KRITHUMAL RIVER
கிருதுமால் நதி
முன்னொரு காலத்தில் கிருதுமால் நதி மதுரை கூடலழகர் கோயில் அருகே ஓடிக்கொண்டிருந்தது. அந்த கிருதுமால் நதித் தண்ணீரில்தான் கூடலழகருக்கு அபிஷேகம் நடக்கும் என்று கூடற்புராணம் சொல்லுகிறது. அந்த சமயம் மதுரையை அரிகேசரி என்ற மன்னன் மதுரையை ஆண்டு வந்தான். அவன்தான் சோழவந்தான் கிராமத்திலிருந்து ஒரு கால்வாயை வெட்டி காட்டாறாக இருந்த கிருதுமால் நதியுடன் சேர்த்தான் என்கிறது, கூடற்புராணம். மேலும் அது கிருதுமால் நதியை கூடலழகர் அணிந்த மாலை என்றும் போற்றுகிறது.
மதுரை, சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓடும் ஆறு. மேலும் இது வைகை ஆற்றில் ஒரு கிளை ஆறு. நாகமலை அடிவாரத்தில் துவரிமான் கண்மாயில் உற்பத்தி (ORIGIN) ஆகிறது. பின்னர் இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழ் வலசை என்ற இடத்தில் இறுதியாக குண்டாற்றுடன் கலக்கிறது.
மதுரையில் 15 கிலோமீட்டர்
மதுரை மாவட்டத்தில் விராட்டிபத்து, பொன்மேனி, எல்லிஸ் நகர், தெற்கு வாசல், கீரைத்துறை மற்றும் சிந்தாமணி வழியாக சுமார் 15 கிலோமீட்டர் ஓடுகிறது.
ராமநாதபுரம் கீழ்வலசை
அதன் பின்னர் சிவகங்கை மாவட்டத்திற்குள் நுழைகிறது. அங்கு குந்தகை கண்மாயை அடைகிறது. அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைந்து கீழ்வலசையில் குண்டாறு என்ற ஆற்றுடன் கலக்கிறது.
கிருதுமால் கூவம் ஆனதா ?
கிருதுமால் நதி மதுரை, சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 54 கிலோ மீட்டர் ஓடுகிறது. ஒரு காலத்தில் 18,500 ஏக்கர் பயிர் சாகுபடிக்கு பாசனநீர் தந்தது. அது ஒரு காலத்தில், ஆனால் இன்று அது என்று கூவம் ஆறு போல மாறிவிட்டது என்கிறார்கள்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னால் 120 அடி அகலத்திற்கு ஓடிய கிருதுமால் ஆறு, இன்று ஆக்கிரமிப்புகளால் 10 அடியாக சுருங்கி விட்டது, அதுகூட ஆறாக அல்ல, சாக்கடையாக என்கிறார்கள், உள்ளூர்க்காரர்கள்.
மனசாட்சி இல்லாத மனிதர்கள்
விராட்டிபத்துக்கு அருகில், மனசாட்சியே இல்லாத மனிதர்கள் சாக்கடை கழிவுகள் அனைத்தையும் கிறிதுமால் நதியில் திறந்து விடுவதாக சொல்லுகிறார்கள்.
உங்கள் பகுதி ஆற்றிலும் இதுபோன்ற புனிதமான காரியங்கள் நடக்கிறதா என்று யோசித்து சொல்லுங்கள்.
No comments:
Post a Comment