நான் ஆறாம் வகுப்பு வரை படித்தது, கண்டரக்கோட்டை, அங்கிருந்து தென்பெண்ணை மூன்று கிலோமீட்டர் இருக்கும். என் அப்பா ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர், கண்டரக்கோட்டையில் வேலை பார்த்தார். தட்டாம்பாளையம், தெராசு, மேல்குமாரமங்கலம், ராஜாபாளையம், என சுற்று வட்டார கிராமங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி. அருகில் இருக்கும் நகரம் பண்ருட்டி. அந்த சமயம் இந்தப்பகுதி தென்னாற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
ஆற்றுத்திருவிழா (RIVER FESTIVAL)
இங்கு வருஷா வருஷம் நடக்கும் ஆற்றுத்திருவிழா ரொம்பவும் விசேஷம். இது பெண்ணையாற்றில்தான் நடக்கும்.. கடலூரில் மஞ்சக்குப்பம் பகுதியிலும், பண்ருட்டியில் நத்தப்பட்டு பகுதிலும் எள் விழுந்தால் எண்ணையாகும் அளவுக்கு கூட்டம் இருக்கும்.
கிரமங்களில் கண்டரக்கோட்டையின் ஆற்றுத்துறை திருவிழா பேர் போனது. பொங்கல் திருவிழா முடிந்ததும், கறிநாள், வெறிநாள் அதைத் தொடர்ந்து திருநாள் நடக்கும். அக்கம்பக்கத்து கிராமங்களின் அத்தனை கோயில்களிலிருந்தும், சாமி ஊர்வலமாக ஆற்றுக்கு கெட்டிமேளம் நாதஸ்வரத்துடன், வந்து போகும்.
பெண்ணையார் பிறந்த நந்திமலை (NANDHI KILLS)
நந்திமலைபற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். இது மிக முக்கியமான கர்நாடகாவின் மலைப்பகுதி. சிக்பல்லாப்பூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஏகப்பட்ட நதிகள் இங்கிருந்துதான் பிறக்கின்றன.
போக நந்தீஸ்வரர் கோவில் (BOGA NANDHEESWARAR TEMPLE)
தென்பெண்ணை, பாலாறு, அர்க்காவதி, ஆகிய ஆறுகள் அனைத்தும் இந்த மலையில் இருந்துதான் பிறக்கின்றன. சோழர் காலத்தில் இந்த மலையை ஆனந்தகிரி என்று அழைத்தார்கள். மலை உச்சியில் சோழர்கள் கட்டிய போகநந்தீஸ்வரர் கோவில் ஒன்றும் இன்றும் உள்ளது. இந்த மலை பார்க்க தூங்கும் நந்தி மாதிரி இருப்பதால் இதற்கு நந்திமலை என்று பெயர் வைத்தார்கள்.
தென்பெண்ணை பாயும் மாவட்டங்கள் (DISRICTS COVERED BY THENPENNAI)
தென்பண்ணையில் வெள்ளம் வந்தால் முக்கியமாக ஐந்து மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கை அனுப்புவது வழக்கம். அவை கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை விழுப்புரம் மற்றும் கடலூர். இந்த ஐந்து மாவட்டங்களின் தாகம் தணிக்கிறது தென்பெண்ணை. இப்போது இந்த ஆற்றின்மீது கட்டியிருக்கும் ஏழு அணைக்கட்டுகள் பற்றிப் பார்க்கலாம்.
கெலவரப்பள்ளி அணைக்கட்டு (KELAVARAPPATTU DAM)
தென்பண்ணையின் மீது கட்டப்பட்டிருக்கும் கெலவரப்பள்ளி அணைக்கட்டில் இப்போதெல்லாம், கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீரில் தொழிற்சாலை கழிவுகள் வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் இது அதிகம் நடக்கிறது.
கெலவரப்பள்ளி அணை ஓசூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அணையின் உயரம் 13.5 மீ. இந்த அணையின் தண்ணீர் கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு செல்கிறது. 1995 இல் கட்டப்பட்டுள்ள இந்த அணை கிருஷ்ணகிரியில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கொள்ளளவு 480 கன மீட்டர்.
மீதமுள்ள அணைக்கட்டுகள் (OTHER DAMS)
மீதமுள்ள கிருஷ்ணகிரி அணைக்கட்டு, நெடுங்கல் அணைக்கட்டு, சாத்தனூர் அணைக்கட்டு, திருக்கோவிலூர் அணைக்கட்டு, எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டு, சொர்ணாவூர் அணைக்கட்டு பற்றி அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் யாராவது தென்பெண்ணை ஆற்றுத் திருவிழாவுக்கு போயிருக்கிறீர்களா ? உங்கள் அனுபவம் என்ன ? எழுதுங்கள்.
GNANASURIA BAHAVAN DEVARAJ, AUTHOR
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment