஃப்.--ல் இருக்கும் லோன். அப்புறம் மார்வாடி கடையில் அடகிலிருக்கும் சொற்ப நகை. சாரி இதெல்லாம் கதைக்கு சம்மந்தப்படாதவை. ஆனாலும் இது உணர்ச்சிபூர்வமான கதை. தேவைப்படலாம்.

      ஒருநிமிஷம். குமாஸ்தாவுக்கு துப்பறிய ஒரு சந்தர்ப்பம்.

      பஸ்ஸில் என் கண்ணுக்கு முன்னாலேயே ஒரு பிக் பாக்கெட் ஆசாமி. அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது. ஒவ்வொருத்தர் பாக்கெட்டாக நோட்டம் பார்த்தபடி முன்னேறிக் கொண்டிருக்கிறான். பலரும் அவனை கவனிக்கவில்லை. என்னை அவனால் ஏமாற்ற முடியவில்லை.

      என் பாக்கெட்டை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். வாங்கிய சம்பள பணத்தில் வாங்கிய அல்வா. மதுரை  ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் இருந்த கடையில் வாங்கியது. திருநெல்வேலி இருட்டுக்கடை ஃபார்முலாவில் செய்த ஒருகிலோ சூடான அல்வா,      இரண்டு கேட்பரீஸ், இரண்டு முழம் மல்லிகைப்பூ, இது போக மீதி பணம், எல்லாம் பத்திரமாக இருந்தது.

      இப்போது அந்த பிக் பாக்கெட், ஒரு கண் தெரியாத ஆசாமி பக்கத்தில் போய் நின்றான். அடுத்த நிமிடம் கத்தையாய் அந்த ஆளிடமிருந்து ரூபாய் நோட்டுக்களை உருவிவிட்டான்.

      “பிக்பாக்கெட் அடிச்சிட்டான்பிக்பாக்கெட் அடிச்சிட்டான் டிரைவர் வண்டியை நிறுத்துங்கஎன்றபடி ஓடிப்போய் அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். திமிறினான். உடும்புப்பிடியாய் பிடித்தேன். இரண்டு குலுக்கும் ஒரு பெருமூச்சும் விட்டு பஸ் வைகை பாலத்தின் மீது நின்றது. எல்லோரும் பஸ்ஸைவிட்டு இறங்கினோம். டிரைவர், கண்டக்டர், பிரயாணிகள் -- எங்களைச்சுற்றி வியூகமாய் றின்றனர்.

      “ இந்த கண்ணு தெரியாத ஆளுகிட்ட இவன் பிக் பாக்கெட் அடிச்சிட்டான். செக்கப் பண்ணிப் பாருங்க…” – என்று உணர்ச்சி வசப்பட்டேன நான்;.

     “ யோவ் மொதல்ல கையை விடுய்யா…” அதிகாரமாய் என்னை அதட்டினான் பிக்பாக்கெட்.

      விட்டேன்.

      “ஏம்பா நான் ஒம்பணத்தை நானா எடுத்தேன் ? சொல்லுப்பா…” பிக்பாக்கெட் குருட்டு ஆசாமியை அரட்டினான்.

    “உங்க பணம் இருக்குதான்னு பாருங்ககண்டிப்பா இருக்காதுநான் அவசரப்பட்டேன்.

     “நீங்க கொஞ்சம் சும்மா இருங்கஅவரு பார்த்து சொல்லட்டுமே…” என்றார் சக பிரயாணி ஒருத்தர்.

    “எங்கிட்ட எல்லாமே சரியா இருக்கு… ”

    “யோவ் சரியா பாருய்யா…” நான்.

    “  பாத்துட்டங்க எல்லாம் சரியா இருக்கு.

    “  சார் ஏதாவது கனவு கண்டிருப்பார். ”  ஒருத்தர்.

“  அவன் அவனுக்கு கனவு காண பஸ்தான் கெடைச்சதா…? இன்னொருத்தர்.

    “  செல பேரு வேணுமின்னே இந்த மாதிரி ரகள பண்ணி, ஏதாவது பெரிசா லூட் பண்ணிடுவானுங்கஇந்த மாதிரி ஒரு கூட்டமே இருக்கு…”  என்று பின்னாலிருந்து கேட்டது ஒரு குரல்.

      அதைத் தொடர்ந்து ஒருகை வேகமாக வந்து, என் முகத்தில் நங்” –கென்று இறங்கியது. வாயில் உப்புக் கரித்தது.  ரத்தம்.

      அப்பொறம் சரமாரியாக முகம் மார்பு முதுகு இன்னபிற பிரதேசங்களிலும்  தருமஅடி.

      “யோவ் இருங்கய்யா…  எதுக்குய்யா இந்த ஆளை இப்படி அடிக்கறீங்க? விடுங்கய்யா…” என்மீது அடையாய் அப்பியிருந்த  கூட்டத்தை ஒருத்தர் வழித்துத் தள்ளினார்.

      ஒருவழியாய் எல்லோரும் ஒதுங்கிப்போனார்கள். உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைந்தவன் யார் ? யார் அந்த எம்ஜியார் ? தலையை உயர்த்திப் பார்த்தேன்.  ஆ ..அம்மாடி…” வலி. கழுத்தைத் திருப்ப முடியவில்லை. அவன்தான். பிக்பாக்கெட் அடித்தானே அவன்தான். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.

ஏன் காதுபட அவனை நிறை பேர் பாராட்டினார்கள். காட்டிக்கொடுத்தவனை காப்பாற்றிய கருணாமூர்த்தி என்றார்கள். எல்லோராலும் அவனை மாதிரி செய்யமுடியாதாம். இன்னா செய்தாரை ஒருத்தல்….” என்று திருவள்ளுவரையும் .கூப்பிட்டார்கள்.

என்னை பார்த்துக் கொண்டே சொன்னான் ஒருத்தன்“  இந்தமாதிரி சண்டையை மூட்டி விட்டுட்டு நைசா நகை பணம்னு அடிச்சிடுவானுங்கஅவனைத் தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷனில், பஸ்ஸ்டேண்டில், வங்கிகளில் இதுமாதிரி நடந்த சம்பவங்களை சொல்லிக்கொண்டே என்னையும் ஒருமுறை பார்த்தனர். ஒருவேளை என்முகம் அசல் பிக்பாக்கட் மாதிரி இருக்கலாம்.

என்னை புழுமாதிரி கேவலமாகப் பார்த்தார்கள்.

அந்தபிக்பாக்கட் நல்லபிள்ளையாக ஒரு புன்சிரிப்பை முகத்தில் அணிந்திருந்தான். சாத்தான் !

      இப்போதுங்கூட அவன் தடுத்திராவிட்டால் நார்நாராக கிழித்திருப்பார்கள். என் சட்டை ரிப்பன்களாக மாறியிருந்தது. கழற்றி எறிந்தேன். டிரைவர் சீட்டுக்கு அருகாமையில் உருண்டு கிடந்த டிபன்பாக்சை கொண்டு வந்து கொடுத்தான். அவன்தான் சாத்தான் !

      பஸ் கிளம்பியது.

      பெரியவர் ஒருத்தர், ஆதரவாய் பக்கத்தில் உட்காரச் சொல்லி இழுக்க, அவமானத்தால் குன்றி சிறுத்து, உட்கார எல்லோருடைய கண்களும் என் முதுகில். என் முகத்தில்.

      எல்லோருடைய பேச்சிலும் நான்.

      இரண்டு சீட்டுக்கு முன்னால் அவன் , யோக்யன்.

      “காட்டுப் பிள்ளையார் கோயில். எறங்குங்க சார்….” கண்டக்டர்.

      விசில், திடுக்கிட்டு எழுந்தேன்.;

      நான் இறங்க வேண்டிய இடம்.

      என் மானம் மரியாதை, சூடு சொரணை எல்லாம் அந்த பஸ்ஸில் நொருங்கிக் ;கிடந்தது. நான்மட்டும் தனி ஆளாய் பஸ்ஸிலிருந்து இறங்கினேன்.

      இன்னும் பத்து நிமிஷ நடையில் என் வீடு.

      சாலையில் விளக்குகள் அணைந்திருந்தது. நிம்மதியாய் இருந்தது நடக்க. அந்த சாலையில் அப்போது போக்கும் இல்லை. வரத்தும் இல்லை.

      “நில்லு அப்பு.. ஒருநிமிஷம்பின்னாலிருந்து குரல்.

      திரும்பிப் பார்த்தேன்.  சாத்தான்.  பிக்பாக்கெட்.

      நான் அங்கேயே நின்றேன்.

      அவன் இருட்டில் நிழலாய் வந்தான்.

      “சாரிஅண்ணாச்சிபாவம் நீங்க….  ஒரு தப்பும் செய்யாத உங்கள எல்லோரும் அடிச்சதுஉண்மையிலேயே நான் எதிர்பார்க்கல

    “நீ அவ்ளோ யோக்கியனாட்டம் பேசறியேஅந்த குருட்டு ஆளோட பணத்தை நீ பிக்பாக்கெட் அடிக்கலேன்னு சொல்லு பாப்போம்…” 

      “நான் அவங்கிட்ட பிக்பாக்கெட் அடிச்சது வாஸ்தவம்தான். ஆனா அவன் குருடன் இல்ல. பிச்சை எடுக்க அவன் போடும் வேஷம். வேஷம் தெரியாம அவன் என்னை பல தடவை ஏமாற்றி இருக்கான். அதுக்கு நான் குடுத்த ஷாக் டிரீட்மெணட்தான் அது…”

எனக்கு அவன் ரொம்பநாளா அறிமுகம். செய்யற தப்புக்கு பிராயசித்தமாக அவனுக்கு நூறு இருநுறுன்னு அப்போ அப்போ குடுத்திருக்கேன்…. அவன் குருடு இல்ல பிராடுன்னு இன்னக்கித்தான் தெரிஞ்சிக்கிட்டேன். அது அவனுக்கும் தெரியும்

 “அதான் இன்னக்கி அவங்கிட்டயே அடிச்சேன்…. அவனும் பாத்துட்டான். வெளிய சொன்னா நீ குருடன் இல்லேன்னு சொல்லிடுவேன்னு சொன்னதும் அடங்கிட்டான்நீங்க என்னடான்னா அது தெரியாம…”

    “கண்ணால் காண்பதும் பொய்தத்துவம் புரிந்தது.

             “எது எப்பிடி இருந்தாலும் நாம உண்டு நம்ப காரியம் உண்டுன்னு போகணும் சார்…” சாத்தான் வேதம்.

      எனக்கு எரிச்சல்.

      சரி சரி உன்னோட அட்வைஸ் உங்கமாதிரி ஆளுங்களோட நிக்கட்டும். நான்திரும்பி நடந்தேன்.

      “அவம் பாக்கெட்ல எடுத்ததை கவனமா பாத்தீங்க…  உங்கப் பாக்கெட்ல நான் எடுத்தத பாக்கல பாருங்க…”

      பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தேன். சொரேர்.

      “மனசு கஷ்டமா இருந்திச்சி…  அதான் உங்க பின்னாலேயே எறங்கிட்டேன். இந்தாங்க உங்க பணம்

      அவன் இரு கைகளையும் இறுகப் பற்றினேன்.

                “மனுஷண்டா நீ..

88888888888888

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...