Friday, April 14, 2023

SILVER SAND RIVER THENPENNAI - தென்பெண்ணை ஆறு

 


கர்நாடக மாநிலத்தில் பிறந்து கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் ஓடும் முக்கியமான ஆறு தென்பெண்ணை. கர்நாடக மாநிலத்தில் மட்டும் 110 கிலோமீட்டர் ஓடி  பின்னர் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 320 கி.மீ பாய்ந்து பாகலூர் என்ற இடத்தில்  வங்கக் கடலில் சங்கமம் ஆகிறது. 

தமிழ்நாட்டில் தர்மபுரியில் 140 கிலோமீட்டரும், கிருஷ்ணகிரியில் 35 கிலோமீட்டரும், விழுப்புரம் மாவட்டத்தில் 105 கிலோமீட்டரும், கடலூர் மாவட்டத்தில் 40 கிலோமீட்டரும் ஓடுகிறது தென்பெண்ணை.

தென்பெண்ணை ஆறு - சில முக்கிய தகவல்கள் (FACTS ON THENPENNAI)

1.பிறக்குமிடம்: சென்கேசவா மலைப்பகுதி (CHENNAKESAVA HILLS)) நந்தி மலைச்சாரல், சிக்பெல்லாபூர் மாவட்டம், கர்நாடக மாநிலம்.

2.சங்கமும் ஆகுமிடம்: வங்கக்கடல்(BAY OF BENGAL), கடலூர்.

3. மொத்தமாக ஓடும் தூரம்:  597 கிலோமீட்டர்.

4. துணை ஆறுகள்:  சின்னார் எனும் மார்கண்டா நதி,  பாம்பாறு, வாணியார், கல்லாறு, கெடிலம் ஆகியவை.

5. இந்த ஆற்றின் பழைய பெயர்:  உத்தர பினாகினி (UTHIRA PINAKINI)

6. நீர்வடிப்பரப்பு: 1424 சதுர கிலோமீட்டர்.

7. விவசாயத்திற்கு நீர் தரும் பரப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் – 38000 ஏக்கர்

தர்மபுரி மாவட்டம் – 6250 ஏக்கர்

திருவண்ணமலை – 17890 ஏக்கர்

விழுப்புரம் 25000 ஏக்கர்

8.குடிநீர் வழங்கும் கிராமங்கள் - 100 

பருவக்கால ஆறு (SEASONAL RIVER)

இது ஒரு பருவக்கால ஆறு, ஒரு ஆண்டில் பெரும்பாலான  நாட்கள் வறண்டு போயிருக்கும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில்தான் ஆற்றில் தண்ணீர் ஓடும். மற்ற சமயங்களில் மணல்தான் ஓடும் எம் ஊர் ஆறு..

அணைக்கட்டுகள் (DAMS AND RESERVOIRS)

தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகள் மற்றும் நீர் தேக்கங்கள் எங்கு இருக்கின்றன என்று பார்க்கலாம். ஓசூர் அருகில் உள்ள கலரப்பள்ளி நீர்த்தேக்கம்,  கிருஷ்ணகிரி அணை, நெடுங்கல் அணை, சாத்தனூர் அணை, திருக்கோவிலூர் அணை,ல்லிஸ் குப்பம் அணை, காவனூர் அணை,  தளவானூர் தடுப்பணை, சொர்ணாவூர் தடுப்பணை ஆகிய ஒன்பதும்  இந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகள்.

கிட்டத்தட்ட ஒண்ணரை டஜன் ஊர்கள் இதன் ஆற்றங்கரையில் உள்ளன. அவற்றில் முக்கியமானவை காவேரிப்பட்டினம், மஞ்சமேடு, இருமத்தூர், ஈச்சம்பாடி, அகரம், அனுமன்தீர்த்தம், பள்ளிப்பட்டு, மூங்கில் துறைப்பட்டு, மணலூர்பேட்டை, திருக்கோவிலூர், பேரங்கியூர், தளவானூர்,ண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம், ராம்பாக்கம், சொர்ணாவூர், மற்றும் கடலூர். 

ஆற்றுத் திருவிழா (RIVER FESTIVAL)

கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கும் மேலாக நான் வசிப்பது பாலாற்றங்கரையில், என் இளமைக்காலத்தில் குறிப்பாக என் பள்ளிபருவம் முழுக்க நான் வசித்தது தென்பெண்ணை ஆற்றங்கரைதான். என்னால் மறக்கமுடியாத ஆறு தென்பெண்ணை அங்கு நடக்கும் ஆற்றுத் திருவிழாவும்.

பெண்ணை ஆற்றின் மணல் (SILVER SANDS OF THENPENNAI)

யாமறிந்த மொழிகளிலே என்று பாரதி பாடியமாதிரி நான் பார்த்த ஆறுகளிலே எந்த ஆற்றிலும் தென்பெண்ணை மணல் மாதிரி நான் எங்கும் பார்த்த்தில்லை. மண் கலப்பில்லா மணல் அரிஅரியாக பொதிந்து குவிந்து இருக்கும். கோடையில்  நீரில்லாத ஆற்றில் கானல் நீரை கண் குளிரப் பார்ப்போம் . ஆற்றின் பொடி மணலில் காலை ஆற்றி ஆற்றி  நடப்பது, பொடிசுட நடப்பது தனிச்சுகம்.

நண்டு வளையில் தண்ணீர்பாம்பு (SNAKES IN CRAB HOLES)

கோடையில் கணுக்கால் நனையாத அளவுதான் பெண்ணையாற்றில் தண்ணீர் ஓடும். அந்தத் தண்ணீரில் அயிரையும், கெளுத்தி மீனும், உளுவை மீனும் பிடிப்போம். நண்டு வளைகளில் குறவை மீன் பிடிக்க கையைவிட்டு தண்ணீர் பாம்பை வெளியே எடுத்ததை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு மறக்காது. தண்ணீர்ப் பாம்பின்  உடல்  சொரசொரப்பாய் இருக்கும்.

இப்படி ஆற்றங்கரைகளில் மீன் பிடிக்கப்போய் பாம்பு பிடித்த அனுபவம் உங்களுக்கு உண்டா ? 

AUTHOR; D.GNANASURIA BAHAVAN

gsbahavan@gmail.com



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...