Friday, June 23, 2023

A HEALTH CARE & THERAPUTIC TREE SANDAL WOOD 112. பிரபலமான வாசனைத்திரவியம் சந்தன மரம்

வாசனைத் திரவியம்
சந்தன மரம்


வானொலியில் பணியாற்றிய சமயம் வனத்துறை அதிகாரிகளிடம் ஜவ்வாது மலை சந்தன மரங்கள் பற்றி பேட்டிகள் எடுப்பதற்காக நாங்கள் இருவர் ஆலங்காயம் பகுதிக்கு சென்றிருந்தோம். 

காட்டுப்பாதையில் போனோம்

நாங்கள் அன்று இரவு வனத்துறை விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தோம். அன்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அங்கு ஒரு ரகசியச் செய்தி வருகிறது. பக்கத்தில் ஒரு பத்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு கூலிப்படை சந்தன மரங்களை வெட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதான் அது. 

உடனே துப்பாக்கி தோட்டா என்று கிளம்பினார்கள் அவர்கள்;. “நாங்களும் உங்களுடன் வர்றோம்என்று என்று சொன்னோம். ஒரு நேரம் போல இருக்காது.. வேண்டாம் சார்..எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவர்களோடு சென்றோம். 

அந்த இருட்டு வேளையில் லைட் போடாமல்  ஜீப்பில் குண்டும் குழியுமான அந்த காட்டுப் பாதையில் நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். 

ஏறத்தாழ அந்தப் பகுதியை அடைந்தபோது இரண்டு வெடிச்சத்தம் கேட்டது. நாங்கள் வருவதைத் தெரிந்து கொண்டு மிரட்டுவதற்காக சுடுகிறார்கள் என்று சொன்னார்கள். 

நீங்க ஜீப்லயே இருங்க நாங்க பாத்துட்டு வர்றோம் என்று சொல்லிஅவர்கள் துப்பாக்கியும் கையுமாக இறங்கிப் போனார்கள். அன்று இரவு குளிர் அதிகமாக இருந்தது. 

ஏற்கனவே குளிரில் வெடவெடத்துப்போன நாங்கள் கூடுதலாக ஒரு மணிநேரம் ஜீப்பில் நடுங்கிக் கொண்டிருந்தோம். அவர்கள் திரும்பிவந்து சொன்னார்கள், ‘தப்பிச்சி போய்ட்டானுங்க

சந்தனமரம் நிறைய இருந்ததால்தான் அது ஜவ்வாது மலை

சந்தனமரம் நிறைய இருந்ததால்தான் இதுக்கு ஜவ்வாது மலைன்னு பேரு வந்திச்சி.. இப்பொ மருந்துக்குக்கூட ஒரு மரம் இல்ல..என்று சமீபத்தில் அங்கு போனபோது ஒரு பெரியவர் சொல்லி வருத்தப் பட்டார். 

இந்தியா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமானது சந்தன மரம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அதிக அளவில் பரவி இருப்பது இந்தியாவின் வெப்பமான பகுதிகள் மற்றும் இந்தேனேசியாவின் தைமூர் மற்றும் சம்பா தீவுகள். 

இந்தியாவில் காநாடகா, மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசத்தின் வறண்ட பகுதிகள், முட்காடுகள் ஆகியவற்றில் சந்தன மரங்கள் அதிகம் இருக்கின்றன.

முயல்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மாடுகள், குதிரைகள், பன்றிகள், ஒட்டகம் ஆகியவற்றிற்கு இதன் இலைதழைகளை தீவனமாகக் கொடுக்கலாம். 

பட்டைகளில் 12 முதல் 14 சதம் டேனின் சத்து உள்ளது. இதிலிருந்து சாயம் தயாரிக்கலாம். விதைகளிலிருந்து எடுக்கும் எண்ணெயிலிருந்து  பெயிண்ட் தயாரிக்கலாம்.

சந்தன மரத்தின் வேர்ப்பகுதியில் அதிக எண்ணை

விலை மதிப்புமிக்க இதன் மரத்திலிருந்து, அழகான பொம்மைகள், சிற்பங்கள் செய்யலாம். மரத்திலிருந்து வடித்து எடுக்கும் பெருமதிப்பு பெற்ற சந்தனத்தைலம், சந்தன எண்ணெய், சந்தன சோப்பு, கோயில் அபிஷேகச் சந்தனம், சந்தன மாலைகள், சந்தன அகர் பத்திகள், சந்தன வாசனைத் திரவியங்கள், என தயார் செய்யலாம். 

மரத்தில் 4 முதல் 10 சதம் எண்ணெய் உள்ளது. இதன் வேர்ப்பகுதியில்தான் அதிக எண்ணெய் இருக்கும். 

மார்ச் ஏப்ரல் மாதங்களில் பூத்து ஜூன் முதல் செப்டெம்பர் வரையான காலத்தில் காய்கள் பழமாகின்றன. பழங்களின் மேலிருக்கும் மெல்லிய தசைக்காக சாப்பிடும் பறவைகள் விதைகளை பலவேறு இடங்களில் பரவ உதவுகின்றன. 

உதாரணமாக எங்கள் தோட்டத்தில் கூட பத்திருபது சந்தன மரக்கன்றுகள் பறவைகளின் உபயத்தில் முளைத்திருக்கின்றன. சந்தன மரங்கள் தங்கள் ஐந்தாவது வயதில் அதிக விதைகளை உற்பத்தி செய்யும். 

சந்தன மரங்களில் எப்போது வயிரம் பாயும் ?

கடலை ஒட்டிய மணல் பிரதேசங்கள், மற்றும் செம்மண்; வடிகால் வசதிகொண்ட நிலப்பரப்பு ஆகியவைகளில் நன்கு வளரும். வடிகால் வசதி இல்லாத கடும் களிப்பான நிலங்களில் நன்கு வளராது. கடுமையான வறட்சியும் உறை பனியும் இதற்கு ஆகாது. 

பாறைகள் நிறைந்த சரளை மண்கண்டம் மற்றும் குறைவான  மண்கண்டம் ஆழமுள்ள இடங்களில் வளர்ச்சி நன்றாக இருக்காது. 

மார்பளவு உயரத்தில் பதினைந்து செ.மீ. விட்டம் அளவு வளர்ந்த மரத்தில்தான் வயிரம் பாய்ந்திருக்கும். இந்த அளவு வளர சுமார் முப்பது ஆண்டுகள் பிடிக்கும். அதைத்தான் வாசனைத் திரவியமாகப் பயன்படுத்த முடியும். 

இன்னொரு கணக்கு சொல்லுகிறேன். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிலோ கூடுதலாக வயிரம் சேரும். 600  முதல் 900 மி.மீ. ஆண்டு சராசரி மழை பெய்யும் இடங்களில் சந்தன மரங்கள் மெல்ல வளரும். 500 முதல் 1000 மி;மீ. ஆண்டு சராசரி மழை பெய்யும் இடங்களில் சிறிது வேகமாக வளரும். 

சந்தன மரத்தின் பலமொழிப்பெயர்கள்

தமிழ் : சந்தனம், அனுக்கம் (CHANDANAM, ANUKKAM)

இந்தி: சந்தன், சேண்டல், (CHANDAN, ANUKKAM)

மலையாளம்: சந்தனம், சந்தனமுட்டி (CHANDANAM, CHANDANA-MUTTI)

தெலுங்கு: பத்ரஸ்ரீ, சந்தனமு (BHADRASRI, CHANDANAMU)

கன்னடம்: அகருகந்தா, பாவன்னா, பத்ரஸ்ரீ, சந்தலா (AGARU GANDHA, BAVANNA, BHADRASRI, CHANDALA)

தாவரவியல் பெயர் :    சென்டாலம் ஆல்பம் (SANTALUM ALBUM)

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் :  சேண்டல் வுட், இண்டியன் சேண்டல் வுட், ஃப்ராக்ரண்ட் சேண்டல் வுட் (SANDAL WOOD, INDIAN SANDAL WOOD, FRAGRAND SANDAL WOOD)

தாவரக்குடும்பம் பெயர் :  பாபேசி (FABACEAE)

முன்பெல்லாம் சந்தன மரங்களை வளர்க்க தடை இருந்தது. இப்போது தடை ஏதும் இல்லை. யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம். சில விவசாயிகள் சந்தனக் கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் தரமான சந்தனம் பெற 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...